Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
திகில் நிறைந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள்!
[ முன்னால் சென்னை மாநகர் துணை ஆணையராக (D.I.G.) பொதுப்பணி ஆற்றிய சகோதரர், Dr. A.P.முஹம்மது அலி I.P.S. (rd) அவர்கள் தனது 30 ஆண்டுகால காவல்துறை பணியின் வரலாற்றை “ஒரு காக்கிசட்டை பேசுகிறது” எனும் பெயரில் (பொருளடக்கம் 57 தலைப்புகளில்) நூலாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்து இந்திய வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத ஒரு சோகமான சம்பவத்தை இங்கு தருகிறோம்.
1991 ஆம் வருடம், ராஜீவ் காந்தி பதவியில் இல்லாதபோது இறப்பதற்கு சில மாதம் முன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்த விழாவில் மதியம் கலந்து கொண்டார். அங்கே போடப்பட்டிருந்த மேடையில் சென்னை வடக்குத் துணை கமிஷனரான நான் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டேன். கட்டுக்கடங்காத கூட்டத்தினைக் கண்டதும் உற்சாகத்தில் மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது தாவி மேடையில் ஏறினார் ராஜீவ்!
1991 மே மாதம் 21 ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாகும் என்றால் மிகையாகாது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை அகதிகளின் தீவிரவாதத்தால் இந்திய நாட்டின் தவப்புதல்வனைப் பலி கொண்ட தினம்!
மே 21 ஆம் தேதி என் அரசாங்க அம்பாசிடர் கார் 8181, சிறு ரிப்பேர் என்று பணிமனைக்கு அனுப்பினேன். அரசு வன்டிக்குப் பதிலாக மாற்று அரசு வாகனம் இல்லாததால் எனக்கு ஒரு டாக்சி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இரவு பணி முடிந்ததும் நான் வேப்பேரி குடியிருந்த வீட்டில் இறங்கிக் கொண்டு டாக்சி டிரைவரிடம் சாப்பிட்டுவிட்டு வேப்பேரி காவல் நிலையத்தில் படுத்துக் கொள்ளவும் என்று கூறினேன்.
சரியாக 10.30 மணிக்குச் சென்னை நகரக் கட்டுப்பாட்டு அறையிலிருந்த எஸ்.ஐ.பூங்காவன்ம், எனக்கு போன் செய்து ஐயா, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் வெடி விபத்தாம். செயிண்ட் தாமஸ் கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நமது ஆஸ்பத்திரிகளுக்கு வர வாய்ப்புண்டு என்றார். உடனே நான் வேப்பேரி காவல் நிலையத்திற்கு போன் செய்து, டாக்சியை வரச் சொன்னேன்.
சென்னை மருத்துவமனை டீன், கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரி டீன், ஸ்டாலின் டீன் ஆகியோருக்குத் தகவல் சொன்னேன். அப்போது ஹார்பர் உதவி கமிஷனராக இருந்த சுப்புராயன், ஆய்வாலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரச் சொல்லி நானும் விரைந்தேன்.
கண்ட்ரோல் வண்டியில் குறைவான போலீஸ் இருந்தார்கள். ஆஸ்பத்திரியில் ஆர்.எம்.ஓ. பீர் முஹம்மது, கேஷுவாலிட்டி டாக்டர்கள் ராஜா, பூங்கோதை ஆகியோர் இருந்தார்கள். பிரதான வாயிலில் காவலர்களை நிற்கச் சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் அருகில் நின்று கொண்டிருந்தோம்.
இரவு சுமார் 11 மணியளவில் ஒரு காவலர் பழைய ஆம்புலன்ஸ் வண்டி மேலே ஊதா விளக்குடன் ஆஸ்பத்திரி வாயிலில் நுழைந்து கேஷுவாலிட்டி வாசலுக்கு வந்து நின்றது. வாகனத்தின் உள்ளே விளக்கை எறியவிட்டார்கள். அப்போது மூப்பனார், வாழப்பாடி, டெல்லி பத்திரிக்கையாளர்கள் சுமன் துபே, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் இருந்தனர்.
