ஒரு மனிதர் ஜோஸியம் பார்த்தால் மனைவியுடனான அவரது நி(க்)காஹ் முறிந்து விடுமா?
அவசர கோலத்தில் உடனே எவரையும் இஸ்லாத்தைவிட்டு வெளியில் தள்ளும் உரிமை எவருக்கும் தரப்படவில்லை.
கேள்வி: முன் நடந்தவைகளையோ அல்லது இனி பின்னால் நடக்கப் போகின்றவைகளையோ சாஸ்திரம், ஜோதிடம், கணிதம், குடுகுப்பைக்காரனின் கூற்று முதலியவைகளின் மூலம் கேட்டு, ஒருவன் அதன் மீது நம்பிக்கை வைத்து விட்டால், அவனுடைய, ஈமான் முற்றிலும் நீங்கி விடுகின்றது. அவனுடைய மனைவியின் நிக்காஹ் தானாகவே முறிந்து விடுகிறது. எனவே அந்த மனிதனுக்கு ரத்துல் குஃப்ர் (ஐந்தாம்) கலிமாவை சொல்லிக்கொடுத்து மீண்டும் அந்த விவாகத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு ஃபிக்ஹ் கிதாபில் வருகிறது என்று ஒரு ஆலிம் சொன்னார். அந்த ஃபிக்ஹ் கிதாபின் பெயரைக் கேட்டால் பெயர் மறந்துவிட்டது என்கிறார். குறி, ஜோஸியம் பார்த்து அதன் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் ஈமான் போய் விடுமா? நிக்காஹ் முறிந்து விடுமா? இதற்கு ஆதார நூலின் மேற்கோளுடன் தயவு செய்து பதில் தறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். – ஒரு வாசகர்.
பதில்: உங்கள் கேள்வியில் குறி, ஜோஸியம் முதலியவைகளின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அவனது ஈமான் முற்றிலும் நீங்கிவிடுகிறதா? என்று கேட்டிருக்கிறீர்கள். நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதற்கு என்ன அடையாளத்தை அவரிடம் கண்டுபிடிப்பது?
சாஸ்திரமும், ஜோதிடமும், குடுக்டுப்பைக்காரனின் கூற்றுகளும் மக்களின் கண்களிலிருந்து மறைந்து இருக்கக் கூடிய விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவே அமைந்து இருக்கின்றன.
அல்லாஹ் ரஸூலின் மீது ஈமான் கொண்ட முஃமின்கள், “மறைமுகமானவற்றை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது” என்பதை ஈமான் கொண்டுதான் செயல்படுகிறார்கள்.
அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு அவன், தானாகவோ அல்லது அவர்களின் உள்ளங்களில் தனது பேரருளால் உதயமாகி வைத்தால் தவிர வேறு வழியில் மறைமுகமானவற்றை மனிதன் தெரிந்துகொள்வதற்கு நிச்சயமாக எந்த வழியும் இல்லை.
இந்நிலையில், ஜோதிடர்களும், சாஸ்திரக்காரர்களும் கூறுவதை நம்பி அதை மெய்ப்படுத்தும் ஒருவர் நிச்சயமாக காஃபிராகி விடுகிறார். என்பதுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுதமொழியாகும்.
ஆனால், உண்மையிலேயே அவர் அதை மெய்ப்படுத்துகிறாரா? என்பதை அவரது செயல்கள்தான் நமக்கு அறிவித்துக் காட்டக்கூடிய அடையாளங்களாகத் திகழ்கின்றன. இந்த அடையளங்கள் அவரிடம் செயல் வடிவத்தில் வெளிப்பட்டால் மட்டுமே அவரை காஃபிர் என்று மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் நாம் தீர்ப்பளிக்க முடியும்.
மாறாக, அவரது ஒரே ஒரு செயல் மட்டும் இஸ்லாத்திற்கு விரோதமாக இருந்து அவரது மற்ற செயல்பாடுகள் அனைத்தும் இஸ்லாம் கூறும் வழியில் இருக்குமானால், நிச்சயமாக அவரிடம் முதலில் நாம் பார்த்த ஒரு காரணத்திற்காக மட்டும் காஃபிர் என்று ஒதுக்கித் தள்ள முடியாது
எடுத்துக்காட்டாக ஜோதிடரிடம் சென்று வந்த ஒரு முஸ்லிம், அவர் சொல்லியது சரிதான் என்று உங்கள் சொல்படி நம்பியும் வந்த ஒருவர், தம்மையும் அறியாமல் சுயமாக தானாகவே அடுத்த வக்து தொழுகையை நிறைவேற்றுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இன்னொரு சொல்படி “அவர் தொழுகையை நிறைவுபடுத்துவது ஈமானுடைய அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிடுகிறது”
அடுத்த ரமளான் வருகிறது. அந்த புனிதமான மாதத்தில் அவரையும் அறியாமல் அவர் நோன்பு வைக்கிறார். இப்படி… இப்படியாக முஸ்லிம்கள் செய்கிற அல்லாஹ் ரஸூல் சொன்ன நல்ல அமல்களில் பலவற்றையெல்லாம் அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அவரைப் போய் எப்படி காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க முடியும்?
