பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ”ஜமீலா”க்கள்
மவ்லவி S.H.முஹம்மது இஸ்மாயீல் ஸலஃபி
[ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான ”இல்லற சட்டங்கள் இரண்டை” வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.
இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இதற்கு ஈடான பெண் சுதந்திரத்தை இன்றைக்கும் எந்த மேற்கத்திய நாடுகளில் கூட காணமுடியாது. அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை அல்லாஹ்வைத் தவிர.]
பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ”ஜமீலா”க்கள்
“ஜமீலா” என்றால் அழகானவள் என்பது அர்த்தமாகும். இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு ஜமீலாக்களின் இல்லற வாழ்வு தொடர்பாக அருள்மறை வசனங்கள் இறக்கப்பட்டன. அவை இரண்டும் பெண்களின் உணர்வுகளுக்கு இஸ்லாம் எவ்வளவு மதிப்பளிக்கின்றது என்பதற்கான சிறந்த உதாரணங்களாகும்.
ஒருவர் ஜமீலா பின்து யஸார் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர் தன்னை விவாவகரத்து செய்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆர்வம் கொள்கிறார். எனினும் குடும்பம் அதற்குத் தடையாக இருக்கிறது.
அடுத்தவர், முனாஃபிக்குகளின் தலைவனான உபை இப்னு ஸலூலின் மகள் ஜமீலா ஆவார். இவர் தனது கணவர் மீது வெறுப்பு கொண்டு இல்லற வாழ்வில் வேண்டா வெறுப்புடன் இணைந்திருந்தார். அவரது உணர்வுகளுக்கும் இஸ்லாம் மதிப்பளித்து திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
இல்லற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான இந்த இரண்டு ”ஜமீலா”க்களைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கத்தை காண்போம்.
கணவனை நேசித்த மனைவி
ஜமீலா பின்து யஸார் ரளியல்லாஹு அன்ஹா:
இவர் முஅக்கல் பின் யஸார் அல் மஸ்னியின் சகோதரியாவார். இந்தப் பெண்ணை அபுல் ஃபதாஹ் ஆஸிம் இப்னு அதீயிப்னு அஜ்லான் என்பவருக்கு முஅக்கல் மணமுடித்துக் கொடுத்தார்.
ஜமீலா-அபுல் ஃபதாஹ் தம்பதிகளின் இல்லற வாழ்வு இனிமையாகத்தான் ஆரம்பித்தது. இதமான, இன்பமான உணர்வுகளுடன் மணவாழ்வில் புகுந்தனர். ஆனால், மணவாழ்வு என்பது மகிழ்ச்சிக்குறியதாக மட்டும் இருக்கவில்லை. இதமான தென்றல் காற்றுக்கு மத்தியில் திடீர் திடீரென புயலும் வீசத்தான் செய்தன. உடன்பாடுகள் மட்டுமின்றி, முரண்பாடுகளும் முளைக்கத் துவங்கின. இல்லறவாழ்வில் பிளவை உண்டாக்குவது ஷைத்தானின் முக்கிய பணிகளில் ஒன்றல்லவா? இந்த முரண்பாடுகள் இவர்களது பிரச்சனையில் ஷைத்தானை மூக்கை நுழைக்க வழிவகுத்தது. கணவனிடம் தன்மானப் பிரச்சனையை மூட்டி விடலாம், மனைவிக்கு ரோஷத்தை ஊட்டலாம். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இல்லறத்தை இல்லாமலாகி விடலாம். அதுதான் அங்கும் நடந்தது.
வாழ்க்கைச்சக்கரத்தில் ஏற்றம் இருந்தால் இறக்கமும் இருக்கும். இதன் உச்சக்கட்டத்தில் அபுல் ஃபதாஹ் தன் அன்பு மனைவி ஜமீலாவை ”தலாக்” கூறிவிட்டார். இதனால் உள்ளமும் உடலும் ஒடிந்து போய் தன் சகோதரனின் இல்லம் போய்ச் சேர்ந்தார் ஜமீலா.
நடந்ததைச் சகோதரர் முஅக்கலிடம் விபரமாக எடுத்துச் சொன்னார். முஅக்கலின் உள்ளத்திலும் ஷைத்தான் வஞ்சக எண்ணத்தைப் பாய்ச்சி விட்டான். ”என் சகோதரியைத் தலாக் கூறி விட்டானா அவன்? இதன் பின்னர் அவனாக வந்து உன்னை அழைத்தாலும் நான் உன்னை அனுப்ப மாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. ஒன்றாக வாழ்ந்தபோது குறைகளையும், தப்புத் தவறுகலையும் பேசி சண்டையிட்டுக் கொண்ட இரு தம்பதிகளும் தனித்திருந்து கடந்தகால அன்பு கலந்த இல்லற இன்பங்களை அசை போட்டபோது மீண்டும் அந்த மகிழ்ச்சியான இன்பகரமான மணவாழ்வு மலராதா என மனம் ஏங்கத் துவங்கினர்.
