அந்த 3 நிமிடங்கள்!
மு.அனீஸ்
[ ‘கொஞ்ச நேரம் எனக்கு அவகாசம் கொடேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்….’ அழுகை வெடித்துக் கிளம்பியது.
‘உனக்கு அவகாசம் தருவதற்கு எனக்கு அதிகாரமில்லை. நீ ஒரு ‘புரோக்ராம்’. உன்னைப்போல நானும் ஒரு ‘புரோக்ராம்’. என் வேலையை நான் சரியாகச் செய்ய வேண்டும். ஆனால் உன் உயிரைக் கைப்பற்ற இன்னும் மூன்று நிமிடங்கள் மிச்சமிருக்கின்றன. அதுவரை உனக்குரியதை நீ அனுபவித்துக்கொள்’.
காலம் இவ்வளவு சுருங்கியதா? தன் வாழ்நாளில் மிச்சமிருப்பது வெறும் 3 நிமிடங்கள்தானா? என்ன கொடுமை இது? அவன் இதுவரை வாழ்ந்த 39 வருடங்கள் வெறும் 3 நிமிடத்திற்குள் சுருங்கிப் போனதாக உணர்ந்தான்.
39 வருடம் புரியாத வாழ்க்கையின் கணக்கு அந்த 3 நிமிடத்தில் புரிந்து போயிற்று. அவன் பிறந்தது, படித்தது, ஓடி விளையாடியது, வளர்ந்தது, திருமணம், உறவுகள், பிள்ளைகள், வேலை, சம்பளம், வாழ்க்கையின் வசதிகள், வீடு, வாகனம், சொத்துகள், நண்பர்கள், வேடிக்கை, சண்டை, சச்சரவுகள், பிணக்குகள், மன்னிப்பு எல்லாமே முடிந்துவிட்டது.]
அந்த 3 நிமிடங்கள்!
‘அவன்’ சலீமின்; விட்டுக்குள் நுழைந்தபோது டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. சலீம் கோணலான திசையில் தூக்கத்தை இறுக அணைத்துக் கொண்டிருந்தான்.
அப்துல்லாஹ்வின் வீட்டுக்கதவு பூட்டியிருப்பது ‘அவன்’ உள்ளே வருவதற்குத் தடையாக இருக்கவில்லை.
அந்த வீடு அவனுக்காக காத்திருப்பதுபோல் அவனை வரவேற்று அப்படியே அவனை உள்வாங்கிக் கொண்டது.
அவன் நடப்பது மிதிப்பது மாதிரி இருந்தது. அப்படியே மிதந்தவாறு நடந்து சுவரின் மூலையில் ஒட்டி அமர்ந்து கொண்டான் அவன்.
………………
சலீமுக்கு களைப்பாக இருந்தது. உடலை படுக்கையிலிருந்து எழுப்ப முடியவில்லை. உடலின் குறுக்கும் நெடுக்குமாக கயிறுகள் கட்டப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தான்.
சரியாக 5.00 க்கு அவன் செல்ஃபோனில் வைத்த அலாரம் ‘அல்லாஹ{ அக்பர்’ என்று பாங்கு சொல்லாத் தொடங்கியது. அந்த நிசப்த வேளையில் திடீரென ‘அல்லாஹு அக்பர்’ என எழுந்த உரத்த சப்தம் அவனுக்கு பதற்றத்தை ஏற்படத்தியது. உடனே எழுந்து அலாரத்தை நிறுத்த முயன்றான். ஆனால் படுக்கையோ அவனை விடாமல் இறுக அணைத்துக் கொண்டிருந்தது. படுக்கையே அவன்மீது படுத்துக்கொண்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.
சற்று நேரத்தில் வீட்டுக்கருகிலுள்ள மஸ்ஜிதிலிருந்து பாங்கு சப்தம் தெளிவாக அவனுக்குக் கேட்டது.
ம்ஹூம்… உடலை எழுப்பி உட்கார வைக்கவே அவனால் முடியவில்லை. நேற்று இரவு மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவன் டி.வி.யில் நான்கைந்து சேனல்களை மாற்றி மாற்றி நடுநிசி வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தூங்கியதன் விளைவு.
‘சரி! இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே படுக்கையிலேயே இருப்போம்’ எனக் கெஞ்சியது உடல். மனமும் அதற்கு இசைந்தது.
திறந்த செவிகளின் வழியே கடைசியாகக் கேட்ட கலிமா சத்தம் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.
……………
ஜன்னலின் கண்ணாடி வழியே கூர்மையாக அறைக்குள் நுழைந்த வெப்பக் கதிர் அவன் முகத்தைச் சுண்டியது. அதே நேரம் மொபைல் ஃபோனில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்டதில் திடுக்கிட்டு எழுந்தான் சலீம்.
மணியைப் பார்த்தான். 7.20. தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மொபைல் ஃபோனை எடுத்து பார்த்தான். மனைவியின் சிரித்த புகைப்படம் தெரிந்தது. அழைப்பை ஏற்காமல் அப்படியே கீழே தலையணையில் போட்டான்.
அவன் மனம் அமைதியில்லாமல் தவித்தது. அதிகாலையில் எழ முயற்சித்தது, செல்ஃபோனில் ஒலித்த பாங்கொலி, 5 நிமிடம் படுக்கச் சொல்லி கெஞ்சிய மனம், அப்படியே தொழுகையை மறந்து மயங்கிச் சரிந்தது எல்லாமே நினைவுகளில் விரைவாக வந்து ஓடின.
‘சே! கடைசியில் தொழுகையைத் தவற விட்டுவிட்டோமே!’
‘தொழுகைத் தவறிப்போய் தூங்கிவிட்டால் அது ஷைத்தானின் சூழ்ச்சி. எழுந்தவுடன் தொழுதுவிட்டால் ஷைத்தான் தோற்றுப்போய் விட்டான். தொழாவிட்டால் ஷைத்தான் ஜெயித்துவிட்டான்’ என்று அவன் மாமா சொன்னது நினைவுக்கு வந்தது. மனம் குற்றத்தால் வெம்பியது. அவனுக்கு அவமானமாய் இருந்தது.
இது இன்று நேற்றல்ல. சலீமுக்கு இது மாதிரி அடிக்கடி போராட்டம் நடக்கிறது. ஷைத்தான் அவனுக்கு வலைவிரிப்பதும், இவன் அவனை எதிர்த்து போராடுவதும், முடிவில் சிலசமயம் வெற்றியால் மனம் சந்தோஷமடைவதும், சிலசமயம் தோல்வியால் துவண்டு விடுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளே!
வேண்டா வெறுப்பாக எழுந்தான். குளியலறைக்குள் நுழைந்தான். வெளியே வந்தவன் அப்படியே சோம்பல் கலையாமல் தரையில் அமரந்தான். சிறிது நேரம் கழித்து, எழுந்து டீ போட்டு குடித்தான். பேனாவை எடுத்து சில குறிப்புகள் எழுதினான். தொழில் நிமித்தம் இன்று இரண்டு பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இப்போது குளித்துவிட்டு கிளம்பினால் சரியாக இருக்கும் என மனதில் ஒரு திட்டம் போட்டுக் கொண்டே குளியலறைக்குள் நுழைய முயன்றவன்முன் குறுக்காக ‘அவன்’ வந்து நின்றான்.
இதற்குமுன் அவனை சலீம் பார்த்ததே இல்லை. அவன் மனிதனைப் போன்ற தோற்றத்தில் தான் இருந்தான். ஆனால் இவன் மனிதன் தானா? எனச் சந்தேகம் எழுப்பக் கூடியவாறு ஏதோ ஒரு வித்தியாசம் அவனிடம் இருந்தது.
திடீரென்று ‘அவன்’ தன் பாதையில் அதுவும் தனது வீட்டுக்குள் அதுவும் குளியலறைக்குப் போகும் வழியில் மறித்துக்கொண்டு நின்றதும் ஒரு நிமிடம் சலீமுக்கு உயிரே போய் விட்டது. பூட்டியிருக்கும் வீட்டுக்குள் இவன் எப்படி?
‘யார் நீ?’ என்றான் கோபமும் பயமுறுத்தலும் கலந்த குரலில்.
‘நான் உன் உயிரை கைப்பற்ற வந்திருக்கிறேன்’. ‘அவன்’ குரலிலும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. ஆனால் எந்த உணர்ச்சியும் இல்லை.
சலீமுக்கு மயக்கம் வந்தது. ‘என்ன! என்னை கொல்லப் போகிறாயா?’
‘கொலையா? மனிதர்கள் ஒருவரையொருவர் உயிரைப் போக்கிக் கொள்வதுதான் கொலை. இது எனது பணி!’
‘அப்படின்னா நீ மனுசனில்லையா?’
‘அவன்’ முகத்தில் அலட்சியம். ‘இல்லை’ எனத் தலையசைத்தான்.
சலீமுக்கு நா வரண்டது. உடல் முழுவதும் ரத்த ஓட்டம் உறைந்து போனது போல இருந்தது.
நான் சாகப் போகிறேனா? என் வாழ்நாள் முடிந்துவிட்டதா? அதற்குள்ளாகவா?
‘இல்லை! நீ பொய் சொல்கிறாய்! எனக்கு 39 வயசுதானே ஆகிறது!’
‘எனக்கு அதைப்பற்றித் தெரியாது. அதை நான் முடிவு செய்வதில்லை. உன் ‘புரோக்ராம்’ முடிந்துவிட்டது. உயிரோட்டத்தை நிறுத்திவிட்டு நான் போய் விடுவேன். அதுமட்டும்தான் என் வேலை.’
‘எனக்கு மரணம் வரும் அளவுக்கு எந்த நோயும் இல்லையே?’
‘அது என் கவலை இல்லை. தவிர மரணம் என்பது நோயும் இல்லை’.
அவனுக்கு வேறு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. இப்போது என்ன செய்யலாம்? இப்படி மாட்டிக் கொண்டோமே! இவனிடமிருந்து தப்பிக்க முடியாதா? வந்த புதியவனோ சலீம் மீதே குறியாக இருந்தான். சலீம்தான் அவனுடைய இரை.
‘நான் நிறைய பாவங்கள் செய்துவிட்டேனா? அதனால் எனக்கு இது தண்டணையா?’ எனக் கேட்டான் சலீம். அவனுடைய குரல் அவனுக்கே கேட்கவில்லை. அந்த அளவுக்கு பலவீனமாக இருந்தது.
தான் நிறைய பாவங்கள் செய்ததாகத்தான் நினைத்துக் கொண்டான். ஐயோ! இது மோசமான நிலைமையாச்சே! இன்னிக்கு ‘சுபுஹ{‘ கூட தொழவில்லையே! கடைசி நேரத் தொழுகையைத் தொழாமல் அல்லாஹ்வை எப்படிப் பார்க்க முடியும்? கடைசி நேரத்; தொழுகை மட்டுமா தவறியது? எத்தனை நேரத் தொழுகைகள், எத்தனை விடுபட்ட நோன்புகள், மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, பெற்றோருக்கு என எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் விடுபட்டவை எத்தனையெத்தனை என அவன் மனம் வேகமாக கணக்குப் போட்டது.
அடேயப்பா…! எவ்வளவு விஷயங்கள் மிச்சமிருக்கின்றன? இவ்வளவு விஷயங்களை பாக்கி வைத்துக் கொண்டா நான் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தேன். சரியாக கணக்குப் பார்த்தால் இதையெல்லாம் சரிசெய்துவிட்டு, ‘இப்ப வா! வந்து என் உயிரை தாராளமாக எடுத்துக்கிட்டுப் போ’ என்று சொல்லுகிற தைரியம் வர இன்னும் பத்து வருஷமாவது ஆகும் போலிருக்கே! என மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.
வந்தவனிடம் கெஞ்சத் தொடங்கினான். ‘இங்கிருந்து நான் தப்பிக்க முடியாதா? உலகில் என்னைவிட அதிகம் பாவம் செய்றவங்க எல்லாம் ஜாலியா இருக்கும்பேது எனக்கு ஏன் இப்படியொரு நெருக்கடி…?!’
‘நீ என்ன நெனச்சிக்கிட்டு இருக்கே? எல்லோருக்கும் அவங்கவங்க விரும்புற நேரத்துல சாவு வரணும்னு சொல்றியா? அப்படி இருந்தா யார் தான் சாவை விரும்புவா? உன்னைவிட குறைஞ்ச வயசுலே எத்தனை லட்சம் பேரு, கோடி பேரு செத்துப் போயிருக்காங்கன்னு தெரியுமா? இதெல்லாம் பேசறதுக்குக்கூட எனக்கு அனுமதியில்லே!’
பாதி உலகைக்கூட வென்று நடைபோட்டவர்களை எல்லாம் கூட மரணம் ஒரு கோழிக் குஞ்சைப் போல அமுக்கி மண்ணுக்குள் புதைத்துவிட்டது. எவ்வளவுதான் ஒருவன் ஆட்டம் போட்டாலும், படை பரிவாரங்களோடு சுற்றித்திரிந்தாலும் ஒரு நாள் மரணத்தின் கைப்பிடிக்குள் சிக்கித்தானே ஆக வேண்டும்! அதுதானே இயற்கை நியதி. இறைவனின் விதி.
இவன் என் உயிரை எடுத்துப் போய்விட்டால், பிறகு என் வீட்டில் என்ன நடக்கும்? கதறியழும் மனைவியும் இரண்டு பிள்ளைகளையும் யார் தேற்றுவது? அடுத்த வருடம் கல்லூரி செல்லும் மகனை யார் வழிநடத்துவது? மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்? என நினைத்த சலீமுக்கு தன் நிபை;பே முட்டாள்தனமாகத் தோன்றியது.
சே! என்ன மனித மனம்? தான் ஒருவன் இல்லாவிட்டால் இந்த உலகின் இயக்கமே நின்றுவிடும் என ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் மனிதனின் நாடி விழுந்துவிட்டால் அந்த மனிதன் இல்லாமல் வாழ்வதற்கு எல்லோரும் பழகிக் கொள்கிறார்கள். அவன் ‘மூச்சு’ நின்றுவிட்டாலோ அவனை ‘புதைகுழியில் புதைத்துவிட்டுத்தான் மறுவேலை’ என்பதுபோல் எல்லா வேலையையும் அப்படியப்படியே போட்டபடி ‘காரியங்களில்’ இறங்கிவிடுகின்றனர்.
எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் சாவு அவனை சும்மா விட்டுவிடுவதில்லை. மனிதனுக்கு காசு பணம் சேரச்சேர மரணத்தின் வலியும் அதிகரித்துவிடுகிறது.
‘கொஞ்ச நேரம் எனக்கு அவகாசம் கொடேன்…. ப்ளீஸ்… ப்ளீஸ்…’ அழுகை வெடித்துக் கிளம்பியது.
‘உனக்கு அவகாசம் தருவதற்கு எனக்கு அதிகாரமில்லை. நீ ஒரு ‘புரோக்ராம்’. உன்னைப்போல நானும் ஒரு ‘புரோக்ராம்’. என் வேலையை நான் சரியாகச் செய்ய வேண்டும். ஆனால் உன் உயிரைக் கைப்பற்ற இன்னும் மூன்று நிமிடங்கள் மிச்சமிருக்கின்றன. அதுவரை உனக்குரியதை நீ அனுபவித்துக்கொள்’.
காலம் இவ்வளவு சுருங்கியதா? தன் வாழ்நாளில் மிச்சமிருப்பது வெறும் 3 நிமிடங்கள்தானா? என்ன கொடுமை இது? அவன் இதுவரை வாழ்ந்த 39 வருடங்கள் வெறும் 3 நிமிடத்திற்குள் சுருங்கிப் போனதாக உணர்ந்தான்.
உருப்படியாக ஒன்றும் செய்யாமல் 3 நிமிடம் கழிந்துவிடும் போலிருக்கே! இறைவனை திக்ர் செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றவில்லையே! இப்படித்தானே வாழ்நாள் முழுவதும் அர்த்தமற்று கழிந்து 3 நிமிட விளிம்பில் நிற்கிறது. வாழ்நாளில் அர்த்தமேயில்லாமல் எத்தனை வருடங்கள் வீணாக்கியிருக்கிறோம்?!
என்றாவது ஒரு நிமிடத்தின் மதிப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? அதெப்படி முடியும்? ஒரு நதியில் ஒரு துளியின் மகத்துவம் எப்படித் தெரியும்? உயிர் வரண்டு, நா தளர்ந்து, தாகத்துக்காக ஏங்கும்போது அந்த ஒற்றைத் துளி நீர் உயிரை நிரப்புவதற்குப் போதுமானதாகத் தோன்றும். ஆனால் அந்த ஒற்றைத் துளிக்குப் பின்னே பிரம்மாண்டமாக மறைந்திருக்கும் தாகம் – அதை நினைத்தால் அந்த ஒற்றைத் துளி ருசிக்குமா? அந்த ஒற்றைத் துளி ‘தீராத’ தாகத்தைச் சுமந்து நிற்கும் துளியல்லவா?
ஆயிற்று! இதோ மூன்று நிமிடம் ஆயிற்று!
‘அவன்’ என்னைக் மூர்மையாகப் பார்த்தான். ‘அவன்’ விழிகள் வழியே என் உயிரை உறிஞ்சிக் கொண்டிருந்தான். எனக்குள் எரிந்து கொண்டிருந்த உயிர் விளக்கு மெல்ல மெல்ல மங்கிக் கொண்டிருந்தது.
‘நான் செத்துக் கொண்டிருக்கிறேன்’ சலீம் முனகினான். தப்பிப்பதைப் பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட்டான். அதைப்பற்றிய பதட்டம் இப்போது அவனிடம் இல்லை.
கால்கள் துடிதுடிக்க அறுபட்ட ஆடு, சிறுகச்சிறுக மரணத்தை அணைத்துக் கொண்டு அடங்கிப்போகுமே அதுபோல!
சலீமின் நினைவு மெல்ல மெல்ல சூன்யத்தில் கரைந்து கொண்டிருந்தது.
அவன் நினைவில் கடைசி சொட்டாக அந்த 3 நிமிடம் அவனுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்தது. ஆம்! 39 வருடம் புரியாத வாழ்க்கையின் கணக்கு அந்த 3 நிமிடத்தில் புரிந்து போயிற்று. அவன் பிறந்தது, படித்தது, ஓடி விளையாடியது, வளர்ந்தது, திருமணம், உறவுகள், பிள்ளைகள், வேலை, சம்பளம், வாழ்க்கையின் வசதிகள், வீடு, வாகனம், சொத்துகள், நண்பர்கள், வேடிக்கை, சண்டை, சச்சரவுகள், பிணக்குகள், மன்னிப்பு எல்லாமே முடிந்துவிட்டது.
இறைவனே! இது கனவாக இருக்க வேண்டுமே…..!
-சிந்தனை சரம், ஜனவரி 2012