வாழப்படி எனக்கு முன்பே அறிமுகமானவர் ஆதலால், “அலி சார் எங்கள் தலைவர் போயிட்டார் சார்” என்று கதறிக்கொண்டு கீழே இறங்கினார். “ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்” என்றார்.
நான், ஏ.சி., ஆய்வாளர் மூவரும் தள்ளும் ஸ்ட்ரெச்சரைக் கேஷுவாலிட்டியிலிருந்து எடுத்து வந்தோம்.
அப்போது அழகு வாழைத்தண்டான ராஜீவ் உடல், இடது பக்கம் முகத்திலிருந்து கால்வரை சிதைந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
நான் ஒரு நிமிடம் உடல் நடுங்கி விட்டேன்.
பிறகு சமாளித்து உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர் அறையில் வைத்துப் பூட்டி, ஆய்வாலர் கோபால கிருஷ்ணனை நிற்க வைத்துவிட்டு பாதுகாப்பு பணிக்காக வெளியே வந்தோம்.
அப்போது கமிஷனர் ராஜசேகரன், மைக்கில் “அலி, ஸ்ரீபெரும்புதூரில் காயம்பட்ட சிலபேர் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். பந்தோபஸ்து போடுங்கள்” என்றார். நான் உடனே அவரிடம், “ராஜீவ் டெட்பாடி வந்துவிட்டது” என்று சொன்னேன். உடனே அவர் “நான் அங்கே வருகிறேன்” என்றார்.
வாழைப்பாடி என்னை அழைத்து, “சார், போன் எங்கே இருக்கிறது? நான் கவர்னரிடம் பேச வேண்டும்” என்றார். அவரை அழைத்துக்கொண்டு கேஷுவாலிட்டி அறைக்கு வெளியே உள்ள ஆஸ்பத்திரி டெலிபோன் எக்சேஞ்சுக்கு வந்து, அவருக்கு கனெக்ஷன் வாங்கிக் கொடுத்தேன். வாழைப்பாடி அப்போது கவர்னராக இருந்த பீஷ்ம நாராயணசிங் நண்பர் என்ற முறையில், “மிஸ்டர் சிங், கம் ஹியர், Our leader Raajiv is dead. We are in General Hospital (எங்கள் தலைவர் ராஜீவ் இறந்துவிட்டார். நாங்கள் பொது மருர்துவமனையில் இருக்கிறோம்.) என்று நா தழுதழுத்த குரலில் சொன்னார்.
அதன்பிறகு கமிஷனர் பாதுகாப்புப் படை சூழ வந்தார். ஆனால், “பாதுகாப்புக்குக் கடமைப்பட்டவர் படுகொலையைத் தவறிவிட்டனர் போலீஸார்” என்ற கூக்குரல், அங்கே ஒலித்தது.
டி.ஜி.பி.ரங்கசாமி, ஐ.ஜி.வால்ட்டர் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆவேசப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவர்களுடன் சில சமூக விரோதிகளும் சேர்ந்து கொண்டு, ஆஸ்பத்திரியில் நுழைய முயன்றார்கள். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் இருந்த போலீஸார் பெரும்பாலானவர்களைத் தடுத்து விட்டார்கள்.
சிலர் அங்குக் கட்டிடப் பணிக்காகக் கிடந்த மரக்கட்டை, கற்களை, ஆயுதமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளைத் தலைவர் ராஜீவிற்கு சரியாகப் பாதுகாப்புக் கொடுக்காமல் சாகடித்து விட்டதாகப் பயமுறுத்தும் விதத்தில் திட்ட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கோப உணர்ச்சியை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகிவிட்டது.
ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிலர் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை விரட்டுவதற்குக் கண்ட்ரோல் ரூமிலிருந்து போலீஸ் படை விரைந்து வந்தது. சிறிது நேரத்தில் கவர்னர்.பி.என்.சிங் வந்து சேர்ந்தார். அதன் பின்பு ராஜீவ் உடலைப் பிண அறை உள்ள இடத்திற்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் காயம்பட்ட எஸ்.பி. தற்போது ஏ.டி..ஜி.பி. நாஞ்சில் குமரன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவ்ரகளில் ஒருவரான கலிவரதன் போன்றவர்களும் மருதுவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களையெல்லாம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். சென்னை நகரத்தில் ரோடுகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தடை ஏற்படுத்தி ஆங்காங்கே கலவரம் நடப்பதாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்து கொண்டே இருந்தது.
ராஜீவுடன் வந்திருந்த டெல்லி பத்திரிகை சீனியர் நிருபர் சுமன் துபேயைக் கூட்டிக்கொண்டு என் அருகில் வந்த மூப்பனார் அவர்கள், “சார், ராஜீவ் பாதுகாப்பு அதிகாரி குப்தாவின் உடல், ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடித்த இடத்தில் இருக்கிறதா அல்லது ஆஸ்பத்திரியில் இருக்கிறதா?” என்று மைக்கில் விசாரிக்கச் சொன்னார். நான் செங்கை கண்ட்ரோல் ரூமுடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டேன். பாதுகாப்பு அதிகாரி குப்தாவின் உடல் குண்டு வெடித்த இடத்தில் இருப்பதாக சொன்னார்கள்.
உடனே அவர் “இடுப்பில் கைத்துப்பாக்கி இருக்கிறதா?” என்று கேட்கச்சொன்னார்கள். நான் மறுபடியும் தகவல் கேட்க துப்பாக்கி இருப்பதாகச் சொன்னார்கள். உடனே அவரது உடலையும், துப்பாக்கியையும் பத்திரமாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள். நானும் செங்கை கண்ட்ரோலுக்குத் தகவல் கொடுத்தேன்.
எனது ஊரைச் சார்ந்த காவல்துறைக் கண்காணிப்பாளர், திரு, இக்பால் தான், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாலர். வெடிகுண்டு வெடித்த ஸ்ரீபெருபுதூர் பகுதி அவர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதுதான். அவர் தம்பியும் என் பள்ளித் தோழனுமாகிய நிஜாம், ஆஸ்பத்திரியில் இரவு 2 மணிக்கு என்னைச் சந்தித்து, “அலி, என் அண்ணன் இறந்து விட்டார்” என்றார்.
மேலும் அவர் ”என்னால் ஸ்ரீபெரும்புதூர் போகமுடியவில்லை. ஏனெனில், ஆங்காங்கே வேகத்தடை ஏற்படுத்திக் கலவரமாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆகவே எனக்குப் பாதுகாப்புக் கொடுத்தால், நான் செல்லலாம் என்றிருக்கிறேன்” என்று அழுதுகொண்டே சொன்னார். நான் கமிஷனரிடம் கலந்து பேசி அவருக்குப் பாதுகாப்பு கொடுத்து ஸ்ரீபெரும்புதூர் அனுப்பினேன்.
ராஜீவ் உடலை மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பு டெல்லிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அதற்குத் தகுந்தாற் போல் சிதைந்த உடலை “மம்மி” முறையில் பதப்படுத்த வேண்டும் என்றார்கள். அதற்கு உரிய அனாடமி டாக்டர் அண்ணா நகரில் இருப்பதாகவும், அவரை அழைத்து வரக் காவல்துறை வண்டி அனுப்ப வேண்டும் என்றார்கள்.
உடனே என் காரில் பாதுகாப்புடன் டாக்டர்கள் ராஜாவையும், பூங்கோதையையும் அனுப்பிவைத்தி அனாடமி டாக்டரை அழைத்து வந்தோம். ஆஸ்பத்திரியின் மூலையில் இருந்த அனாடமி பிளாக்கில் கரண்ட் இல்லை. என் கையில் உள்ள எமர்ஜென்ஸி லைட்டு, மெழுகுவர்த்தி உதவியுடன் அனாடமி பிளாக்கிற்குச் சென்று அங்கிருந்த பதப்படுத்துவதற்குத் தேவையான சதனக்களை எடுத்துக் கொண்டு, பிணவறைக்கு வந்தோம்.
