இஸ்லாத்தில் தனி மனிதன்!
ஏ.ஏ. ரஷீத் M.A., D.L.T. (London)
தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள இணைப்பையும் உறவையும் பலவேறு நிலைகளில் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர்.
சமுதாயத்தின் உயர்வை மட்டும் கருதித் தனி மனிதனின் உரிமைகளை உதறித் தள்ளி விடுவது பொதுவுடமைக் கொள்கையின் குறைபாடு.
தனி மனிதர்களுடைய நன்மைகளை மட்டும் மதித்துச் சமுதாயத்தை மறந்து விடுவது முதலாளித்துவ முறையிலுள்ள கொடுமை.
எனவே, இதுபோன்ற கொள்கைப் போராட்டங்களிலிருந்து விலகித் தனி மனிதனும் சமுதாயமும் இணைந்து ஏற்றம் பெறுவதற்கான வழி வகைகள் என்ன? அவ்வழி வகைகளை அன்று தொட்டுப் பல சமயங்கள் அவ்வப்போது காட்டியுள்ளன.
சமய வாழ்க்கை, தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும், சமுதாய வாழ்க்கையின் மேம்பாட்டிற்கும் அடிப்படையாய் விளங்கியிருக்கின்றது.
உலகில் தோன்றிய சமயங்கள் பல. சில அறத்தை வலியுறுத்தின, சில அகிம்ஸையை போதித்தன. அன்பை விளக்கிடும் சமயம், அறிவை போற்றிடும் சமயம், ஒற்றுமையை உணர்த்தும் சமயம் எனச் சமயங்கள் பல உண்டு.
அவற்றுள் இஸ்லாம் மனித வாழ்வின் நெறிமுறைகளைத் தௌ;ளத்தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்துத் தெரிவிக்கின்றது. அந்த வாழ்க்கை நெறி, தற்கால சமுதாயத்தின் அனைத்து நோய்ப்போக்கும் அருஞ்சீவியாகத் திகழ்கின்றது.
அந்நெறி சமுதாயத்தில் தனி மனிதனின் பங்கையும், தனி மனிதனுக்கு சமுதாயம் செய்ய வேண்டிய கடமையையும் எவ்வாறு வரையறுத்துக் கூறுகிறது என்பதை அறிவது நல்லது.
உலகில் தோன்றிய சமயங்களெல்லாம் இறை ஒருமையை வலியுறுத்தின. ஆனால், இஸ்லாம் அந்த இறை ஒருமைக் கொள்கையின் அடிப்படையில் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்தியது. ‘நீங்கள் எல்லோரும் ஒரே ஒரு தந்தை தாயின் சந்ததிகள். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். மனிதர் என்ற முறையில் ஒருவருக்கொருவர் சமம்’ என்று இந்த உயரிய சகோதரத்துவச் சமுதாயத்தை உலகில் முதன் முதல் பிரகடனப்படுத்தியது.
‘இறைவனைத் தனது எஜமானனாகவும், வணக்கத்துக்குரியவனாகவும் கொண்டு, திருத்தூதர்கள் கொண்டுவந்த நேர்வழியைத் தனது வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் இச் சமுதாயத்தின் உருப்பினனாக முடியும்’.
அல்லாஹ்வையும், நமக்கு அருளியவற்றையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், போன்றோருக்கு அருளியவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களுள் யார் ஒருவரிடமும் நாம் வேறுபாடு ஏற்படுத்தவில்லை. அவனுக்கே நாம் அடிபணிவோம்’ எனத் தித்திக்கும் திருமறை உலகச் சகோதரத்திற்கான தாரக மந்திரத்தை இயம்புகின்றது.
