சிரிப்பும் சிந்தனையும்
மவ்லவி, அ. ஸைய்யது அலீ மஸ்லஹி
“நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்” (அல்குர்ஆன் 83: 29)
“ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.” (அல்குர்ஆன் 83: 34)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் பல்வேறு விதமான சிரிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. என்றாலும் அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காணப்பட்டது புன்னகைச் சிரிப்புதான்.
ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்ஃபஜலி ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க அனுமதி கேட்ட சமயத்திலும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறு விதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.” நூல்: புகாரி 6089)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் சில சந்தர்ப்பங்களில் புன்னகையும் தாண்டி கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்திருக்கிறார்கள். அபூர்வமாகவே இப்படி நடந்திருக்கிறது.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன். ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன் என்று சொன்னார்.
அப்படியென்றால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக என்று சொன்னார்கள். அதற்கு அவர் எனக்கு சக்தியில்லை என்று சொன்னார். அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அதற்கவர், என்னிடம் ஏதுமில்லை என்று சொன்னார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அரக் கொண்டு வரப்பட்டது. (அரக் என்பது அளந்து வாங்கும் ஒரு பாத்திரமாகும்) அதில் பேரித்தம்பழம் இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? (என்று கேட்க அவர் வந்தார். அவரிடம்) இதை(ப் பெற்றுக் கொண்டு) தர்மம் செய்வீர்ராக! என்று சொன்னார்கள். அந்த மனிதர், என்னைவிட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்வது? கருங்கற்கள் நிறைந்த (மதீனாவின்) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களைவிட பரம ஏழையான குடும்பத்தார் யாருமில்லை என்று சொன்னார்.
(இதைக் கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் கடை வாய்ப்பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். (பிறகு) அவ்வாறாயின் நீங்களே (அதற்கு உறியவர்கள்) என்று சொன்னார்கள்” (நூல்: புகாரி 6087)
உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு புன்னகையையும் தாண்டி கடைவாய்ப்பற்கள் தெரியுமளவுக்கு சிரிக்கலாம் என்பதை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடந்த இந்த சம்பவங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நமக்கு முன்மாதிரியான்றோ!
நபித்தோழர்களும் தங்களுக்கு மத்தியில் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை எனும் பெயரில் மற்றவர்களை மட்டம் தட்டியோ, மற்றவர்களின் மனம் புண்படும்படியோ, மற்றவர்கலைப் பார்த்து ஏளனமாகவோ அவர்கள் சிரித்ததாக எவரும் கண்டதில்லை.
சிரிப்பதன் மூலம் நாம் மகிழ்வதன் மூலம் பிறரையும் மகிழ்விக்க வேண்டும்.. பிறர் சிரிக்கும்படி நாம் வாழக்கூடாது. பிறரைக்கண்டு ஏளனமாகவும், கேலி கிண்டலாகவும் நாம் சிரிப்போம் எனில் நாமும் சிரிக்க வைக்கப்படுவோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
“நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்” (அல்குர்ஆன் 83: 29)
“ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.” (அல்குர்ஆன் 83: 34)
உலகில் நாம் வாழ்வது மட்டும் முக்கியமல்ல, அழியும் உலகில் வாழ்ந்து மடிந்து, அழியாத உலகில் குடியேறும்போதும் அங்கேயும் மகிழ்ச்சியாக சிரித்து வாழ வேண்டும். என்றால் உலகில் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் எப்படி வாழ வேண்டுமென்று நமக்கு கூறினார்களோ அவ்விதம் நாமும் வாழ்ந்தோமென்றால் உலகிலும் சிரிக்கலாம். மறு உலகிலும் சிரிக்கலாம்.
“அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (அல்குர்ஆன் 80:38, 39)
என்றென்றும் சிரிக்கும் பூக்கும் மலர்களாக நம் முகங்கள் மலரட்டும்.
நன்றி: ஜமாஅத்துல் உலமா மாத இதழ், அக்டோபர் 2010