இணைந்திருந்தபோது அடுத்தவர் குரைகளைப் பேசியவர்கள் தனித்திருந்து தமது குரைகளை எண்ணி வெட்கப்பட்டனர், வேதனைப்பட்டனர். அடுஔத்தவர் தரப்பு நியாயத்தை உணரத்தலைப்பட்டனர்.
உடலால் இணைந்திருந்தபோது உள்ளத்தால் பிரிந்திருந்தனர்; இப்போதோ, உடலால் பிரிந்து உள்ளத்தால் ஒன்றித்து வாடினர், வதங்கினர்.
எனினும் ஜமீலா ஒரு பெண்! சகோதரனின் அரவணைப்பில் வாழ்பவர். அவரால் கவலைப்பட முடிந்தது. காரியம் ஆற்றும் துணிச்சல் இருக்கவில்லை. அபுல் ஃபதாஹ் அவசரப்பட்டு தலாக் கூறிவிட்டார். மீண்டும் எப்படிப் போய்ப் பெண் கேட்பது?! வெட்கமும், தன்மான உணர்வும் தடை போட்டன. நாட்கள் நகர்ந்தன. “இத்தா” காலமும் முடிந்து விட்டது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் அபுல் ஃபதாஹ் ரொம்பவும் நொந்து போனார். தனது மச்சானிடம் நேரடியாகச் சென்று, தான் தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ அனுமதி கோரினார். ஜமீலாவும் இதைத்தானே எண்ணி எண்ணி இத்தனை நாட்களாக ஏங்கினார்! அவரும் அதற்கு விரும்பினார். எனினும், முஅக்கல் முடிவு வேறாக இருந்தது.
”முடியாது, முடியவே முடியாது. எனது சகோதரியைப் பலரும் பெண் கேட்டனர். நான் அவளை உனக்கு மணம் முடித்துத்தந்தேன். உன்னை மதித்தேன். ஆனால், நீயோ எனது சகோதரியை மீட்டிக்கொள்ளத்தக்க தலாக்கை கூறியுள்ளய். இருந்தாலும் உனக்கு அவளை மீண்டும் மணம் முடித்துத் தர முடியாது. எனது சகோதரியை மணமுடிக்கப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று முடிவாகவே கூறிவிட்டார்.
உடைந்துபோன உள்ளத்துடன் அபுல் ஃபதாஹ் திரும்பினார். இவரை விட்டு விட்டு இன்னொரு கணவருடன் வாழ்வதா? என்ற ஏக்கம் ஜமீலாவைத் தொற்றிக் கொண்டது. தனக்குத் துணையாக நிற்கும் சகோதரனையும் மீற முடியாது; தனது கணவன் மீதுள்ள அன்பையும் அழிக்க முடியாது; உருகிப் போனார் ஜமீலா! இந்தப் பெண்ணின் உளப் போராட்டத்தை, உணர்வுகளை மதித்து அல்லாஹ்வின் அருள்மழை வசனம் அருளப்பட்டது.
“நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக்கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக்கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மணமுடிப்பதை (பொருப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன் படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:232)
இந்த இறை வசனம் “தலாக் ரஜஈ (மீட்கத்தக்க முதல் இரு தலாக்) கூறப்பட்டு, இத்தா காலம் முடிந்த பின் அந்த இரு தம்பதிகளும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் குடும்பம் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது. அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றவர்கள் தன்மானப் பிரச்சனைக்காகவோ, கவுரவப் பிரச்சனைக்காகவோ அவர்கள் இணைவதற்குத் தடையாக அமையக் கூடாது என்கிறது. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை எந்த அளவு அக்கறையுடன் மதிக்கிறது என்பதற்கு இந்த இறைவசனம் நல்ல சான்றாகும்.
