கஃபாவை நல்லடியார்கள் வலம்வரும் கண்கொள்ளாக் காட்சி
தவாஃபில் விஞ்ஞானம்!
டாக்டர் பி. ஹாமிது அப்துல் ஹை, மதுரை
‘தவாஃப்’ என்ற சொல்லின் பொருள், ஒரு பொருளை அதன் நான்கு புறங்களிலும் சுற்றுதல் என்பதாகும். புனிதக் கஃபாவான அல்லாஹ்வின் திருவீட்டை ஏழு முறைச் சுற்றி முடிப்பது ஒரு தவாஃப் ஆகும். உம்ரா, ஹ்ஜ்ஜு முதலியப் புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் பேறு பெற்றவர்கள் கஃபாவைச் சென்றடைந்தவுடன் நிறைவேற்றும் கட்டாயக் கடமையாகும்.
கஃபாவைத் தவிர, உலகிலுள்ள இறையில்லங்கள் அனைத்திலும் ஒருவர் நுழைந்தவுடன் அதன் காணிக்கைத் தொழுகையான தஹிய்யத்துல் மஸ்ஜித் (நஃபில்) தொழுது கொள்ள வேண்டும். ஆனால், உலகின் முதல் இறையில்லமாம் கஃபாவை தரிசிப்பவர்கள் ‘தவாஃப்’ செய்வதே அதற்குரிய காணிக்கையாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பு நிலவிய அறியாமைக் காலத்தில் அரேபிய மக்கள் கஃபாவை நிர்வாணமாக வலம் வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமறையின் 9 ஆவது அத்தியாயமான சூரத்துத் தவ்பா (பச்சாதாபம்) அருளப்பட்ட பின்பு (அல்குர்ஆன் 9:17) ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பி அந்த ஆபாச வழக்கத்தை தடுத்து நிறுத்தி தடைசெய்து விட்டார்கள்.
வருடம் முழுவதும் பகல் இரவு ஒரு கணம் கூடத் தவறாது மனிதர்களால் சுற்றிவரப்படும் ஆலயம், உலகில் கஃபத்துல்லாஹ் எனும் இறையாலயம் மட்டுமே. கடும் குளிரிலும், கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், பெருங்காற்றிலும், ஆண்டு முழுவதும் மனிதர்கள் அப் புனித ஆலயத்தைச் சுற்றிவந்து இறைவனை வழிபட்டு வருவது கண்கொள்ளாக்காட்சி மட்டுமல்ல ஒரு பேரற்புதமுமாகும்.
தவாஃப் இடது புறமாகவே சுற்றப்படுவது ஏன்?
அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி கஃபாவின் தென்கிழக்கு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ‘ஹஜ்ருல் அஸ்வத்’ எனும் புனித் கருங்கல்லை அடையாளமாக வைத்து தவாஃப் சுற்றத் தொடங்கி அங்கேயே முடிவடைகிறது. ஏழு முறைச் சுற்றப்படும் தவாஃப் இடது புறமாகவே சுற்றப்பட வேண்டும், வலது புறமாகச் சுற்றுதல் கூடாது.
அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி, அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே உங்களுக்கு இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி) அல்லாஹ்வை அதிகமாக நினைத்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்’ (அல்குர்ஆன் 33:21) எனத் திருமறை குறிப்பிடுகிறது. எனவே, அவர்களின் ஒவ்வொரு செயலிலும் ஆழ்ந்த பொருள் பொதிந்திருப்பதைக் காணலாம்.
நமது இதயம் உடலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. இடது புறமாக ஓடும்பொழுது உடலின் மையத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும் விசையாற்றல் இடது புறத்திலிருந்து வலது புறமாகச் செயல்படுகிறது. வலது புறமாக ஓடுமு;பொழுது இவ்வாற்றல் வலது புறத்திலிருந்து, இடது புறமாகச் செயல்படும்.
