ஹுஸைனம்மா
[ பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம்.
குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.
பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.
குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது.
ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு – இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.]
XX & XY : யாருக்காக..?
அலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை, எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும் “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள். குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.
எனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன. ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்?” – சொன்னது வாசுகி.
பெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தாலும், ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.
குழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY :-))) ) பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை. தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டாகக் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY? Why not only XX or XY? என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.
இருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’ கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன். குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.
பணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.
குடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு – இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.
எனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே? மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு – குழந்தையே ஆனாலும்!! பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே? :-))
சில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவைப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள் – கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. – பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
இன்னுமொரு விஷயம் கவனித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம். என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் – திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது போலவே.
டாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட, இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது!! வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்?” என்பதுதானே பதிலாக இருக்கும்? பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது? ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்?
அடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இருக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு!! ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்!!). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு!!
அத்தோடு, சமீப காலங்களாக டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் – வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில், ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.
இவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில்! அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும்!! அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு, தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம், குடும்பத்தையும் மிஸ் பண்ண மாட்டாங்க.
வேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்!!
source: http://hussainamma.blogspot.in/