முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்..?!
காலை மணி 11 இருக்கும்
‘ரெடியா இரு, இதோ வந்துர்றேன்….”
‘புரியலீங்க! எதுக்கு ரெடியா இருக்கச் சொல்றீங்க….?”
‘எல்லாம் அதுக்குத்தாங்கறேன்!’
‘அதுக்குத்தான்னா…. எதுக்குங்க? கொஞ்சம் புரியற மாதிரிதான் சொல்லுங்களேன்!’
‘நாம ரெண்டு பேர் மட்டும் ஒரு எடத்துக்கப் போறோம்…. அதுக்குத்தான்!’
‘எந்த எடம்னு சொல்லக்கூடாதோ?’
‘சொன்னா சஸ்பென்ஸ் கொறைஞ்சிடும்!’
‘ஓ! அப்படியா?’
‘அப்படியேதான்…. அதோட இன்னோரு ஆப்ளிகேஷன்’
‘என்னன்ன சொல்லுங்க…. ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே!’
‘ஒன்னுமில்லே! உன்னே நல்லா அழகா ஜோடிச்சுகோ!’
‘இதென்ன புதுக்கதையா இருக்கு! பொஞ்சாதிங்களெல்லாம் வீட்டுல இருக்கும்போது கணவனுக்கு எதிர்த்தாப்பல தான் தன்னை அழகுபடுத்திக்கிடணும், வெளியில் போறச்சே சாதாரணமாத்தான் இருக்கணும்னு நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க! இப்போ என்னங்க புதுசா வெளியே போறதுக்கு அலங்கரிச்சுக்கன்னு சொல்றீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு?’
‘நான் வீட்டுக்க வந்தப்புறம் எல்லாத்துக்கும் பதிலே தானாவே நீ தெரிஞ்சுக்குவே! அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கேன்…. அதோடு இன்னொரு விஷயம் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மறக்காம செண்ட் அடிச்சுக்க! மல்லியப்பூ கெடச்சா தலை நெறைய வெச்சுக்கோ…. அப்புறம்….’
‘என்ன ஆச்சு உங்களுக்கு? ‘வெளியே போகும்போது பொம்பளைங்க செண்ட்டு அடிச்சுக்கக்கூடாது’ன்னு 144 போட்டதே நீங்கதானே! இப்ப என்ன திடீர்னு எல்லாத்தையும் காத்துலெ பறக்க வுட்றீங்க!’
‘நான் சொல்றதை செய்! மத்ததை நேரிலே தெரிஞ்சக்குவே!’
கணவன் மனைவிக்குள் டெலிஃபோன் பேச்சு அதோடு கட்டானது.
கணவன் பேச்சை தட்டாத மனைவி மட்டுமல்ல அவள்! கணவனின் சந்தோஷத்துக்காகவே தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்ட மனைவி. அதனால் கணவனின் பேச்சைத் தட்டாமல் விருவிருவென்று சமையல்வேலைகளை முடித்துவிட்டு கணவனின் ஆசைப்படி தன்னை அலங்கரித்துக்கொண்டு அவனுக்காக காத்திருக்கம்போது கதவ தட்டப்படும் சப்தம் கேட்டது.
ஓ! அவர்தான் வந்துவிட்டார் என்று எண்ணி துள்ளிக்குதித்து கதவைத் திறந்தவளுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமென்றாலும் இன்னொரு பக்கம் சந்தோஷம். நான்கைந்து தோழிகள் ஒன்றாக தன்னைக் காண வந்தால் எந்த பெண்ணுக்குத்தான் சந்தோஷமிருக்காது!
தோழிகளை பார்த்த சந்தொஷம் ஒரு புறமிருந்தாலும் கணவன் வருகின்ற நேரமல்லவா எனும் பதற்றம் இன்னொருபுறம். அடுப்பங்கறைக்குள் நுழைந்து தோழிகளுக்கு காஃபி கொடுப்பதற்குப் பதிலாக ஃபிரிட்ஜைத் திறந்து கூல் டரிங்ஸை ஊற்றிக்கொடுத்து உபசரித்தாள்.
ரெண்டு பெண்கள் கூடினாலே லேசில் நகர மாட்டார்கள். நான்கு பேர்கள் என்றால் கேட்கவா வேண்டும்! இல்லத்தரசிக்கோ இருப்புக்கொள்ளவில்லை.
பத்து நிமிடம் பத்து மணிபோல் அவளுக்கு நகர்ந்தது. வாசலை எட்டிப்பார்த்தாள். இதோ கணவன் சந்தோஷமாக சிரித்தபடி வாசல்கேட்டைத் திறப்பதைப் பார்த்தவள் கதவருகே நின்ற கொண்டு கணவன் ஸலாம் செல்வதற்குள் முந்திக்கொண்டு ஸலாம் சொன்னாள்.
மனைவியின் வரவேற்பையும் அவளின் ஆடையலங்காரத்தையும் பார்த்த அவன் கண்கள் ஆயிரம் வால்ட் சந்தோஷத்தைக் கொப்பளித்தன். தான் சொன்னதை தட்டாமல் அழகாக அலங்கரித்துக் கொண்டு ஒரு மனைவி தனது கணவனுக்குமுன் நின்றால் எந்த கணவனுக்கும் முகம் மலரத்தானே செய்யும்!
கூடத்தில் தோழிகள் எல்லாம் உட்கார்ந்திருப்பதால் வாசல்கதவைத் தாண்டி உள்ளே நுழைவதற்கு முன்னே வாசலிலேயே கணவனை மடக்கினாள். ஆனால் அவன் மனைவியின் தோழிகளைக்கூட பார்க்காமல் தலையை குனிந்தபடி அறைக்குள் நுழைந்தான்.
‘சரி இப்பவாச்சும் சொல்லுங்க! எங்கே போகப்போறோம்?’
மனைவியை மேலும் கீழும் பார்த்தவன் அவள் காதுகளில் ‘ ……. ……. ’ ஊதினான். [ அப்படி என்னதான் சொன்னான் என்று தெரிந்துகொள்ள ஆசையா? கொஞ்சம் பொறுங்கள்! கடைசியில் தெரிஞ்சுக்கலாம்.] அவ்வளவுதான் அவள் முகம் நாணத்தில் கொப்பளிக்க, ‘என்னங்க இது! நேத்து ராத்திரி தானே அந்த ஊருக்குப் போய்ட்டு வந்தோம்! அதுக்குள்ளே இன்னொரு தரம் போகணுமா? அதுவும் இந்த பட்டப்பகலிலா….’ என்றெல்லாம் கேட்கவில்லை. ஏனெனில் கணவனின் பேச்சைத் தட்டாத, கணவனின் சந்தோஷமே தனது சந்தோஷம் என்று எண்ணி வாழ்பவள் அவள்.
விருவிருவென்று கூடத்துக்கு வந்தவள் தோழிகளிடம் சுருக்கமாகப்பேசி அவர்களை மறுபடியும் இன்னொருநாள் விருந்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு அனுப்பி வைத்தாள். சரி, சரி இவள் எங்கேயோ கணவனுடன் வெளியில் செல்லும் அவசரத்தில் இருக்கிறாள் என்று தோழிகளும் எதுவும் கேள்வி கேட்காமல் கிளம்பிச் சென்றனர்.
வாசல் கதவை இறுகத் தாழிட்டு விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவள்………. தன்னை முழுமையாக…. கணவனுக்கு அற்பணித்து அவனை திருப்தியடையச் செய்தாள்.
எல்லாம் முடிந்தபிறகு கேட்டாள், ‘ஆமாம்! என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு என்ன ஆச்சு உங்களுக்கு? அதுவும் பட்டப்பகலிலேயே இந்த ஆசையெல்லாம்?’
‘ஏன் பகலிலே…. கூடாதா….?’
‘நான் அப்படியெல்லாம் சொல்லலே! ஆனா இது உங்களைப் பொருத்தவரைக்கும் புதுசா இருக்கேன்னுதான் கேட்டேன்!’ என்றாள்.
‘சொல்றேன்… சொல்றேன்… உன் கிட்டே சொல்லாமே வேறு யார் கிட்டே சொல்றது! என்ன நடந்ததுன்னா…. இன்னைக்கு கம்பெனியிலே போர்டு மீட்டிங் நடந்தது. அதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டு அழகான பொம்பளைங்க….’
‘மிச்சத்தை நான் சொல்லட்டுமா…?’
‘ம்’
அந்த ரெண்டு பொம்பளைங்களெப் பார்த்துட்டு அங்கிருந்த ஆம்பளைங்களெல்லாம் ஜொல்லு விட்டாங்க! என்னோட புருஷனுக்கும் ஜொல்லு விடணும் போல ஆசை வந்துச்சோ இல்லையோ உடனே அவருக்கு பொண்டாட்டி ஞாபகம் வந்துடுச்சி…. அதான் பாதிலேயே கம்பெனியிலேந்து ஒடி வந்துட்டாரூ! ஆம் ஐ கரெக்ட்!’
மனைவி தன்னை 100 க்கு 100 சதவீதம் புரிஞ்சி வெச்சிருப்பதைப் பார்த்து அவனுக்கு ஏக சந்தோஷம்.
‘ஆமா! உன்னாலே எப்படி இவ்வளவு கரெக்ட்டா நடந்ததை அப்படியே பார்த்த மாதிரி சொல்ல முடிஞ்சிச்சு?’
‘என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா….? என் முந்தானைக்குள்ளே உங்களெ நான் டைட்டா முடிச்சுப்போட்டு வெச்சிருக்கும்போது உங்களாலே எப்படி தப்பான பாதைக்கெல்லாம் போக முடியும்? அதுவுமில்லாம நீங்க தானே எனக்கு, நம்ம உயிருக்கும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவுங்க வாழ்க்கையில நடந்த இதே மாதிரி ஒரு சம்பவத்தை நம்ம முதலிரவு அன்னிக்கு என் கிட்டே சொன்னீங்க… நீங்க சொன்னதெ என்னாலே எப்படி மறக்க முடியும்?’
சரி, அனைத்துக்கும் முன்மாதிரியாக இறைவனால் அகிலத்துக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இல்லற வாழ்வில் நடந்த அந்த சம்பவம் தான் என்ன?
இதோ:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே தம் மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, தம் தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர் வெளியே வந்து, “பெண் எதிரில் வந்தால் ஷைத்தானின் வடிவில் எதிர்கொள்கிறாள். எனவே, நீங்கள் ஒரு பெண்ணைக் கண்டு மயங்கினால் தம் மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் இருப்பதுதான் இவளிடமும் இருக்கிறது” என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, அஹ்மத்)
அது சரி! வீட்டுக்குள் நுழைந்தவுடன் மனைவியின் காதில் என்னமோ ஊதுனாரென்று சொன்னோமே அது என்னான்னா… “சொர்க்கத்துக்கு போகலாம் வர்றியா” என்பதுதான்…! மேலோட்டமா பார்த்தா இது கிளு கிளுப்புன்னு எடுத்துக்கிட்டாலும் அவர் சொன்னதுலே உண்மையான அர்த்தமும் இருக்கு! கணவன்-மனைவி அனுபவிக்கிற “அந்த சுகத்தை” சொர்க்கத்துக்கு ஈடான சுகம்னு நாம சொல்றது வாஸ்தம்தான். ஆனா அதுலே இன்னொரு உண்மையும் கலந்திருக்கு என்பதை நம்மில் எத்தனைப் பேர் எண்ணிப்பார்க்கிறோம்? ஆமாங்க! ஒரு கணவன் தப்பான பாதையிலே போய் விபச்சாரம் செஞ்சா அவனுக்கு நரகம்னு சொல்ற நம்முடைய மார்க்கம் ஹலாலான தன் மனைவிக்கிட்டே சுகம் அனுபவிக்கிறதை நன்மையான காரியம்னு சொல்லுகிறதல்லவா?. நன்மையான காரியத்துக்கு கூலி சொர்க்கம் தானே.
ஆக, ஹலாலான மனைவியுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கு இவ்வுலகிலும் சுகம், மறுமையிலும் சுகம் என்பது விளங்குகிறதல்லவா? விளங்கினால் மட்டும் போதுமா? இந்த அற்புதமான சுகத்தை வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? நம்மைப்படைத்ததன் நோக்கம் எதுவென்று இறைவன் குறிப்பிடுகிறானோ அந்த இறைவணக்கத்தை – இறை கட்டளைகளை அன்றாடம் சரியாக நிறைவோற்றுவதன் மூலமே, அவனுக்கு நாம் நன்றிக்கடனை செலுத்த முடியும். செய்வோமா?. செய்வோமா என்ன…! செய்தே தீர வேண்டும். இல்லையென்றால் அதைவிட நன்றிகெட்ட தனம் வேறு எதுவுமில்லை.
அனைவருடைய ”இல்லற வாழ்வை”யும் ”நல்லறமாக” அந்த வல்ல ரஹ்மான் ஆக்கியருள்புரிவானாக, ஆமீன்.
-எம்.ஏ.முஹம்மது அலீ