தொட்டில் மரணம்
அந்தக் குழந்தையின் மரணம் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆறாத் துயரையும் ஏற்படுத்தியது. அதற்கு மேலாக அது ஏன் இறந்தது என்பது விளக்க முடியாத புதிராகவும் அமைந்தது.
குழந்தைக்கு ஐந்து மாதமளவில் இருக்கும். மிகுந்த செல்லக் குழந்தை. அந்தக் குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பெரும் பொக்கிஷம். வயதுக்கு மீறிய துடிதுடிப்பும் உற்சாகமும் கொண்டது. எல்லோருடனும் தயக்கமின்றி சேர்ந்து சிரித்து மகிழும் பண்பு கொண்டதால் அனைவரது பிரியத்திற்கும் ஆளானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமின்றி அந்தத் தெருவில், அக்கம் பக்கம் இருந்த அனைவருக்குமே அதனோடு ஒட்டுதல்.
அன்றும் வழமைபோல உடம்பு திருப்பியது, பால் குடித்தது, விளையாடியது, சிரித்தது, குளித்தது. எதுவுமே மாற்றமில்லை. சிறிய தடிமன் காய்ச்சல் கூட இல்லை. தாயாருக்கு அருகிலேயே இரவு படுத்துத் தூங்கியது. அதிகாலை 5 மணியளவில் தாய் கண்விழித்த போதும் அதேபோலப் படுத்திருந்தது. தாய் தொட்டு அணைக்க முற்பட்டபோது குழந்தை சில்லிட்டுக் கிடந்தது தெரியவந்தது. பேச்சு மூச்சில்லை. டொக்டர் பார்த்தபோது இறந்துவிட்டதாக அறிவித்தார்.
தொட்டில் மரணம் என்றால் என்ன?
நோயெதுவுமின்றி நலமாக இருந்த குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறந்து கிடப்பது எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். ஆயினும் மருத்துவ ரீதியில் இது ஒரு புதினமான விடயமல்ல. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. தொட்டில் இறப்பென (Cot Death) இதனைக் கூறுவர்.
மருத்துவதில் Sudden infant death syndrome என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2ஆம், 3ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே.
ஏன் ஏற்படுகிறது?
இது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
தூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத்தடையை சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள்.
ஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது பிறாமிலோ (Pram)குட்டித் தூக்கம் செய்யும்போது கூட நிகழலாம்.
யாருக்கு ஏற்படலாம்?
வசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.
ஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது.
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக ஏற்படலாம்.
பிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் அதிகம்.
இரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது.
குடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம்.
அதிலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம்.
வருடாந்தம் ஒரு வயதிற்குள், 300 குழந்தைகள் இவ்வாறு இறப்பதாக மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. இது இலங்கைக்கானது அல்ல, இங்கிலாந்து நாட்டின் முடிவு.
எந் நேரத்தில், காலத்தில்?
இவ்வாறு இறப்பது பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகும்.
அதிலும் முக்கியமாக நடுநிசிக்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே நடக்கிறது. இவ்வாறு இறப்பதற்கான காரணத்தை பத்தில் ஒரு பிள்ளைக்கே கண்டறிய முடிகிறதாம்.
பெற்றோரின் மனப் பாதிப்பு :
மிக முக்கியமான பிரச்சினை பெற்றோர்களுக்கு ஏற்படக் கூடிய மனப்பாதிப்பு ஆகும். இது தாங்கள் விட்ட தவறினால் அல்லது கவனிப்பின்மையால் ஏற்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மன ஆறுதலுக்காக மருத்துவருடன் தொட்டில் மரணம் பற்றிப் பேசி விரிவாக அறிந்து கொள்வது நல்லது.
புதினம் பிடுங்குபவர்களைத் தவிர்த்து ஆதரவோடும், புரிந்துணர்வோடும் நடப்பவர்களுடன் பேசி மனம் ஆறுவது புத்திசாலித்தனமானது.
