மவ்லவி, S.லியாகத் அலீ மன்பஈ
எவரையும் இறைவன் மன்னிக்கவே மாட்டான் எனக் கூறாதீர்கள்!
‘ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் வசித்து வந்தனர். ஒருவர் வணக்கசாலி. மற்றவர் வணக்கங்களில் அலட்சியம் காட்டுபவர். முதலாமவர் இரண்டாமவரை அடிக்கடி கண்டிப்பார். பாவம் செய்யாதிருக்க அறிவுறுத்துவார். என்றாலும் முதலாமவர் அதை செவிமடுப்பதில்லை.
இந்நிலையில் பாவத்தில் மூழ்கியிருந்த தன் நண்பரைப் பார்த்து ‘சகோதரரே! பாவம் செய்யாதீர்!’ என்றார். அதற்கவர், ‘என்னையும் என் இறைவனையும் விட்டுவிடு! நீ குறுக்கே நிற்காதே! நீ என்னை கண்காணிக்கவா இருக்கிறாய்?’ எனக் கூறவும் வணக்கசாலிக்கு வந்ததே கோபம். ‘என்ன! பாவம் செய்யாமல் இருக்க மாட்டாயா? அல்லாஹ் மீது ஆணையாக! நிச்சயம் அவன் உன்னை மன்னிக்க மாட்டான். நீ சொர்க்கம் செல்லவும் முடியாது’ என பொரிந்து தள்ளிவிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. இருவரும் மரணமடைந்தனர். இருவரையும் அல்லாஹ் தன் மகத்தான சந்நிதானத்தில் ஒன்று சேர்த்தான். வணக்கசாலியிடம் அல்லாஹ் கேட்டான், ‘நீ என்னை நன்கறிந்துவிட்டாயா? என் சக்தியில் குறுக்கிடும் அதிகாரம் உனக்குண்டா? எனது அடியானின் காரியங்களில் என் மீது துணிச்சல் கொள்ளவும், ஆணையிட்டு, நான் அவனை மன்னிக்க மாட்டேன் எனக் கூறவும் உனக்கு எப்படி தைரியம் வந்தது?’ என்று கூறினான்.
பின்னர் பாவம் செய்து கொண்டிருந்தவரை தன் அருளால் மன்னித்தான். வணக்கம் செய்து கொண்டிருந்தவரை நரகம் செல்ல உத்தரவிட்டான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்)
இந்த நபிமொழி மூலம் நமக்கு கிடைக்கும் படிப்பினை யாதெனில், தீய செயல்களை கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அது நன்மையான காரியம்தான். ஒருவரின் பாவங்கள் மீதுதான் கோபம் வர வேண்டுமே தவிர அவர் மீது தனிப்பட்ட முறையில் தன்னிடம் தவறாக பேசினார் என்பதால் கோபம் கொள்ளக் கூடாது. ஆனால் இங்கு இரண்டாமவரின் வார்த்தையால் முதலாமவருக்கு கோபம் உண்டாகிறது.
தவறிழைப்பவரை திருத்த முயற்சிக்கலாம். அதற்காக இறைவன் மன்னிக்கவே மாட்டான் எனக் கூறக் கூடாது. பிஃரே மஊனா எனும் இடத்தில் தந்திரமாக துரோகமிழைத்து 70 நபித் தோழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களைக் கொன்ற கொடூரர்கள் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சபித்து துஆ செய்தார்கள். ஆனால், ‘நபியே! அவர்களை தண்டிப்பதோ, மன்னிப்பதோ எதுவாயினும் உங்களுக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை.’ (அல்குர்ஆன் 2:128) என்ற இறைவசனம் இறங்கியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தலை நிறுத்திவிட்டார்கள்.
அந்த நல்லவரை நரகிற்கு செல்ல வைத்தாலும், அவரது நற்செயல்களுக்காக அல்லாஹ் மீண்டும் சுவனம் புகச் செய்வான் என நாம் நம்பலாம். ஏனெனில் அல்லாஹ் கடுகளவு நன்மைக்கும் பலன் கொடுக்கும் நீதியாளன்.