புகழே! உம்மைப் புகழ்வதெப்படி?
மவ்லவி, ஸதீதுத்தீன் பாகவி
சூரத்துல் ஃபாத்திஹா இறங்கிய போதும், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போதும், ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜின் அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் பிரார்த்தனைகள் ஒப்புக்கொள்ளப்படும் போதும், ‘வரம்பு மீறிய அடியார்களே! இறைவனின் அருளைவிட்டும் நிராசையாகி விடாதீர்கள்’ (அல்குர்ஆன் 39 : 53) எனும் திருமறை வசனம் இறங்கிய போதும் – என ஷைத்தான் மிக அதிகமாக அழுத இடங்களையும் அழுத சம்பவங்களையும் பதிவு செய்திருக்கிறார்கள் திரு;குர்ஆன் விரிவுரையாளர் குர்துபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஷைத்தானின் பரிவாரங்களுக்கு துக்கநாளாகும் எந்த ஒரு நாளும் தானாகவே முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான நாளாகி விடுகிறது. அவ்வாறே நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளும்.
இதோ இந்த ஆண்டின் ரபீஉல்அவ்வல் பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பல்வேறு கோணங்களில் எடுத்துரைக்கப்படும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித வாழ்வின் ஒரு அகராதியாகும். பொருள் தெரியாத வார்த்தைகளுக்காக நாம் அவ்வப்போது அகராதியைப் புரட்டுவதுண்டு. அது போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த பக்கங்கள் அனைத்தும் மானுட வாழ்வின் அகராதியாகும்.
அவர்களின் 63 ஆண்டுகால வாழ்வில் கொள்கைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்த ஆண்டுகள் 23 மட்டுமே என்றாலும் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை பிரச்சாரம் செய்த எல்லா தீர்க்கதரிசிகளை விடவும் வரலாறுகளில் நிறைந்து வாழ்பவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே.
ஏறத்தாழ 15 நூற்றாண்டு காலமாக பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுள் ஒன்றாக கலந்துவிட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தள்ளி வைத்துவிட்டு ஒருநாள் கூட அவர்களால் வாழ்க்கைப் பயணத்தை செலுத்த முடியாது. இது உடலால் மட்டுமே மறைந்து வாழும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொள்கைகளால் இன்னும் அமரத்துவம் பெறவில்லை என்பதற்கான சான்று.
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. அவைகளில் மிகப்பெரியதோர் சாதனை இறையியல் விஷயத்தில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வகுத்துத் தந்த நிலையான, அழுத்தமான கொள்கையாகும்.
சில அற்புதங்களைக் காட்டிய நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடவுளாக கர்த்தராக தேவகுமாரனாக சித்தரிக்கப்பட்டு வணங்கப்பட்டார்கள். இதுபோன்றே தூதுவத்தைச் சொல்ல வந்த சில நபிமார்கள் கடவுளாக மாற்றப்பட்டனர்.
ஆனால் மிகப்பெரிய பேரற்புதங்களையெல்லாம் நிகழ்த்திக் காட்டிய பின்னரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடவுளாக்கப்படவில்லை. அளவுக்கு மீறிய புகழுரைகளை அனுமதிக்கவில்லை. கண்மூடித்தனமான தனிமனித வழிபாடுகளின் முதல் எதிரியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே விளங்கியதால் வணங்கப்படும் பொருளாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கற்பனையில் கூட யாரும் அன்றுமுதல் இன்றுவரை எண்ணவுமில்லை.
காணும் பொருட்களையே சிலைகளாக வடித்து வணங்கி வந்த அரபுலகச் சூழலில் தோன்றியும் படைத்த ஒரே இறைவனுக்கும் படைப்புகளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அழுத்தமாக எடுத்தோதி நிலைநிறுத்தியதில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றி ஒளிந்திருக்கிறது.
அன்றைக்கு நிலவி வந்த விக்ரஹ வழிப்பாடுகளைப் பற்றித்தான் எத்தனை செய்திகள்! பொதுவாக அன்றுமுதல் இன்றுவரை ‘பல கடவுள்கள்’ உருவானதற்கு இரண்டு காரணிகள் சொல்வார்கள். ஒன்று பயம். மற்றொன்று மகத்துவம்.
மனிதன் பார்த்து பயந்ததெல்லாம் கடவுளாக்கப்பட்டதன் வரிசையில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலக்குகள்(வானவர்கள்), ஜின்கள் ஆகியவை அடங்கும். படமெடுத்து பயமுறுத்தும் பாம்பு போன்றவை வணங்கப்படுவது கூட இந்த ரீதியில் தான்.
இதே போல் தங்களைப் போன்ற இயல்புநிலையிலிருந்து சற்று மேம்பட்டவர்கன், அற்புதங்களைக் காட்டுபவர்கள், சித்துவேலை மோடிவேலை செய்பவர்களெல்லாம் கடவுளாக்கப்பட்டது – அவர்கள் குறித்து மக்கள் மனதில் கொண்டிருந்த மகத்துவங்களால் தான்.
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் தேவகுமாரனாக்கப்பட்டது, உஜைர் அலைஹிஸ்ஸலாம் என்ற நபி தேவகுமாரனாக்கட்டது, பண்டைய காலத்து ராஜாக்கள் வணங்கப்பட்டது முதல் சமகாலத்து சாமியார்கள் வரையிலும், சிலை வணக்கத்தை எதிர்த்த ஈ.வெ.பெரியார் சிலையாகி அமர்ந்திருப்பது முதல் நம்மூர் தலைவர்கள் இதயதெய்வங்களாக்கப்பட்டது வரை அனைத்துமே அவர்களைக் குறித்த மகத்துவங்களை, மதிப்பீடுகளின் அடிப்படையிலே அமைந்தவை.
இந்த இரண்டு மூலகாரணங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அதிகமாகவே இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து அஞ்சாத எதிரிகளே இல்லை. அவர்களின் மகத்துவத்தை வியக்காதவர்களும் இல்லை. இருப்பினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடவுளாகவோ தேவகுமாரனாகவோ சித்தரிக்கப்படாததன் பின்னணியில்தான் பெருமார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.
உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்த ஒரு முஸ்லிமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ‘வணங்குவதாக’ கூறவதில்லை.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மருமகனார் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வரம்பு மீறிப் புகழும் சில வழிகெட்டவர்கள் கூட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதில்லை.
வணக்கம் இறைவனுக்கு மட்டுமே எனும் அழுத்தமான கொள்கையின்கீழ் அவனிவாழ் மக்களையெல்லாம் ஒன்று திரட்டிப் போராடிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வின் எல்லா கட்டங்களிலும் முஸ்லிம்களின் இதயத்தில் அழுத்தமாகப் பதியவும் வைத்தார்கள்.
வணிக நோக்கில் வெளிநாடுகளுக்குச் சென்ற நபித்தோழர் ஒருவர் அங்கு அரசனுக்கு மக்கள் சிரம்பணிவதைக் கண்டு நாமும் நம் தலைவர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவ்வாறு சிரம்பணியலாமே என்றெண்ணி தாயகம் திரும்பியவுடன் அனுமதி கேட்டபோது முஸ்லிம்களின் கொள்கை விளக்கத்தையே பதிலாகத் தந்தார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ‘இது அந்நியர்கள் தங்கள் அரசர்களுக்கு செய்யும் செயல், நான் அரசனல்ல. நான் உங்களில் உள்ள ஒரு மனிதன்’ (நூல்: மிஷ்காத்)
‘கிறிஸ்தவர்கள் வரம்புமீறி ஈஸாவை புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்புமீறி புகழவேண்டாம்.’ (நூல்: முஸ்லிம்) என்ற நபிமொழியையும் இக்கருத்தை ஒட்டியே சிந்திக்க வேண்டும்.
