o முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?
o நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவயது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்தது ஏன்?
o வினிகர் பயன்படுத்தலாமா?
முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?
என்னுடைய நண்பர் ஒரு மாற்றுமத பெண்ணை திருமணம் செய்துள்ளார். அப்பெண் இஸ்லாத்தில் இணைத்து விட்டார். இப்போது அந்த பெண்ணுடய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ அல்லது மற்ற அடிப்படையிலோ அந்த பெண்ணுக்கு ஆகுமானதா? விளக்கவும்.
முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிமும் வாரிசாக ஆக முடியாது. தானாக விரும்பிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாமே தவிர சட்டப்படி உரிமை கோர முடியாது என்றூ நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றியின் போது, அல்லாஹ்வின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட் டார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறை நம்பிக்கையாளர், இறை மறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறை மறுப்பாளரும் இறை நம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார் என்று சொன்னார்கள். ஸுஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம், அபூ தாலிபுக்கு யார் வாரிசானார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவருக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள் என்று பதிலளித்தார்கள்.
ஸுஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடமிருந்து மஅமர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவித்துள்ளதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹஜ்ஜின் போது நாளை நாம் எங்கு தங்குவோம்? என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது. அறிவிப்பாளர் யூனுஸ் பின் யஸீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், ஹஜ்ஜின் போது என்றோ, மக்கா வெற்றியின் போது என்றோ (எதையும்) குறிப்பிடவில்லை. புகாரி 4282)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இறை மறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறை மறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாக மாட்டார். இதை உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 6764)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவயது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்தது ஏன்?
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 5133)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களின் படியே நடந்து கொண்டனர். அன்றைய மக்கள் மதுபானம் அருந்தக் கூடியவர்களாக இருந்தனர். அது குறித்து இறைவனின் தடை உத்தரவு வருவது வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் தங்களின் பழைய வழக்கத்தையே தொடர்ந்தனர். இறைவன் தடை செய்யாததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதைத் தடை செய்யவில்லை.
அது போல் தான் சிறுவயதுப் பெண்ணை திருமணம் செய்வது அன்றைய அரபுகள் மத்தியில் சாதாரணமாக நடந்து வந்தது. சிறுமிகளைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை விதிக்கப்படுவதற்கு முன் அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சிறு வயதுடைய ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
பின்னர் திருமணத்திற்கான ஒழுங்குகள் இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்டன. விபரமில்லாத சிறுமிகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் முற்றாகத் தடை செய்தது. இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.
திருமண வயது என்று ஒரு குறிப்பிட்ட வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
திருமண வாழ்வில் பெண்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் பல உள்ளன. கணவனுக்குக் கட்டுப்படுவதும், வீட்டைக் கவனிப்பதும், குழந்தைகளைப் பேணுவதும் மனைவியின் கடமையாகும். விவரமற்ற சிறுமிகளால் இந்தக் கடமைகளைப் பேண இயலாது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)
தன் கணவனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. விபரமுள்ள பெண்களே இந்த உரிமையைச் சரியாக பயன்படுத்த முடியும். சிறு வயது பெண்கள் சுயமாக தனது கணவனைத் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 4:19)
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியபோது, “கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?”என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவளது மௌனமே அவளது சம்மதமாகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6971, 6964, 5137)
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 5139, 6945, 6969)
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். (அல்குர்ஆன் 4:21)
இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.
மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் ஹதீஸ்களும் உறுதி செய்கின்றன.
திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு இப்போது அனுமதி இல்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இலலாத காலத்தில் நடந்த திருமணம் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.
வினிகர் பயன்படுத்தலாமா ?
வினிகர், சிர்கா காடி எனப்படும் பொருளைப் பயன்படுத்தலாமா? அதில் பாக்டீரியாக்கள் உள்ளனவே? அது ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கபடுகிறதே!
வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் (ஒரு முறை) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், “நம்மிடம் காடி மட்டுமே உள்ளது” என்று கூறினர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த் தொட்டு)க்கொண்டு உண்ணலானார்கள். மேலும், “குழம்புகளில் அருமையானது காடியாகும்” என்று சொன்னார்கள். (முஸ்லிம் 4169)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “காடி தான் குழம்புகளில் அருமையானது” என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், “இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4170)
வினிகர் என்பது புளிப்பான ஒரு பொருள். இதில் பாக்டீரியாக்கள் இருப்பதாகக் கூறினீர்கள். நாம் உண்ணும் எத்தனையோ பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கத் தான் செய்கின்றன. தண்ணீர், அரைத்த மாவு, தயிர் போன்ற பொருட்களில் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்களால் தான் பால் தயிராகவும் மாவு புளிக்கவும் செய்கின்றது. இந்த வகை பாக்டீரியாக்களால் உடலுக்குப் பாதிப்பு இல்லை என்பதால் இதை உண்ணுவது தவறல்ல. வினிகரில் உள்ள பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படுவதாக யாரும் கூறவில்லை.
அடுத்து ஆல்கஹாலில் இருந்து தான் வினிகர் தயாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளீர்கள். ஆல்கஹாலில் இருந்து மட்டும் வினிகர் தயாரிக்கப்படுவதில்லை. வேறுவழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.
போதை தரும் பொருட்களை வினிகராக மாற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இல்லை (மாற்றக் கூடாது)” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4014)
எனவே போதை ஏற்படுத்தக்கூடிய அல்கஹாலை வினிகராக மாற்றினால் அதை உண்பது கூடாது. போதை இல்லாத பொருட்களிலிருந்து வினிகர் தயாரிக்கப்பட்டால் அதை உண்பது தவறல்ல.
source: onlinepj