உடல் நலமும் உள நலமும்
உடல் நலம் காக்க எடுக்கும் முயற்சியில் நூறில் ஒரு பங்காவது உள நலம் காக்கப் பாடுபடுவோம்
நலம்; நலமறிய ஆவல்.
இந்தச் சொற்றொடர் கடிதங்களில் நாம் தொடங்கும் கரிசனமான வாக்கியம்.
என்ன நலமாக இருக்கின்றீர்களா? தற்போது கைபேசியில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் சம்பிரதாயப் பேச்சு!
இந்த விசாரிப்புகளெல்லாம் நம் உடலைப்பற்றி – உடல்நலம் பற்றிய விசாரிப்புகள்!
யாராவது உங்கள் உள்ளம் நலமாக இருக்கிறதா? உங்கள் ஆன்மா பத்திரமாக – பாதுகாப்பாக இருக்கிறதா?
அதற்கு ஊறு விளைக்கும் தீயனவற்றிலிருந்து கறைபடாமல் காப்பாற்றி வருகிறீர்களா?
இந்தக் கேள்விகளை நாம் யாரிடமும் கேட்பதில்லை. கேட்கவும் தெரியாது!
ஆனால் நபிமார்கள் மனிதர்களின் உடல்நலம் பற்றி மட்டும் அக்கறை காட்டாமல் அவர்களின் உள்ளநலம் பற்றியும் கவலை கொள்கிறார்கள்.
ஒரு மனிதன் கோபப்பட்டால் இவனுக்கு எதனால் கோபம் வருகிறது? ஒருவன் பொறாமை கொண்டால் இவனது பொறாமையின் பிறப்பிடம் எது? என்ற ஆழமான உண்மை அவர்களின் புலன்களுக்கு மட்டும் புரிகிறது.
அவனுடனே இருந்து அவனைக் குழியில் புதைக்கும் இந்த உள நோயிலிருந்து அவனை எப்படிக் காப்பாற்றலாம் என சிந்திக்கிறார்கள். கவலை கொள்கிறார்கள். வழிகாட்டுகிறார்கள்.
இதயத்தை மாசுபடுத்தும் காரணிகள் இவையிவையயன்று தெளிவாக விளக்கி மனிதனைப் புனிதனாக மாற்ற முயலுகின்றார்கள்
இந்த பூமியில் பரிசுத்தமான மனிதன் உலாவர பாடுபடுகின்றார்கள்.
மனிதர்களுக்கோ உடல் மீதுள்ள அக்கறை மனதின்மீது – ஆத்மா மீது இருப்பதில்லை.
நாளை இறப்புக்குப்பின், அவன் இந்த உடலின்றி தனியாக, தன்னைத்தானே தரிசிக்கும்போதுதான் தன் ஆத்மாவின் நிலை அவனுக்குப் புரியவரும்.
அதற்கு நன்மையயனும் உணவு ஊட்டியிருந்தால் ஒளிவீசி அழகாக வசீகரமாகக் காட்சிதரும். அதற்கு தீமைகளை – பாவங்களையே கொடுத்துப் பழக்கியிருந்தால் அருவருப்பான, தன்னைத்தானே வெறுக்கின்ற நாற்றச் சூக்குமமாக மாறிப் போயிருக்கும்.
எனவே, உடல் நலம் காக்க நாம் எடுக்கும் முயற்சியில் நூறில் ஒரு பங்காவது உள நலம் காக்கப் பாடுபடுவோம். பாபநோய்களற்ற ஆரோக்கியமான பலமான ஆத்மாவைப் பெற்றவர்களாக வாழ்வோம்!