இந்த மந்திரத்தால் ஒரே வகையான மதிப்போடும், மரியாதையோடும் மனித இனத்தின் எல்லா தூதர்களையும் மறைகளையும் ஏற்றுக் கொள்ளுதல் மூலம் மனித இனம் முழுதும் ஒரு குடும்பம் என்னும் ஒரு மனநிலையைத் தனி மனிதனில் உருவாக்க முடிகிறது. இந்த மனநிலையில் அமெரிக்கச் சிவப்பரும், சீன மங்கோலியரும், அரேபிய குரைஷியரும், நாடு, நிற, இன, மொழி வேறுபாடின்றி சகோதரர்களாகத் திகழ்கின்றனர். இந்த சகோதரத்துவம், மனித இனம் சிதைந்து சின்னாபின்னாகாமல் காப்பாற்றப்பட பெரிதும் பயன்படுகிறது.
இஸ்லாத்தில் தனி மனிதன் தன் அறிவைத் தேடிக் கொள்ளவும், தன் திறமையை வளர்த்துக் கொள்ளவும் முழு உரிமை பெறுகின்றான். தன் மீட்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனே பொறுப்பாகின்றான். ‘மனிதனுக்கு அவன் எதற்காக முயன்றானோ அதைத்தவிர வேறு ஒன்றும் கொடுக்கப்படாது’ என வான்மறை எச்சரிக்கின்றது. அதே சமயம் ‘எந்த ஆத்மாவும் அது தாங்க முடியாத அளவு பொறுப்பகளைச் சுமக்கவில்லை’ என்றும் தெளிவுபடுத்துகிறது.
தனி மனித முன்னேற்றமின்றிச் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை :
தனி மனித முன்னேற்ற நோக்கமே சமூக முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இப்படி சரியாக மதிப்பிடுகிறது இஸ்லாம். எனவே, இஸ்லாம் தனி மனித முன்னேற்றத்திற்காகப் பணியாற்றும் எண்ணத்தைத் தூண்டுகிறது. அதன் மூலம் சமூக முழ நிறைவுக்கான வழியும் அமைக்கிறது. ஒருவன் தனக்கும் மனித இனத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்வதால் இதை அடைய முடியும். இந்தக் கடமைகளை நேரிய செயல்கள் (அமலே ஸாலிஹ்) எனக் கொள்ளலாம்.
இந்த நேரிய செயல்கள் தனி மனிதனைத் தனித்தும், தன் தோழர்களோடும், மற்றைய படைப்பினங்களோடும் அமைதியாக வாழ வைக்கின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் தான் செய்யும் ஒவ்வொரு சிறு செயலையும் நேரிய வாழ்வுக்கான விதிகளோடு ஒது;துப் பார்க்க வேண்டும். நேரிய செயல்கள் அல்லது ‘அமலே ஸாலிஹ’ வழியைப் பின்பற்றுவது, உண்மையில் அல்லாஹ்வின் வழியை மதிப்பதும், அல்லாஹ்வின் குடும்பத்திற்கு அன்புகாட்டுவதும் ஆகும்.
‘யார் மிக நேர்மையாளராக இருக்கிறாரோ, அவர் அல்லாஹ்வின் குடும்பத்திற்கு மிக அன்புடையவராக இருப்பார்’ எனப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். இந்த நேர்மையை அடைய இறையருள் வேண்டும். இறைத்தூதர் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! நான் யார் ஒருவருக்கேனும் தீங்கு செய்வதில் நின்றும் உன் பாதுகாவலைத் தேடுகின்றேன். ஒவ்வொருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பினை உன்னிடம் வேண்டுகின்றேன்’ எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்ததை அறிகிறோம்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய அறச்செயலை இறைமறை, ‘மேற்கிலோ, கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது (மட்டும்) நன்மை (செய்ததாக) ஆகிவிடமாட்டாது. எனினும் (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், மலக்குமார்களையும் (வானவர்களையும்), நபிமார்களையும் (இறைத்தூதர்களையும்) உண்மையாகவே விசுவாசித்து, பொருளை (அது எவ்வளவு விருப்புக்குறியதாக இருப்பினும்) அவனுடைய விருப்பைப் பெறுவதற்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைக்காரர்கள் முதலியவர்)களுக்கும் கொடுத்து (உதவி செய்து) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து (உதவி செய்து) வருகின்றாரோ அவரும், வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியைச் (சரிவர) நிறைவேற்றுபவர்களும், நஷ்டத்திலும், கஷ்டத்திலும், கடுமையான யுத்த நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய இவர்கள் தாம் உண்மையாளர்கள், பயபக்தி உடையவர்கள்’ எனப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இஸ்லாம் காட்டும் அரசியல் துறை :
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம; அவர்களைத் தலைவராகவும், திருக்குர்ஆனை வழிகாட்டியாகவும் ஏற்று, எல்லாம் வல்ல ஓர் இறைவனையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம், தான் வாழ்கின்ற நாட்டினிடத்துப் பற்றோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதியை இஸ்லாம் சமூக அமைப்பிற்கு அன்றே அளித்திருக்கிறது.
