அறிவின் அடித்தளம்
எம்.எஸ். முஹம்மது தம்பி
[ கற்கப்பட்டவை பிறருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். கற்றவர்களால் முதலில் அவை செயல்வடிவமும் தரப்பட வேண்டும். கல்வி பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய முறை இதுவே. இதன் மூலமே அறிவு பரவலாகும். கல்வியும் பயனுடையதாகும்.
அறிவு பரவலாக உதவாத கல்வி பலனற்ற கல்வியே. பலனற்ற கல்வியை விட்டும் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்திருக்கிறார்கள்.]
‘கற்பதை நிறுத்திக் கொள்’ என்று தம் அன்னையார் சொல்லக்கேட்டு திகைத்தே போனார் அந்த இளைஞர்.
கல்வி முஸ்லிம்களின் ஒரு புதையல். தொலைக்கப்பட்டுப்போன அவர்களின் பூர்வீகச் சொத்து. திறன் மிகப் பெறவேண்டும் என்று தானே பெற்றோர் ஒவ்வொருவரும் விரும்புவர். அவ்வாறிருக்க கல்வி கற்பதை நிறுத்திக்கொள்ளும்படியாக பெற்றெடுத்த தாயேவா மகனைப் பார்த்துக் கூறுவது?
ஞானிகளுள் ஒருவரான ஸுஃபயானுஸ் ஸவ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அன்னையார் தான் அன்று தம் மகனாரைப் பார்த்து பலனற்ற கல்வியைத் தேடவேண்டாம் எனத் தடுத்தார்கள்.
மகனே! கற்றால் கற்றபடி செயல்படத்துவங்கு. கற்ற கல்வியைப் பயனுடையதாக்கு. இல்லையானால் மறுமைநாளில் நீ கற்ற கல்வியே விசாரணையின் வாசலை உனக்கு திறந்து வைக்கும் – அவ்வம்மையார் தம் மகனாரை எச்சரித்தார்கள்.
அறிவைப் பரவலாக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி தேடுவதை ஆண் – பெண் இரு பாலரின் பேரிலும் கடமையாக்கப்பட்டது. அதுவே பலன் தரக்கூடிய கல்வியாகப் பேணப்பட்டது. ‘என்னிடமிருந்து நீங்கள் அறிபவற்றை பிறருக்கும் எட்டச்செய்யுங்கள் – ஓரேயொரு சொல்லேயானாலும் சரியே’ என இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்களை ஏவியிருந்தார்கள்.
‘நேர்வழியையும் தெளிவான அத்தாட்சியையும் நாம் அருளிய வேதத்தில் அவற்றைத் தெளிவுபடுத்திக் கூறிய பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கின்றனரோ, அவர்களை அல்லாஹ்வும் சபிக்கின்றான். (மற்றும்) சபிப்போரும் சபிக்கின்றனர்’ என்ற (அல்குர்ஆன் 2 : 159) வேத வெளிப்பாடு கற்றவற்றைப் பகிரங்கப்படுத்தித் தர தாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ள கடமையை கற்றோர் உணரச்செய்தது.
கற்கப்பட்டவை பிறருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். கற்றவர்களால் முதலில் அவை செயல்வடிவமும் தரப்பட வேண்டும். கல்வி பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய முறை இதுவே. இதன் மூலமே அறிவு பரவலாகும். கல்வியும் பயனுடையதாகும். அறிவு பரவலாக உதவாத கல்வி பலனற்ற கல்வியே. பலனற்ற கல்வியை விட்டும் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்திருக்கிறார்கள்.
கல்விக் களஞ்சியமே இறைவேதம் திருக்குர்ஆன். அறிவின் கருவூலம் அது! இருபத்து மூன்றாண்டு கால இடைவெளியில் சன்னஞ் சன்னமாக அந்த ஞானப்புதையலை அருளப்பெற்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்வப்போதே தங்களின் தோழர்களிடையே அவற்றை ஓதிக்காட்டி விடுவார்கள். அதன்படியே உடனடியாக செயல்படவும் ஆரம்பித்து விடுவார்கள்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி விசுவாசம் கொண்டவர்களுக்கு மிக அழகிய முன் மாதிரி என அவர்களையே போற்றிப் புகழ்ந்து மகிழ்கிறது வான்மறை அல்குர்ஆன். (33 : 21)
உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை விசுவாசங் கொண்டவர்களானால் என்னையே பின் தொடருங்கள் என அவர்களைக் கொண்டே மனிதர்களை அழைக்கச் செய்கிறது வேதத்திருமறை அல்குர்ஆன். ( 3 : 31)
கற்ற அறிவின்படி செயல்படுவதே ‘இக்லாஸ்’ எனப்படும் பரிசுத்தப்பட்ட வாழ்க்கை முறை. அதுNவு ஈமானிய வழிமுறையும் ஆகும். கற்றதற்கு மாற்றமான செயல்முறை வழிகேட்டில் விழுந்தாட்டும் நடைமுறையாகும். பயங்கர நயவஞ்சகம் என்றும் கூறத் தகும்.
இந்த மார்க்கத்தைப் பலவீனப்படுத்தக்கூடியவர்களாக இரண்டு பேரைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனச்சோர்வு கொண்டார்கள். அவர்கள் எவர் என வினவப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘கல்வி ஞானமற்ற வணக்கசாலி ஒருவர், மற்றவர் செயல்முறை பேணாத மார்க்க அறிஞர்’ எனப் பகர்ந்தார்கள்.
பிறர் பார்த்து தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக பகட்டுக்காகவே வணங்குகிறார் முந்தினவர். செயல்முறை பேணப்படாத பின்னவருடைய அறிவினால் அவரும் பயன் பெறப் போவதில்லை. பிறருக்கும் பலன் தரப்போவதில்லை.
பகட்டுக்காக வாழ்பவரைப் பற்றியே, அவரைக் கொண்டுதான் மறுமை நாளில் நரகம் எரிமூட்டப்படும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததை அபூ ஹ{ரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மறுமை நாளில் அல்லாஹ், ‘போ மனிதா! உன் செயல்களுக்கான கூலியை எவர் பார்த்து உன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக நீ செயல்பட்டாயோ அவரிடமே போய் பெற்றுக்கொள் என விரட்டப்படுவான் என்று ஹளரத் அப்துல்லாஹ் அந்தாக்கீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எச்சரிக்கிறார்கள்
மார்க்கத்தை விலை பேசி உலகாதாயத்தைத் தேடுபவரின் இதயத்தை அல்லாஹ் குருடாக்கி விடுகிறான். அவருடைய பெயர் நரகவாசிகளின் பட்டியலில் எழுதப்படுகிறது என ஹளரத் இப்ராஹீம் அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘இக்லாஸுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?’ என ஹளரத் யஹ்யா இப்னு முஆத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்டபோது ‘பால்குடி மறவா பச்சைக் குழந்தையுடையதைப் போன்றிருக்கும்’ என்றார்கள் அன்னார்.
பாரம்பரியம் பரிசுத்தப்படுத்தப்பட்டதாக பயபக்தி மிக்கதாக வளரவேண்டும் என்பதில் முந்தைய தாய்மார்களும் எத்தகைய கவனம் செலுத்தினார்கள் என்பதை விளக்க ஓர முன்னுதாரணமே ஹளரத் ஸ{ஃபயானுஸ் ஸவ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அன்னையார்.
அறிவின் அடித்தளம் தாயின் மடியல்லவா?