இந்த வசனம் இறங்கியதும் ஜமீலா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரர் முஅக்கல், “எனது ரட்சகனின் கட்டளைக்கு நான் கட்டுப்படுகிறேன்” எனக் கூறி மீண்டும் அவர்களை மணம் முடித்து வைத்தார். (நூல்: தஃப்ஸீர் இப்னு கதீர்)
கணவனை வெறுத்த மனைவி
ஜமீலா உபை இப்னு ஸலூல் ரளியல்லாஹு அன்ஹா:
இன்னொரு ஜமீலாவோ இதற்கு வித்தியாசமானவர். இவர் தனது கணவரை வெறுத்தார். அவருடன் வாழ விரும்பவில்லை. இவரது இந்த உணர்வையும் இஸ்லாம் மதித்தது. இன்றைய நவீன யுகத்தில் கூட பெண் தனது கணவனை விவாகரத்து செய்வது மிகவும் கடினம். ஆனால், இஸ்லாம் பெண்களின் உணர்வையும், இயல்பையும் புரிந்து அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ஜமீலா, உபை இப்னு ஸலூலின் மகள் ஆவார். இவரது பெயர் ஜமீலா என்றும் ஹபீபா, ஸைனப் (நூல்: பைஹகி) என்றும் கூறப்படுகிறது. இவர் ஹன்ளலா இப்னு அபூ ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாக இருந்தார். அவர் உஹதில் கொல்லப்பட்ட ஸஹாபியாவார்;. அதற்குப் பின் ஒரு தோட்டத்தை மஹராக வழங்கி தாபித் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பெண்ணை மணம் முடித்தார்கள். இவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் இவருக்குக் கணவர் மீது வெறுப்பு உண்டானது.
கணவனைப் பிடிக்கவில்லை என்று மனைவி கணவனை பிரிவதற்கு விவாகரத்து பெறுவதற்கு “அல் குல்உ” எனக் கூறப்படும். இஸ்லாத்தில் முதன் முதலாக இந்த உரிமையைப் பயன்படுத்தியவர் இவரே.
தாபித் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு நல்ல மனிதர். இருப்பினும் அழகற்றவர். அவரது புறத்தோற்றம் இப்பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. இல்லற வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் இதைச் சகித்துக் கொண்டாலும் போகப் போக வெறுப்பேற ஆரம்பித்தது.
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தாபித் இப்னு கைஸ் (எனது கணவர்) நல்ல மனிதர்; அவரது மார்க்க நடத்தையிலோ, ஒழுக்க வாழ்விலோ நான் குறை கூறமாட்டேன். இருப்பினும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே நான் குஃப்ரை வெறுக்கிறேன், (கணவனுக்கு மாறு செய்வதும், நன்றி கெட்டு நடப்பதும், கட்டுப்படாமல் இருப்பதும் “குஃப்ர்” எனக் கூறப்படும்.) நான் கணவனுக்கு மாறு செய்யும் நிலை ஏற்படலாம்” என்றார்கள்.
மற்றும் சில அறிவிப்புகளில் “நான் சில ஆண்களுடன் என் கணவரைப் பார்த்தேன். அவர்களில் என் கணவரே அதிக கருப்பாகவும், அதிகம் கட்டையாகவும் இருந்தார்” என்று கணவனின் புறத்தோற்றக் குறைபாட்டைக் காரணம் காட்டுகின்றார்.
இந்த அளவு கணவன் மீது வெறுப்பு ஏற்பட்டால் அதன் பின்னும் அவர்கள் சேர்ந்து வாழ்வது தேவையற்ற சர்ச்சைகளுக்கும், ஒழுக்க சீரழிவுகளுக்குமே வழிவகுக்கும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தாபித் மஹராக (மணக்கொடையாக) வழங்கிய தோட்டத்தை அவருக்குத் திருப்பி வழங்கிவிட சம்மதிக்கிறாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண் அதையும் கொடுத்து, இன்னும் அதிகமாகவும் கொடுக்கத் தயார்!” என்றார்கள். “அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை; அவரது தோட்டத்தை மட்டும் வழங்கினால் போதும்” எனக் கூறி, அவர்கள் இருவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்து வைத்தார்கள்.
கணவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கொடுத்த மஹர் ஒரு பொற்குவியல் என்றாலும் திரும்பப் பெற முடியாது. ஆனால், மனைவியே கணவனை வேண்டாம் என்று கூறினால், எடுத்த மஹரை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
கணவனை வேறுத்த இப்பெண்ணின் உணர்வையும் மதித்து பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.
(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக்கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேண மாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்குக்) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரித்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றார்களோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.” (அல்குர்ஆன் 2:229)
இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான இல்லற சட்டங்கள் இரண்டை வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.
பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரண்டு சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இஸ்லாம் பெண்ணுக்கு எந்த அளவு உயர்வான அந்தஸ்தையும் உரிமையையும் வழங்கியிருக்கிறது என்பதற்கு இந்த இரு வரலாற்று சம்பவங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.