நமது உடலில் பாய்ந்தோடும் இரத்தம் – சுத்தமான இரத்தம், அசுத்தமான இரத்தம் என இரு வகைப்படும். இதய இயக்கம் அசுத்தமான இரத்தத்தை சுத்த இரத்தத் தமணிகள் மூலம் உடலெங்கும் பாய்ச்சுகிறது. உடலெங்குமிருந்து அசுத்தமான இரத்தம் அதன் தமணிகள் மூலம் மீண்டும் இதயத்தை வந்தடைகிறது. அங்கிருந்து நுரையீரல்களுக்குப் பாய்ந்து, சுத்தகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்திற்குப் பாய்ந்து அங்கிருந்து உடலெங்கும் பாய்ச்சப்படுகிறது. மனிதன் உயிர் வாழும்வரை இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
அசுத்த இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இரண்டு முக்கிய தமணிகள் உள்ளன. மேல்புறத் தமணி, கீழ்ப்புறத் தமணி. மேல்புறத் தமணி தலை, நெஞ்சு மேற்பகுதி முதலிய பாகங்களிலிருந்து அசுத்த இரத்தத்தையும், மற்ற பாகங்களிலிருந்து பாயும் அசுத்த இரத்தத்தை கீழ்புறத் தமணியும் இதயத்திற்குச் செலுத்துகின்றன. இதயத்தின் உறிஞ்சும் சக்தியால் அசுத்த இரத்தம் இதயத்திற்குள் உறிஞ்சப்படுகிறது.
இதயத்தின் உறிஞ்சும் சக்தியின் உதவியுடன் பெரிய மேல் தமணி அசுத்த இரத்தத்தை இடது புறத்திலிருந்து வலது புறமாக எடுத்துவருகிறது. இடது புறமாக ஓடும்பொழுது அல்லது நடக்கும்பொழுது உடல் மைய எதிர்திசை விசையாற்றல், இதயத்தின் உறிஞ்சும் தன்மைக்கு உதவுகிறது. அதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எளிதில் களைப்பு ஏற்படுவதில்லை. மாறாக வலது புற ஓட்டம் அல்லது நடை இதயத்தின் உறிஞ்சும் திறனை குறைத்து விடுகிறது. ஆகவே, எளிதில் களைப்பு ஏற்பட்டுவிடுகிறது. (தி ஹிந்து, ஏப்ரல் 11 1996 பக்: 27)
இதனடிப்படையில் பார்க்கும்பொழுது தவாஃபில் களைப்பு ஏற்படுவதில்லை என்பதையும், தினமும் பலமுறை தவாஃப் செய்தாலும் உடல் சோர்வடைவதில்லை என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.
ஓட்டப்பந்தய வீரர்கள் இடது புறம் ஓடும் முறையில் தான் களம் அமைக்கப்படுகிறது. இராட்டிணம், எண்ணெய் பிழியும் செக்கு, குதிரைப் பந்தயம், மினாராப் படிகள் முதலியன இடது புறம் செல்வதாகவே அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும். மேற்கண்ட விஞ்ஞான அடிப்படையே அவற்றுக்கு ஒரு காரணியாக அமைகிறது.
தவாஃபின் சிறப்பு :
தவாஃப் செய்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
‘அல்லாஹ{த்தஆலாவின் 120 அருட்கொடைகள் (ரஹ்மத்துகள்) தினமும் இவ்வீட்டின் (கஃபாவின்) மீது இறங்குகிறது. அவைகளில் 60 தவாஃப் செய்பவர்கள் மீதும், 40 அங்கு தொழுபவர்களின் மீதும், இன்னும் 20 பைத்தல்லாஹ்வை பார்க்கக்கூடியவர்கள் மீதும் இறங்குகின்றன’ என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்: ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , நூல்: துர்ருல் மன்சூர், பைஹகீ)
‘எவர் 50 தடவை கஃபத்துல்லாஹ்வை தவாஃப் செய்வாரோ அவர் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த (அன்று பிறந்த)தைப் போன்று பாவங்களை விட்டும் அப்புறப்பட்டவர் ஆகிவிடுகிறார்.’ (நூல்: திர்மிதீ)
‘பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்கிறவர் ஒரு காலடி எடுத்து வைத்து அடுத்த காலடி எடுத்துவைக்கும்முன் அவருக்கு ஒரு பாவம் மன்னிக்கப்பட்டு, ஒரு நன்மை எழுதப்பட்டு, ஒரு தரஜா (பதவி உயர்வு) வழங்கப்படுகிறது. தவாஃப் செய்தவரின் பாதங்களை நரக நெருப்பு தீண்டாது’ முதலிய நபிமொழிகள் தவாஃபின் சிறப்பை உணர்த்துகின்றன.
நம் அனைவருக்கும் புனித இல்லம் கஃபாவை மீண்டும் மீண்டும் தவாஃப் செய்யும் நற்பேற்றினை அல்லாஹ் வழங்கி அருள்புரிவானாக.