மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையில் மனித மதிப்பீடு
மவ்லவி, கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ
ஒரு முறை முல்லா அழைப்பின் பேரில் விருந்தொன்றுக்குச் சென்று வந்தார். எளிமையான அவரது தோற்றத்தைக் கண்ட வாயிற்காப்போன் அவரை உள்ளே விடாமல் தடுத்தான். அலட்டிக் கொள்ளாத முல்லா வெளியே வந்து உயர்தர ஆடைகளை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் அங்கே வர, அடையாளம் தெரியாத வாயிற்காப்போன் இப்போது சல்யூட் அடித்து உள்ளே அனுமதித்தான்.
உள்ளே நுழைந்த முல்லா விருந்து மண்டபத்தில் அமர்கிறார். எல்லோரும் விருந்துணவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க முல்லா மாத்திரம் வித்தியாசமாய் உணவை எடுத்து தன் உடைகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.
விருந்ளித்தவருக்கு முல்லாவின் இந்த செயல் எரிச்சலையூட்ட, அவரை நோக்கி, ‘என்ன அநாகரீகம்?’ என்று வினவ, ‘உங்கள் விருந்து அழைப்பு என் உடைக்கானது. எனவே அது உடைக்குத்தான் ஊட்டப்பட வேண்டும். அதை நான் உண்டால் அதுதான் ‘அநாகரீகம்’ என்று சட்டென முல்லா பதில் சொல்ல விருந்தளித்தவரின் முகம் தொங்கிப் போனது.
இப்படி வெளித்தோற்றத்தை வைத்தே மனிதனை மதிப்பிடும் நிலை உலகில் பரவலாக உள்ளது. நுனி நாக்கில் ஒருவர் ஆங்கிலம் பேசினால் அவருக்கு சமூகத்தில் தனியொரு மரியாதை வழங்கப்படுகிறது. மொழி என்பது ஒருவனுடைய கரத்தை இன்னொரு மனிதன் புரிந்துகொள்வதற்கான ஒரு சாதனமே அன்றி உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கல்ல.
இதுபோல் ஒருவன் வகிக்கும் பதவியும் மனித மதிப்பீட்டின் அளவு கோலாக உலகில் கொள்ளப்படுகிறது. இந்த அளவுகோலையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் ‘ஒரு சமூகத்தின் தலைவன் அச் சமூகத்தின் ஊழியனே! என்னும் அளவுக்குத்தான் இஸ்லாம் பதவிக்கு மதிப்பு வழங்குகிறது. பதவி இன்றிருக்கும், நாளை இருக்காது.
மனித மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள் உடையோ, மொழியோ, பதவியோ, பிறப்போ அல்ல. அப்படியெனில் எதை வைத்து ஒருவன் இறைவனிடம் மதிப்பைப் பெறுகிறான். ‘உங்களில் நற்பண்புகள் உள்ள இறையச்சமுள்ளவரே இறைவனிடம் கண்ணித்திற்குரியவர்’ (அல்குர்ஆன் 49:13)
இதைத்தான், உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ இறைவன் பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்கள் அவற்றின் வழி வெளிப்படுகின்ற நல்லறங்கள் இவற்றையே இறைவன் பார்க்கிறான்’ என்ற நபிமொழியும் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
எதற்கும் தாயாரான ஒரு சமூகத்தைக் கட்டமைத்தவர், குடும்பப் பின்னணியில் பிரிந்து கிடந்தவர்களை அரபு தேசியக் கொடையின் கீழ் ஒன்று சேர்த்தவர், ஒரு மாபெரும் அரசினை உருவாக்கி அதன் முடிசூடா மன்னராகவும் திகழ்ந்தவர் – இப்படியான சாதனைகளையும் புரட்சிகளையும் குறிப்பிட்டு வரலாற்றாசிரியர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உலகுக்கு அறிமுகம் செய்தாலும், இத்தனை சாதனைகளுக்கும் புரட்சிகளுக்கும் சொந்தக்காரரான அந்த அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை ‘நன்னடத்தைகளைக் கற்றுத் தந்து மனிதப் பண்பாட்டுத்தளத்தை சரிசெய்து அதை முழுமைப்படுத்த வந்த இறைத்தூதுவன்’ என்றே அறிமுகம் செய்கிறார்கள்.
