சமுதாயத் தலைவர்களே எதிர்கால மக்களின் கண்ணாடி
மவ்லவி, முஹம்மது முஸ்தஃபா – மங்கலம்
‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’. (அல்குர்ஆன்)
தலைவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும்போது:
“உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா? எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்களுக்காக நர்கள் உங்களை நேசிக்கின்றார்களோ அவர்களும் எவர்கள் உங்களை நேசிக்கின்றார்களோ அவர்களும்,
அன்றி, எவர்களுக்காக நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகிறீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவார்கள்.
மேலும் எவர்கள் மீது நீங்கள் சினமுற்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்கள் மீது சினமுறுகின்றார்களோ அவர்களும் அன்றி, எவர்களை நீங்கள் சபிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை சபிக்கின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிகத் தீயோர் ஆவார். (அறிவிப்பாளர்: உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
“ஒரு தலைவர், தங்களுக்கு உவந்தவராக இருப்பினும் சரி, தங்களுக்கு திருப்தியற்றவராக இருப்பினும் சரி, அத் தலைவரின் கட்டளைக்குச் செவிசாய்த்து அதன்படி செயலாற்றுவது முஸ்லீம்களின் மீது கடமையாகும், பாவமான கட்டளையை அவர் இடாத வரை. பாவமான கட்டளையை அவரிட்டால் அதற்கு செவிசாய்ப்பதும் அதன்படி செயலாற்றுவதும் முஸ்லிம்களின் மீது கடமையல்ல.” (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, நஸாயீ)
நவ நாரீகம் நிறைந்துவிட்டதென்று சொல்லப்படுகின்ற இன்றைய உலகில் மேலை நாட்டினர் கைக்கொள்ளும் (அல்லாஹ், ரஸூல் காட்டிராத) எத்தகைய நூதன வழியானாலும் கண்மூடிக்கொண்டு பின்பற்றி நமது முஸ்லிம் மக்களும் இனம் கண்டு கொள்ள முடியாதவாறு மாற்றமான தோற்றங்களில் மாறிவரும் நிலைமை மிக்க வேதனைக்குரியதாகும்.
இதற்கான காரணங்களை நாம் அலசி ஆராயும்போது சில தெளிவுகள் நமக்கு பளிச்சிடவே செய்கிறது. நம் சமுதாய மக்களிடம் அல்லாஹ்வுடைய பயம் அறவே இல்லாது போய்விட்டது. அல்லாஹ்வின் மீது அச்சம் உண்டாகவில்லை. இஸ்லாமிய நடைமுறையில் உயர்வு பற்றி உணர்த்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, சமுதாயத் தலைவர்களில் பெரும்பாலோரின் நடைமுறைகள் நம் குலமக்களின் வாழ்க்கையையே வேறு திசையில் திருப்பி விடுவதாகவும் அமைந்துவிட்டது பெரும் துரதிஷடமும் மிக பயங்கரமானதும் ஆகும்.
ஒன்றுமறியா பருவத்திலிருந்து மனிதன் ஒவ்வொன்றையும் பார்த்துத் தெரிந்து கொள்கிறான் அல்லது கேட்டுத் தெரிந்து கொள்கிறான். தாய் தந்தையர்க்குப்பின் ஊர்த் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், ஜமாத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், ஊர்ப் பெரியோர்களின் மொழி, நடை, உடை, கலாச்சாரம், பண்பாடு இவைகளில் ஒன்றித்திளைத்து மேற்கண்டவர்களின் சாயலிலே அவனுமாகி விடுகிறான். இதுவே மனித சுபாவமாக இருக்கிறது.
ஒரு கட்சித் தலைவர் எந்த கொள்கையை, எந்த நடைமுறையை உடையவரோ, அதே கொள்கையை அதே நடைமுறையைத்தான் அவரைப் பின்பற்றுவோர் கொண்டிருப்பர். ஒரு தாய் தந்தையர் எத்தகையவர்களோ அத்தகையவர்களே அவர்களின் மக்கள். எனவேதான் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்:
‘பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் தீனுல் இஸ்லாத்திலேயே பிறக்கின்றன. எனினும் அவர்களின் பெற்றோர் (தங்கள் விருப்பப்படி) அவர்களை யஹ_திகளாகவோ, நஸாராக்களாகவோ, மஜூஸிகளாகவோ மாற்றி விடுகின்றனர்.’ (அல்ஹதீஸ்)
யஹூதி தனது குழந்தையை யஹூதியாக வளர்க்கின்றான். நஸ்ரானி நஸ்ரானியாக வளர்கின்றான். மஜூஸி மஜூஸியாக வளர்கின்றான். முஸ்லிம் தனது குழந்தையை முஸ்லிமாக வளர்க்க வேண்டுமல்லவா? மாறாக இஸ்லாத்தைப்பற்றி, ஈமானைப்பற்றி, அல்லாஹ் ரஸூலைப் பற்றி தெரிவதில்லை என்றால் – இஸ்லாமிய நெஞ்சங்களின் வேதனையை எப்படி வர்ணிப்பது. இதற்கெல்லாம் காரணம் பருவ காலத்தில் அவனுக்கு போதிக்கப் படாதது மட்டுமல்ல, அவன் யார் யாருடைய நிர்வாகத்திற்குக் கீழ் இருக்கிறானோ அந்த நிர்வாகிகளின் நடைமுறை, கொள்கை பேச்சுவார்ததைகள் அவனிலே அப்படியே பிரதிபலிக்கிறது.
