மண்ணறை பிளக்கும்! மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளிவருவார்கள்
மவ்லவி, கே.ஏ.காஜாமுயீனுத்தீன் மன்பஈ
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“மறுமை நாளில் ஆதமுடைய சந்ததிகளுக்கெல்லாம் நான் தான் தலைவர். பெருமைக்காக வேண்டி இதை நான் சொல்லவில்லை.
லிவாவுல் ஹம்தென்னும் அந்தக் கொடி என் கையில் தான் இருக்கும். பெருமைக்காக வேண்டி இதை நான் சொல்லவில்லை.
அன்றைய தீர்ப்பு நாளில் ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் உட்பட அனைத்து நபிமார்களும் எனது கொடிக்கு கீழேதான் இருப்பார்கள். பெருமைக்காக இதை நான் சொல்லவில்லை. பூமியைவிட்டு எழுபவர்களின் முதலாமவரும் நான் தான். பெருமைக்காக சொல்லவில்லை. (நூல்: திர்மிதீ)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜுபைர் இப்னு முத்யீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
முஹம்மதும் நான் தான். அஹ்மதும் நான் தான். என் மூலமாக கஃப்ரை அழித்து விட்டானே அத்தகைய “மாஹி”யும் நான் தான்.
என் பாதங்களுக்குக் கீழே படைப்பினங்கள் எழுப்பப்படுவார்களே அத்தகைய “ஹாஷிர்”ரும் நான் தான். எனக்குப் பின் நபியென்று யாருமில்லையே அத்தகைய “ஆகிப்”பும் நான் தான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
இது போன்று ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பின் இறுதியில், அல்லாஹ்வுடைய ஹபீபும் நான் தான். கியாமத் நாளையில் ஷாபிய்யும் நான் தான், முஜப்பியும் நான் தான். சுவர்க்கக் கதவு தட்டப்பட்டு அது திறக்கப்பட்டு முதன் முதலில் உள் செல்வதும் நான் தான். (என்னைத் தொடர்ந்து முஃமீன்கள் நுழைவார்கள்) முன்னோர்களிலும், பின்னோர்களிலும் அல்லாஹ்விடத்தில் சங்கையானவரும் நான் தான். (ஒவ்வொன்றையும் சொன்னதற்குப் பின் பெருமைக்காகச் சொல்லவில்லை” என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்). (நூல்கள்: திர்மிதீ, தாரமீ)
எக்காளம் ஊதும் குழாயை வைத்திருப்பவர் குழாயை வாயில் வைத்துக் கொண்டு, நெற்றியைச் சாய்த்து, காதைத் தீட்டி வைத்து, ஊதுவதற்கு கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் எவ்விதம் மகிழ்வோடு இருக்க இயலும்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இது அவர்களின் தோழர்களுக்குப் பாரமாக தோன்றவே அவர்கள் “நாங்கள் என்ன செய்வது?” அல்லது “நாங்கள் என்ன கூறுவது?” என்று கேட்டனர். “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அன்றி நல்ல காரியஸ்தவனும் அவனே. அல்லா ஹ்வின் மீது நாங்கள் (முழு) நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் கூறுங்காள்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
அல்லாஹு தஆலா சுவர்க்கத்தின் அதிபதியாகிய ரிள்வான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கட்டளையிடுவான்; “ரிள்வானே! என்னுடைய ஹபீப் மு ஹம்மதுக்காகவும், அவருடைய சமுதாயத்திற்காகவும் சுவர்க்கலோகம் முழுவதையும் அலங்காரம் செய்யுங்கள்”
பிறகி, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இரண்டு பட்டாடைகளையும், இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் “லிவாவுல் ஹம்து” எனும் கொடியையும் கொடுத்து இவர்களுடன் பிரசித்திப் பெற்ற வானவர்கள் பலரையுமுடன் அனுப்பி “நீங்கள் அனைவரும் என்னுடைய ஹபீப் முஹம்மது அவர்களின் இடத்திற்குச் சென்று அவர்கலை அழைத்து வாருங்கள்” என்று அல்லாஹு தஆலாவின் புறத்திலிருந்து கட்டளை பிறக்கும்.
