‘‘இதனை இதனால் இவன் கண்விடல்’’!
குறிப்பிட்ட வேலை இவரிடம் தந்தால் மிகச்சரியாக செவ்வனே முடிப்பார் என்று தெரிந்தால், அவ்வேலைப் பொறுப்பை அவரிடம் முழுக்கத் தந்து விடணும். குறிக்கிடக்கூடாது. தொழில், செயல், திறமை ஒரு துறை சார்ந்து எவருக்கு இருக்கிறதோ அவருக்கே அத்துறை, பணி ஒதுக்கப்படவேண்டும்.
தச்சர் இருக்கிறார். தொழிலைக் கற்றுக் கொள்ள பல வருடங்கள் பாடுபடுகிறார். தனது குரு முன்னே செல்ல பணிக் கருவிகளைக் கக்கத்தில், தலையில் சுமந்து பின் செல்கிறார். பணியிடத்தில் உளியால் மண்டையில் அடி வாங்குகிறார். அதற்குப் பிறகு குருவை வார்ப்பெடுத்தாற்போன்று தச்சராக உருமாறுகிறார்.
உடைகள் தைக்கும் தொழிலாளி தையல் கற்றுக் கொள்ள இளமையைத் தருகிறார். சிறிய தொகை ஊதியத்துக்கு பல வருடங்கள் கீழே அமர்ந்து வேலை செய்கிறார். குருவிடம் கத்திரிக்கோல் அடி. தைப்பவரிடம் ஆயில்கேன் அடி வாங்கி வேலையைக் கற்றுக் கொள்கிறார். முழுமையடைகிறார்.
தச்சர், தையல் தொழிலாளி இருவருமே இஞ்ச் டேப், ஸ்கேல், கத்தி, கத்தரி, ஆயில்கேன் பயன்படுத்துவோர்தான். ஆனாலும் இருவரது துறைகளும் வேறு. ஒருவரது பணியில் அசுத்தம் உற்பத்திப் பொருளைக் கெடுக்காது. மற்றவரின் பணியில் அசுத்தம் கடுமையான நட்டத்தை ஏற்படுத்தும். அவரும் இஞ்ச் டேப், ஸகேல் பயன்படுத்துகிறார். நானும் பயன்படுத்துகிறேன் என்று தச்சர் சட்டை தைக்க முடியாது. தையல் தொழிலாளி ஜன்னல், கதவு செய்ய வியலாது. இருவர் பயன்படுத்தும் பொருட்களும் நாசமாகி நட்டத்தை தரும். இதுதான் ஒவ்வொரு துறை சார்ந்த, பணி சார்ந்த அக உண்மை.
முஸ்லிம் சமூகத்திற்குள் இயங்கும் சிலரின் போக்குகள் இந்த உவமான அளவு கோல் படி பொருத்தமற்றவையாக அமைந்திருக்கின்றன. நிறுவனர், அரசியல் தலைவர், மக்கள் பணியாளர், மதப்பிரச்சாரகர், மதச் சடங்கு தலைமை, கல்வியாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி, பொதுநலவாதி, எல்லா பணிகள், பதவி, பொறுப்புகளும் தனக்கே! நானே இருப்பேன். எனக்கே முதன்மை தரணும். நான்… நான்… நான் மிகைத்திருக்கிறது. சாத்தியமேயில்லை.
‘‘நான்’’ என்ற சொல் அகந்தையை குறிக்கும் சொல். இந்த முறையிலான வலிமை தேடுதல் இயற்கையல்லாதது. வாழ்க்கையை செல்லாக்காசாக்கும். ஒப்புடையது போன்று காட்சி தரும். ஆனால், தழைத்தலிருக்காது. வேர்கள் மடியும். மக்கள் மனத்தை விட்டு அகலப் பண்ணும் என்பதை திருவள்ளுவர் அறிந்திருந்ததால், ‘‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்’’ என்று கூறியிருக்கிறார்.
-சோதுகுடியான், முஸ்லிம் முரசு டிசம்பர் 2011
source: http://jahangeer.in/