இறப்பு மறுமையின் ஜனனம்
மவ்லவி, எம்.எஸ்.எஸ். மஹ்மூது மிஸ்பாஹி
பிறப்பிற்கு ஒரு வழி! இறப்பிற்குப் பல வழி! மனிதன் ஒரு வழியாக ஜனனமாகி பல வழிகளில் மரணிக்கின்றான்.
நம்மில் பலர் நல்ல மரணம், கெட்ட மரணம், அமைதியான மவ்த், அலங்கோலப்பட்ட சாவு என்று தரம் பிரித்து அலசுகிறார்கள். மரணத்தை அலசிப் பார்த்து தரம் பிரிப்பதற்குண்டான தகுதி நமக்குக் கிடையாது.
மரணம் என்பது ஒரு ஆளுமையின் சிதைவு. நம்மிடம் நீங்காமல் இருந்துகொண்டே இpருந்த தனிப் பெருமை, கவுரவம், பணம், பொருட்கள் மீதுண்டான ஆசை, மோகம் இவை மேகங்களைப் போல் கலைந்து செல்வதை, தூரத்திலிருக்கும் பறவைக் கூட்டத்தை ஓரக்கண்ணால் பார்ப்பவன் போலாகிவிடுகிறான்.
சொந்தங்கள், உறவுகள், பாசங்கள் தன்னை விட்டுப் பிரிவதையும் அல்லது விடை பெற்று வெளிநாடு செல்பவனைப் போலவும் மரண நேரத்தில் மனிதன் ஆகி விடுகின்றான். அழுந்தி அழுந்தி வந்த தொடர் நோய்களின் தாக்கம் முற்றுப் பெற்று அவைகள் தம்மை விட்டு விலகுவதை இவனால் உணர முடிகிறது.
படபடப்பும், பரிதவிப்பும், ஏக்கமும் நெஞ்சத்தை உயரந்தடங்கச் செய்கிறது.
மனிதனை அடக்கிடச் செய்யும், அச்சத்தால் சுருங்கிடச் செய்யும் ஆற்றல் மரைணம் ஒன்றுக்கு உண்டு. பணக்காரர்கள் பணங்கொடுத்து மரணிக்கின்றார்கள். நவீன சிகிச்சைகள் மூலம் எப்படியும் காப்பாற்றி விடலாம் என்றெண்ணி பல லட்சங்களில் நவீன மருத்துவ நடவடிக்கைகளில் முடிவு ஏமாற்றமாகிவிடுவதைக் காண்கிறோம்.
மரணம் என்ற காதலி நம்மை இடைவிடாமல் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ‘வக்கிரததான எதிரி’யாகவே நாம் மரணத்தைப் பார்க்கிறோம். எனவேதான் மறுமையின் ஏற்றத்தை, சுவனத்தின் மேன்மையை, நன்மையின் கூலியைத் தருகிறவழியான மரணத்தை நல்ல பல தருணங்களில் நினைவு கூர்ந்து பேசுவதை நாம் விரும்புவதில்லை. உதாரணமாக திருமண வாழ்த்தின்போது, கடை திறப்பு விழா போன்ற நிகழ்வுகளில் மரண சிந்தனையை தவிர்த்து விடுகிறோம்.
ஆனால் அல்லாஹ்வின் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ‘மக்களே! மரணத்தை அதிகமாக நினையுங்கள். மரணத்தை நினைப்பது பாவங்களை போக்கி விடுகிறது. மேலும், உலக மோகத்தை நீக்கி விடுகிறது. நீங்கள் செல்வ நிலையில் இருக்கும்போது மரணத்தை நினைத்தால், செல்வத்தை பெரிதாக நினைக்கக்கூடிய தன்மையை அது நீக்கி விடுகிறது. ஏழ்மையில் இருக்கும்போது நினைத்தால் ஏழ்மையை பொருந்திக் கொள்ள உதவுகிறது.’
அகிலத்தின் அதிபதி அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும். நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும்’. (அல்குர்ஆன் 62:8)
‘நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிக பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளங்களின் மீது இருந்தாலும் சரியே’ (அல்குர்ஆன் 4:78)
‘மறுமைக்கு முன்னால் இவ்வுலக வாழ்க்கை அற்பமானது’ (அல்குர்ஆன் : ஸூரதுத் தவ்பா) என்கிறான் இறைவன். அற்பமான இந்த உலகிலிருந்து அற்புதமான மறுமைக்கு நம்மை அழைத்துச்செல்லும் வாகனம் என்று கூட மரணத்தைச் சொல்லலாம். (-குர்ஆனின் குரல் ஜனவரி 2010)
ஃபாத்திமா நளீரா கவிதைகள்
இறைவனின்
இறுதி எச்சரிக்கை.
மறுமைக்கான
மறு அழைப்பு.
சிறைப்பட்ட வயதுக்கும்
திணறும் நாட்களுக்கும்
தீ வைத்தாலும்
மரணம் உயித்தெழும்.
தேகங்கள்
தேசாந்திரம் சென்றாலும்
பூஜ்ஜியமாகும்
பிரபஞ்ச பிரேதத்தை
மரணம்
தழுவிக் கொள்ளும்.
விதியின் முன்னால்
விஞ்ஞானிகளின்
சிந்தை கூட
சிசுவாகிறது.
வாழ்க்கைக்கு
முத்திரையிட்ட- இந்த
மரண முத்தங்கள்
மானிட இதயங்களுக்கு
நல்ல சிகிச்சை.
வாழ்க்கையின்
முடிவுரைக்கும்
மயானத்தின்
முன்னுரைக்கும்
அணிந்துரை எழுதும்
விதியின் கைகளுக்கு- யார்
விலங்கிட முடியும்?
ஆசைகளையும்
அதிகாரங்களையும்
ஆட்சி செய்யும்-மானிட
வர்க்கத்தின் – உயிரை
ஆட்சி செய்யும்
விதியின் விலாசமே
நிரந்தரமான நிஜம்.
வினாவில் நிற்கும்
வாழ்க்கைக்கும்
விடை சொல்லும்
மரணத்துக்கும்- மறு
பிரசுரம் மறுமையில்…
அகிலத்தின் அதிபதி அல்லாஹ் கூறுகிறான்: ‘நபியே! அவர்களை நோக்கி நீர் கூறும். நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும்’. (அல்குர்ஆன் 62:8)
‘நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிக பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளங்களின் மீது இருந்தாலும் சரியே’ (அல்குர்ஆன் 4:78)
‘மறுமைக்கு முன்னால் இவ்வுலக வாழ்க்கை அற்பமானது’ (அல்குர்ஆன் : ஸூரதுத் தவ்பா) என்கிறான் இறைவன். அற்பமான இந்த உலகிலிருந்து அற்புதமான மறுமைக்கு நம்மை அழைத்துச்செல்லும் வாகனம் என்று கூட மரணத்தைச் சொல்லலாம்.