இப்படியும்கூட சில பெற்றோர்கள்!
உலகில் வாழும் ஒவ்வொறு மனிதனும் ஒவ்வொறு வகையில் ஒரு பொறுப்பாளராக, மேலாளராக, அதிகாரியாகவே இருக்கின்றனர்.அவர்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து சரியாக கடமை ஆற்றுவதோடு தனக்கு அடுத்த நிலையில் இருப்போர், தனது பொறுப்பில் இருப்போரிடம் கனிவுடனும் அன்புடனும் நடந்திட வேண்டும். பொறுப்பு, பதவி என்றதும் ஏதோ அரசு பதவி அல்லது பெரிய நிறுவனத்தின் உயர்பதவி என எண்ணிவிடாதீர்கள்.
இத்தகு பதவி கிடைக்கப் பெற்றவர்களுக்கு பொறுப்புணர்வு, பெருந்தன்மை, அடக்கப்பண்பு அதிகம் இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் போன்ற, அல்லது இவர்களை விட மேம்பட்ட அறிவும் படிப்பும் தகுதியும் உள்ளோர் ஏராளமாக நாட்டில் இருக்கும் போது இந்தப்பதவி நமக்கு கிடைத்திருப்பதை எண்ணி மிகுந்த அடக்கத்துடனும் சேவை உணர்வு இறை நன்றியுடனும் இவர்கள் செயல்பட வேண்டும். பதவி அதிகார அகந்தை ஆணவச்செருக்கை ஏற்படுத்திவிடக்கூடாது. இது அழிவை கொண்டுவரும்.
ஓர் ஆண் ஒரு பெண்ணை மணமுடிக்கும் போது குடும்பத்தலைவன் எனும் பதவியை அவன் பெறுகிறான். அப்பெண் குடும்பத்தலைவி ஆகிறாள். இப்படித்தான் தந்தை, மகன்,மகள், என்போரும் பொறுப்புக்கு வருகின்றனர். நிர்வாகி, ஆசிரியர், முதலாளி,தொழிலாளி, உழைப்பாளி ஒவ்வொருவரும் பதவியாளர்களே. நிர்வாகிகள் சில்லரை விஷயங்களைக கூட நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் சக்தியிருந்தால்தான் எந்த நிர்வாகத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்கிறார் சுபாஷ் சந்திரபோஸ். இது குடும்ப பொருப்பில் உள்ளோருக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமான அரிய ஆலோசனையாகும்.
பெற்றோர்களில் சிலரைப்பார்க்கும்போது அவர்களின் பொறுப்பற்ற தன்மையை கேள்விப்படும்போது மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கின்றது.பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோருக்கு இருந்த ஆர்வம், அக்கறை போகப்போக மிகவும் குறைந்து ஏனோதானோவென ஆகிப்போகிறது. கல்வி அறிவு, பண்பு, ஒழுக்க நிலைகளுடன் அவர்களை வளர்த்தெடுப்பது மட்டும் அல்லாமல் உரிய வயதை அவர்கள் அடைந்து விடுவார்களேயானால் அவர்களுக்கு முறையாக மணம் செய்து வைப்பது மிக முக்கியமான கடமையாகும்.
அதுவும் அவர்களின் திருமணத்தை உரிய பருவ வயதில் செய்து வைத்திட வேண்டும். இதில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டும் சிலரும் பின்னர் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். அதுவும் பிள்ளைகள் அர்சு பதவி,அலுவலகங்களில் சம்பாதிப்போராக இருந்தால் (பெண்களாக இருந்தால்)பெரும்பாலும் கவனிக்கப்படாமல் பெற்றோகளாலேயே கண்டு கொள்ளப்பாடாமல் விடப்பட்டு போகின்றனர். இதனால் சமுகத்தில் 35, 40 வயதடைந்தும் படித்த பட்டதாரி பெண்களில் பலர் மணம் முடிக்காமலேயே காலம் தள்ளுகின்றனர்.காலப்போக்கில் இதுதான் நம் தலைவிதி, இதுதான் வாழ்கை என நிம்மதி அடைகின்றனர். ஆனால் அது அவர்களின் உண்மையான நிம்மதியாக இராது.
பெண் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் தங்களை வளப்படுத்திக்கொண்டு சுகம் கண்டுவிட்டு அந்த வருமானத்தை இழக்கத்தயாராக இல்லாத சுயநலம் நிறைந்த சிலர் திருமண இனைப்பு முகவர்கள், தெரிந்தவர்கள், உறவுக்காரர்களிடம் எனது பெண்ணுக்கு நல்ல வரன் வேண்டும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என அடிகடி கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நல்ல பொருத்தமான மாப்பிள்ளை, குடும்பங்களை அறிமுகப்படுத்தினால் வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் அது குறை, இது குறை அது இல்லை, இது இல்லை என ஏதாவது கூறி தட்டிக்கழிக்கின்றனர். இது பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர் இழைக்கும் பெரும் துரோகமாகும்.
கட்டுப்பாட்டு கோட்டுக்குள் கட்டுப்பட்டு வாழும் அடக்கமான இளம் பெண்கள் முதிர்கன்னிகளாகி இதயத்திற்குள் குமுறி நெருப்பு பெருமூச்சில் நீந்தி இளமை உணர்வை கரைத்து வாழ்நாளை வதைத்து துவைத்து காய்கின்றனர். இதயமுள்ள எந்த பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு இத்தகு சோகத்துயர் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது.
பொறுப்புணர்வு எல்லாருக்கும்ம் வேண்டும்தான். எனினும் பெற்றொருக்கும், பெரியோருக்கும் இது அவசியத்திலும் அவசியம்.பொறுப்பிலுள்ளோர் பொறுப்புடன் நடந்து கொள்ளுதலே அழகாகும். பொறுப்பு சிறியதோ பெரிதோ எதுவாயினும் அதில் நெறிப்படி நடந்திட வேண்டும். பொறுப்பிலுள்ளோரிடம் கனிவும் கண்டிப்பும் உண்மையும் பெருந்தன்மையும் வேண்டும். உலகில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் முறையாக நடப்பார்களானால் உலகிற்கு பிரச்சனை குறைந்திவிடும். பொறுப்புடன் நடப்பவரே சிறப்புக்குறியவர். சிந்திப்போம், சீர்பெறுவோம்.
source: http://www.siddique.html