கண்ணாடியில் கண்டது போல அவனது தலைவர்களின் நடைமுறையை அவனிலே பார்க்க முடிகிறது. அத்தோடு முடியவில்லை, அவனது தலைமுறையிலும் அந்த நடைமுறை வாரிசுரிமை பெறுகிறது. இதுவே சமுதாய சீர் கேட்டுக்கான காரணமாகும்.
எனவே, இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் நடை உடை பாவனைகளை அல்லாஹ், ரஸூல் காட்டிய புனித முறையில் அமைத்துக் கொள்ளாதவரை தங்களின் அருமை மக்களை நலவழிப்படுத்த முடியாது என்பதை தீனில் வளர்ச்சி விரும்பும் எவரும் மறுக்க மாட்டார்கள்.
மேலும் இஸ்லாமிய பொதுமக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், ஊர்த்தலைவர்களோ, சங்கத் தலைவர்களோ, ஜமாஅத் தலைவர்களோ, இஸ்லாமிய பொதுநிர்வாகத் தலைவர்களோ, முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கின்ற எந்த முஸ்லிம் தலைவரானாலும் அவரிலே சுன்னத்தான நடைமுறையும், இஸ்லாமிய நாகரீகம் உள்ளதா? என்பதை முதலாவதாக கவனிக்க வேண்டும்.
சமுதாயத்தை வழி நடத்துகின்ற தலைவர்களின் தோற்றமே நம் பொதுமக்களின் தோற்றமாக பிரதிபலிக்கச் செய்யும். எனவே, மிக முக்கியமாக தொழுகை இல்லாதவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கக் கூடாது. அப்படிதேர்ந்தெடுப்பது சமூக மக்களை சீர்கெடுத்து விடுவதற்கு ஒப்பாகும்.
ஸதகாப் பொருள்களாக வந்த சில ஒட்டகங்களின் மீது கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த ஒருவர் ‘அமீருல முஃமினீன் அவர்களே! யாரேனும் ஓர் அடிமை மூலம் இவ்வேலையைச் செய்திருக்கலாமே?’ எனக் கேட்டார். அதற்கு கலீஃபா அவர்கள் ‘என்னைவிட அடிமை வேறு யார் இருக்கிறார்கள்? முஸ்லிம்களுக்கு யார் தலைவனாக இருக்கிறானோ, அவன் தான் முஸ்லிம்களுக்குப் பணியாளனாகவும் இருக்கிறான்’ என்று பதிலுரைத்தார்கள். ஆனால், இன்றைய முஸ்லிம் தலைவர்களின் போக்கு எப்படி இருக்கிறது? சிந்திக்க வேண்டாமா?
இன்றைய முஸ்லிம் இளைஞர்களில் பெரும்புhலோர் ‘ஏன் அந்த தலைவர் அப்படியில்லையா? நாட்டாண்மைக்காரர் அப்படி நடக்கவில்லையா? மு(த்)தவல்லியே முதலில் இல்லை! சங்க நிர்வாகிகளே இப்படி இருக்கின்றனர்’ என்றெல்லாம் காரணங்கள் கூறுவதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
அதே சமயம், ஏதோ சில அனுகூலம் கருதி மஸ்ஜித் பக்கமே பாதம் பதிக்காதவர்களையும் மஸ்ஜிதை பராமரிக்கும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்து விடுகிறோம். அவர்களைக் கண்டபின் தொழுது கொண்டிருப்பவர்களிலும் சில மக்கள் மஸ்ஜிதை மறந்து விடுகின்றனர்.
இதுபோன்ற கவனக்குறைவான சில ஏற்பாட்டினால் சமுதாய மக்களிடம் ஒழுக்கக் குறைவு மலிந்து விட்டதோடு நமது சமுதாய மக்களிடம் ஒற்றுமைச் சிதைவு ஏற்படவும் ஏதுவாகிவிடுகிறது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் ‘நீங்கள் ஒவ்வொருவரும் மேய்க்கின்றவர்கள். நீங்கள் மேய்க்கின்றவை (உங்கள் நிர்வாகத்திற்க கீழ் உள்ளவர்)களை தொட்டும் நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப் படவீர்கள். (அல்ஹதீஸ்)
எனவே, நமது சமுதாய பெரியார்களும், இளைஞர்களும் எதிர்காலத்தை ஈமான் மனம் கமழும் செழுமையான காலமாக்க முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்ச்சியுடனும் செயல்பட வேண்டும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.