விசேஷம் எப்போ?
[ பெருகிவரும் இணையதளங்களால், சாதாரண மக்களுக்கும் மருத்துவ அறிவு அதிகரித்துவிட்டதைப் போல, குழந்தையின்மை சிகிச்சை முறைகளிலும் பெண்களில் சிலருக்கு இருக்கும் அறிவு பிரமிக்க வைக்கிறது! அதேசமயம், அளவுக்கு மீறிய தகவல்களால், தனக்கு ஏற்பட்டிருப்பது இந்தக் குறையா, அல்லது அதுவா, அதற்கு இது ஏற்ற சிகிச்சை முறையா, அல்லது அதுதான் சரியா என்று தங்களைக் குழப்பிக் கொள்ளும் நிலைக்குச் செல்லுவதைப் பார்க்கும்பொழுதில் “அறியாமையே ஆனந்தம்” (Ignorance is bliss) எனத் தோன்றுவதும் உண்மையே!
இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? முதல் குழந்தை பிறக்கத் தாமதமாகும் சிலருக்கு, இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் பிறந்திருக்கும். காரணம் – எந்த டென்ஷனும் இல்லாமல், எதிர்ப்பார்ப்புகளும் திணிக்கப்படாமல் இருப்பதால்தானே?]
திருமணமாகி ஒரு வருடம்போல ஆகியிருந்த ஒரு பெண்ணிடம் அடிக்கடி ஃபோன் பேசுவதுண்டு. யாரிடம் நான் பேசினாலும், “வேறென்ன விசேஷம் சொல்லுங்க” என்று பேச்சைத் தொடரும் முயற்சியாகக் கேட்பதுண்டு. இந்தப் பெண்ணிடம் ஒருமுறை அப்படிக் கேட்டபோது, “என்னக்கா, விசேஷமா இருந்தா நானே சொல்லமாட்டேனேக்கா? எப்போப் பேசினாலும் இதயே கேக்குறீங்களே?” என அழத்துவங்க, நான் அதிர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறை தொலைபேசும்போதும், அவர் இந்தக் கேள்வியோடு பேச்சைமுடித்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.
சகஜமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் வருமா என்று குழம்பிய நான், அந்தப் பெண்ணிடம் விளக்கித் தெளிய வைக்க, பட்ட சிரமத்தில், அந்த வார்த்தையையே என் ‘அகராதி’யிலிருந்து எடுத்துவிட்டேன்!! விளையாட்டாகச் சொன்னாலும், இப்பெண்களின் வேதனைகள் விளையாட்டல்ல!
குழந்தை பெறத் தாமதமாவது என்பது பெண்களின் மனதைக் கீறும் ரணமாக, இந்த நவீனயுகத்திலும் இருப்பதுதான் பெரும்வேதனை!
முந்தைய காலங்களில்கூட இந்தளவு வேதனை இருந்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம், என் குடும்பத்தில் பெரிய பாட்டி ஒருவருக்குத் திருமணமாகி 16 வருடங்கள் கழித்தே (சிகிச்சைகள் ஏதுமின்றி) குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்பத்தின் ‘இரும்புப் பெண்மணி’யான அவரை யாரேனும் மனதாலும்கூட குறை நினைத்திருப்பார்களா என்றே சந்தேகம் வரும்.
என் சின்ன மாமியாருக்கு குழந்தைகள் இல்லை என்பதே எனக்குத் திருமணமான சில மாதங்கள் கழித்துத்தான் தெரியும். அந்தளவுக்கு அவரைச் சுற்றி குழந்தைகள், உறவுகள் கூட்டம் இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பிரதானப்படுத்தப்படுவார். கதைகளில்தான் குழந்தைப் பேறு இல்லாத பெண்களை அம்மாதிரி இழிவுபடுத்தப்படுவதை வாசித்திருக்கிறேனே தவிர, நிஜத்தில் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்பதில் உறவுகள் பெருங்கவனம் கொள்கின்றனர் பெரும்பாலும்.
இவர்களைக் காயப்படுத்துபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அதற்கும் ஏதேனும் காரணம் இருக்கலாம்; கவனித்துப் பார்த்தால், அப்படிக் குறை கூறுபவர்கள், குழந்தை பிறந்த பின்னும்கூட அதை வேறுவகையில் தொடருவார்கள். ஒரு தோழி, தன் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அனுசரணையாக இருந்தாலும், அவரது உறவினர் ஒருவர் காணும் இடத்திலெல்லாம் இதைக் குறித்துப் பலர் அறிய விசாரித்து தன்னை குமைய வைப்பதாக வருந்தினார்.