தங்களை மட்டுமல்ல தங்கள் குடும்பத்தார் விஷயத்திலும் யாரும் வரம்புமீறாமல் உயிருள்ள காலம்வரை கவனித்துக் கொண்டவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷரீஅத்துக்கு முன்பாகவும் பின்பாகவும் தோன்றிய அனைத்து சமயங்களிலும் வணக்க வழிபாட்டு விஷயத்தில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்களின் வழியே இஸ்லாமியக் கோட்பாடுகளின் அசையாத்தன்மையை உன்னிப்பாய் கவனித்தால் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெற்றிப் புன்னகை நிச்சயம் வெளிப்படும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தபின் முஸ்லிம்களிடம் மனரீதியாக ஏற்பட்ட பின்னடைவை – சோர்வைக் களைத்ததில் முதன்மையானவராக விளங்கிய அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை ஆழமானவை.
‘உங்களில் யார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கி வந்தீர்களோ அறிந்து கொள்ளுங்கள், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணமடைந்துவிட்டார். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினீர்களோ அந்த அல்லாஹ் எப்போதும் மரணிக்காத நித்திய ஜீவன் (ஃபிக்ஹிஸ் ஸீரத்தின் நபவிய்யாஹ்)
இந்த வார்த்தைகளும் இதை செவயுற்ற ஸஹாபாக்களின் புத்துணர்ச்சியும் தனிமனித வழிபாட்டைத் தகர்த்தெறிந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கைக்கான வெற்றியாகும்.
எனவேதான் எப்போதாவது நினைக்கப்படுகிற சமயத் தலைவர்களிடையே எப்போதும் நினைக்கப்படுகிற, பேசப்படுகிற, பின்பற்றப்படுகிற, விமர்சிக்கப்படுகிற தலைவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளங்குகிறார்கள்.
‘படைத்தவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும். படைப்புகள் அனைத்தும் வணங்கிட வேண்டும்.’ எனும் தூய வழிபாட்டு முறையைக் கொடுத்துச் சென்ற ஒரு காரணத்திற்காகவே பெருமானாரைப் புகழலாம், பேசலாம், பின்பற்றலாம்.
பொதுவாக சிலர் புகழப்படுவது பலருக்குப் பிடிக்காது என்பது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும். அதிலும் ஒரு தலைவர் பண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் புகழப்படுவதை எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? விமர்சனம் எனும் பெயரால் சகதியை வாரி இரைப்பவர்கள்தான் சகதியாகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமகாலத்து அரபுலக எதிரிகள் தொடங்கி இன்றுவரை நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக மார்தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் எல்லாம்வல்ல அந்த ஏக இறைவனின் திருத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்மட்டும் மங்கவில்லை.
அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் ஆவணப்படுத்தப்பட்ட வாழ்க்கை உலகின் எந்த தலைமைக்கும் – எந்த மனிதருக்கும் இல்லை. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் விமர்சிக்கப்பட்ட தலைவர்களும் யாருமில்லை.
பெயருக்கேற்றார் போன்றே (முஹம்மது – புகழப்பட்டவர்) அவர்களைப் போன்று புகழப்பட்டவர்களும் யாருமில்லை.இஸ்லாமியக் கவிஞர் ஹளரத் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு சரியாகவே சொன்னார்கள்: ‘என் சொற்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ முடியவில்லை. அவர்களைப் பற்றி எழுதுவதால் என் சொற்களையே புகழ்ந்து கொள்கிறேன்.
முஹம்மது – புகழப்பட்டவரை உலகிலுள்ள எவராலும் இகழவும் முடியாது. காரணம் ஒருவரின் பெயரை உச்சரிக்காமல் அவரை இகழ முடியாதல்லவா? புகழப்பட்டவர் என்பதை உச்சரித்து அவர்களை இகழமுயன்றாலும் அது முரண்பாடாகவே அமையும். இது தனது இறைத்தூருக்கு அல்லாஹ் வழங்கிய மாபெரும் கண்ணியம்.
“ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஸல்லல்லாஹு அலா முஹம்மது யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்.”
-சிந்தனை சரம், ஏப்ரல் 2007