அந்த கிராமத்து அரபிக்கு அதுவே போதுமானது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனத்துப் பள்ளியில் அன்று அஸர் தொழுகையை முடித்துவிட்டு அமர்ந்திருக்கின்றார்கள். சுற்றிலும் தோழர்கள் குழுமியிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு கிராமத்து அரபி வருகிறார். ஸ்லாம் கூறுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்று தமக்குப் பக்கத்திலேயே அமரவைக்கிறார்கள்.
“நான் இஸ்லாத்தை ஏற்க விரும்புகின்றேன்” என்கிறார் அந்த கிராமத்து அரபி. அண்ணலார் அகமகிழ்ந்து அவருக்கு கலிமாவை சொல்லித்தருகிறார்கள். லா இலா ஹ் இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்ல ஹ் – இறைவன் யாருமில்லை அல்லா ஹ்வைத் தவிர, முஹம்மது இறைவனின் தூதராவார்.”
நபித்தோழர்கள் அந்த அரபியை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து “தோழரே! இவரை உன்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு குர் ஆன் கற்றுக்கொடுங்கள்.” என்று அனுப்பி வைக்கிறார்கள்.
சிறிது நேரம் கழித்து ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு திரும்பினார்கள். அவர்களது முகத்தில் வருத்தம் தெரிந்தது.”அந்த கிராமத்து அரபி சரியாகப் படிக்காமல் போய்விட்டார்” என்று அKKஅல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்முறையிடுகிறார்கள்.
“என்ன நடந்தது?” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கின்றார்கள்.
“நான் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். குர் ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தேன். ஒரேயொரு அத்தியாயம் தான் சொல்லிக்கொடுத்தேன். அதை ஓதி முடித்ததும் அவர் எழுந்துவிட்டார். “எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது” என்ற் சொல்லியவாறு கிளம்ப முற்பட்டார். இன்னும் கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என்றூ எவ்வளவோ நான் மன்றாடியும் அவர் அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் போய்விட்டார்.” என்று ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு வருத்தத்துடன் சொன்னார்கள்.
“அவருக்கு எந்த அத்தியாயத்தை சொல்லிக்கொடுத்தீர்?” எனக் கேட்டார்கள் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவார்கள்.
“திருமறையின் 99 ஆவது அத்தியாயத்தை, அதன் கடைசி இரு வசனங்களை கேட்ட மாத்திரத்தில் அந்த ஆள் “எல்லாம் புரிந்து விட்டது” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.” என்றார்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்முறுவள் பூத்தவண்ணம் “அந்த கிராமத்து அரபிக்கு அதுவே போதுமானது” என்றார்கள்.
அந்த கிராமத்து அரபிக்கு மனதிருப்தியை ஏற்படுத்திய அந்த திருவசனம் இதுதான்:
بسم الله الرحمن الرحيم
إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا
وَأَخْرَجَتِ الأَرْضُ أَثْقَالَهَا
وَقَالَ الإِنسَانُ مَا لَهَا
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
الفهرست
அல்குர்ஆன் – அத்தியாயம் – 99
ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது
99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3. ”அதற்கு என்ன நேர்ந்தது?”” என்று மனிதன் கேட்கும் போது-
99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
வாழ்க்கைப்பயணம் மரணத்துடன் முடிந்துவிடுவதில்லை. மரணத்திற்குப் பிறகு இன்னொரு வாழ்வு உண்டு. அதுதான் மறுமை.
நாம் உலக வாழ்வில் செய்கின்ற ஒவ்வொரு நற்செயலுக்கும் மறுமையில் நற்கூலி வழங்கப்படும். இந்த உலக வாழ்வில் செய்கின்ற ஒவ்வொரு தீய செயலுக்கும் மறுமையில் தண்டனை வழங்கப்படும். அதனால் எந்தவொரு நற்செயலையும் அற்பமாகக் கருதிவிடக் கூடாது. அதே போல எந்தவொரு தீய செயலையும் இலேசாகக் கருதிவிடக் கூடாது. இதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது.