கேன்ஸருக்கு அறிகுறிகளைக் கண்டறிவது அவசியம்! ஏன்?
[ எந்தவொரு நோய்க்கும் அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் எனப்படும் Symptoms என்று ஒன்று இருக்கும்: அது வலியாகவோ, அல்லது புண்ணாகவோ, இருமல், காய்ச்சல் என்று ஏதேனும் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு மாற்றம் நம் உடலில் காணப்படும். அதே சமயம் அந்த அறிகுறி, குறிப்பிட்ட ஒரு நோய்க்கான அறிகுறியாக மட்டுமல்லாமல், வேறு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
கேன்ஸருக்கு மட்டுமல்லாது, எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்தான் சிறந்த மருத்துவம் தந்து, விரைவில் குணப்படுத்த முடியும். இதனால், உடல் நலம் சிதைவதிலிருந்தும், பல்வேறு இழப்புகள் (காலம், பணம், உடல் உறுப்புகள் உட்பட) ஏற்படுவதிலிருந்தும் தப்பிக்கலாம்.]
நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், வாழும் சுற்றுப் புறங்கள் ஆகியவற்றில் கேன்ஸர் தரக்கூடிய சூழ்நிலைகள் பல உண்டு. அவற்றுள், எந்த வகையிலும் நான் வரவில்லை என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாதபடிக்கு, ஒன்றில்லாவிட்டால், ஒன்றில் எல்லாரும் அடங்கிவிடத்தான் செய்கிறோம். உணவும், பழக்க வழக்கங்களும் நல்லதாகவே இருப்பினும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்களாலும் பாதிப்புகள் வருவதுண்டு.
நம் உடலில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கண்டு அல்லது உணர்ந்து அறியும்போதுதான் ஒரு உடல்நலக்குறைவு நமக்கு ஏற்பட்டிருப்பதை தெரிய முடிகிறது. இது எல்லா நோய்க்கும் பொருந்தும். நோய்க்கான உரிய சிகிச்சையைப் பெறுவதற்கு இந்த “அறிகுறிகளே” முதல்படி. அந்த வகையில் இந்த அறிகுறிகள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வரம் என்றுதான் சொல்லவேண்டும். இவை இல்லாவிட்டால், நோய் வந்திருப்பதை அறியாமலே இருந்துவிட நேரிடுமே? அறியாமல் இருந்துவிட்டால் நோயின் விளைவுகள் முற்றிய பின்புதானே தெரியவரும்! எனவே, நோயின் அறிகுறிகள் நமக்கு வரமே!!
இங்கு, கேன்ஸருக்கான அறிகுறிகள், அவற்றின் தன்மைகள், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பார்ப்போம்.
நோய்க்கான “அறிகுறிகள்” (Symptoms) என்றால் என்ன?
எந்தவொரு நோய்க்கும் அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் எனப்படும் Symptoms என்று ஒன்று இருக்கும்: அது வலியாகவோ, அல்லது புண்ணாகவோ, இருமல், காய்ச்சல் என்று ஏதேனும் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு மாற்றம் நம் உடலில் காணப்படும். அதே சமயம் அந்த அறிகுறி, குறிப்பிட்ட ஒரு நோய்க்கான அறிகுறியாக மட்டுமல்லாமல், வேறு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு குழந்தைக்கு உடல்முழுதும் தோலில் தடிப்புகள் காணப்பட்டால், அது அம்மை, தோல் தொற்றுநோய், உணவு அலர்ஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம். உடன் காணப்படும் வேறு அறிகுறிகள் மற்றும் தொடர்ந்த பரிசோதனைகளின் மூலம் இது எதனால் ஏற்பட்டது என்பது மருத்துவரால் கண்டறியப்படும்.
அறிகுறிகளைக் கண்டறிவது ஏன் அவசியம்?
ஒருவருக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ, அவ்வளவு எளிது அதைக் குணப்படுத்துவது.
