கூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?
[ உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், “உலகிலிருந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சிறப்பா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
“ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு”. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், “ஏன்? எப்படி?” என்று.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “அவர்கள் தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள். இன்னும் பல வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.” என்றார்கள்.
பெண்களுக்குப் பல ஆண்கள் கணவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஏங்குவதில்லை. எனினும், சொர்க்கத்தில் பல கணவர்களை விரும்பும் மனநிலை எந்த பெண்ணுக்காவது இருக்குமாயின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்.
அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனம் ஒன்று “நீங்கள் விரும்புவது எதுவும் உங்களுக்கு அங்கு உண்டு” (41:31) என்று கூறுவதை கவனிக்கவும். பெண்களுக்கு மட்டும் அவர்கள் விரும்புவது தடுக்கப்படும் என்று எண்ணவே வேண்டாம்.]
ஆண்களுக்கு ஹூருல்ஈன்… பெண்களுக்கு…?
சொர்க்கவாசியான ஆண்களுக்கு ஹூருல் ஈன் கன்னியர்களை அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் என்று கூறும் அல்குர் ஆன், பெண்களுக்கும் அதுபோல கொடுக்காமல் பாரபட்சம் காட்டுவதேன்? என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.
“நல்லறங்கள் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதற்குறிய கூலி நிச்சயமாக வழங்கப்படும்” என்று அல்குர்ஆன் கூறுகிறது.
“நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நம்பிக்கைக்கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடனும் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும்; ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்,” (அல்குர் ஆன் 33:35)
நன்மைகளுக்குப் பிரதிபலனாக, நற்கூலியாக வழங்கப்படும் சொர்க்கவாழ்வு பற்றிக் குறிப்பிடும் இறைவசனத்தில், “அந்நாளில் நிச்சயமாக, சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய மனைவியருமே நிழல்களில், கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருந்து அவர்களின் கணவர்களும், நல்லறங்கள் செய்தவர்களாக இருந்தால், அந்த இருவரும் சொர்க்கத்திலுன் கணவன் மனைவியாகவே நீடிப்பார்கள்” என்று கூறுகிறான்.
“இந்த உலகிலும், மறுமையிலும் இவர்கள்தான் உங்கள் மனைவி என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், “உலகிலிருந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சிறப்பா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?” அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு”. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், “ஏன்? எப்படி?” என்று. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “அவர்கள் தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள். இன்னும் பல வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.” என்றார்கள்.
இறந்துபோன முஸ்லிம் ஆணோ, பெண்ணோ எவராயினும் அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை செய்த பின் பிரார்த்திக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையில்; ”(இவரது) இப்போதைய குடும்பத்தைவிட, நல்ல குடும்பத்தை இவருக்கு கொடுப்பாயாக! இப்போதைய துணையைவிட நல்ல துணையைக் கொடுப்பாயாக!” என்றுள்ளது. (நூல்கள்: முஸ்லிம், நஸயீ)
மனைவி சொர்க்கவாசியாக இருந்து கணவன் நரகவாசியாக இருந்தால், அல்லாஹ் அவளுக்கு நல்ல கணவனை ஏற்படுத்தித் தருவான். கணவன் சொர்க்கவாசியாக இருந்து, மனைவி நரகவாசியாக இருந்தால், அவருக்கு நல்ல மனைவியை அல்லாஹ் ஏற்படுத்தித்தருவான். இதில் பாரபட்சம் எதுவுமில்லை. எனினும், சொர்க்கத்தில் வழங்க இருக்கும் நன்கொடைகளைக் குர்ஆன் வர்ணனை செய்து கூறும்பொழுது, ஆண்களுக்கு ஹூருல் ஈன்களை மணமுடித்து வழங்குவதாகக் கூறி, அந்த ஹூருல் ஈன்களை வர்ணித்துக் கூறுகிறது. அதுபோலப் பெண்களுக்கு வழங்கப்படுமா? வழங்கப்படாதா? வழங்கப்படுமாயின், அது பற்றி ஒன்றும் குறிப்பிடாதது ஏன்?
திருக்குர் ஆன் வசனங்கள் பொதுவாகவே, ஆண்களோடு பேசுவது போன்றே அமைந்திருக்கின்றன. பொறுப்புகளுக்கும், சுமைகளும், ஆண்களுக்கே அதிகம் என்பதால், பல விஷயங்களை ஆண்களுடனேயே பேச்ர்கிறது. பெண்களுக்கென்றே தனியாக போதிக்க வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் மட்டுமே பெண்களோடு பேசுவது போல் பேசுகிறது. அவ்விதத்தில் சொர்க்கத்தை வர்ணனை செய்து கூறுவதிலும், ஆண்களுடனேயே பேசுவது போல் வசனம் அமைந்திருக்கிறது. ஆகவே, ஆண்களுக்கு வழங்கும் ஹூருல்ஈன் கன்னியர்களை வர்ணிக்கிறது.
எந்தக் காலக்கட்டத்திலும் எழுதப்பட்ட கவிதகளையும், கதைகளையும் எடுத்துப் பார்ப்போமானால், பெண்களின் அழகை வர்ணிப்பதையே அதிகம் காணலாம். அது ஆண் கவியோ, பெண் கவியோ! பெண்களின் அழகைக்கண்டு ஆசைப்படுபவரே அதிகம். ஆனால், பெண்கள் ஆண்களின் அழகை ரசித்து, வர்ணித்துப் பேசுவதும், ஆசைக் கொள்வதும் மிக மிக அபூர்வம். அவர்கள் விரும்புவது, எதிர்பார்ப்பது ஆண்களின் குணத்தையே. நிதர்சனமாக மக்கள் எந்த பழக்கவழக்கமான மனநிலையில் எதை விரும்புவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆண்களுக்கு வழங்கும் ஹூருல் ஈன்களை குர்ஆன் வர்ணனை செய்கிறது.
உலகில் தனக்குக் கிடைக்க வேண்டிய சொத்துரிமை, வசதி வாய்ப்பு, ஏக உரிமை, இவைகளைச் சக்களத்தி பகிர்ந்து கொள்ளக்கூடும் என்ற அச்சத்திலேயே, பெண்கள் (நமது நாடு போன்றவற்றில்) தம் கணவர் பலதாரமணம் செய்வதை விரும்புவதில்லை. அந்தப் பிரச்சனையும் அங்கு இல்லை. எணெனில் அங்கு அச்சமும், பொறாமையும் இருப்பதில்லை. எனவே, தம் கணவர் ஹூருல் ஈன்களை மணமுடித்துக் கொண்டாலும், ஹூருல் ஈன்களை விட உலகப் பெண்மணிகள் உயர்ந்த தகுதி உடையவர்களாக கருதப்படுவதாலும், சொர்க்கத்தில் எந்த கசப்புணர்வும், எந்த பெண்ணிற்கும் ஏற்படுவதில்லை.
பெண்களுக்குப் பல ஆண்கள் கணவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஏங்குவதில்லை. எனினும், சொர்க்கத்தில் பல கணவர்களை விரும்பும் மனநிலை எந்த பெண்ணுக்காவது இருக்குமாயின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனம் ஒன்று “நீங்கள் விரும்புவது எதுவும் உங்களுக்கு அங்கு உண்டு” (41:31) என்று கூறுவதை கவனிக்கவும். பெண்களுக்கு மட்டும் அவர்கள் விரும்புவது தடுக்கப்படும் என்று எண்ணவே வேண்டாம். ஏனெனில் நீதி வழங்குவதி அல்லாஹ் மிகவும் நேர்மையாளன் என்பதை நினைவில் கொள்வோம்.
– அபூ ஆஸியா