மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!
M.A.முஹம்மது அலீ B.A.
[ விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் “உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்”.]
இந்த உலகின் மாபெரும் அற்புதம் நிச்சயமாக அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வால், அகிலத்தின் அருட்கொடையான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இறக்கியருளப்பட்ட ”திருக்குர்ஆன்” தான். அதற்கு இணையான ஒரு அற்புதத்தை எவராலும் காண்பிக்க முடியாது.
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் மட்டுமல்ல, மனிதவர்க்கத்திற்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட மாபெரும் பரிசாகும். அதில் சொல்லப்படாத விஷயங்கள் எதுவுமேயில்லை. சிந்திப்பவர்களுக்கு அதில் கிடைக்காதது எதுவுமில்லை.
ஏழு கடல் நீரை மையாகப் பயன்படுத்தி, உலகெங்குமுள்ள மரம், செடி, கொடிகளை எழுதுகோலக பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி திருக்குர்ஆனுக்கு விளக்கமளிக்க முயன்றாலும் முடியாது. இதுபோன்று இன்னுமொரு மடங்கு கடல்நீரை பயன்படுத்தினாலும் சரியே, கடல் நீர்தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகள் அல்ல! அந்த அளவுக்கு பொருள் பொதிந்தது அல்லாஹ்வின் திருவேதம்.
திருக்குர்ஆனைப்பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்பதைக் கவனியுங்கள்;
”(நபியே!) நீர் கூறுவீராக் ”என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (அல்குர்ஆன் 18:109)
”மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.” (அல்குர்ஆன் 31:27)
உலகக் கல்வியாம் மார்க்கக் கல்வியாம்…
திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் உலகக்கல்வி மார்க்கக்கல்வி என்று இறைவன் பிரித்து சொல்லவே இல்லை. ஆனால் மொழி பெயர்க்கும்போது கல்வி என்று வருகின்ற இடங்களிலெல்லாம் மார்க்கம் என்பதை பிரேக்கட்டில் (அடைப்புக்குறியில்) போட்டு தங்கள் வாதத்துக்கு அதை பயன்படுத்திக் கொள்கிறனர், ஒரு சாரார்!
கல்லூரியில் கற்பதை மட்டுமே உலகக்கல்வி என்று தவறாக விளங்கி வைத்துள்ளோம். வாழ்வதோ இவ்வுலகில் ஆனால் இவ்வுலகம் சார்ந்த கல்வி இரண்டாம் பட்சமானது என்று எண்ணக்கூடியவர்களின் சிந்தனையில் விழுந்த மிகப் பெரும் ஓட்டை இது என்றுதான் சொல்ல வேண்டும்.
மறுமைக்கான விளைநிலம்தான் இவ்வுலகம். அப்படியிருக்கும்போது இவ்வுலகைப்பறிய எந்த ஞானமும் இல்லாமல் மறுமைக்கு எப்படி ஒருவர் தன்னை முழுமையாக தயார் செய்துகொள்ள முடியும்? உலகக்கல்வி இல்லாமல் இவ்வுலகை எங்ஙனம் ஆராய்ச்சி செய்வது என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
சிந்தியுங்கள்… சிந்தியுங்கள்… என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதனின் ஆராய்ச்சிக்கு பச்சை விளக்கு காண்பிக்கும்போது – ஆராய்ச்சி செய்யத் தூண்டும்போழுது; ஆராய்ச்சியே வேண்டாம் (அதாவது இந்த உலகக்கல்வியே வேண்டாம்) என்று ஒருவர் வாதிடுவாரேயானால் அவர் நிச்சயமாக இறை வேதத்தை சரியாக விளங்காதவராகத்தான் இருக்க முடியும்.
உலகக்கல்வியை மட்டம் தட்டிப் பேசுகின்றவர்கள்தான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இஸ்லாத்தின் அசலையே முடக்கி வைத்துள்ளனர்.
“பித்அத்” கள் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணமே உலகக்கல்வியை மூட்டை கட்டி வைத்ததுதான். உலக்கல்வியை ஒதுக்கித் தள்ளியதாலேயே இன்றைக்கு “பித்அத்து”கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பது கண்கூடு.
உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான் என்பதை எடுத்துச்சொல்ல தவறிவிட்டோம். அதன் காரணத்தாலேயே சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து திருக்குர்ஆனை பரண் மீது ஏற்றி வைத்துள்ளோம்.
இன்னொரு விஷயத்தையும் சமுதாய மக்களிடம் தவறாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அதாவது மதரஸாக்களில் ஓதியவர்கள் மட்டுமே மார்க்கக்கல்வி அறிந்து தெளிந்தவர்கள். மற்றவர்களெல்லாம் கல்லூரியில் எவ்வளவுதான் பயின்றாலும் அவர்கள் மார்க்கத்தை முழுமையாக விளங்கியிருக்க முடியாது என்பதாகும். இந்த எண்ணம் மிகக் கடுமையாக ஆட்சேபணைக்குறிதாகும். மதரஸாக்களில் ஓதிய சிலர் சொல்வதுபோல் (அவர்கள் தோனியில்) மார்க்கக்கல்வி (மட்டும்தான்) உயர்ந்தது எனில் எதற்காக பெரும் உலமாக்களில் பலர் தங்களது சந்ததிகளை மற்ற கல்லூரிகளில் படிக்க வைக்கின்றனர்.
காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவ்வுலகில் வாழ்வதற்கு உலகக்கல்வி அவசியம் என்பது நிதரிசணமான உண்மை. இவ்வுலகில் மனிதன் தனது தேவைக்கான அடிப்படை வசதிகளைக்கூட அவன் பெற்றுக்கொள்ளவில்லை எனில் நிச்சயமாக அவனால் ஹலால் ஹராம் என்பதை வாழ்க்கையில் சரிவர பின்பற்ற முடியாது.
கல்வி என்பதை பொதுவில் வைத்து உலகம், மார்க்கம் சார்ந்த அனைத்தையும் மனிதன் கற்கும்போது தான் அவனால் முழுமையாக இஸ்லாத்தை விளங்கி பேணுதலாக வாழமுடியும். இல்லையேல் பேணுதாலக வாழ்வதுபோல் நடிக்கத்தான் முடியும். அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.
கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் நிச்சயமாக முழுமையான கல்வியாளராக இருக்க முடியாது. ஒன்றை இரண்டாகப் பிரித்து; அதில் ஒன்றை மட்டும் கற்பவர் எவ்வாறு எல்லாவற்றையும் விளங்கியவராக முடியும்?
திருக்குர்ஆனில் மறுமையைப்பற்றி எந்த அளவுக்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளனவோ அதே அளவுக்கு இம்மையைப்பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. கல்வியை இரண்டாகப் பிரிப்பவர்கள் திருக்குர்ஆனை பாதி மட்டுமே விளங்க விரும்புகின்றவர் என்றே கொள்ளலாம்.
விஞ்ஞானமும் மெய்ஞானமும் :
நம்மில் பெரும்பாலோர் விஞ்ஞானத்தை உலகக்கல்வி என்றும் மெய்ஞானத்தை மார்க்கக்கல்வி என்றும் விளங்கி வைத்துள்ளோம்.
விஞ்ஞானம், மெய்ஞானம் – இவையிரண்டில் எது உயர்வானது என்ற கேள்வி எழுமானால் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வோர் மெய்ஞானமே உயர்வானது என்றும், சிந்தனையாளர் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போர் விஞ்ஞானமே உயர்வானது என்றும் சொல்வதை பார்க்கிறோம். ஆனால் உண்மையாக சிந்திப்பவர்களுக்கு இவையிரண்டுமே சிறந்ததுதான், இவையிரண்டையும் உருவாக்கிவன் ஒருவனே என்பது மட்டுமின்றி இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
என்ன இப்படி சொல்கிறீர்கள்?! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் என்றல்லவா உலகம் கருதிக் கொண்டிருக்கிறது! நெருக்கம் எப்படி ஏற்படும் என்கிறிர்களா?!
ஆம் சகோதரரே! ஏற்படும், நிச்சயமாக இவையிரண்டுக்குமுள்ள நெறுக்கமான தொடர்பை சிந்தித்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆன்மீகவாதிகள் போன்றிருக்கும் சிலரிடம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினால், பெரும்பாலும் அவைகள் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானால் உருவாகக்கப்பட்ட வழிகேடுகள் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை நெருங்கக்கூட முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதே சமயம் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை. இது எங்குமுள்ள எதார்த்த நிலை.
இந்த உலகைப் படைப்பதற்கு முன்பே எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நிர்ணயித்து விட்டான். அவைகளை சங்கிலித் தொடராக கியாமநாள் வரை வெளிப்படுத்திக் கொண்டே வருவான். அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் மனிதனைப் படைத்து தனது சாம்ராஜ்யத்தில் உலவவிட்டிருக்கிறான். அப்படி அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்தவைகளை ‘தனது ஆற்றலால்’ என கருதிக்கொண்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என பெயரிட்டு அழைக்கின்றான்.
உண்மையில் விஞ்ஞானம் – மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெறுக்கமானது என்பதோடு ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.
ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்தால் தண்ணீர்.
ஹைட்ரஜனின் எறியக் கூடியது!
ஆக்ஸிஜன் இல்லாமல் எதுவுமே எரியாது!
எரியக்கூடிய தன்மை கொண்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தண்ணீராக மாறும்போது அது எரியும் நெருப்பை அணைக்கக் கூடியதாக மாறுகிறதே எப்படி? இது ஆச்சர்யமான முரண்பாடல்லவா? இந்த தன்மையை தண்ணீருக்குள் வைத்தவன் அல்லாஹ் அல்லவா!
மனிதனைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் தண்ணீரைப் படைத்துவிட்டானே! ஆக ஏற்கனவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளை மனிதன் சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை தனது கண்டுபிடிப்பாக பெயரிட்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என்று பெயர்சூட்டி மகிழ்கின்றான் என்பதே உண்மை.
விஞ்ஞானத்தால் அனைத்தையும் அறிய முடியாது, விஞ்ஞானம் தோற்கிற அல்லது அறிய முடியாத இடங்களுக்குக்கூட மெய்ஞானம் செல்லும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்று.
பொதுவாக மனிதன், கண்களால் கண்டு அறிவால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளை விஞ்ஞானம் எனவும், ஆத்மார்த்தமான இறைநம்பிக்கையை மெய்ஞானம் எனவும் விளங்கி வைத்துள்ளான்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .
மெய்ஞானம் மட்டுமின்றி விஞ்ஞானமும் இறைநெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியதே! அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துவதோடு, வளர்க்கக்கூடியதாகவும், இருக்கிறது’ என்பதும் உண்மை.
விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை அறியும்போது ஈமான் இன்னும் உறுதியாகிறது, வலுவடைகிறது. உதாரணமாக மரம், செடி, கொடி, மரங்கள், மலைகள் யாவும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றன, ‘ஸுஜூது’ செய்கின்றன என்பதை திருக்குர்ஆன் மூலம் அறிந்து நம்புவது மெஞ்ஞானம் எனில் அதே மரம், செடி, கொடிகள் அந்த ஏக இறைவனை துதிக்கின்றன என்பதை மனிதனாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதற்கு விஞ்ஞானம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
மலைகள், மரம். செடி, கொடிகளெல்லாம் அல்லாஹ்வை திக்ரு செய்வதாக, ஸுஜூது செய்வதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவன் படைத்த அத்தனை படைப்பினங்களும் அவனை ஸுஜூது செய்யத்தான் செய்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் அதனை அறியவில்லை. ஆனால், படைத்த ரப்புல் ஆலமீன் அதனை நன்கறிவான். இவ்வுலகில் மனிதன் மரம் செடி கொடிகளை நடுவது விஞ்ஞானம் எனில் அதற்கான நன்மை அல்லாஹ்விடம் கிடைக்கும் என்று நம்புவது மெய்ஞானம்.
இறைவனை துதிபாடக்கூடிய அந்த மரங்களையும், பயிர்களையும் மனிதனைக் கொண்டே அல்லாஹ் பயிர் செய்விக்கச் செய்வது அவனின் மாபெரும் அருட்கொடையின் வெளிப்பாடு. மனிதர்களின்; உணவு தேவைகளுக்கு என்கின்ற நன்மைகளுக்காக என்பது மட்டுமின்றி, வளர்கின்ற பருவத்தில் அந்த பயிர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனவே, அதை உற்பத்தி செய்த மனிதனுக்கு அந்த பயிர்கள் ‘திக்ரு’ செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நிச்சயமாக கிடைக்கத்தானே செய்யும். ஏனெனில் அல்லாஹ் அருள் மழை பொழிவதில் மாபெரும் கொடையாளன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா?
ஏதேனும் ஒரு நன்மையான காரியத்தை ஓருவர் துவக்கி வைப்பாரானால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அனைத்திலும் அவருக்கும் பங்குண்டு என்பது நபிமொழியல்லவா! பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! மனிதன் அறியாமலேயே அவனுக்கு நன்மைகளை சேர்க்கும் இறைவனின் இந்த ரஹ்மத்தை என்னவென்று சொல்வது!
மிக நெருக்கமான ஒருவர் ஒரு விவசாயியாக இருக்கும்போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்: காலை வேளை ஸுப்ஹு தொழுதுவிட்டு வயல்வெளிகளை தனியாக சுற்றிப்பார்க்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் நெற்கதிர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்புடன் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்.
வரப்புகளில் நடந்து செல்லும்போது சப்தமிட்டு கலிமாவை ஒலித்தவண்ணம் நடக்க ஆரம்பிப்பாராம். தான் ஓதியதை கேட்கும் இந்த பயிர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்கின்ற நம்பிக்கையே காரணம் என்பதை அறியும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த சிந்தனையை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்த அல்லாஹ்வை எப்படி புகழ்வது! அல்ஹம்துலில்லாஹ். இங்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அவர் மெய்ஞானத்தை காண்கிறார் என்று கூட சொல்லலாம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துகிறது, ஈமானை மென்மேலும் உறுதியடையச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாறுகளில் – குறிப்பாக நபிமார்களின் வரலாறுகளிலேயே கூட காணலாம். அழுத்தமான சான்றாக, திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும்;, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தையும் குறிப்பிடலாம்.
மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!
எதையும் சிந்தித்து அதை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகின்ற நம்பிக்கையும் உறுதியும் அழுத்தமானது. உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் அவன் உயிரைப்படைக்கும் விதத்தை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக வேண்டுகோள் வைக்கும்போது அந்த ஏக இறைவன் நபியைப் பார்த்து ‘என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று கேட்கிறான்.
அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ்! உன்னிடம் நம்பிக்கையில்லாமலா! அப்படியில்லை: எனது மனம் சாந்தியடைவதற்காக கேட்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.
அதன் பிறகு ஏக இறைவன் அவரிடம் ஒரு பறவையை நான்கு துண்டாக வெட்டி ஒரு மலையின் நான்கு முனையிலும் அதை பிரித்து வைக்கச்சொல்லி, பிறகு ஓரிடத்தில் நின்று தன் பெயரைச்சொல்லி அந்த பறவையை அழைக்கச் சொல்கிறான்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது போல அப்பறவையை நான்கு துண்டாக வெட்டிப் பிரித்து நான்கு மூலையிலும் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயர்கூறி அதனை அழைக்கும்போது அப்பறவை ஒன்றாகி எழுந்து ஓடி வருவதைக் காண்கிறார்கள். இங்கு ஆன்மீகத்தின் ஊற்றான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை இன்னும் உறுதியடைகிறது. அந்த அதிசயத்தை அற்புதத்தை அவர்கள் கண்ணால் கண்டது அவர்களைப் பொருத்தவரை விஞ்ஞான பூர்வமானது இல்லையா?
இது போல மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட ஒரு நபிதானே! அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே! அது ஏன்? தன்னைப் பார்ப்பதற்கான சக்தியை அவர் பெறமாட்டார் என்று இறைவன் சொல்லியும் அவர்கள் மீண்டும் மீண்டும் தனது ஆவலை அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்டு அந்த தூர்ஸீனா மலையில் அல்லாஹ்வின் பேரொளியின் ஒரு துளியைக்கண்டு மூர்ச்சையடைகிறார்களே! இவையெல்லாம் என்ன?
இச்சம்பவங்கள் மறைவானவற்றையும் முழுமையாக நம்பும் ஆன்மீகத்தின் வழிகாட்டியான அந்த மாபெரும் நபிமார்களின் இறைநம்பிக்கையை மென்மேலும் உறுதிபடச் செய்திருக்கும் என்பதை எவரேனும் மறக்க முடியுமா?