கேன்ஸருக்கு மட்டுமல்லாது, எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்தான் சிறந்த மருத்துவம் தந்து, விரைவில் குணப்படுத்த முடியும். இதனால், உடல் நலம் சிதைவதிலிருந்தும், பல்வேறு இழப்புகள் (காலம், பணம், உடல் உறுப்புகள் உட்பட) ஏற்படுவதிலிருந்தும் தப்பிக்கலாம்.
மேலும், கேன்ஸரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்தான் உரிய மருத்துவம் செய்து முழுமையாக குணப்படுத்த முடியும். அதன்மூலம் வாழும் காலத்தையும் அதிகரிக்க முடியும்.
ஆகவே, கேன்ஸருக்கான அறிகுறிகள் என்று சந்தேகிக்கப்படுவன எவையெவை என்று அறிந்துகொள்வதோடு, அவற்றை அலட்சியப்படுத்தாமல், சுய மருத்துவத்தை நம்பியிராமல், தகுந்த தேர்ச்சி பெற்ற மருத்துவரிடம் முறையான சிகிச்சைகளை, அவசியமான கால அளவு எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
தற்காப்பு:
கேன்ஸருக்கான அறிகுறிகளைப் பார்ப்பதற்குமுன், (முந்தைய பதிவில் பார்த்ததுபோல) ஒருவரது வாழ்க்கை முறையில் கேன்ஸர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா – அதாவது கேன்ஸர் ஏற்படுத்தும் புறக் காரணிகளால் சூழப்பட்டுள்ளாரா என்பதை சுய ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக, சிகரெட் அதிகம் புகைப்பவர்கள் என்றால் கேன்ஸர் வரும் வாய்ப்பு அதிகம் என்பதை உணரவேண்டும். அல்லது, ஆஸ்பெஸ்டாஸ் ஆலை, கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களும் கேன்ஸர் அறிகுறிகள் எவையெவை என்றறிந்து இருப்பது அவசியம். அப்படியான அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காது அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
கேன்ஸருக்கான அறிகுறிகள்:
கேன்ஸரின் அறிகுறிகளின் தன்மை என்னவென்றால், அவை கேன்ஸருக்கான தனிப்பட்ட அறிகுறிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி இருப்பதில்லை. மற்ற நோய்களுக்கான அறிகுறியே சில சமயங்களில் இதற்குமானதாக இருப்பதால், அந்த நோய்க்கான பரிசோதனையின்போது பெரும்பாலும் கேன்ஸர் வந்திருப்பது “தற்செயலாகத்தான்” கண்டறியப்படுகிறது.
கேன்ஸர் என்ற லத்தீன் வார்த்தைக்கு “நண்டு” என்று பொருள். கேன்ஸர் கட்டிகள் பார்ப்பதற்கு நண்டு தன் கால்களால் மணலில் பரப்பி நிற்பதைப் போன்ற தோற்றம் தருவதாலேயே அந்தப் பெயர் ஏற்பட்டது.
எனவே இந்த அறிகுறிகள், கேன்ஸர் கட்டியின் வகை, வந்துள்ள உடல் பகுதி, ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். இந்தக் கட்டிகள் வளரும்போது, அருகிலுள்ள இரத்தக் குழாய்கள், நரம்புகள், உடலுறுப்புகள் ஆகியவற்றின்மீது தரும் அழுத்தமே இவற்றின் அறிகுறிகளைத் தீர்மானிக்கின்றன.
ஒருவேளை, அந்தக் கட்டிகளின் அருகில் முக்கிய உறுப்புகள் ஏதும் இல்லாதிருந்தால், அதன் தாக்கம் தெரியுமளவு வளரும்போதுதான் பாதிப்புகள் ஏற்படும்.
