டாக்டர் அடிச்ச ”கொட்டுமேளம்”!
மருத்துவமனை போக வேண்டியிருந்தது. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போனாலே, குறைஞ்சது ஒருமணிநேரமாவது காவல் காத்தாத்தான் “தரிசனம்” கிடைக்கும். நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ்சிட்டாங்களான்னு புரியலை. அதனால், ஒவ்வொரு ஹாஸ்பிட்டலா கூப்பிட்டு, டாக்டர் யாராவது நம்ம வசதிப்படி ‘ஃப்ரீயா’ இருக்காங்களான்னு கேட்டப்போ, ஒரே ஒரு ஆஸ்பத்திரியில மட்டும் இருக்காங்கன்னு சொன்னாங்க. அதுவும், இந்திய டாக்டராம். ஹை, டபுள் டமாக்கான்னு நினைச்சுகிட்டே பேரைக் கேட்டேன்.
வேற நாட்டு டாக்டரா இருந்தா, மொழிப் பிரச்னை என்பதால்தான் இந்திய டாக்டரா தேடுறது. அப்புறம் ‘ஜீன்ஸ்’ பட லட்சுமிப்பாட்டிக்கு நடந்த மாதிரி, இடது மூளைக்குப் பதிலா வலது மூளைல ஆபரேஷன் பண்ணி வைக்கவா? எனக்கு இருக்கிறதே ஒரேயொரு ‘குட்டி’ மூளை. ஏன்னா, ஒண்ணு நான் பேசுற ‘இங்லிபீஸ்’ அவங்களுக்குப் புரியாது; அல்லது, அவங்க பேசுற ’அரபுலீஸ்’ எனக்கு தகராறு ஆகும். இதுவாவது பரவால்ல, டாக்டர் ஆங்கிலத்தைத் தாய்மொழியா கொண்ட நாட்டவரா இருந்துட்டா இன்னும் சிக்கல். அவரோட ’தூய’ ஆங்கிலம் நம்ம ‘சிற்றறிவுக்கு’ ..ஊஹூம்…. பிரியவே பிரியாது!!
இந்த யோசனையில இருந்ததாலயோ என்னவோ, ஃபோன்ல பேசுன ‘ஃபிலிப்பைனி’ மேடம் சொன்ன பேரைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஒரு எச்சூஸ்மி போட்டு, மறுக்காச் சொல்லச் சொன்னா.. என்ன பேர் இது? “ஏஸிசாய்”!! இப்படி ஒரு இந்தியப் பேரா? ஒரு வேலை கோவாக்காரப் பெண்ணா இருப்பாரோ டாக்டர்?
இப்படித்தான், ரொம்ப நாள் முன்னாடி, வேறொரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் பேரை, “டேங்காமேனி போன்யா” என்றார் இன்னொரு ஃபிலிப்பைனி அக்கா. போய்ப்பார்த்தால், அவர் “தங்கமணி பொன்னையா”!! அதுலயும் அக்மார்க் தின்னவேலிக்காரர் வேற. நல்லவேளை, அவர் பேர் “நேசமணி பொன்னையா” இல்லை; இருந்தா, அதையும் கவுண்டமணி மாதிரி, ’நாசமா’ ஆக்கிருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன். சரி,அந்த அதிர்ச்சியையே தாங்கிட்டோம். இது முடியாதான்னு நினைச்சுகிட்டு ஆஸ்பத்திரி போனேன்.
அதான் சொன்னோம்ல, அவங்க பேர் என்ன தெரியுமா? எனி கெஸ்? (guess)
அவங்க பேர் “ஏழிசை”!! பக்கா தமிழச்சிங்க.. அட.. தமிழ்நாட்டவங்கன்னு சொன்னேன்!! ஆங்கிலத்துல பேரை “Ezhisai” னு எழுதினதால வந்த வினை!! அட, ரஹ்மானேன்னு நொந்துகிட்டு, பரிசோதனைலாம் முடிஞ்சப்புறம் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, டீனேஜர்ஸ் பத்தி பேச்சு வந்துது. அவர்களின் லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதான மோகம், எதிர்வாதங்கள், வீட்டு வேலைகளில் பங்கெடுத்தல் குறித்த எதிர்ப்புகள் இப்படி பேசிக்கிட்டிருந்தோம். எனக்கும் டீனேஜ்ல ஒரு வாரிசு இருக்கதால, நானும் கொஞ்சம் புலம்பினேன்.
அப்ப அவங்க எதிர்கொண்ட சில நிகழ்வுகளை உதாரணமாச் சொன்னாங்க.
அபுதாபியில் அவரது டீனேஜ் மகளின் இந்தியத் தோழி அபுதாபியில் தன் பெற்றோர் வாங்கிய புதிய வீட்டுக்கு குடிபோயிருப்பதாகச் சொன்னாளாம். குறிப்பிட்ட அந்த ஏரியாவில், வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாதென்பதுகூட அவளுக்குத் தெரியவில்லையே என்று மகள் சொல்ல, வாடகைக்கு வீடு எடுப்பதற்கும், சொந்த வீடு வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாமல் அவளை வளர்த்திருப்பது பெற்றோரின் தவறே என்று அவர் சொன்னாராம்.
விடுமுறைக்கு தமிழகம் சென்றிருந்தபோது, அதற்கு மூன்றே மாதங்கள் முன்னர் நடந்த இரு திருமணங்களுக்கான பரிசுபொருட்களுடன் இரு தம்பதியரையும் சந்திக்கப் புறப்பட்டால், அதிர்ச்சி.. இரு ஜோடிகளுமே பிரிந்துவிட்டிருந்தனர் என்று தகவல் வந்ததாம்!! அவர் கணித்த காரணம், செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது.
இன்னொண்ணும் சொன்னார். சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிறதில்லை. பின்னாளில் அவன் மேல்படிப்பு/வேலை விஷயமா, வெளிநாடுகளில், தன் அறைத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம் வரும்போது, எதுவுமே தெரியாததால் பாத்திரங்கள்/அறை சுத்தம் செய்யும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த வேலையில் தவறில்லை என்றாலும், இந்தச் செல்லப் பிள்ளைகளுக்கு அதுவும் அவமானமாகத் தெரியும். மேலும், சிலரால், ’கைப்புள்ள’ ரேஞ்சுக்கு நடத்தப்படுகிறார்கள்.
இப்படிப் பலதும் பேசிட்டு, கடைசியில் அவர் சொன்னார், “நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் “நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். அதனால், குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது பெற்றோர்களின் கட்டாயக் கடமை” என்று முடித்தார்.
வீட்டுக்கு வந்து, என்னவரிடம், இதையெல்லாம்சொன்னேன். பின்னே, அவர்தானே எனக்கும் பெரியவனுக்கும் நடுவுல ‘அம்பயர்”!! “கேட்டீங்களா? நானும் இதத்தானே தெனைக்கும் சொல்வேன் வீட்டில, யார் கேக்கிறீங்க? படிச்ச டாக்டரே அதத்தான் சொல்றாங்க பாருங்க. இனிமே நீங்க என்ன சொன்னாலும், நான் சொல்றதச் சொல்லத்தான் செய்வேன்”னு பெருமையாச் சொல்லிகிட்டேயிருக்க…
பாருங்க, பாருங்க, நான் என்ன பல்பு வாங்கினேன்னு ஆவலா நீங்க எல்லாரும் தேடுறீங்க… ஹூம்…
கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”
-ஹுஸைனம்மா