கணவன் மங்கிய தட்டில் சாப்பிட வேண்டுமாம்… விருந்தாளிக்கு புதிய தட்டில் உபசரணமாம்!
விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல!
வழக்கமாக நான் செல்லும் என் நண்பனின் வீட்டிற்கு ஒரு நாள் ஞாயற்றுக்கிழமை சென்றேன். என் நண்பன் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பவன் அன்று ஏனோ சற்று சோர்வாகவும் கலகலப்பின்றியும் காணப்பட்டான்.சோர்வுக்கு காரணம் கேட்டபோது எல்லாம் உன் தங்கைதான் காரணம்.
அவளுடைய தோழி ஏதோ ஒரு புதிய சாப்பாட்டு தட்டுகளை வாங்கி இருக்காளாம். இவளுக்கும் அந்த மாதிரி தட்டுகள் வேண்டும் என அடம் பிடிக்கிறாள். நம் வீட்டில் என்ன தட்டுகளா இல்லை. பொருளாதார நிலையும் சாதகமாக இல்லை என்றாலும் அவள் புரிந்து கொள்ள மறுக்கிறாள், என்று வருத்தத்தோடு சொன்னான்.
ஏன்மா மாமா வேதனைபடும்படி நடந்து கொள்கிறாய். சற்று நிலைமையை புரிந்து கொண்டு பொருமை காக்கலாமே என்றேன். அவன் மனைவியை பார்த்து. என்ன அண்ணா நீங்களும் புரிந்து கொள்ள மாட்டீர்களா? என் தோழியின் கணவருக்கு இவரைவிட சம்பளம் குறைவு. காலத்திற்கேற்ற பொருட்கள் நம் வீட்டில் இல்லையென்றால் இவரைத்தானே குறைவாக மதிப்பிடுவார்கள் என்றார்.
கணவன் மனைவி ஊடலில் நான் தலையிட விரும்பாமல் அங்ருந்து அமைதியாக நழுவிவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் அங்கு சென்றேன். என்ன அண்ணா எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களா? என்று கேட்ட வண்ணம் என்னை வரவேற்றார். ஆமாம் உங்கள் சண்டையெல்லாம் முடிந்துவிட்டதா? என்று வினவியவாறு உள்ளே சென்று அமர்ந்தேன். ”
அதெல்லாம் போன வாரமே முடிந்துவிட்டது. புதிய தட்டுகளும் வந்துவிட்டன” என்றான் என் நண்பன் இடை மறித்து. தலையணை மந்திரம் வென்றுவிட்டதை உணர்ந்தேன். அவர்களின் ஊடல் மறைந்ததை எண்ணி மகிழ்ந்தேன். அப்புதிய தட்டுக்களையும் பார்க்க விழைந்தேன்.
என்னை அவர்கள் சமையல் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். என்ன ஆச்சரியம், அவர்கள் வாங்கிய புதிய தட்டுக்கள் பிரிக்கப்படாமல் அலமாரியை அழகுப்பொருட்கள் போல அலங்கரித்துக்கொண்டிருந்தது. ஏன் இன்னும் பிரிக்கப்படவில்லை என நான் வினவிய போது, விருந்தாளிகள் வரும் போதுதான் அவை பயன் படுத்தப்படும் என பதில் தெளிவாகவும் உறுதியாகவும் வந்தது குடும்பத்தலைவியிடமிருந்து.
நான் மிகவும் வியந்து போனேன். சிரமப்பட்டு உழைத்து பணம் கொடுத்து வாங்கிய கணவன், வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் பங்குள்ள கணவன் மங்கிய தட்டில் சாப்பிட வேண்டுமாம். என்றோ ஒருநாள் நம்மை பார்த்துவிட்டு சென்றுவிடும் விருந்தாளிக்கு புதிய தட்டில் உபசரணமாம். என்ன உலகம், நம் உதிரத்தில் உதித்து நம்மோடு பினைந்து நாளை நம்மை காப்பாற்றப்போகும் குழந்தைகள் மங்கிய தட்டில்தான் உண்ணவேண்டுமாம்.
மரியாதைக்காக வந்து போகும் விருந்தினருக்கு புதிய தட்டில் உபசரிப்பாம். வீட்டில் உள்ளவற்றை இன்முகத்தோடும்,உள்ளன்போடும் பகிர்ந்து வழங்குவதுதானே விருந்தோம்பல். அதனை விடுத்து போலியாகவும், பகட்டுக்காகவும் வாழ்வதுதான் வாழ்க்கையா ?
நாம் விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல! சிந்திப்பார்களா ?
– ஸித்தீக்