மாறாக… இது அவரது பாமரத் தன்மையை – ஈமான் என்றால் என்ன என்பதை புரியாத தன்மையை – ஜோதிடர், குறி சொல்பவரிடம் செல்வது தவறு! அது மனிதனை காஃபிராக்கி விடும், அது ஒரு பாவமான செயல் என்பதை புரியாமல் செய்கிறார் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். தவிர, அவர் தெரியாமல் செய்த ஒரு செயலுக்காக அவருக்கு காஃபிர் பட்டம் சூட்டி ஃபத்வா கொடுத்து விடக் கூடாது.
அவருடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கோ எனக்கோ தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. அவர் ஏதேனும் ஒரு நேரத்தில் கலிமா ஷஹாதத்தை மொழிந்து இருந்தால் அவர் முஃமின் என்பதற்கு அதுவே போதுமான ஆதாரமாக இருக்கிறது.
அவருடைய உள்ளத்தில் ஜோதிடர் சொன்னதை உண்மைப் படுத்தினாரா? அல்லது அல்லாஹ் சொன்னதை உண்மைப்படுத்தினாரா? என்பன போன்றவற்றையெல்லாம் துருவிதுருவி ஆராய வேண்டிய கடமை நமக்கு இல்லை,
அகிலத்தின் அருட்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களான ஸஹாபாப் பெருமக்களும் ஒரு முஃமின் அவன் ஈமான் உள்ளவன் தான் என்பதற்கு அடையாளமாக ஷஹாதத் கலிமவை மட்டும் போதுமானதாக ஆக்கி தீர்ப்பளித்துள்ளார்கள். அவனுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை குறித்து அவர்கள் விளக்கம் எதையும் தேடிக்கொண்டிருக்கவில்லை.
நிச்சயமாக மனிதனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை எந்த மனிதனும் அறியமுடியாது. ஆனால், அவனுடைய செயலின் வெளிப்பாடுகள் அதை அடையாளம் காட்டி விடும். அதற்காகத்தான் மேலே எடுத்துக்காட்டியபடி அவனது தொழுகை, அவனது நோன்பு, அவனது ஜகாத் மற்றும் ஈமான் – இஸ்லாம் சார்ந்த அவனது செயல்களே அவன் ஒரு முஸ்லிம் – முஃமின் என்பதை நமக்கு அடையாளங்காட்டுவதாக அமைந்து இருக்கின்றன.
இப்பொழுது நாம் ஒரு முடிவுக்கு வருவோம். நீங்கள் குறிப்பிட்ட அந்த நபர் ஜோதிடரை மட்டுமே நம்பி, ஈமான் – இஸ்லாத்துடைய எந்த செயல்பாடுகளும் அவரிடம் வெளிவராமல் ஜோதிடரின் கூற்றுக்கேற்ற செயல்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்குமானால் நிச்சயமாக அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கின்படி காஃபிராக ஆகிவிடுகிறார்.
அல்லது ஜோதிடரிடம் சென்று அவர் அடுத்த வினாடியோ, அடுத்த நிமிடமோ, அடுத்த நாளோ வழமைப்போல் இஸ்லாம் கூறும் கட்டளைகளை மேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பாரானால் அவரை யாரும் காஃபிர் என்று ஃபத்வா கொடுத்துவிட முடியாது.
குறிப்பாக நீங்கள் கேட்டிருப்பதைப்போல அவரது மனைவியின் திருமண பந்தம் முறிந்து விடவும் செய்யாது. ஒருவரை மிக உடனடியாக அவசர அவசர கோலத்தில் இந்த இஸ்லாத்தை விட்டு வெளித்தள்ளக்கூடிய உரிமை யாருக்கும் இந்த மார்க்கத்தில் தரப்படவில்லை என்பதை மிக்க பணிவோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
பதில்: குர்ஆனின் குரல், ஜனவரி 2007,