மத்ரஸா நிர்வாகக் கோளாறு!
வெள்ளையர் ஆட்சி காலத்தில் கிருத்தவ நடைமுறை, இங்கிலாந்து பழக்க வழக்கம், மொழி, கலாச்சாரம், பண்பாடு பாரத மக்கள் மீது திணிக்கப்பட்டது. துப்பாக்கி, பீரங்கி, சிறைச்சாலை, தூக்கு மேடை துணை தந்தது.
மிகுந்த நெருக்கடியான சூழலில், மத சடங்குகள், அடிப்படை வாதத்தை காப்பாற்ற முஸ்லிம் பொதுமக்கள் மத்ரசா இயக்கத்தை நம்பினர். ஆதரித்தனர். போற்றி மதித்து வளர்த்தனர்.
இன்றைய அறிவியல் யுகத்தில் மதப் பிரச்சாரம், மத அடிப்படைக் கூறுகள் தொலைக்காட்சி, வீடியோ, தகவல் தொழில்நுட்ப சாதனம் வாயிலாக இல்லத்தை நாடியடைகிறது.
மதவாதியை நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் இண்டர்நெட் உதவியுடன் கருத்துக்கள் பலமாக மனதைக் கவ்வுகின்றன. நேயர்வட்டம் பரவும் காலம் இது.
வக்பு வாரிய சொத்து பெருமளவு தமிழகத்தில் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பொதுச் சொத்து நிர்வாகத்தில் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பலவீனமாக நடைபோடுவதை எளிதாகவே காணமுடிகிறது. நிர்வாகிகள் எஜமான் தன்மையுடன் கோலோச்சுவதை மறுக்கமுடியாது. பணக்கார கொட்டம் தாங்கமுடியவில்லை.
ஐம்பது ஆண்டுகள் முன்னர் முஸ்லிம் மதவாதிகளுக்கு பெரிய வரவேற்பு சமுதாயத்தில் நிலவியது. தப்லீக் மத்ரசா, தரீக்கத் மத்ரஸா, வஹ்ஹாபி மத்ரஸா, தர்கா மேலாதிக்க மத்ரஸா பிரிவுகள் பொதுமக்கள் மத்தியில் மனச்சோர்வு தந்தன. முஸ்லிம் சமுதாயம் மத்ரசா ஈடுபாட்டை தளர்த்த துவங்கியது.
ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கூட்டம் சரிந்து விட்டது. மாணவர் சேர்க்கைக்கு தாளம் போட வேண்டிய திண்டாட்டம். தரம் படுபாதாளத்தை நோக்கி வீழ்கிறது.
மூத்த மதவாதிகளின் வாரிசுகள் பெரும்பாலோர் இன்று ஐ.டி. நிபுணர், எம்.எஸ், எம்.டி, எம்.பி.ஏ, மருத்துவ, பொறியியல், வணிக மேலாண்மை பட்டதாரிகளாயுள்ளனர். மதப்பிரச்சாரத்தின் பக்கம் நெருங்குவதில்லை.
மத்ரஸா நிர்வாகம், பண வரவு, மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை தகுதி, மொழி, சொத்து விவரம் பொதுமக்களுக்கு தெரியவேண்டும். சமீபகாலமாக இதழ்களில் மத்ரஸா நிர்வாகக் கோளாறு அச்சேறுகிறது. வெளிப்படையான தன்மையுடன் மதவாதிகள். மதப்பிரச்சார நிறுவனங்கள் செயல்படவேண்டும். இண்டர் நெட் பயன்பாட்டை ஆதரித்து உரிய தகவல்களை சமுதாயத்துக்கு சமர்ப்பிக்கலாம். இல்லையெனில், மத்ரஸா இயக்கம் பலவீனப்படும்.
-ஆணங்காச்சி ரசூல், முஸ்லிம் முரசு ஜனவரி 2012
source: http://jahangeer.in/?paged=4