‘மெகா’ மயக்கம்!
நண்பரொருவர், விழா ஒன்றில் உரையாற்றச் சென்றபோது விழா அமைப்பாளர், பெண்களை முன்னிறுத்தி உரையாற்றச் சொல்லியிருக்கிறார். நண்பரும் உற்சாகமாக வரலாற்றுப் பெண்களை நினைவூட்டி தற்காலப் பெண்கள் டி.வி. சீரியல் மாயைகளில் அகப்பட்டு தம் மகிழ்ச்சியான வாழ்வையே தொலைத்து வருவதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
வானவர்கள் சங்கமிக்கும் மாலைப்பொழுதுகள் மெகா தொடர்களின் பிடியில் அகப்பட்டு வெகு காலமாகி விட்டது. தம் குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மைக்கு மக்களும் பழகி விட்டதால்கூட்டத்தில் நண்பரின் விமர்சனத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் விழா அமைப்பாளர் சற்று ‘ஈகோ’ மிகைத்தவர். (டி.வி.சீரியலின் வெறியரும் போல!) நண்பர் பேசி முடித்ததும் எழுந்து மைக்கைப் பிடித்து நாளெல்லாம் உழைத்துக் களைத்து அயரும் பொழுதுகளில் கொஞ்சம் அப்படி – இப்படி டி.வி. சீரியல்கள் பார்த்தால் என்ன தவறு? என்கிற ரீதியில் நண்பரின் பேச்சுக்கு முரணான வாதத்தை எடுத்து வைக்கத் துவங்கியிருக்கிறார். அவரின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லையெனினும் சமூகத்தில் இப்படியும் சிலர் குறுக்குசால் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வரதட்சணை வாங்கினால் என்ன? இன்றைய காலத்தில் வரதட்சணையைத் தவிர்க்க முடியாது! வட்டி வாங்கினால் என்ன? கஷ்ட காலத்தில் ஈட்டிக்காரர்களை விட்டால் வேறு யார் உதவுவார்? சிகரெட், மது குடித்தால் என்ன? மனவேதனைக்கு அதை விட்டால் வேறு மருந்து ஏது? என்கிற ரீதியில் பேசித் திரியும் இவர்கள் அந்தக் கொடுஞ்செயல்களை செய்பவர்களை விடவும் கொடியவர்கள்.
அத்தகைய தீமைகளுக்கு எது பின்னணியாக அமைகிறதோ அதைக் களைய எந்த முயற்சியும் செய்யாமல் சிலர் இருக்கலாம். அவர்களை விடக் கொடுமையானவர்கள் இந்தத் தீமைகளை, சூழலின் பெயரைச் சொல்லி நியாயப்படுத்துபவர்களே!
இதுபோன்ற தீமைகளை யாரேனும் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள் எனில் சமூகச் சீரழிவுக்கு வேறு அடையாளம் ஏதும் தேவையாகுமா?
மனித சமுதாயத்தை – அதன் மாண்பைச் சீர்குலைக்கும் இத்தகைய கொடுமைகளுக்குச் சற்றும் குறையாமல் டி.வி. சீரியல்கள் பங்காற்றி வருகின்றன. மூட நம்பிக்கை, ஒழுக்க மாண்புகளைச் சிதைத்தல், தவறான உறவுகள், மாமியார் – மருமகள் – நாத்தனார் அவமதிப்புக் காட்சிகள். தீய குணங்களுக்கு மகுடம் சூட்டி நல்லவர்கள் வீழ்ச்சியடையும் விதமான சித்தரிப்புகள் என ஒட்டுமொத்தமான மனித மான்புகளின் வீழ்ச்சிக்கு டி.வி. சீரியல்கள் வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன.
மெகா தொடர்களில் மயங்கிக் கிடப்பவர்களில் பெரும் பகுதி இஸ்லாமியக் குடும்பங்களே. இஸ்லாம் வெறுத்தொதுக்கும் தவறான பண்புகள் அனைத்திலும் வெளித்தோற்றத்தில் ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், அதன் உள்ளிடாக உயிர் திருடும் விஷமிருக்கிறது. வெளித்தோற்றத்திற்கு மயங்கிவிட்டால் வாழ்வைத் தொலைப்பது மிக உறுதி. அதே சமயம் இஸ்லாமியப் பண்புகளுக்கு எதிரானவற்றின் மூலம் ஈர்க்கப்படுவது அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிகழ்ந்துள்ளது. ஈர்ப்புக்குள்ளானவர்களும் சாதாரண மனிதர்களல்ல! ஸஹாபாக்கள்.
ஒருமுறை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! நான் குரைளா வமிசவத்தர்களான யூத சகோதரர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் தவ்ராத்தின் சில கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். அதை உங்களுக்கு வாசித்துக் காட்டட்டுமா?’
அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகம் கோபத்தால் சிவந்துவிட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெறுப்பை உணர்ந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் மண்டியிட்டு, ‘அல்லாஹ்வையே பொருந்திக் கொண்டோம். இஸ்லாத்தையே மார்க்கமாகவும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராகவும் பொருந்திக் கொண்டோம்’ என்றார்கள்.
அதைக்கேட்டு கோபம் தணிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மூஸா அலைஹிஸ்ஸலாம் உங்கள் முன் தோன்றி அவரை நீங்கள் பின்பற்றி, என்னை பின்பற்றாமல் விட்டு விட்டாலும் வழிகெட்டவர்களாகவே ஆவீர்கள். சமுதாயங்களில் நீங்கள் என் பங்குக்குரியவர்கள். இறைத்தூதர்களில் நான் உங்கள் பங்குக்குரியவன் ஆவேன்’ என்றார்கள் (நூல்: அஹ்மது)
வாழ்வின் போக்கில் மற்றவர்கள் தத்தம் கொள்கைகளையும், பண்புகளையும் – அவை நல்லவையோ, கெட்டவையோ – சுயநலன்களுக்காக நம்மிடம் திணித்துவிடுகிறார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையில் தவ்ராத் திணிக்கப்பட்டது போல, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளைக் கேடயமாகக் கொண்டுதான் நாம் நம் பண்புகளைக் காக்க முடியும். அத்தகைய வழிமுறைகளை வரம்புக்குட்பட்ட நிலையில் காட்சிப்படுத்தி மீடியாக்களின் வழியாக நாம் ஏன் உலாவ விடக் கூடாது? (-சிந்தனை சரம் ஜூலை 2005)