‘நான் என் மனைவிக்காக அவள் விரும்பும் வகையில் என்னை அலங்காரம் செய்து கொள்வேன்’
மனித இனத்திற்கு அல்லாஹ் விதித்துள்ள மார்க்கக் கடமைகளில் ஆண் பெண் இருபாலரும் சமமானவர்கள். ஆண்களுக்கு அடிப்படையான ஐந்து கடமைகள் பெண்களுக்கும் உண்டு. அவற்றை முறையாக நிறைவேற்றினால் இருபாலருக்கும் சரிசமமாகவே நன்மைகள் வழங்கப்படும்.
‘நீங்கள் உங்கள் மனைவியரான அவர்களிடம் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19) என்ற இறைவசனம் பெண்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறையை சொல்லித்தருகிறது.
அந்த வகையில், உங்கள் மனைவியர் உங்களிடம் எவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்கிறார்களோ அதைப்போன்றே நீங்களும் அவர்களிடம் வாழ்க்கை நடத்துங்கள் என்பதை இஸ்லாம் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்துகிறது.
ஆனால், இன்று நடப்பதென்ன? தம்முடைய மனைவி தம்மிடம் மரியாதையாகப் பேச வேண்டும். நான்கு பேருக்கு முன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிற கணவன்மார்கள் தங்கள் மனைவியரிடம் கொச்சையாகப் பேசுகின்றனர். அதுவும் நான்னு பேருக்கு மத்தியில் எனும்போது மிக மிக மோசமாகப் பேசுவதையே ஆண்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர்.
தம் மனைவி தம் கண்களுக்கு அழகான கிளியோபாட்ராவாக, ஐம்பது கிலோ தாஜ்மஹலாக, ஏதென்ஸ் தோட்டத்து ராஜகுமாரியாக காட்சியளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாம் மாத்திரம் அவர்கள் கண்ணுக்குப் பங்கரையாகத் தோற்றமளிப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தம் உடல், எடை மற்றும் பருமனைப்பற்றியும், தாம் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது பற்றியும் அதன் நாற்றத்ததை மனைவி சகித்துக்கொள்வாளா என்பது பற்றியும் கொஞ்சம்கூட யோசிப்பதில்லை.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள், ‘நான் என் மனைவிக்காக அவள் விரும்பும் வகையில் என்னை அலங்காரம் செய்து கொள்வேன்.’ (நூல்: ஃபிக்ஹுஸ்ஸுனன்)
‘தம் மனைவியரிடம் இனியமுறையில் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவராவார். நான் என் மனைவியிடம் இனிய முறையில் நடந்துகொள்கிறேன்’ என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை திர்மிதீ மற்றும் தாரமீ போன்ற நபிமொழி நூல்கள் பதிவுசெய்துள்ளன. இந்த நபிமொழி இஸ்லாம் ஓர்ஆணின் தராதரத்தை மதிப்பீடு செய்யும் தகுதியைக்கூட அவனின் மனைவியிடமே வழங்கியிருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
மனைவியராகிய அவர்களுக்கு மரியாதை வழங்குபவனே மான்பாளன் ஆவான். அவர்களை இழிவு படுத்துபவன் தரம் தாழ்ந்தவன் ஆவான் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.