அடுத்த முறை அவரைக் காணும்போது, “எவ்வளவோ வேண்டுதல் செஞ்சும் பலனில்லை. நீங்களாவது எனக்காக முடி காணிக்கை தர்றதா வேண்டிக்கோங்களேன். பெரியவங்க உங்க பிரார்த்தனை கண்டிப்பாப் பலிக்கும்னு நம்பிக்கை இருக்கு”னு வைக்கச் சொன்ன ‘செக்’ சரியாக வேலை செய்தது. சில இடங்களில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்!!
மன உறுதி அதிகரித்து, பல துறைகளில், ஆண்களுக்கே சவாலாகத் திகழுமளவு முன்னேறியிருக்கும் இக்காலப் பெண்கள், இந்தவொரு விஷயத்தில் மட்டும் மனதளவில் இன்னும் பலவீனமாக இருப்பது ஏன்? இதற்குக் கைகாட்டப்படுவது, சமூகம் மற்றும் மாமியார் தொடங்கி புகுந்த வீட்டு உறவினர்களின் எதிர்பார்ப்புதான். மாறிவரும் உலகில், மாமியார்களும் மாறித்தான் இருக்கிறார்கள். மருமகளுக்குக் குழந்தைப்பேறு தாமதமாவதற்கு, தன் மகனும் காரணமாக இருக்கலாம் என்பதை இக்கால மாமியார்கள் பலரும் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே அவர்களும் விதிப்படி நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். அண்டை, அயல், உறவுகள், நட்புகள் எல்லாரும்கூட ஆதரவாகவே இருக்கிறார்கள் இவர்களுக்கு.
எனில், எங்கே தவறு? கூட்டுக் குடும்பங்கள் தொலைந்துவரும், ஏன், தனிக்குடும்ப வாழ்வே மின்னும் நட்சத்திரம்போல மின்னிவிட்டு மறைந்துவிடும் இக்காலங்களில், தன் முதுமைக்காலத்தில் ஆதரவற்றுப் போய்விடுமோ எனும் பெண்மைக்கேயுரிய பாதுகாப்பு உணர்வுதான் அவர்களை இப்படி வீழ்த்துகிறதோ?
வேலையைத் தக்கவைக்க, வேலைகளில் பதவி உயர்வு, இடமாறுதல்கள், வசதிவாய்ப்புகள் பெருகக் காத்திருத்தல் எனப் பல்வேறு காரணங்களால் திருமணம் அல்லது பிள்ளைப்பேற்றைத் தள்ளிப்போடுதல் முதலியவை குழந்தைப்பேறு வாய்ப்புகள் குறையவும் காரணமாக அமைகின்றன. போதாதற்கு வேலை டென்ஷன், ஸ்ட்ரெஸ், வேலைக்கான களம், உண்ணும் உணவுகள், பயன்படுத்தும் நவீனக் கருவிகள் என்று பல்வேறு காரணங்களும் கூட்டணி போடுகின்றன.
பெருகிவரும் இணையதளங்களால், சாதாரண மக்களுக்கும் மருத்துவ அறிவு அதிகரித்துவிட்டதைப் போல, குழந்தையின்மை சிகிச்சை முறைகளிலும் பெண்களில் சிலருக்கு இருக்கும் அறிவு பிரமிக்க வைக்கிறது! அதேசமயம், அளவுக்கு மீறிய தகவல்களால், தனக்கு ஏற்பட்டிருப்பது இந்தக் குறையா, அல்லது அதுவா, அதற்கு இது ஏற்ற சிகிச்சை முறையா, அல்லது அதுதான் சரியா என்று தங்களைக் குழப்பிக் கொள்ளும் நிலைக்குச் செல்லுவதைப் பார்க்கும்பொழுதில் “அறியாமையே ஆனந்தம்” (Ignorance is bliss) எனத் தோன்றுவதும் உண்மையே!
