முன்மாதிரி பெண்கள்
அபூ சுமையா
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு!
ஒரு நபித்தோழி தனது மகன் போர்க்களத்தில் இறந்துவிட்டதாகக் கேள்விப் படுகிறார். மகன் இறந்ததும் நெஞ்சில் அடித்துக்கொண்டு தலைவிரி கோலமாக புலம்பும் ரகம் அல்ல அந்த பெண். யுத்த களத்தில் பாய்ந்த அம்பு முதுகிலா அல்லது நெஞ்சிலா என்று பார்த்து நெஞ்சில் என்றால் சந்தோஷப்படும் வீரப்பரம்பரையைச் சேர்ந்த பெண் அவர்.
மகன் இறந்த செய்தி உண்மைதானா என்று அறிய போர்க்களம் நோக்கி ஓடுகிறார். அப்போதுதான் ‘ஹிஜாப்’ பர்தா முறை முறை புதிதாக சட்டமாக்கப்பட்டிருந்தது. எனவே தன் மகனைப் பலிகொடுத்து அதை உறுதி செய்வதற்காக போர்க்களம் நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த இக்கட்டான நேரத்திலும் தனது உடல் முழுமையாக மூடப்பட்டிருக்கிறதா என்று சில மணித்துளிகள் கால அவகாசம் எடுத்துக்கொள்கிறார்.
பின்னொரு நாளில் அந்தப் பெண்ணிடம் அந்த துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் பர்தா விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப்பட்டபோது அந்த பெண்மணி சொன்ன பதில் என்ன தெரியுமா?
‘நான் என் மகனைத்தான் இழந்தேனே தவிர எனது மானத்தை(ஹயா) அல்ல!’.
இன்றைய கால கட்டத்தில் நடந்த இன்னொரு நிகழ்வு
2002 பிப்ரவரி 28. குஜராத் கோத்ரா சம்பவத்திற்கு மறுநாள் நடந்த இன்னொரு நிகழ்வு. அதை அஹமதாபாத் நரோமா பாட்டியாவைச் சேர்ந்த ஆயிஷா (42) இப்படி விவரிக்கிறார்.
ஒரு தெருவில் பிணங்களின் நடுவில் வெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ஆபிதா என்ற 50 வயது முதிய பெண்மணி நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறாள். என்னை நோக்கி கரம் கூப்பி ‘ஆயிஷா! நான் நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறேனே, இந்த உடலை மறைக்கவேணும் ஏதாவது துணி கொடு அம்மா’ என்ற கதறினாள். என்னுடைய சேலையைக் கிழித்து அவளைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என் முயற்சி பலிக்கவில்லை. என் கண் முண்பாகவே அவள் கருகிச் செத்தாள். (புதிய கலாச்சாரம், மார்ச் 2003)
இப்படி இஸ்லாமிய உணர்வுகளுடனேயே வாழ்ந்து அதே இஸ்லாமிய உணர்வுகளுடனேயே மரணிக்க விரும்புகிற இஸ்லாமிய பெண்கள் இன்னும் நம்மில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அத்தகைய உணர்வுகளை நம்மிடமிருந்து சுத்தமாகத் துடைத்தெடுக்கும் காரியங்கள் சமீபகாலமாக பொது நிகழ்வில் அதிகம் அரங்கேறி வருகின்றன.
முஸ்லிம்களை அழிக்க அவர்களை கலாச்சார ரீதியாக பலவீனமாக்குவதுதான் ஒரே சிறந்த வழி என் எண்ணித் தங்கள் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன அந்நிய சக்திகள். இதில் நம்மை நாம் தற்காத்துக்கொள்வது என்பது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியைப் பொறுத்ததுதான். எனவே நமது கலாச்சாரத்தை பாதுகாப்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் எச்சரிக்கையுடன் இருப்போம். அல்லாஹ் உதவி புரிவானாக.
– சிந்தனை சரம் ஜூன் 2003