திசை மாறும் வாரிசுகள்!
ஆர். எம். சதக்கத்துல்லாஹ், மேலூர்
[ அஹிம்ஸையைக் கொண்டு வெள்ளையனை விரட்டி சுதந்திரம் பெற்ற இந்திய மக்கள் இன்று இந்திய நாட்டிலேயே ஏ.கே. 47 ஐ தூக்கிக் கொண்டு கொள்ளையடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றால் சினிமா வந்ததற்குப் பின்னர் தானே! பல கொலைகளைச் செய்தவனைக் காரணம் கேட்டால் சினிமா தான் காரணம் என்கிறான்.
கொள்ளைக்காரனும், விபச்சாரியும்கூட தங்கள் நிலைக்கு சினிமா தான் காரணம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சமுதாயச் சீர்கேடுகள் உற்பத்திப்பண்ணிக் கொண்டிருக்கும் திரையுலக நடிக நடிகையர்களுக்குத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் ‘பேணர்’ ஏந்திக் கொண்டு திரிகிறது.
உள்ளத்தில் உயர்ந்த சிந்தனைகளையே குறிக்கோளாகக் கொண்டு வெற்றியின் இலக்கை முயற்சி செய்ய வேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று தங்கள் நெஞ்சில் நடிக நடிகையரின் உருவத்தை பச்சைக் குத்திக்கொண்டு திரிவதில் பெருமை கொண்டு அலைகிறார்கள்.
அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டிய இளைஞர் சமுதாயம் சினிமா நடிகர்களுக்கு ‘வாழ்க’ கோஷம் போட்டு வாழ்க்கையை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறது. கலையின் பெயரில் அதற்கு தலைவணங்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.]
திசை மாறும் வாரிசுகள்!
மனித வாழ்வின் மறக்க முடியாத பருவம் இளமைப்பருவம். இது இனிமையானது மட்டுமல்ல, எதிர்கால வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளம் அமைக்க வேண்டிய நிர்பந்தம் கொண்ட கால கட்டமும் கூட.
இந்த இளமைப் பருவத்தில் ஒருவனின் சிந்தனைகளும் கண்ணோட்டமும் எந்த திக்கு நோக்கி இருக்கின்றனவோ அல்லது ஈர்க்கப்படுகின்றனவோ அதே திக்கில் தான் அவன் தன் ஆயட்காலம் வரை சென்று கொண்டிருப்பான்.
கல்வியார்வம் கொண்டு ஒருவன் அதனைத் தேடி அலைந்து கொண்டிருப்பானேயானால் அவனது வாழ்வும் இறுதிவரை கல்வி கற்பதிலும், அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும், அதனைத் தேடி அலைவதிலும் சென்று கொண்டிருக்கும். வியாபாரம் செய்து செல்வம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒருவனது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியுமேயானால் அவனின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் வியாபாரத்தைப் பற்றியதாகவே இருந்து அவன் மிகப்பெரிய தொழிலதிபராக ஆவதற்க வழிவகுக்கும்.
இவ்வாறு இளமைப்பருவத்தில் ஒருவன் எத்துறையின் மீது ஆர்வமாக இருந்து, அதற்காக விடாமுயற்சி செய்கிறானோ அவன் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவான் இறைவனின் நாட்டமிருந்தால். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? அவர்களின் வலுவான உடலும், அறிவுக்கூர்மையும் கலை எனும் பெயரில் மனித சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டிருக்கும் சினிமா நடிக நடிகையரின் வளர்ச்சிக்காக அல்லவா விரயமாகிக் கொண்டிருக்கிறது?
யார் இந்த சினிமாக்காரர்கள்? நூறு பேர்களை அலிகளாக ஆக்கி விட்டு ஒருவனை கதாநாயகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் தானே! உடல் கவர்ச்சியையே மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கும் பகட்டு வேஷதாரிகள் தானே! இவர்களுக்கா நமது இளைய சமுதாயம் ‘வாழ்க, வாழ்க’ என்று வறண்டு போன தொண்டையோடு கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது?!
இந்த சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள், ‘நாங்கள் கலையை வளர்க்கிறோம், நாங்கள் எடுக்கும் படங்களின் மூலமாக மக்கள் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகளை காட்டுகிறோம்’ என்று! எவ்வளவு கிறுக்குத்தனமான பதில். ஒழுக்கத்தைப் பரப்புகிறேன் என்று விபச்சாரியா சொல்வது? ஒழுக்கத்தின் இருப்பிடமாக இருந்த நமது இந்தியா, சினிமா வந்த பிறகுதான் கலாச்சார சீர்கேட்டில் மற்றொரு லண்டனாக, பாரிஸாக மாறிக் கொண்டிருக்கிறது.
அஹிம்ஸையைக் கொண்டு வெள்ளையனை விரட்டி சுதந்திரம் பெற்ற இந்திய மக்கள் இன்று இந்திய நாட்டிலேயே ஏ.கே. 47 ஐ தூக்கிக் கொண்டு கொள்ளையடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்றால் சினிமா வந்ததற்குப் பின்னர் தானே! பல கொலைகளைச் செய்தவனைக் காரணம் கேட்டால் சினிமா தான் காரணம் என்கிறான். கொள்ளைக்காரனும், விபச்சாரியும்கூட தங்கள் நிலைக்கு சினிமா தான் காரணம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சமுதாயச் சீர்கேடுகள் உற்பத்திப்பண்ணிக் கொண்டிருக்கும் திரையுலக நடிக நடிகையர்களுக்குத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் ‘பேணர்’ ஏந்திக் கொண்டு திரிகிறது.
உள்ளத்தில் உயர்ந்த சிந்தனைகளையே குறிக்கோளாகக் கொண்டு வெற்றியின் இலக்கை முயற்சி செய்ய வேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று தங்கள் நெஞ்சில் நடிக நடிகையரின் உருவத்தை பச்சைக் குத்திக்கொண்டு திரிவதில் பெருமை கொண்டு அலைகிறார்கள். அநீதிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டிய இளைஞர் சமுதாயம் சினிமா நடிகர்களுக்கு ‘வாழ்க’ கோஷம் போட்டு வாழ்க்கையை விரயமாக்கிக் கொண்டு இருக்கிறது. கலையின் பெயரில் அதற்கு தலைவணங்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படியே இன்றைய இளைய சமுதாயம் சென்று கொண்டிருந்தால் அவர்களால் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியாது போய்விடும். பெரும் பெரும் சாதனையாளர்களாக – தலைவர்களாக – விஞ்ஞானிகளாக – அறிவு ஜீவிகளாக ஆக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் பொய்யாகிப் போய்விடும்.
சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் அமைத்திருக்கும் அதிகமானோர்களில் நம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அடக்கம். அவர்களுக்கு நாம் தான் மார்க்கத்தை எடுத்துச்சொல் வேண்டும். நடிகர்களால் நமக்கு எவ்வித இலாபமம் இல்லை. நம்மின் வாழ்க்கையின் அழிவில் தான் அவர்கள் வாழ்வின் முன்னெற்றம் இருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். இல்லையெனில் உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவுக்கு என்ற கோஷம் நம் வீட்டிலும் ஒலிக்கத் தொடங்கிவிடும்.
நமது வாழ்க்கை இறைவன் வழங்கியிருக்கும் அற்புதமான அருட்கொடை. அதை வீணாகக் கழித்து பொக்கிஷத்தை இழக்க வேண்டாம்.