o யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி ஈரான் அதிரடி
o ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு
[ டெல்லி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் மீது மொஸாதின் ஏஜண்டுகள் அல்லது அவர்களின் கூலிப் படையினர் மூலம் தாக்குதலை நடத்தி அதன் பழியை ஈரானின் மீதுசுமத்தி அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது.]
ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு
மும்பை:டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச் செய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில் ஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.
அணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு) காருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து விஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள் கூறுகின்றன.
ஈரானில் விஞ்ஞானிகளின் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளது அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆஃப் ஈரான் என்று ஈரானும், அமெரிக்க ஏஜன்சி வட்டாரங்களும் கூறுகின்றன. இந்த அமைப்பிற்கு பயிற்சி மற்றும் உதவி அளிப்பது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
டெல்லி குண்டுவெடிப்பிலும், ஜார்ஜியா திப்லிஸில் இஸ்ரேல் தூதரகத்தின் காரில் குண்டுவைத்த சம்பவத்திலும் மொஸாதின்கரங்கள் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.
‘எங்களுக்கு எதிராக போருக்கான வழியை திறப்பதற்கான வேகத்தை அதிகரிக்கிறது இஸ்ரேல்’ என்று ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஈரானின் குற்றச்சாட்டுக்கு காரணம், மொஸாதின் தலைவர் தாமிர் பர்டோவுக்கும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட் பெட்ராஸுக்கும் இடையே நடந்த ரகசிய சந்திப்பாகும்.
இம்மாதம் துவக்கத்தில் மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு ரகசியமாக சென்றார். சி.ஐ.ஏ உடன் நடந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அமெரிக்க பத்திரிகைகளான நியூஸ் வீக்கும், தி டெய்லி டெலிக்ராஃபும்சில தகவல்களை வெளியிட்டுள்ளன.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதலை துவக்கினால், அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆராயவே மொஸாத் தலைவரின் சுற்றுப்பயண நோக்கம் என்று டெய்லி டெலிக்ராஃப் பத்திரிகை கூறுகிறது.
மொஸாத் தலைவருடன் சந்திப்பை நடத்தியது குறித்து சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பெட்ராஸ் அமெரிக்க செனட்டிடம் தெரிவித்துள்ளதாக நியூஸ் வீக் கூறுகிறது.
‘ஈரானுடன் ஒபாமாவின் ஆபத்தான விளையாட்டு’ (Obama’s Dangerous Game With Iran) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூஸ் வீக் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் மீது மொஸாதின் ஏஜண்டுகள் அல்லது அவர்களின் கூலிப் படையினர் மூலம் தாக்குதலை நடத்தி அதன் பழியை ஈரானின் மீதுசுமத்தி அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் ஈரானின் மீது உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஒரே கல்லில் பல மாங்காய்க்களை கொய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அணுசக்தி – யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி ஈரான் அதிரடி
டெஹ்ரான்: யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஈரான்.
அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.