எப்போது நாம் படிப்பினை பெறுவோம்?
எம். அப்துல் ஜப்பார்
[ ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவனுக்கும் இறைவனுக்குமான விஷயம்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் இறைவனின் தூதுச்செய்தியை எத்திவைப்பது மட்டுமே அவனது வேலை.
அதே வேளை ஒருவன் முஸ்லிமாவான் என்று எதிர்பார்த்து அழைப்பப்பணியில் ஈடுபடுவது ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய பணியல்ல.
இறைவன் விரும்புகிற நீதியை, அமைதியை மற்றும் நடுநிலமையை முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவன் என்ற பாகுபாடின்றி கையாள்வதும் ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையைச் சார்ந்தது தான். ஒருவன், இன்றல்ல நான்காயிரம் ஆண்டுகள் கழித்தும் முஸ்லிம் ஆவதற்குரிய சூழல்களை உருவாக்குவதே நபிவழியாகும்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் குறைந்து விட்டதினாலேயே தெருவுக்கொரு இயக்கமாய், சந்துக்கொரு அமைப்புமாய் ‘நீயா – நானா’ என்கிற போட்டியில் நாளுக்குநாள் திளைத்து வருகிறார்கள். இத்தகைய போக்கால் சமூகம் விளிம்பை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலை ஒரு முஸ்லிமை எந்தளவுக்கு கொண்டு சென்றிருக்கிறதென்றால் எப்பொழுதும் யாரையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.]
எப்போது நாம் படிப்பினை பெறுவோம்?
எந்தவொரு சமூகத்திற்கும் அதன் வளர்சிசி சாமான்யமாய் கிடைத்து விடுவதில்லை. இன்று இஸ்லாமிய சமூகம், தனக்கு துரோகம் இழைத்து வருவதாக சுட்டிக் காட்டுகிற யூத சமூகம் அனுபவித்து வரும் அவர்களின் பொற்கால கனவாக எண்ணிய குறிக்கோளை அடைய அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களை எந்த முஸ்லிமம் தெரிந்திரக்காமல் இல்லை.
நாடோடிகளாக வாழ்ந்த காலகட்டங்களில் தங்களுக்காக ஒரு நாட்டை உருவாக்குவது குறித்து திட்டமிட்டு விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும், மருத்துவர்களையும் மற்றும் கல்வியாளர்களையும் உருவாக்கி, எல்லா அரசுகளும் துரத்தி துரத்தி அடித்தபோது அடைக்கலம் கொடுத்த இஸ்லாமிய சமூகத்தின் அடிமடியிலேயே கை வைத்து, ஃபலஸ்தீனத்தை கூறுபோட்டு இஸ்ரேலை உருவாக்கியதோடு உலகையே ஆட்டிப்படைக்க முயற்சித்துள்ள யூத சமூகம் ஒரு கோணத்தில் இஸ்லாமிய சமூகத்திற்கு படிப்பினையாய் நிற்கிறது. ஆனால் அந்த படிப்பினையை நாம் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாய் தெரியவில்லை.
கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு இவை எல்லாவற்றையுமே தூர எரிந்துவிட்டு எதற்கெடுத்தாலும் எவரையாவது கரிச்சுக் கொட்டிக்கொண்டே இருக்கிற இஸ்லாமிய சமூகத்திற்கு அதுவே ஒரு நோயாகப் போய்விட்டது. இன்றைய இஸ்லாமிய சமூகம் சந்தித்து வரும் வீழ்ச்சிக்கு அதுவே கூட காரணம் என்று சொல்லலாம்.
இந்நிலை ஒரு முஸ்லிமை எந்தளவுக்கு கொண்டு சென்றிருக்கிறதென்றால் எப்பொழுதும் யாரையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. தனக்கான ஆதரவு நிலைகளைத் தேடி அலைவதும், அங்கீகரிக்கப்படுகிறபோது தூக்கி வைத்து ஆடுவதும், நிராகரிக்கப்படுகிறபோது அப்படியே போட்டு உடைப்பதும், அவனைப்பொருத்தவரையில் சாதாரணமாகிவிட்டது. நாளுக்கொரு பேச்சு, தினம் ஒரு இயக்கம் என வேஷம் கட்டுவதும் தவறாகப்படவில்லை.
சமீபகாலத்தில் நன்கு பழக்கமுள்ள நண்பர் ஒருவர் அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். முன்பு ஒரு இயக்கத்தில் இருந்து கொண்டு அழைப்பப்பணி செய்து கொண்டிருந்தபோது, தான் சார்ந்திருந்த அமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கியதை கடுமையாக விமர்சித்த நண்பர், சில காரணங்களால் தான் இருந்த அமைப்பை விட்டு விலகி அரசியல் அமைப்பை உருவாக்கி ‘அழைப்புப்பணியும் செய்துவரும் அமைப்பிற்கு அழைப்புப்பணி செய்யும் அமைப்பு தனியாக அரசியல் அமைப்பையும் உருவாக்கி செயல்படுவது தவிர்க்க முடியாதது’ என வக்காலத்து வாங்கியது மட்டுமல்லாமல், தான் முன்பு சார்ந்திருந்த அமைப்பையும் விமர்சிக்கத் தொடங்கினார்.
‘அநாதை இல்லங்களையும், மருத்துவமனைகளையும், கல்விச்சாலைகளையும் கட்டுவதுதான் நபிவழியா? நாற்பது ஆண்டுகள் கழித்து ஒருவன் இஸ்லாத்திற்கு வருவான் என்பதற்காக இப்பொழுதே அதற்கான இத்தகைய நிலைகளை உருவாக்குவது சுத்த அபத்தம்ஸ’ என்று பேசிக்கொண்டே போனார்.
ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவனுக்கும் இறைவனுக்குமான விஷயம். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் இறைவனின் தூதுச்செய்தியை எத்திவைப்பது மட்டுமே அவனது வேலை. அதே வேளை ஒருவன் முஸ்லிமாவான் என்று எதிர்பார்த்து அழைப்பப்பணியில் ஈடுபடுவது ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய பணியல்ல. இறைவன் விரும்புகிற நீதியை, அமைதியை மற்றும் நடுநிலமையை முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவன் என்ற பாகுபாடின்றி கையாள்வதும் ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையைச் சார்ந்தது தான். ஒருவன், இன்றல்ல நான்காயிரம் ஆண்டுகள் கழித்தும் முஸ்லிம் ஆவதற்குரிய சூழல்களை உருவாக்குவதே நபிவழியாகும்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் குறைந்து விட்டதினாலேயே தெருவுக்கொரு இயக்கமாய், சந்துக்கொரு அமைப்புமாய் ‘நீயா – நானா’ என்கிற போட்டியில் நாளுக்குநாள் திளைத்து வருகிறார்கள். இத்தகைய போக்கால் சமூகம் விளிம்பை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய சமூகத்தில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன? எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன?
எத்தனை ஆனாதை இல்லங்களை ஏற்படுத்தி அவர்கள் அனாதை இல்லை என்கிற உணர்வோடு பராமரித்து வருகிறோம்?
சேவை மனப்பான்மையோடு செயல்படுகிற எத்தனை கல்வியாளர்கள், எத்தனை மருத்துவர்கள் நம்மில் உருவாக்கியிருக்கிறோம்?
எப்பொழுதும் குறைகளோடும், விமர்சனங்களோடும் அலைந்து கொண்டிருக்கிற நாம் இவற்றைப்பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை, யாரையும் யோசிக்க விட்டதும் இல்லை. வெறுமனே குறைகாண்பதும் விமர்சனம் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ள ஒரு சமூகம் எப்பொழுதும் முன்னேறியதாக சரித்திர சான்றுகள் எதுவுமில்லை.
ஆக்கப் பூர்வமாய் சிந்தித்து, திட்டங்களை வகுத்து, கடின உழைப்போடும், விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்பும் தன்னம்பிக்கை கொண்டும் செயல்பட்ட சமூகம்தான் வரலாற்றில் சாதனைகளை படைத்திருக்கின்றன.