தடுக்கும் வழிகள் :
* குழந்தை இருக்கும் அறையில் புகைப்பது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பமாயிருக்கும் போது தாய் ஒருபோதும் புகைக்கக் கூடாது.
* குழந்தையை எப்பொழுதும் முதுகு கீழிருக்குமாறே படுக்க விட வேண்டும். ஒரு போதும் குப்புற படுக்க அனுமதிக்கக் கூடாது.
* போர்வையால் போர்த்தக் கூடாது. படுக்கையில் வேறு துணிகள் இருக்கக் கூடாது.
* இறுக்கமான தட்டையான மெத்தைகளையே உபயோகிக்க வேண்டும். தொட்டிலுக்குள் நீக்கல் இடைவெளி ஏதும் இன்றி முழுமையாக தொட்டிலை நிரப்பும்படியான மெத்தைகளே நல்லது. மெத்தையின் வெளிப்புறம் தண்ணீர் தேங்காததாக (waterproof ) இருக்கவேண்டும். தடித்த ஒற்றைத் துணியால் மடிப்புகள் விழாமலும், நழுவாதபடியும் மூடியிருக்க வேண்டும்.
* படுக்கையறை கடும் குளிராகவோ, கடும் வெக்கையாகவோ இருக்கக் கூடாது.
* பெற்றோர் படுக்கும் அறையிலேயே குழந்தையின் தொட்டில், கொட் இருப்பது நல்லது.
* புகைக்கும், மது அருந்தும் அல்லது மருந்துகள் உபயோகிக்கும் பெற்றோர் தமது கட்டிலிலேயே ஒருபோதும் குழந்தையைக் கூட வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.
* அதேபோல கடும் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு தூங்க வேண்டாம்.
* சோபா, செற்றி, கதிரை போன்றவற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது.
* குழந்தைக்கு சிறு வருத்தம் என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
* பல குழந்தைகள் உள்ள வீடாயின் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையின் பராமரிப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
சூப்பி கொடுப்பது :
சில ஆய்வுகள் சூப்பி கொடுப்பதால் தொட்டில் மரணம் ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கலாம் என்கின்றன. முக்கியமாக தூக்கம், குட்டித் தூக்கம் ஆகியவற்றின் போது சூப்பி கொடுப்பது இதனைத் தடுக்க உதவலாம்.
ஆயினும் இதனைக் கொடுப்பதால் தாய்ப்பால் ஊட்டலுக்கு தடங்கல் ஏற்படலாம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். தாயப்பால் ஊட்டுபவரகள் பாலூட்டல் செயற்பாடானது சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் வரை அதனை ஆரம்பிக்கக் கூடாது. முக்கியமாக முதல் மாதம் சூப்பியைக் கொடுக்காது விட்டால் குழுந்தை தாய்ப்பாலை நன்கு குடிக்கக் கற்றுக் கொண்டுவிடும். அதன் பின் தேவையானால் கொடுக்கலாம்.
மின்காற்றாடி :
குழந்தை தூங்கும் அறையில் மின்காற்றாடி(Fan) போடுவதால் தொட்டில் மரணத்தைத் தடுக்கலாம் என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஏற்கனவே இப்பிரச்சனையால் இறந்த 185 பிள்ளைகளின் தாய்மாரை செவ்வி கண்ட ஆய்வு இது. குறைந்தளவு எண்ணிக்கையினரை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு என்பதால் இதன் முடிவு சர்ச்சைக்குரியது.
இது பற்றி மேலும் வாசிக்க :- http://www.healthjockey.com/2008/10/07
நினைவுப் பொருட்கள்
குழந்தையின் போட்டோ, அது உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கலாம்.
பாலூட்டும் தாயாயின் மேலும் பால் சுரப்பதைத் தவிர்பதற்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
– டொக்டர் எம்.கே. முருகானந்தன்-
source: http://hainallama.blogspot.in/2009/03/blog-post_20.html