Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சமுதாயத்தில் நல்ல மாற்றம் வரவேண்டுமானால்…

Posted on February 15, 2012 by admin

 மவ்லவி N.S.ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாஜில் மன்பஈ (துபை) 

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்.

இன்று முஸ்லிம் சமுதாயம் அடைந்து கொண்டிருக்கும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கண்கூடாகக் காணும் போது,இதயத்தில் ஈமானை சுமந்திருக்கும் ஒவ்வோர் முஸ்லிமுக்கும் குருதியில் உஷ்ணம் தானாகவே ஏறிவிடும். இந்த சமுதாயத்தை சீர்கெடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றாண்டுகளாக எதிரிகள் தீட்டிய சதிக்கு இந்த நூற்றாண்டில் நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம், என்பதை நினைக்கும் போது மனம் வேதனையில் துடிக்கிறது.

ஆம் மார்க்கத்தை முறையாக புகட்டி வளர்க்காததினால் எதிரியின் அம்புகளுக்கு நம் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும், இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். ”கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமை.” (அல்ஹதீஸ்).

அனைவரும் அறிந்திருக்கும் இந்த ஹதீஸிற்கு என்ன பொருள்? அனைத்துமே கல்விதான் என்று பொருள் கொடுக்க முடியுமா? அப்படி பொருள் கொடுத்தால், அனைத்தையும் அனைவருமே கற்பது கடமையாகிவிடுமே இது சாத்தியமா?

அவரவர் விரும்பிய கல்வியைக் கற்றுக் கொள்ளலாம் என்று பொருள் கொடுத்தால், பட்டபடிப்பு வரை படித்தவரும் கற்றவரே. உயர்நிலை பள்ளிவரை படித்தவரும் கற்றவரே.படிப்பை தொடர முடியாமல் ஆரம்பப் பள்ளியிலேயே எழுத வாசிக்கத் தெரிந்ததோடு படிப்பை கைவிட்டவரும் கற்றவரே. எனப் பொருளாகிவிடும். இவ்வாறு பொருள் கொடுப்பது போன நூற்றாண்டுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த நூற்றாண்டில் கல்லூரி வரை சென்று பாதியிலேயே படிப்பைக் கைவிட்டவரைக் கூட கற்றவர் என்று சொல்ல உலகம் கூச்சப்படுகிறது. இப்படியிருக்கும்போது வெறுமெனே எழுத படிக்க மட்டும் தெரிந்த ஒருவரை கற்றவர் என்று சொன்னால், சொன்னவரை பைத்தியக்காரன் என்று தான் அனைவருமே கூறுவர்.

உண்மையில் மேற்குறிப்பிட்ட இரு பொருளில், இரண்டாவது பொருள் இந்த ஹதீஸின் அடிப்படை அர்த்தங்களில் ஒன்று என்பதுதான் நிதர்சனம். ஆனால் அது மட்டுமே கல்வியாகி விடுமா? என்றால் ஆகாது. ஏனெனில் நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன். என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். அவ்வாறெனில் அவர்கள் கல்வியைக் கற்று கொடுத்துள்ளர்கள் என்றுதான் அர்த்தம். அந்தக் கல்வியைக் கற்றுக் கொள்வதுதான் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுருத்தியுள்ளர்கள். அதில் முதன்மையானதும் மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமானதும் அருள் மறைக் குர்ஆனாகும். மேலும் மனிதனின் நாடி நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் ஷைத்தானை துறத்தி, மிருகத் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் வேறுபாட்டை பிரித்திக் காண்பிக்கும், அண்ணல் நபியவர்களின் ஒவ்வொரு சொல் செயல் அங்கீகாரத்தையும் கற்றுக் கொள்வதுதான் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