பொதுவான முக்கிய அறிகுறிகள்:
கேன்ஸர் கட்டிகள், உடலின் சக்தியை உறிஞ்சி விடுகின்றன. அல்லது மனிதர்கள் உண்ணும் உணவு சக்தியாக உருமாறுவதைத் தாக்குகின்றன. மேலும், மனித உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தைத் தடுமாற வைக்கின்றன. இதனால், கேன்ஸர் வந்தவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, உடல் எடை குறைதல் ஆகியவை பொதுவாகக் காணப்படும்.
இவை முக்கிய அறிகுறிகள் என்றாலும், இவை யாருக்கும் பொதுவாகக் காணப்படும் உடல்நலக் குறைவுகள் என்பதால் பலரும் இதைக் கவனிப்பதில்லை. தாமாகவே மருத்துவம் செய்துகொள்கின்றனர். முறையான மருந்துகள் உட்கொண்ட பின்னரும், மீண்டும் மீண்டும் இவை ஏற்பட்டால், தகுந்த மருத்துவரிடம் பரிசோதித்தல் அத்தியாவசியமாகும்.
கவனிக்கத் தவறும் அறிகுறிகள்:
ஏற்கனவே சொன்னதுபோல, புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்ற சாதாரண உடல் வருத்தங்களுக்கான அடையாளங்களை ஒத்து இருப்பதால், இவை கவனியாமல் விடப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம். எனினும், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும்: இந்த அடையாளங்கள் ஒருவருக்குக் காணப்பட்டால், அது கேன்ஸர்தான் என்று தீர்மானித்துவிடவேண்டியதில்லை. உண்மையாகவே அவை வேறு உடல்நலக்குறைவுகளாலும் ஏற்பட்டிருக்கலாம். அதற்குரிய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும், தீராமல் மீண்டும் மீண்டும் வந்தால்தான் சந்தேகம் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு தகுதியான மருத்துவரால் மட்டுமே அறிகுறிகளின் தன்மையை இனங்காண முடியும் என்பதால், சுய மருத்துவத்தையே எப்போதும் நம்பியிராமல் சிகிச்சை எடுப்பதும் அவசியம்!!
கீழேயுள்ள அறிகுறிகள் அனைத்துமே ஆண், பெண் இருவருக்கும் பொதுவானவை
o ஆறாத புண்கள்: தோல், வாய், கால், என்று எந்தப் பகுதியானாலும் ஆறாத புண்கள்
o இரத்தப்போக்கு: சளி, சிறுநீர், மலம் இவற்றோடு இரத்தம் போவது. மார்பக முலையில் இருந்து இரத்தம் கலந்த கசிவு, மூக்கிலிலிருந்து இரத்தக் கசிவு.
o தோலில் ஏற்படும் மாற்றங்கள், தீரா அரிப்பு, தோல் மஞ்சள் அல்லது செந்நிறமாதல் – இவை முகம், கை, கால்களில் மட்டுமல்லாமல், உடலின் எப்பகுதியிலும்.
o மச்சங்கள் உருமாறுவது, நிறம் மாறுவது
o தலைவலி, முதுகுவலி
o வாய் அல்லது நாக்கில் வெள்ளைநிற படலங்கள்
o தொல்லைப்படுத்தும் இருமல் அல்லது குரல் கரகரப்பாக மாற்றமடைவது
o அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்று வலி, உணவு விழுங்க சிரமம்
o சிறுநீர், மலம் கழிப்பதில் அடிக்கடி மாற்றங்கள்
o கட்டிகள் – கழுத்து, அக்குள், மார்பகம் மட்டுமல்லாமல் உடலில் எப்பகுதியிலும் தோலின் அடிப்பகுதியில் தொட்டால் உணரக்கூடிய வகையிலான கட்டிகள்
o மார்பக முலைகளில் திடீர் மாற்றங்கள் – உள்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் போன்றவை, திரவக்கசிவுகள்
o ஆண்கள்: விதைப்பைகளில் வலியில்லாத கட்டி தென்படுதல் அல்லது வீக்கம் அல்லது அளவில் மாற்றம்
பெண்களுக்கு:
மாதவிலக்கல்லாத நாட்களிலோ, உடலுறவுக்குப் பின்னரோ இரத்தக்கசிவு இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். முக்கியமாக, மெனோபாஸ் காலங்களில் இருக்கும் பெண்கள், வழக்கமல்லாத நாட்களில் இரத்தப்போக்கு இருந்தால், இது மெனோபாஸின் விளைவு என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.
ஆண்களுக்கு:
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கானது என்று நினைத்து, அதற்கான அறிகுறிகளை ஆண்கள் அலட்சியம் செய்துவிடுகின்றனர். ஆனால், ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் பெண்கள் யாருக்கேனும் மார்பகப் புற்று வந்திருந்தால், ஆண்களை அது தாக்காது என்பதுதான் பலரின் எண்ணம். ஆனால், அக்குடும்பத்து ஆண்களுக்கு, மார்பகப் புற்றோ அல்லது வேறு கேன்ஸரோ வரும் வாய்ப்பு உண்டு என்பதால், கவனித்துச் செயல்படுதல் அவசியம்.
மேலும், மார்பக வளர்ச்சிக்குக் காரணமாக ‘எஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் இன்று பல்வேறு உணவு மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் காணப்படும் வேதிப்பொருட்களால் தூண்டப்படுவதால் ஆண்களுக்கும் மார்பகப் புற்று வருவது அரிதானதாக இல்லை இப்போது.
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளைக் கண்டு, “சிறிய உடல்நலக்குறைவுக்கான அவஸ்தைகளாகத் தோன்றும் இவைகளுக்கெல்லாம் நான் இனி பயப்பட வேண்டுமா?” என்று எல்லாருக்குமே மனதில் ஒரு குழப்பம் வரலாம். முன்பே சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: கேன்ஸருக்கான அறிகுறிகள் தனிப்பட்டவை அல்ல. அவை வேறு நோயின் அறிகுறியாகவே இருக்கக்கூடும். அல்லது கேன்ஸருக்கானதாகவும் இருக்கலாம். மேலும், கேன்ஸர் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படவேண்டியது மிக அவசியம். ஆகவே எச்சரிக்கை கொள்வோம் எப்போதும். நம் உடலை, அதன் இயல்பை, தன்மையை நாமே நன்றாக அறிவோம். அதில் வரும் மாற்றங்களைச் சரியாக அவதானித்து வந்தாலே தீர்வுகள் கண்டுவிடலாம்.
Ref:
1. http://www.skpkaruna.com/?p=191
கேன்ஸருக்கு மட்டுமல்லாது, எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்தான் சிறந்த மருத்துவம் தந்து, விரைவில் குணப்படுத்த முடியும். இதனால், உடல் நலம் சிதைவதிலிருந்தும், பல்வேறு இழப்புகள் (காலம், பணம், உடல் உறுப்புகள் உட்பட) ஏற்படுவதிலிருந்தும் தப்பிக்கலாம்.]
2. http://www.cancer.org/Cancer/CancerBasics/signs-and-symptoms-of-cancer
3. http://cancerhelp.cancerresearchuk.org/about-cancer/causes-symptoms/possible-symptoms-of-cancer
4. http://www.koodal.com/health/interview_guide.asp?id=131
5. http://www.emedicinehealth.com/cancer_symptoms/page2_em.htm
6. http://www.webmd.com/cancer/features/15-cancer-symptoms-women-ignore
7. http://www.webmd.com/cancer/features/15-cancer-symptoms-men-ignore
8. http://www.webmd.com/breast-cancer/tc/breast-cancer-in-men-male-breast-cancer-topic-overview
9. http://www.cancer.gov/cancertopics/understandingcancer/cancer
source: http://hussainamma.blogspot.in/