‘நாட்டுப்பற்றானது ஈமானில் பாதி’ (ஹ{ப்புல் வதனி நிஸ்புல் ஈமான்) என்பது நபிமொழி. இம் மணிமொழியின் வழியே மனிதன் நடந்து நாட்டையும், சழுதாயத்தையும் உயர்த்த முடியும். கடந்த கால வரலாறு இந்த உணர்ச்சியை, உள்ளத்தால் பதித்து ஒழுகிய மாபெரும் மனிதர்களின் மாண்பை, உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்குகின்றது.
மக்களை ஆள்கின்ற ஆட்சித் தலைவனுக்கும், ஆளப்படுகின்ற சமுதாயத்துக்கும் இஸ்லாம் அறிவுரைகளும் நெறிமுறைகளும் வழங்கியிருக்கிறது, வகுத்திருக்கிறது. ‘ஒரு நீக்ரோ (கருப்பர்) ஆட்சித்தலைவனாக அமர்த்தப்பட்டாலும், அவனுக்கு அடங்கிநட’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்ல அரசியல் நெறியை தனி மனிதன் மேற்கொண்டு ஒழுகினால்தான் சழுதாயத்தில் அமைதி நிலவும். அதே நேரத்தில், ஆட்சித்தவைர்கள் ‘இறைவனுக்கு அஞ்சி நன்னெறியில் ஆட்சி செலுத்தாவிடின் நம்பிக்கையற்றவர்களாவார்கள்’ என்பதனைத் திருமறை அல்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
இங்ஙனம் நாட்டின் நலனை நாட்டத்திற் கொண்டு சமுதாயமும் தனி மனிதனும் இனைந்து முன்னேற வேண்டும் என்பதே இஸ்லாம் வகுத்த வழியாகும்.
இஸ்லாம் காட்டும் பொருளாதாரத் துறை :
பொருளாதாரத் துறையில் ஏற்படும் குழப்பங்களே சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாக பன்னெடுங்காலமாக அமைந்திருக்கின்றன. குழப்பங்கள் நீங்கி நீதியின் அடிப்படையில் பொருளாதாரம் அமையுமானால்தான் சமுதாய உயர்வு சாத்தியமாகும்.
செல்வத்தை ஓரிடத்திலேயே குவித்து வைப்பதை இஸ்லாம் வெறுக்கிறது, தடுக்கிறது. தேவைக்கு அதிகமாகப் பொருளைச் சேமித்து வைப்பவன் சமுதாயத்திற்கு நன்மை செய்யாதவனே. தனி மனிதன் தன்னுடைய வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை (2.5 சதவீதம்) உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், வாழ்க்கையில் வாட்டமுற்றவர்களுக்கும்) வழங்கியாக வேண்டும் என்பதை இஸ்லாம் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக்கியிருப்பது பொருளாதார உலகமே புகழத்தக்க ஒன்று. சமுதாயத்தில் தனி மனிதன் ஒருவனுடைய தேவையைப் பயன்படுத்திக்கொண்டு இன்னொரு மனிதன் வட்டி வாங்கிப் பொருள் சேர்ப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. தர்மம் செய்வதை உற்சாகப்படுத்துகிறது.
உழைத்துப் பிழைக்கின்ற தொழிலாளிக்கு சழுதாயத்தில் உயர் இடம் உவந்தளித்தது இஸ்லாம். ‘உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவன் கூலியைக் கொடுத்துவிடுங்கள்’ என்றார்கள் நபி பெருமானார ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். தனி மனிதன் ஒருவன் சமுதாயத்தில் வேலை ஒன்றும் செய்யாது சோம்பேரியாகச் சுற்றித்திரியலாகாது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நல்ல உடல் நலமுடைய ஒருவர் தம்மை நாடி வந்து பிச்சை கேட்டபோது, கோடாரியும் கயிறும் வாங்கிக் கொடுத்து அவனை விறகு வெட்டித் தொழில் செய்து பிழைக்குமாறு செய்தார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறக்க விரும்பினார்கள். மறுமையில் ஏழைகளுடனேயே தன்னை இறைவன் எழுப்பவேண்டும் என்று விழைந்தார்கள். இங்ஙனம் ஏழைகளும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதை தெளிவுபடுத்தினார்கள். ஏழைகளும் ஏற்றம்பெற்று இயங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் குறிக்கோள். செல்வந்தர்கள் தம் பொருளைச் சமுதாய நலனுக்கு நல்கியாக வேண்டும் என்று கட்டளை விதித்தது இஸ்லாம்.
தனி மனிதன் மற்றவர்களோடு பழகும் பண்பு :
மனமுவந்து பிறரோடு பழகுகின்றபொழுது தான் மனிதன் சமுதாய உணர்வைப் பெரிதும் பெற்றுப் பயனடைகின்றான். ‘அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்’ என்பது நபிமொழி. பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு காலைத் தொழுகையில் ஒரு முறை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்துகொள்ள முடியாது போயிற்று. தாமதமாக வந்த தம் மருமகரும் தோழருமாகிய ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் – ‘இன்று காலை நான் மஸ்ஜிதை நோக்கி வரும்பொழுது எனக்கு முன்னால் கிறிஸ்துவக் கிழவர் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைத் தாண்டி விரைந்து வருவது அவருக்கு அவமரியாதை செய்வதாகும் – என்று எண்ணி மெதுவாக அவர் பின்னேயே நடந்து வந்தேன். அதனால் காலைத் தொழுகையை தங்களோடு சேர்ந்து தொழ முடியாமல் போயிற்று’ என்றார்கள்.
இதனைக்கேட்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நீர் தொழுகையை விட ஒரு சிறந்த செயலைச் செய்திருக்கின்றீர்’ என்று கூறினார்கள்.
சமுதாயம் ஒரு சமயத்தைவிட அளவில் பெரியது. ஆகவே தனி மனிதன் சமுதாய நலன் கருதிச் சமயப் பொறையுடையவனாக இருக்கக் கடமைப் பட்டுள்ளான். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ரானியிலிருந்து வந்த கிறிஸ்துவப் பெருமக்களுக்கு மதீனாவிலுள்ள மஸ்ஜிது வாசலிலேயே அமர்ந்து வணங்கவும் வசதி செய்து தந்தார்கள். பிற சமயத்தவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று தாம் கூறியதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கை முழுவதும் அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்தும் காட்டினார்கள்.
இஸ்லாம் அரசியல் துறையில் அமைதியான ஆட்சி முறையையும், பொருளாதாரத் துறையில் பொறுமையையும், சமுதாயத் துறையில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வழங்கி வழி காட்டுகின்றது. இஸ்லாத்தின் இந்த நேரியவழி இன்றைய மனித சமுதாயத்திற்கும் வருங்கால உலக ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உகந்த வழி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
(தனி மனிதனும் சமுதாயமும் என்ற தொடரில் ‘இஸ்லாத்தில் தன் மனிதன்’ என்பது பற்றி ஜனாப் ஏ.ஏ.ரஷீத் அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உரையாகும் இது) – பிறை 1970, ஜூன்