இந்தக் கல்வியைத்தான் அன்று மாநபித் தோழர்கள் கடமை எனக்கற்று வந்தார்கள். குர்ஆன் மற்றும் நபிமொழி தான் மனித வாழ்விற்கு வழிகாட்டி என்பதை நன்கு விளங்கி வைத்திருந்ததின் காரணமாக, தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அதைக் கட்டாயம் கற்க வலியுறுத்தினார்கள். இவர்களின் வழியில் வந்த தாபியீன்களும், தபஅ தாபியீன்களும், நமது இமாம்களும் இந்தக் கல்விக்காகத்தான் தங்கள் தாய் நாட்டை விட்டும் அயல்நாடு வரை பயணம் செய்தார்கள். அன்று பல ஆயிரங்களை செலவு செய்தாவது அதைக் கற்றிட முன்னோர்கள் சிரமப்பட்டார்கள்.

ஆனால் இன்று பல ஆயிரம் கொடுத்து அழைத்தாலும் அந்தக் கல்வியைக் கற்றிடநம்மில் யாரும் முன்வருவதில்லை.

வாழையடி வாழையாக வந்த அந்தக் கல்விக்காக நம் முன்னோர்கள் பல்லாயிரக் கணக்கில் செலவுசெய்து அரபி மதரசாக்கள், கல்லூரிகள் என ஆரம்பித்து சிரம்பட நடத்தி வந்தார்கள். அதில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்துமே இலவசமாக வழங்கி வந்தார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் கற்க அங்கு அனுப்பி வைத்தார்கள். அதில் பயின்ற மாணவர்கள் ஆலிம்களாகவும் மார்க்க மேதைகளாகவும் சட்ட வல்லுனர்களாகவும் தயாராக்கப்பட்டார்கள். இந்த நூற்றாண்டின் விடிவெள்ளிகள் அவர்கள். மார்க்க மேதைகள் இல்லா நூற்றாண்டாக அடுத்த நூற்றாண்டு மாறிவிடுமோ? என உலமாக்கள் மனம் நொந்து போய் உள்ளார்கள்.

ஆனால் இன்று பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இலட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்பும் பெற்றோர்கள், அல்லாஹ்வையும் அவனின் திருத்தூதரையும் அவர்களுக்கு நினைவூட்ட மறுப்பதினால், கல்லூரிப் படிப்பை முடித்து கை நிறைய சம்பாதித்து பெற்றோகளின் கைகளை நிரப்ப வேண்டிய அவர்கள்,மாற்றாருடன் கைகோர்த்துக் கொண்டு தவறான உறவால் வயிற்றில் கருவை நிரப்பியவர்களாக. மார்க்கத்தையும், பெற்றோரின் ஏக்கத்தையும் பொருட்படுத்தாது, நெருப்பைக் கண்ட ஈசல்களைப் போல நரகை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்னும் எத்தனை பெற்றோர்கள் தங்களை பிள்ளைகளை மாற்றாருக்குத் தாரைவார்க்கப் போகின்றனரோ? என்ற பீதியில் இஸ்லாமிய சமுதாயம் உரைந்து போய் நிற்கிறது. பிள்ளைகள் வளர்ந்த பின்பு பெற்றோரை மதிப்பதற்கு பதிலாக அவர்களின் மானத்தை காலில் போட்டு மிதிக்கின்றனர். இதற்குக் காரணம் யார்? பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படையில் தான் பிறக்கின்றன.ஆனால் அவர்களின் பெற்றோர் அவர்களை யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பை வணங்குபவர்களாகவோ மாற்றி விடுகின்றனர்.(அல்ஹதீஸ்)