வானவர்கள் அனைவரும் பூலோகத்தில் இறங்குவார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது புனித ரவ்ளாஷரீஃபை தேடுவார்கள். இறுதியில் அன்னாரவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் பிரகாசமுள்ள ஒளி ஒன்று வானம் வரை ஒளிர்ந்து கொண்டிருக்கும். அந்த ஓலியைக் கண்டு அன்னாரவர்களின் அடக்கஸ்தலம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு வானவர்களும் அதைச் சூழ்ந்து கொள்வார்கள்.
முதலில் ஹளரத் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலல்லாஹ்” என்பார்கள். அண்ட சராசரங்கள் எது நிசப்தமாக இருக்குமோ அது போன்று அண்ணலாரின் அடக்கஸ்தலமும் அமைதியாக இருக்கும்.
பிறகு, ஹளரத் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “விண்ணப்பம் செய்வதற்காகவும், கணக்கு கொடுப்பதற்காகவும், தீர்ப்பு பெறுவதற்காகவும் எழுந்திரியுங்கள்” என்று சொல்வார்கள். உடனே அஹ்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அடக்கஸ்தலம் அதிர்ந்து துளும்பி வெடிக்கும்.
மறுமுறையும் அதேபோன்று சொல்வார்கள். அப்பொழுது அன்னாரவர்களின் அடக்கஸ்தலம் பிளந்து விரியும். அதிலிருந்து மஹ்மூது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வருவார்கள்.
இது ஒன்றும் ஆச்சரியமான செய்தியல்ல! ஆனால், அங்கே நடக்கும் ஒரு நிகழ்ச்சிதான் உலக மகா ஆச்சரியம்! அதிசயமும் கூட!
ஆம்! குளோரஃபார்ம் கொடுக்கப்பட்ட ஒருவன் மயக்க நிலைக்கு முன் எந்த வார்த்தையை இறுதியாகப் பேசினானோ அதே வார்த்தையைத்தான் மயக்க நிலைக்குப் பின் விழித்தவுடன் பேசுவான் என்கிறது மருத்துவ நிபுணர் குழு. அதுபோல் குளோரஃபார்ம் என்றாலே என்னவென்று தெரியாத குணக்குன்று கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வையக வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில் அவர்கள் இறுதியாக பேசிய வார்த்தைகளில் முதலாவது வார்த்தை “சமுதாயமே! சமுதாயமே!” என்ன ஆச்சரியம்! மறுமையில் மண்ணரையைப் பிளந்து எழுந்து அவர்கள் பேசும் முதல் வார்த்தையும் “சமுதாயமே! சமுதாயமே!!
மண்ணறை பிளந்து எழுந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாடியிலும் சிரசிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தங்களது கையினால் தட்டிக் கொண்டு வலதுபுறமும், இடதுபுறமும் திரும்பிப் பார்ப்பார்கள்.
பூலோகத்தில் கட்டிடங்கள், மரங்கள், மனிதர்கள் என்று எதுவுமில்லாத எவருமில்லாத பூமி சமதளமாய் நிலை குலைந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்துவார்கள்.
அச்சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சூழ்ந்திருக்கும் வானவர்களில் ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யாரஸூலல்லாஹ்’ ஏன் அழுகிறீர்கள்? தாங்கள் அல்லாஹு தஆலாவிடம் மேன்மையான பதவியிலல்லவா இருக்கிறீர்கள்!’ என்பார்கள்.
“ஜிப்ரயீலே! இது எந்த நாள்?” என்று கேட்பார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
“யாரஸூலல்லாஹ்! இது கியாமத் நாள். கைசேதப்படும் நாள், பிரியும் நாள். சேரும் நாள், வெருண்டோடும் நாள், விண்ணப்பம் செய்யும் நாள்” என்று கூறுவார்கள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அதற்கு அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜிப்ரயீலே! எனக்கு நீர் நன்மாராயம் சொல்லும்” என்பார்கள்.
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் “யாரஸூலல்லாஹ்! தங்களுக்கு நன்மாராயம் உண்டாகுவதாக. இதோ சுவர்க்கத்து வாகனமாகிய புராக்கைப் பாருங்கள், கிரீடத்தைப் பாருங்கள், பட்டாடையைப் பாருங்கள், லிவாஹுல் ஹம்தைப் பாருங்கள். இவையெல்லாம் தங்களுக்காக அல்லவா?”என்பார்கள்.