அதிகாலையில் ராஜீவ் மனைவி சோனியா, பிள்ளைகள் ராகுல், பிரியங்கா ஆகியோர், டெல்லியிலிருந்த தனி விமானத்தில் சென்னை வந்து, பின் ஆஸ்பத்திரிக்கு வருவதாகச் சொன்னார்கள். ஆனால், பாதுகாப்பு கருதி உடலை விமானநிலையத்திற்கு எடுத்து வரச் சொல்லிவிட்டார்கள். அதே போன்று ராஜீவ்காந்தி பதுகாப்பு அதிகாரி குப்தாவின் உடலையும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு எடுத்துவரத் தகவல் சொல்லப்பட்டது.
இந்த நாட்டின் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து, கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்த நான், அவருடைய உருக்குலைந்த உடலை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லும் துர்பாக்கியவனானேன் என்ற வேதனை இன்றும் எனக்கு இருக்கிறது.
விமான நிலைய முக்கிய பிரமுகர் வழியாக உடலைக் கொண்டு சென்று, அங்கு இருந்த பழைய கட்டிடத்தில் வைக்கப்பட்ட உடலை சோனியா, குழந்தைகள் உட்பட முக்கிய பிரமுகர்க்ஜள் பார்த்தார்கள். பின்பு அவர் உடலைக் காங்கிரஸ் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, தவான் போன்றவர்கள் எடுத்துக்கொண்டு, இந்திய விமானப்படை தனி விமானம் புறப்பட்டு டெல்லி சென்றது..
( -அன்றைய இரவு ஏ.பி.முஹம்மது அலி அவர்களின் சிறப்பான பணியினை வடசென்னை காங்கிரஸ் பிரமுகர் ஜோதி, ராஜீவ் கொலை விசாரணை சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஜெயின் விசாரணைக் கமிஷனில், பாராட்டி வாக்குமூலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தது. -adm.)
மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது
ராஜீவ் காந்தி தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கிராமத்திலிருந்து ஆறுமுகநேரிக்குச் செல்லும் வழியில், வயலில் நெற்பயிர் நடுகிற பெண்களைப் பார்த்ததும் உடன் தன் ஜீப்பினை நிறுத்தினார். அவரைப் பார்த்ததும் பெண்கள் வயல் வரப்பில் அவர் அருகே ஓடி வந்து, வாயில் கைவைத்து அவரை ஆசரியத்துடன் பார்த்தனர். ராஜீவ் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் மூப்பனார் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ராஜீவ் காந்தி “அந்தப் பெண்களிடம் ‘நான் யார்?’ என்று கேளுங்கள்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
அப்படியே மூப்பனாரும் “ஏம்மா, ஐயா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?’ என்றார். அதற்கு அந்தப் பெண்கள் ஒருமித்த குரலில், “அடியே ஆத்தா, ஏன் தெரியாது, மகாராஜன் (ராஜீவ்) இந்திரா காந்தியம்மா மகந்தானே!” என்று சொன்னார்கள். அதற்கு ராஜீவ் “அவர்கள் என்ன சொல்கிறார்கள்” என்று மூப்பனாரிடம் கேட்க மூப்பனார், “நீங்கள் இந்திராகாந்தி மகனாம்” என்றதும் ராஜீவ் சிரித்துவிட்டார். அதற்குப் பின் அவர் மூப்பனாரிடம் “நான் பிரதமர் ராஜீவ் என்பதைவிட இந்திரா மகன் என்றால்தான் தெரிகிறது” என்று சொல்லி புன்முறுவல் பூத்தார்.
ஒருமுறை தூரத்தில் நின்றுகொன்டிருந்த என்னை பெயர்சொல்லிக் கூப்பிட்டுக் கைக்குலுக்கி “குட்நைட்” என்று அவர் சொல்லிச் சென்றது என் மனதில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
– Dr. A.P. முஹம்மது அலி IPS (rd)