o ”வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவனே மனிதருள் சிறந்தவன்.” – (நூல்: முஸ்லிம்)
o ”ஆபாசப் பேச்சுக்கள் எதுவும் பேசாமல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவனே மனிதருள் சிறந்தவன்.” (நூல்: புகாரி)
o ”இறைவனிடத்திலும், முதலாளியிடத்திலும் விசுவாசமாக நடப்பவனே சிறந்த தொழிலாளி.” (நூல்: புகாரி)
o ”இல்லாளிடம் நற்பெயர் வாங்கியவனே நல்ல கணவன்.” (நூல்: திர்மிதீ)
o ”கணவன் தன்னைப் பார்க்கும்போது மகிழ்வைத்தந்து, அவன் விருப்பத்திற்கு மாற்றமாக நடக்காமல், தன் கற்பைப் பேணிக் கொண்டவளே நல்ல மனைவி.” (நூல்: நஸயீ)
o ”அண்டை வீட்டினரோடு சுமூக உறவு கொள்ளாமல் ஆயிரம் உபரி வணக்கங்களில் ஈடுபடுபவனைவிட அவனோடு அந்நியோன்யமாகப் பழகும் குறைந்த வணக்கம் புரிபவனே மேலானவன்.” (நூல்: மிஷ்காத்)
o ”பகையினால் ஒருவர் முகத்தை பிறிதொருவர் பார்க்க விரும்பாத கட்டத்தில் பகையை மறந்து முகமன் கூறி முதலில் பேசத் துவங்குபவரே உங்களில் சிறந்தவர்.” (நூல்: புகாரி)
o ”பணிவிடை என்று வருகிறபோது, மற்றவரைவிட தன்னை முற்படுத்திக் கொள்பவனே சிறந்த தலைவன்.” (நூல்: பைஹகீ)
பண்பாட்டுத் தளத்தில் நாம் மேலோங்கியிருக்கிறபோதுதான் நாம் இறைவனிடமும், இறைத்தூதரிடமும் நன்மதிப்பைப் பெற முடியும் என்பதற்கு சான்று பகரும் நபிமொழிகள் இவை.
ஸாஹிரா எனும் கிராமத்து நபித்தோழர் ஒருமுறை சந்தையில் விறபனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்குத் தெரியாமல் பின்புறமாக வந்து அவர் முதுகைச் சேர்த்து கட்டியணைக்க, ‘யார் அது?’ என்று கேட்டு முதலில் பிடியிலிருந்து விடுபட நினைத்த அவர், பின்பு கட்டியணைத்தது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனத் தெரிய வந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சோடு தன் முதுகை இன்னும் இறுக இணைத்துக் கொண்டார்.
இதுதான் தருனம் என எதிர்பார்த்த ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவோர் எவருமுண்டா?’ என அவரை ஏலம் விட ஆரம்பிக்க அவர் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடன், ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு உப்புக் கல்லுக்கும் பெறாதவன். என்னை யார் விலை கொடுத்து வாங்குவார்?’ என்றபோது, ‘தோழரே! நீ மனிதப் பார்வையில் வேண்டுமானால் மதிப்பற்றவராகத் தோன்றலாம். ஆனால் இறைவனின் பார்வையில் உன்னைவிட மதிப்பு மிக்கவர் வேறு எவரும் இருக்க முடியாது’ என்று சொன்னார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: திர்மிதீ)
ஒரு சாதாரண கிராமவாசி, அவலட்சணமான தோற்றமுடையவர். தன்னைத்தானே தாழ்வாக நினைத்துக் கொண்டிருக்கும் ஓர் எளியவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வளவு பெருமைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது! – என நம் மனதில் ஒரு வினா எழலாம்.
கள்ளங்கபடமில்லாத, சூது வாது தெரியாத (கிராமவாசிகளுக்கே உரித்தான) அவருடைய வெள்ளேந்தியான தூய உள்ளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கவர்ந்திருக்கிறது. எனவேதான் அவர்களை அவ்வாறு பேச வைத்திருக்கிறது.