ஆம் நம் பிள்ளைகள் மாற்று மதத்தவரோடு ஓடக் காரணம் நம் பெற்றோர்கள்தாம். சிறுவயதிலேயே அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சத்தை விதைப்பது பெற்றோரின் மீது கடமை. ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுகையைக் கொண்டு ஏவ வேண்டும். பத்து வயதை அடைந்தும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடித்து தொழும்படி ஏவ வேண்டும். இதை செய்யத் தவறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மாற்று மதத்திற்கு மாற அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தமாகும். ஏனெனில் பிள்ளைகள் கவனித்து, கண்டித்து வளர்க்கப்பட வேண்டிய வயது 10 முதல் 15 வயது வரைதான்.இதற்குள் அவர்கள் பக்குவப்படுத்தப்பட வேண்டும். தொழுகையை விடுபவன் மார்க்கத்தையே விட்டவன் என்ற உள்ளச்சத்தையும், குர்ஆன் ஓதத் தெரியாதவன் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாவான்.என்ற பயத்தையும் அவர்களின் இதயத்தில் பசுமரத்தாணி போல் பதியச் செய்ய வேண்டும்.

15 வயதை அடையும் போது தங்கள் பிள்ளைகள் குர்ஆனை குறைந்தது ஒரு முறையாவது முடித்திருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் அதற்கு என்ன காரணம்? என அறிந்து உடனடி நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் மீதும் கடமையாகும்.நம் வாழ்வின் வழிகாட்டி இந்த வேதம் தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.கடைசி மூச்சிருக்கும் வரை எந்தச் சூழ்நிலையிலும் தொழுகைய விடாது தொழ வேண்டுமென அன்போடு ஆணை பிறப்பிக்க வேண்டும். பருவ வயது அடையும்முன் அவர்களை இறைவழியில் செல்லத்தூண்டிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், அவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் தாங்களாகவே அனைத்து நல் அமல்களையும் செய்வதையும், பெற்றோர்களுக்கு பணிந்து நடப்பதையும் கண்குளிரக் காண்பார்கள்.

ஆனால் குழந்தை வளர்ப்பை வெறும் உலக ஆதாயத்திற்காகப் பயன் படுத்தும் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதக்கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக தொலைக் காட்சிப்பெட்டி முன் அமர்ந்து அதில் தோன்றும் நடிகை நடிகர்களின் பெயர்களையும்,திரையரங்குகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று அருவருப்பான கட்சியை பெற்றோர்முன் அமர்ந்து எப்படிப் பார்ப்பது? அந்நிய ஆண்களையும், அந்நியப் பெண்களையும் அரைகுறை ஆடைகளோடு எப்படிப் பார்த்து ரசிப்பது? என்பதையும், கற்றுக் கொடுப்பார்கள். தங்கள் மரணத்திற்குப் பின்னால் உதவும் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நொண்டிச்சாக்கை கூறி மார்க்கக் கல்வியை புறம் தள்ளிவிட்டு உலகின் ஆதாயத்தை மட்டும் சம்பாதிக்கும் கல்வியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

அல்லாஹ்விற்கும், பெற்றோருக்கும், பயமின்றி வளரும் ஆண் பிள்ளைகளின் நிலை, பருவ வயதை அடையும் போது மிகவும் பயங்கரமாக இருக்கும். ஷைத்தானின் ஆதிக்கத்தை முலையிலேயே கிள்ளி எரியாததின் விளைவு வாலிப வயதையடையும் போது,தாய் தந்தை எதிரிலேயே புகை பிடிப்பது, அன்னியப் பெண்ணோடு போனில் பேசுவது, எனத் தொடங்கி படிப்படியாக பல பாவங்களின் பக்கம் முன்னேறிக் கொண்டே போவார்கள். கண்டிக்க முற்படும் பெற்றோரை எதிர்த்து பேசுவார்கள். அடிக்க முற்படும் பெற்றோரின் கைகளை தடுத்து கீழே தள்ளிவிடக் கூட தயங்க மாட்டார்கள். கண்ணெதிரில் நடை பெரும் பாவங்கள்