அதற்கு அ ஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கண்கள் பனிக்க :ஜிப்ரயீலே! இவைகளைப் பற்றியெல்லாம் நான் உம்மிடம் கேட்கவில்லை! என்னுடைய உம்மத்தைப் பற்றியே உம்மிடம் நான் கேட்ட்கின்றேன்” என்று கேட்டுவிட்டு ஓ சமுதாயமே சமுதாயமே என்பார்கள். அப்பொழுது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “யாரஸூலல்லாஹ்! அல்லா ஹு தலாவின் ஆணை தங்களுடைய கப்ருக்கு முன் வேறு எவருடைய கப்ரும் பிளக்கக்கூடாது. அது போன்று யாருடைய கப்ரும் பிளக்கவேயில்ல” என்பார்கள்.
நான் அதற்கு அருகிலிருந்த இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ”ஆமாம்! நாயகமே! நான் அதற்காக இன்னும் இரண்டாவது ஸூர் ஊதவில்லை’ என்பார்கள்.
இவ்விருவர்களுடைய பதிலைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”இப்பொழுதுதான் எனது கண்கள் குளிர்ந்து கல்பும் மகிந்தது” என்று கூறிக்கொண்டே பட்டாடைகள் வாங்கி ஒன்றை உடுத்திக் கொண்டு மற்றொன்றை போர்வையாய் போர்த்திக்கொண்டு கிரீடத்தை தலையில் அணிந்து எழுந்து நின்று “இன்றைய தினம் நான் எனது இடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எனது சமுதாயத்திற்காக மன்றாடுவேன்” என்று சொல்வார்கள். பிறகு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் புனித புராக் வாகனத்தில் ஏறிச் சென்று அல்லாஹு தஆலாவின் சமூகத்திலிறங்குவார்கள்.
புராக்கை விட்டிறங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருப்பார்கள்.
“ஹபீபே! முஹம்மதே! தலையை உயர்த்துங்கள் நீர் விரும்பியதையெல்லாம் என்னிடன்ம் கேளும், தருகிறேன். ஷஃபாஅத் செய்யுங்கள் உத்தரவு தருகின்றேன்” என்று அல்லாஹு தஆலா கூறுவான்.
அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலையை உயர்த்தி எழுந்திரிப்பார்கள்.
பிறகு அல்லாஹு தஆலா தனது தூதரைப்பார்த்து “முஹம்மதே! ஜிப்ரயீல் என் அமானத்தை உம்மிடம் தந்தாரா?” என்று கேட்பான். அதற்கு அஹ்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆமாம்” என்பார்கள்.
“அதை என்ன செய்தீர்?”
“அதை எனது சமுதாயத்தார்களிடம் கொடுத்திருக்கின்றேன்”
“சரி இருக்கட்டும்! நீங்கள் பைத்துல் முகத்தஸ்ஸிலுள்ள பாறைக்கல்லில் போய் உட்கார்ந்திருங்கள்” என்று அல்லாஹு தஆலா கட்டளையிடுவான்.
காலத்தைப் படைத்தவனின் கட்டளையை ஏற்று தங்களது சமுதாயத்தை நினைவு கூர்ந்தவர்களாக அவர்கள் வரும் வழியில் விழிகள் வைத்து அமர்ந்திருப்பார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் ஸூர் ஊதுதலுக்கும் இரண்டாவது ஸூர் ஊதுதலுக்கும் உள்ள இடைப்பட்ட கால அளவைக் குறிப்பிடும்போது நாற்பது என்றார்கள். இந்த அறிவிப்பை அறிவிக்கும் ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தோழர்கள் இப்படிக் கேட்டார்கள்.
“நாற்பது என்றால் என்ன? நாற்பது நாட்களா? நாற்பது மாதங்களா? நாற்பது வருடங்களா? பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாற்பதை எந்த கால அளவுடன் குறிப்பிட்டார்கள்?” எனக் கேட்க, அதற்கு ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அண்ரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதில் நாற்பது என்று மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால அளவைக் குறிப்பிட்டு சொல்லும்போது என் செவி கேளாமலும் இருந்திருக்கலாம், மொத்தத்தில் எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டார்கள் (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
இரண்டாவது ஸூர் ஊதப்பட்டவுடன் தான் மற்றகளும், மற்ற படைப்புகளும் எழுவார்கள்.
– ”அஷ் ஷரீஅத்துல் இஸ்லாமியா” மார்ச், 2010.