அதிவேகமாய் அபரிதமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், பலவற்றால் மனித உறவுகளின் மதிப்பு குறைந்ததுபோலவே, சேவைகளும் தரத்தில் குறைந்து வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இவற்றில் மருத்துவத்துறையின் தரம்தான் நம்மை அதிகக் கவலைப்படுத்துவது. மேலும், வழமையாய் வரும் சிறு உடற்பிணிகளே தற்காலங்களில் நவீன மருத்துவத்துறைக்குச் சவால் விடுகின்றன. அப்படியிருக்கும்போது, பெரும்பாலும் ‘நிகழ்தகவின்’ அடிப்படையிலேயே வெற்றிதரும் குழந்தையின்மை சிகிச்சை முறைகள் வெற்றிபெற சிகிச்சைக்கு உட்பட்டவர் மட்டுமின்றி, சக துணையும் மன உளைச்சல் இல்லாது இருத்தல் அவசியம். அவர்கள் மனதில் அமைதிச்சூழல் ஏற்பட, சிகிச்சை தரும் மருத்துவர் உள்ளிட்ட குழு நம்பிக்கை தரும்விதமாகவும், ஆதரவாகவும், திறமையாகவும் அமைதல் மிகமிக அவசியம்.
குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவமனைகள்தான் குழந்தையில்லாப் பெண்களின் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணமோ எனத் தோன்றுகிறது. மிகச் சிலரே, உண்மையான சேவை மனப்பான்மையில் தரமான, சரியான சிகிச்சை வழங்குகின்றனர். மற்றவர்கள், பெருகிவரும் இன்றைய நவீனகால மருத்துமனைகளுக்கு ஒப்பாக, இவர்களுக்குப் பொய்யான நம்பிக்கைகள் கொடுத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகளிம் ஈடுபடுகின்றனர்.
ரேஸில் செல்லும் குதிரையை ’கமான், கமான்’ என்றழைப்பது போல, இப்பெண்களை, அவர்களின் உண்மை உடல்நிலைக்கு மாறாக, மீண்டும் மீண்டும் பல்வித பரிசோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனரோ என்று கவலை தோன்றுகிறது. ஒரு ஏமாற்றத்தை எப்போதாவது எதிர்கொண்டால், அதிகப் பாதிப்பு இராது. தொடர்ச்சியாகப் பலமுறை தோல்வியாக அமையும்போதுதான் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு என்.ஆர்.ஐ. நண்பரின் மனைவி, தமிழகம் சென்று, குழந்தையின்மைக்காக மருத்துவரை நாடி, சிகிச்சைகள் மேற்கொண்டு, பரிந்துரைத்தபடி, பல்விதப் பரிசோதனைகள் செய்துகொண்டார். இன்னும் மேலதிகப் பரிசோதனைகள் செய்யும்படி சொல்லப்பட்டது. விடுமுறை முடிந்துவிட்டதால், தான் வாழும் நாட்டில் செய்துகொள்ளலாம் என்று எழுதி வாங்கிவந்தார்.
அங்கே, குழந்தையின்மைச் சிகிச்சைகள் காப்பீடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதால், தம் பொறுப்பிலேயே பெரும்தொகை செலவழித்துச் செய்துகொள்ளவேண்டும். என்றாலும், ஆர்வம், அவசியத்தின் காரணமாகச் செய்துகொள்ள முன்வந்து மருத்துவமனைக்குச் சென்றபோது, குறிப்பிட்ட அந்தப் பரிசோதனையைச் செய்ய மறுத்துவிட்டனர்! காரணம்? பரிந்துரைக்கப்பட்ட அப்பரிசோதனைகள் திருமணமாகி குறைந்தது ஏழெட்டு வருடங்களாவது ஆகியிருந்தால்தான் அந்நாட்டில் செய்வார்களாம். இவர்களுக்கோ ஒன்றரை வருடங்களே ஆகியிருப்பதால், மறுத்திருக்கிறார்கள்!! நண்பருக்கு மிகுந்த அதிர்ச்சி. சிகிச்சைகள் எடுப்பதையே நிறுத்திவிட்டார். பின்னர் இயல்பாகவே, சில மாதங்களில் அப்பெண் கருவுற்றார்.
இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? முதல் குழந்தை பிறக்கத் தாமதமாகும் சிலருக்கு, இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் பிறந்திருக்கும். காரணம் – எந்த டென்ஷனும் இல்லாமல், எதிர்ப்பார்ப்புகளும் திணிக்கப்படாமல் இருப்பதால்தானே?
எனில் சிகிச்சையே கூடாதா என்றால், இல்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ளுமுன் அவசியப்பட்ட கால அளவு பொறுமையாய் இருக்கவேண்டும். கருவுறுவதில் தாமதம் ஏற்பட்டால், அதை அமைதியான மனதோடு, பொறுமையாக எதிர்கொள்ளுதல் மிக அவசியம். ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரித்து, வாங்கும் கட்டணத்தின் அடிப்படையில் அல்லாமல், தரமான சிகிச்சையின் அடிப்படையில், நம்பிக்கையான மருத்துவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இச்சிகிச்சை முடிவுகளும் கணவன்-மனைவி இருவரின் மனத்திண்மையைப் பெருமளவு பொறுத்திருக்கும் என்பதால், இருவருக்கிடையில் இச்சமயத்தில்தான் புரிதல், இணக்கம் அதிகமிருக்க வேண்டும்.
ஒருவேளை, முடிவுகள் சோர்வைத் தரும்வகையில் அமையுமெனில், தளர்ந்துவிடாது, வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டும். அதில் முதலாவதாய், தத்தெடுத்தல் இருப்பது நலம்.
தத்தெடுப்பதில் இருக்கும் மனத்தடைகளும் இளைய தலைமுறையினரிடம் பெருமளவில் நீங்கிவருகின்றன. செய்திகளில், ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியோடு அருகிலேயே, அதனை அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் ஒரு தம்பதியர் வளர்க்க விருப்பம் தெரிவித்திருப்பதாயும் செய்தி இருக்கும். எனினும், மக்களின் மனத்தடை நீங்கிய அளவுக்கு, சட்டத்தின் இடர்கள் நீங்கிவிடவில்லை. சாதாரணர்களும் எதிர்கொள்ளுமளவு தத்தெடுத்தலை இலகுவாக்க அரசு முன்வந்தால், பெரும் வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.
எத்துன்பம் வாய்த்தாலும் தனக்கு நேர்ந்ததை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பதைவிட, தன்னைவிட கீழ்நிலையில் இருப்பவர்களைக் கண்டு மனம் தேற்றிக்கொள்ளல் வேண்டும். இவ்விடத்தில், தன்னைவிடக் கீழ்நிலை என்றால், இச்சிகிச்சை முறைகளை மேற்கொள்ளமுடியாத அளவு வறுமையிலும், அறியாமையிலும் இருப்பவர்கள், மற்றும், குழந்தைபெறத் தகுதியிருந்தும், தனக்கோ தன் துணைக்கோ ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகளால் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள் எனலாம்.
உதாரணமாக, எய்ட்ஸ் போன்ற தீரா நோய் தாக்கியவர்களின் மனைவியர் அல்லது புற்றுநோய், காசநோய் போன்ற கருவையும் தாக்கும் நோயுடையோர் நிலை. குழந்தை பெற தாமதம் ஆகுபவர்களுக்கு என்றாவது ஒருநாள் இறையருளால் குழந்தை பாக்கியம் வாய்க்கும் நம்பிக்கை உள்ளது; ஆனால் ’கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ நிலையிலுள்ள இவர்கள்?
திருமணம் ஆகி, குழந்தைப் பேறு அடைய தாமதமானால் பொறுமையும், மன உறுதியும், நிறைய நம்பிக்கையும் கொள்வது மிக அவசியம். மேலும், இயன்றவரை இயற்கை வழிகளிலான சிகிச்சைகளைக் கைக்கொள்வதே சாலச் சிறந்தது.
‘சொல்வது எளிது, எங்கள் நிலையில் இருந்துப் பார்த்தால் தெரியும்’ என்றால், நான் அறிந்த மிகச்சிறந்த குழந்தைப்பேறு மருத்துவர் ஒருவர் குழந்தையில்லாதவர். அவர் பெறவில்லையே தவிர, எத்தனை ஆயிரம் குழந்தைகளை அவர் கையில் முதலில் ஏந்தியிருப்பார்? எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தியிருக்கும்? அவர் இவ்வாறு துவண்டிருந்தால், மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பாக்கியம் கிடைத்திருக்குமா?
தோழிகளே.. மனம் துவளாமல் இருப்பது தான் குழந்தை பாக்கியம் பெற முதல் வழி. சீக்கிரமே மழலைச் செல்வம் உங்களை மகிழ வைக்கும்.
நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!
நன்றி: ”யூத்ஃபுல் விகடன்” 17-செப்டம்பர், 2011.