ஒருபுறமிருக்க மறைவில் அரங்கேறும் பாவங்கள் ஏராளமாக நீண்டுகொண்டே போகும். ஒழுக்கமும் நாணமும் சரியாகக் கற்பிக்கப்படாத பெண்பிள்ளைகள்,பருவ வயதை அடையும்போது படிப்பதற்காக விடுதிகளிலோ, உறவினர் வீடுகளிலோ, தங்கிப்படிக்க அனுமதிக்கும் போது, அதிலும் குறிப்பாக இருபாலாரும் இணைந்து படிக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ, சேர்த்துப் படிக்க வைக்கும் போது, மாற்றார்களின் வலையில் விழுவதற்கு மிகவும் எளிதாகி விடுகிறது. நட்பு எனத் தொடங்கி காலப்போக்கில் கயவர்களோடு கண்காணாத இடத்திற்கு ஓடிப்போகும் அளவிற்கு தள்ளப் படுகிறார்கள்.

உலக ஆதாயம் வேண்டாமென மார்க்கம் நமக்கு தடை விதிக்க வில்லை. ஆனால் யார் சம்பாதிக்க வேண்டும்?யார் குடும்பத்தைக் கட்டுகோப்பாகக் காக்க வேண்டும்? என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. பருவமடைந்த பெண்பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தனி பள்ளிகள்,கல்லூரிகள் இருப்பின் தாராளமாக படிக்க வைக்கலாம். ஆனால் அதற்கேற்றச் சூழல் இல்லாதிருப்பின் கண்டிப்பாக இருபாலாரும் இணைந்து படிக்கும் படிப்பை நிருத்திடுவது பெற்றோரின் மீது கடமையாகும்.

இந்தச்சூழலில் படிக்க வைக்கும் பெற்றோர் உலக ஆதாயத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டுதான் படிக்க வைக்கின்றனர். என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இவ்வாறு படிக்கும் பெண்பிள்ளைகள் மார்க்கத்தின் போதனைகளை மறந்தும் கூட பின்பற்ற மாட்டார்கள். கயவர்களின் காதல் வலையில் எளிதில் சிக்குவதோடு,மார்க்கத்தின் எல்லையையும் தாண்டத் தயங்க மாட்டார்கள்.

பெண் பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தான் நாளை தங்களின் குழந்தைகளுக்கு அவர்களால் மார்க்கத்தையும்,உலகில் நாம் பிறந்த நோக்கத்தையும் நன்றாகக் கற்றுக் கொடுக்க முடியும். ஆனால் அவர்களை வேலைக்கு அனுப்புவதும், வேலைக்கு அனுப்பும் சிந்தனை கொண்ட மாப்பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுப்பதும், அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமட்டுமின்றி அவர்களின் சந்ததியே உலகின் மோகத்தில் மூழ்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த பாவத்திற்கும் ஆளாகுவோம். வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள்? என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.அதற்கு உணவும் உடையும் கொடுக்கும் உறவினர்கள் இருக்கலாம், ஆனால் முறையானக் கல்வியையும் தரமான அன்பையும் ஊட்டி வளர்க்க தாயன்றி

வேறு எவரால் முடியும்?

சுருங்கச் சொல்வதானால் பிள்ளைகளுக்குத் தவறான வழியைக் காண்பிக்கும் பெற்றோகள் முதலில் தங்களை சரி செய்து கொள்ளவேண்டும்.பிள்ளைகளுக்கு எதிரில் புகைப் பிடித்தல் மது அருந்துதல் போன்ற காரியங்களில் ஈடுபடும் தந்தையர்களும்,சினிமாப் பார்க்க திரையரங்கிற்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்களும், அசிங்கத்தை தொலைக்காட்சிப் பெட்டிமூலம் பிள்ளைகள் பார்க்க வகை செய்யும் தாய்மார்களும், தங்களை மாற்றிக் கொள்வதோடு, இனி இது போன்ற தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம். நீங்களும் செய்ய வேண்டாம் என வெளிப்படையாக

அவர்களிடம் எடுத்துச் சொன்னால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Thanks regards, posted by:: முதுவை ஹிதாயத்

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb