அவள்….. அவள்…… அவள்….
மனைவி பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போது, ‘இங்க பாரு, ஒரு ஆண் வாரிசைப் பெத்து எடுத்தீன்னா உடனே பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லு. பெண் குழந்தை பிறந்ததுன்னா தகவலே சொல்ல வேணாம். உங்க வீட்லயே இருந்துடு’ என்றார் கணவர்.
‘பெண் குழந்தையும் நம்ம குழந்தைதானே? ஏன் இப்படிப் பேசுறீங்க?’
‘ஏன் பேச மாட்டே? ரெண்டு தங்கச்சிகளைக் கரை சேர்க்கறதுக்குள்ள என் பாடு திண்டாட்டமா ஆச்சு. இதுல எனக்கும் ஒரு பொண்ணு பொறக்கணுமா? நமக்கு ஒரே ஒரு குழந்தைதான். அதுவும் என் வாரிசா இருக்கற மாதிரி ஆணாகத்தான் இருக்கணும்.’
’பொண்ணா பொறக்கறது ஒண்ணும் என் கையில இல்லை. ஆணோ, பொண்ணோ பொறக்கறதுக்குக் காரணம் ஆம்பிள்ளைங்கதான்னு படிச்சிருக்கேன்!’
‘படிச்சவள்ங்ற திமிர்ல பேசறீயா? இந்தக் கதை எல்லாம் வேண்டாம். கிளம்பு!’
பிரசவ வலி ….
‘இறைவா, எந்தக் குழந்தைனாலும் நல்லபடியா பிறக்கணும்’ என்று கதறினாள் அவள். சிறிது நேரத்தில் குழந்தை பிறந்தது. மயக்கம் தெளிந்து எழுந்தவருக்குப் பயம் வந்துவிட்டது.
‘ஐயோ, என்ன குழந்தை பிறந்திருக்கும்? அவர் கோபக்காரர். சொன்னதைச் செஞ்சிடுவார். ஆண் குழந்தையா இருக்கணும் இறைவா’
’அம்மா, என்ன குழந்தை?’
‘உன் வீட்டுக்காரர் சாயல்ல பொண்ணு பிறந்திருக்கு!’
’என்னம்மா? பொண்ணா?’
’பொண்ணா இருந்தா என்ன?’
‘உங்க மருமகன் சொன்னது மறந்து போச்சா? குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் என்னை இப்படிச் சங்கடப்படுத்துறாறே!
பக்கத்து வீட்டுக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். அகல்யாவின் கணவர் குழந்தையைப் பார்க்க வரவேயில்லை. வாழாவெட்டி என்று பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். அகல்யா கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தார்.
6 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் …..
‘சொன்னதை மறந்துட்டு உன்னைக் கூப்பிட வந்திருக்கேன்னு நினைக்காதே. எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. வீட்டு வேலையை யார் செய்யறது? கிளம்பு.’
காரணம் எதுவாக இருந்தால் என்ன? கூப்பிட்டால் சரி. அரக்கபரக்க துணிகளை அள்ளிக்கொண்டு, குழந்தையுடன் கிளம்பினார் அகல்யா. அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் சந்தோஷத்தில் இருந்தார்கள் அகல்யாவும் கணவரும்.
குழந்தைகள் வளர வளர வீட்டின் சூழ்நிலை மாறத் தொடங்கியது.
‘இந்தா, முட்டை வாங்கிட்டு வந்திருக்கேன். தினமும் என் மகனுக்குக் கொடு.’
‘பாப்பாவும் கேப்பாளே.’
’எல்லாருக்கும் முட்டை செய்யும்போது அவ சாப்பிட்டா போதும். அவளும் இவனும் ஒண்ணா? அடுத்த வீட்டுக்குப் போறவதானே? இவன் நம்ம புள்ளை. ஆண் குழந்தையை நல்லா ஊட்டி வளர்க்கணும்.’
‘நீங்க சொல்றதும் சரிதான்.’
’அம்மாஸ அக்கா என்னோட காரை எடுத்துட்டுத் தர மாட்டேங்கிறா’
‘ஏண்டி, அவனோட விளையாட்டுப் பொருளையே எடுக்கற? உனக்குத்தான் கிச்சன் செட் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கேஸ அப்பறம் என்ன?’
’எனக்கு அது பிடிக்கலை.’
‘பிடிக்குதோ பிடிக்கலையோ அதைத்தான் வாழ்க்கை முழுக்க செய்யப் போறே.’
சில ஆண்டுகளுக்குப் பிறகு …..
‘ராணி, உன்னை எங்கெல்லாம் தேடுறது? பொம்பளைப்பிள்ளையா லட்சணமா இருக்கியா? எப்பப்பாரு பசங்களோடயே சேர்ந்து விளையாடு. ஓடுறது, மரம் ஏற்றதுன்னு அடக்கமே இல்லாம இப்படித் திரியறே?’ என்று ராணியின் முதுகில் நான்கு போட்டாள் தாய்.
‘ஆமாம். என்னையே எப்பப்பாரு திட்டு. தம்பியை ஒண்ணும் சொல்லாதஸ ஏன் நான் விளையாடக்கூடாதா?’
‘என்ன வாய் நீளுது? தனியாளா வேலை செய்யறேனே? சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சு கொடுக்கக்கூடாதா?’
‘தம்பி சாப்பிட்ட தட்டைக்கூட எடுக்க விடமாட்டேங்கிற! நான் மட்டும் வேலை எல்லாம் செய்யணுமா? நான் படிக்கப் போறேன்!.’
‘வேலையைச் செஞ்சுட்டு மீதி நேரம் படிச்சா போதும். வந்து வீட்டைப் பெருக்கு. உங்க அப்பா வர்ற நேரமாச்சு!’
ராணிக்கு 12 வயதானபோது பருவம் அடைந்தாள் ….
’அம்மா, எனக்குப் பயமா இருக்கு!’
‘உனக்கு என்ன பயம்? இனிமேல் நாங்கதான் பயப்படணும். மாமா, சித்தப்பாவெல்லாம் வந்தாங்கன்னா முன்ன மாதிரி ஓடிப்போய் கட்டிப் பிடிக்கக்கூடாது. அக்கம்பக்கத்துல இருக்கற பசங்ககிட்ட எல்லாம் பேசக்கூடாதுஸ என்ன புரியுதா?’
‘நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்லறே?’
‘நீ எதுவும் சொல்ல வேணாம். தம்பிக்கு மட்டும் தினமும் முட்டைன்னு கண்ணு வச்சியே. பத்து நாளைக்கு உனக்கு முட்டை, பலாகாரம் எல்லாம் செஞ்சு போடுவோம். நல்லா சாப்பிடு!’
வயிற்று வலியும் நசநசக்கும் ரத்தமும் ராணியை அவஸ்தைப்படுத்திக் கொண்டிருக்க, அம்மா பலகாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலை ஊட்டியது.
பதினாறாம் நாள். உறவினர்கள் வந்திருந்தார்கள். வீடே கலகலவென்று இருந்தது. சடங்கு சுற்றி முடித்தார்கள். ஒரு பக்கம் புது ஆடைகள், விருந்து என்று சந்தோஷமாக இருந்தாலும் உறவினர்களை நிமிர்ந்து பார்க்கக் கூச்சமாக இருந்தது. சிலர் மேலும் கீழும் பார்த்துவிட்டு, ‘நல்லா வளர்ந்துட்டா’ என்றார்கள். அகல்யாவின் அண்ணன் மகனுக்கு ராணியைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் பள்ளிக்குச் செல்லும்போது தம்பியைத் துணைக்கு அனுப்பி வைத்தார்கள். தெருவில் இருந்த பையன்கள் எல்லாம் ராணியைக் கண்டதும் விஷமத்துடன் சிரித்துக்கொண்டார்கள். அவளுக்கு உடல் நடுங்கியது.
இப்போது ராணியை விளையாடுவதற்கு வீட்டில் அனுமதிக்கவில்லை. விளையாட்டின் இடத்தைப் புத்தகங்கள் பிடித்துக்கொண்டன.
‘ராணி! ஏய் ராணி காதுல விழலையா?’
‘என்னம்மா?’
‘புத்தகத்தை எடுத்தா தன்னையே மறந்துடுவியே? அப்படி என்னதான் அதுல இருக்கோ? சாதத்தை வை. நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்.’
சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அவள், சிரிப்புச் சத்தம் கேட்டு திகைத்துப் போனார்.
‘கால் மேல கால் போட்டுட்டு பொட்டச்சிக்கு அப்படி என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?’
‘பொட்டச்சின்னு சொல்லாத!’
‘சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பொட்டச்சிதானே? நான் எப்படி இருக்கேன்? சத்தமா பேசுறனா? இல்லை உன்னை மாதிரி சிரிக்கறேனா? உன் சத்தம் கேட்டு ரோட்டுல போறவன் திரும்பிப் பார்க்கறான்.’
‘டேய் குமார் என் பேனாவை எடுக்காதடா? மூஞ்சியப் பாரு’
‘என் மூஞ்சி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நான் ஆம்பளை. உன் மூஞ்சிதான் நல்லா இருக்கணும். இல்லைன்னா ஒருத்தனும் உன்னைக் கட்டிக்க மாட்டாண்டி’
‘என்னடா பேசறே?’
‘ராணி, கையை ஓங்காதே? அது என்ன ஆம்பளைப்பிள்ளையை அடிக்கப் போறது? அவன் உண்மையைத்தானே சொன்னான். எல்லாம் உங்க அம்மாவைச் சொல்லணும். எப்படி வளர்த்து வச்சிருக்கா?’
’ஆமா, நான்தான் இப்படிப் பேசச் சொல்லி டிரெயினிங் கொடுக்கறேன்! இவளால எனக்குத்தான் கெட்டப் பேரு’
ராணி பன்னிரண்டாம் வகுப்புக்கு வந்திருந்தாள். ஒருநாள் …
‘ஏங்க, நம்ம ராணி நல்லா படிக்கிறா. பி.இ படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கா. படிக்க வைக்கலாமா?’
‘இவ பி.இ படிச்சான்னா, இவளுக்கு அதை விட அதிகமா படிச்ச மாப்பிள்ளையைத்தான் பார்க்கணும். காசு செலவழிச்சு படிக்க வச்சு, பணம் கொட்டி கல்யாணமும் நடத்த முடியாது. குமார் சுமாரா படிக்கிறான். அவனுக்குக் காசு கொடுத்துதான் சேர்க்கணும். அவனைப் படிக்க வச்சாலாவது கடைசி வரைக்கும் நம்மளைப் பார்த்துப்பான். படிக்க வச்சு, அடுத்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுக்க நான் ஏன் கஷ்டப்படணும்?’
தூங்காமல் கேட்டுக்கொண்டிருந்த ராணிக்கு அழுகையாக வந்தது. படிக்க வேண்டும் என்று சண்டை போட்டாலும் அவளுக்கு ஆதரவாகப் பேச இங்கு யாருமில்லை. எஞ்சினியராகும் கனவு அந்த இரவில் தொலைந்துபோனது.
அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருந்தாள் ராணி. மேற்படிப்பு பற்றிப் பேச்சு வந்தது.
‘அப்பா, எனக்கு அறிவியல்ன்னா ரொம்பப் பிடிக்கும். பிஎஸ்சி சேர்த்து விடுங்க’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். உன்னோட மார்க்குக்கு டீச்சர் ட்ரெயினிங்ல சீட் கிடைக்குமாம். ரெண்டே வருஷத்துல படிப்பு முடிஞ்சுரும். டீச்சர் வேலைக்குப் போயிடலாம்.’
‘……………………’
’இங்க பாரு, உன் மக படிக்கறான்னு மத்த வேலைகளை எல்லாம் கொடுக்காம இருக்காத. இப்ப எல்லாரும் பொண்ணு படிச்சிருக்கணும்னு கேட்கறதாலதான் படிக்க வைக்கிறேன். புரியுதா? படிப்பு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான். அதனால ஒரு வீட்டு வேலை செய்யும் அளவுக்குத் தயார் படுத்து.’
படிப்பு முடிவதற்குள் பெண்ணுக்குரிய அத்தனை வேலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தாள் ராணி.
‘நீ கொடுத்து வச்சவடி. உன் மக படிப்புலயும் கெட்டி, மத்த வேலைகளிலும் கெட்டி.’
‘ஆமாம் நல்லா சமைப்பா. துணி துவைச்சான்னா அத்தனை சுத்தமா இருக்கும்!’
அவளின் அண்ணனுடன் ஒரு சண்டை. அவர் மகனுக்குப் பெண் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தனர். வெளியில் வரன் பார்க்க ஆரம்பித்தனர்.
‘அம்மா, நான் வேலைக்குப் போறேன். இப்ப கல்யாணம் வேணாம்னு அப்பா கிட்ட சொல்லு.’
‘என்ன சொல்றா? பொண்ணு சம்பாத்தியத்துல சாப்பிடறவன் நான் இல்லை. போற இடத்துல வேலைக்குப் போகச் சொன்னாங்கன்னா போகட்டும்.’
‘இல்லப்பா இப்ப கல்யாணம் வேணாம்’
‘உன் மாமா மகனை நினைச்சிட்டிருக்கியா? இல்ல வேற யாரையாவது காதலிக்கிறியா? அப்படி ஏதாவது இருந்தால் தொலைச்சிப்புடுவேன்.’
‘என்னப்பா, என் மேல நம்பிக்கை இல்லையா?’
‘நம்பிக்கையா? பொண்ணுங்க எல்லாம் எந்த நேரத்துல என்ன செய்வீங்கன்னு யாருக்குத் தெரியும்? நெருப்பைக் கட்டிட்டு அலையற மாதிரி இருக்கு. முதல்ல கடமையை முடிச்சிடணும்.’
‘சும்மா இருக்கறவளைக் கேளுங்க. தம்பி என்ன பண்ணறான்னு தெரியுமா?’
‘என்ன? அவன் ஆம்பிள்ளை. ஆயிரம் செய்வான். நீயும் அவனும் ஒண்ணா? அவன் விரும்பினா அந்தப் பொண்ணையே கட்டி வச்சிடுவேன்.’
வரன் அமைந்தது. மாப்பிள்ளைக்குப் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டினருக்குப் பிடித்திருந்தது. அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அம்மாவுக்குப் பிடித்திருந்தது. தம்பிக்குப் பிடித்திருந்தது. ராணிக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்கத்தான் ஆளில்லை.
’பொண்ணோட பேரை மட்டும் மாத்திடலாம். எங்க வீடுகள்ள ராணிகளின் ஆட்சி இல்லை. ராஜாக்களின் ஆட்சிதான். என்ன சொல்றீங்க சம்பந்தி?’
‘இனிமே அவ உங்க பொண்ணு. நீங்க எப்படி வேணா பேரை மாத்திக்குங்க.’
அறைக்குள் இருந்த ராணி அதிர்ந்து போனாள்.
’என்னம்மா, பேரை எல்லாம் மாத்தறாங்க? எனக்கு என் பேருதான் வேணும். எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம எப்படி மாத்தலாம்?’
‘சத்தம் போடாதே. ராணின்னு உன்னைக் கேட்டா வச்சோம்? அதுமாதிரிதான். நிறையப் பேர் பேரை மாத்திதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பேர் இருந்தா மட்டும் கூப்பிடவா செய்யறார் உங்கப்பா? அதுக்கெல்லாம் நான் வருத்தப்பட்டிருக்கேனா? பொண்ணா பொறந்தாலே எல்லாத்தையும் அனுசரிச்சுதான் போகணும்’
‘அம்மா!’
திருமணத்துக்கு முதல் நாள். ராணியின் அருகில் வந்த அப்பா…
‘இங்க பாரும்மா, புகுந்த வீட்டுல நாலு பேர் நாலுவிதமா நடந்துப்பாங்க. ஆனா நாமதான் அனுசரிச்சுப் போகணும். இங்க மாதிரி எதுக்கும் எதிர்த்துக் கேள்வி எல்லாம் கேக்கக்கூடாது. நீ நல்ல மருமகன்னு பேர் எடுக்குறதுலதான் எங்க மானமே அடங்கியிருக்கு. தலை குனிய வச்சிடாதே’ என்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு
‘என்னம்மா, சந்தோஷமா இருக்கியா? நல்லா வச்சிக்கிறாங்களா?’
‘அவர் அடிக்கடி கோபப்படுறார். எனக்கு இவங்க பழக்கமெல்லாம் புதுசுதானேம்மா. கத்துக்கிட்டுத்தானே செய்ய முடியும். மாமியார் எதை செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க’
‘அழாதே ராணி. அவங்களுக்குத் தெரிஞ்சா பிரச்னை. மாமனார், மாமியாருக்கு வயசாயிருச்சு. மாப்பிள்ளை கோபப்பட்டாலும் உன் மேல பிரியமாத்தானே இருக்கார். உங்கப்பாவுக்கு வராத கோபமா? நான் அனுசரிச்சுப் போனதாலதானே உங்களை எல்லாம் நல்ல நிலைக்குக் கொண்டுவர முடிஞ்சது. இதையெல்லாம் பெரிசுப்படுத்தாத.’
‘நான் வீட்ல இருக்கற 6 பேரை அனுசரிச்சுப் போறது ஈஸியா, அவங்க ஒருத்தி என்னை அனுசரிச்சுப் போறது ஈஸியா?’
‘இப்படியெல்லாம் திமிரா பேசாத. நீ இப்படிப் பேசறதை உங்கப்பா கேள்விப்பட்டார்னா பிரச்னை ஆயிரும். கோவிச்சிட்டு நம்ம வீட்டுக்கு வந்தாலும் உங்கப்பா ஏத்துக்க மாட்டார். இனிமே இதுதான் உன் வீடு. புத்திசாலித்தனமா பொழைச்சிக்க வேண்டியது உன் சாமர்த்தியம். நான் வரேம்மா.’
சில ஆண்டுகளுக்குப் பிறகு ….
’ஷாலு, வினீத்தை அடிச்சியா?’
‘இல்லம்மா, அவன்தான் முதல்ல அடிச்சான்.’
‘அது என்ன ஆம்பிள்ளைப் புள்ளை மேல கை நீட்டுறது? இனிமே கை நீட்டின ஒடிச்சிப்புடுவேன். பொம்பளைப் புள்ளை மாதிரியா இருக்க. அடங்க மாட்டேங்கிற. எப்பப் பார்த்தாலும் ஆட்டமும் ஓட்டமுமா இருக்க. உங்கப்பா வரட்டும், நாலு சாத்து சாத்தச் சொல்றேன்’
ராணி கத்துவதைப் பொருட்படுத்தாமல் டிவியில் மூழ்கியிருந்தாள் ஷாலினி.