அகிலத்தின் அருட்கொடை, நமது உயிரனும் மேலான, கண்மணி ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் இதுபோன்று மறைவான விஷயங்களைக் கண்களால் விஞ்ஞானப்பூர்வமாக காணும் சந்தர்ப்பம் கிடைக்கத்தானே செய்தது. ஆம்! மிஃராஜ் விண்வெளிப்பயணம் எவருக்குமே வாய்க்காத ஒரு அற்பதப்பயணத்தின் மூலம் அவர்களின் இறை நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு உறுதியடைந்தது என்பதை அவர்களின் சொல் மூலமாகவே அறிந்து கொள்ளலாமே!
ஒரு சமயம் சில ஸஹாபாப் பெருமக்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் கண்டதை நீங்கள் கண்டிருந்தால் இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!’ என்று மிஃராஜின்போது தான் நரகில் கண்டவற்றைக் குறிப்பிட்டுக் கூறியதை எண்ணிப்பார்க்கும்போது, நேரடியாக அந்த நரகக்காட்சியைக் கண்டதால் அவர்கள் மென்மேலும் இறையச்சமுடையவர்களாக விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவு படுத்துகிறதல்லவா.
அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்வதை மிகப்பெரும் வணக்கமென்றே இஸ்லாம் கூறுகிறது.
ஏறத்தாழ 780 திருமறை வசனங்கள் விஞ்ஞானத்தை வலியுறுத்திக் கூறுகின்றனவே! ஏன்? எதற்காக? சிந்திக்க வேண்டாமா?
அல்லாஹ் படைத்த வானத்தையும் பூமியையும் கோள்களையும், நட்சத்திரங்களையும், உயிர் ஜீவராசிகளையும் ஆராய்ச்சி செய்யும் மனிதன் வியந்து போய் அந்த ஏக இறைவனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டே தீர்வான். அப்படிக் கூனிக்குறுகிப்போகும்போது அவனிடம் இருக்கும் பெருமை, கர்வம், தான் என்ற அகம்பாவம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போய், இவ்வுலகைப் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன், தான் ஒரு அடிமையிலும் அடிமை என்பதை உணர்வான்.
விஞ்ஞானத்தை ஆராயும் மனிதன் தான் எவ்வளவு சாதாரணமானவன் என்பதை உணராமல் இருக்க முடியாது. ஒரு முறை விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம் ‘விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்களே!’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி? விஞ்ஞானிகளுக்குத்தான் நிச்சயமாக இறை நம்பிக்கை அதிகமிருக்கும்’ என்றார்.
ஏனெனில் வானத்தையும், பூமியையும், அதிலுள்ள இறைவனின் படைப்புகளைப் பற்றி ஆராயக்கூடிய மனிதன் தான் கண்டுபிடித்தவைகளோடு அணைத்தும் முற்றுப்பெற்று விட்டது என்று எண்ண மாட்டான், எண்ணவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு தனது இயலாமையை அவன் உணரத்தான் செய்வான். அப்போது அவனது நிலை கீழ்க்காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டதுபோல் தான் இருக்கும்.திருக்குர்ஆனின் 29 ஆவது ஜுஸ{வில் முதலாக வரும் ‘ஸூரத்தலுல் முல்க்’ (தபாரகல்லதீ… ஸூரா) உடைய ஆரம்ப வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்!
”எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்”. (67:1)
”உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.” (67:2)
”அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?” (67:3)
”பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.” (67:4)
இவ்வசனத்தில், மரணத்தையும் வாழ்வையும் படைத்ததற்காண காரணத்தை குறிப்பிடும் இறைவன், அவன் அடுக்கடுக்காகப் படைத்த வானத்தைப்பார்த்து சிந்திக்கும்போது மனிதனின்; பார்வை களைத்து மழுங்கிச் சிறுமையடைந்து திரும்பும் என்று கூறுகின்றானே, ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் வானத்தை வெறுமனே பார்க்கும் மனிதனுக்கு என்ன விளங்கும்?
ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் அவன் வியந்து போய் முன் சொன்னதுபோல் கூனிக்குறுகி தான் அப்பட்டமான அடிமை என்பதை துளிக்கூட சந்தேகமின்றி விளங்கிக்கொள்வான். அப்படி அவன் விளங்கிக்கொண்டு தொழுகையில் ருகூஉ, ஸுஜுது செய்யும்போது சாதாரண நிலைக்கும் இப்போதைய அவனது நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாட்டைக் காண்பான்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனிலுள்ள சில ஸூராக்களின் உயர்வைப்பற்றி குறிப்பிடுகையில் முப்பது ஆயத்துக்களைக் கொண்ட இந்த ஸூரத்துல் முல்க் (தபாரகல்லதீ…), ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் மனனமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகச் சொன்னார்களே! அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? சிந்தித்தால் விளங்கியிருப்போம், மெய்ஞானத்திற்கு வழிகாட்டி விஞ்ஞானம் என்று!
இதைப்படிப்பவர்கள் தயவு செய்து தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்த ஸூராவை (அர்த்தத்துடன்) மனனம் செய்யத் தூண்டுங்கள். இன்ஷா அல்லாஹ், விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆகலாம். முடியாது என்று ஒருவர்கூட எண்ணிவிடாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்துப்பாருங்கள், அத்தனையையும் சாத்தியமாக்கி வைப்பதற்கு அந்த ரப்புல் ஆலமீன் போதுமானவனாக இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்; விஞ்ஞானம், மெய்ஞானம் இவையிரண்டுக்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான். இதையே வேறு விதமாக சொல்ல வேண்டுமானால் “உலகக்கல்வி மார்க்கக்கல்வி இரண்டிற்கும் மூல நூலே திருக்குர்ஆன் தான்”.
தொழுகைக்கு “வுளூ” செய்வது விஞ்ஞானப்பூர்வமானது. மெய்ஞானத்தின் சுவையை அறிய அல்லாஹ் முதலில் விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கின்றான். மெய்ஞானம் பரிபூரணமானது, தூய்மையானது. அதனை தூய்மை படுத்துவது விஞ்ஞானம் என்றுகூட சொல்லலாம்.
நோயைக்கொடுப்பவனும் அல்லாஹ் அதற்கான நிவாரணத்தை – சுகத்தை கொடுப்பதும் அல்லாஹ்வே. அதற்காக நோயுற்ற எவரும் சிகைச்சைக்காக மருந்து உண்ணாமல் இல்லையே! நோய்க்கு மருந்து மூலம் – புறச்செயல்கள் மூலம் சிகிச்சை அளிப்பது விஞ்ஞானம். நலத்தை கொடுப்பது அல்லாஹ். அவனிடன் துஆ வேண்டுவது மெய்ஞானம். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ”ஒட்டகத்தைக் கட்டிப்போடுவது விஞ்ஞானம். அல்லாஹ்வை நம்புவது மெய்ஞானம்”.
மெய்ஞானம் மனம் சார்ந்தது எனில் விஞ்ஞானம் உடல் சார்ந்தது என்று சொல்லலாம். உடல் அசைவுகள் இல்லாமல் தொழுகையில்லை. மெய்ஞானத்தை கற்க விஞ்ஞான ரீதியாக உடல் அசைவுகள் தேவை. இல்லையெனில் மெய்ஞானத்தின் பாதையே இல்லாமல் போய்விடும்.
விஞ்ஞானப்பூர்வமாக அல்லாஹ்வின் அத்தாட்சிகள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. உலகக்கல்வி இல்லாமல் இதனை சிந்தித்து ஆராய்ந்து கூனிக்குறுகிப்போவது எப்படி சாத்தியம்? அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதன் மூலம் அவனது மாபெரும் வல்லமையை அறிந்து தன்னுடைய இயலாமையால் மனிதன் கூனிக்குறுகிப் போகும்போது அவனிடமுள்ள அகம்பாவம், தலைக்கணம் கர்வம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல்; சத்தியமாக நான் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முற்றிலும் அடிமை என்னும் முடிவுக்கு வரும். அந்த சந்தர்ப்பம் ஒவ்வொரு முஃமினுக்கும் தேவையில்லையா? உலகக்கல்வியை ஒதுக்கித்தள்ளிவிட்டு எதை ஆராச்ய்ச்சி செய்யப்போகிறீர்கள்?! மஸாயில்களையா? மஸாயில்களை ஆராய்வதாகக் கூறி சமுதாயத்தில் பிரிவுகளைத்தானே ஏற்படுத்த முடிந்தது!
ரப்பிஜித்னீ இல்மா (Rabbi zithnee ilmaa) இறைவா! எனது கல்வியை அதிகப்படுத்துவாயாக! O GOD! INCREASE MY KNOWLEDGE.