இஸ்லாமிய கண்ணோட்டத்தில் மரபணு பரிசோதனை
மவ்லவி, பி. முஹம்மது சுல்தான் தேவ்பந்தி, (ரஹ்)
[ “இன்னும் அவன்தான் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், கலப்பட மரபினனாகவும் ஆக்கினான். மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.” (அல்குர்ஆன் 25 : 54)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: “உலகத்திலுள்ள எல்லா வகை மண்ணிலிருந்தும் ஒரு பிடி மண்ணை சேர்த்து அதிலிருந்து இறைவன் மனிதனைப் படைத்தான். எனவே தான், வெள்ளை, கருப்பு, சிவப்பு, தீயவன், நல்லவன் என மனித மரபுகள் வேறுபட்டிருக்கின்றன” (நூல்: அபூதாவூது)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிகிறார்கள் “பெற்றோரின் வளர்புத்தான் பிள்ளை” (நூல்: தைலம்)
“பெண்ணுடன் ஒருவன் விபச்சார உறவு கொண்டுவிட்டால் அப்பெண்ணின் தாயை அவன் மணமுடிக்க முடிக்கக் கூடாது” என ஃபிக்ஹு சட்ட வல்லுனர்கள் சட்டமியற்றி இருப்பதற்குக் காரணம் அவ்விருவரில் மரபணு பதிந்து விட்டது என்பதால் தான். அரபு மொழியில் இதற்கு “முஸாஹரா விலக்கல்” என்பர்.]
மரபணு உதயம் :
“மரபணு பொறியியல் மூலம் அரிசி உற்பத்தியில் புரட்சித் தமிழக முஸ்லிம் விஞ்ஞானி சித்தீக் சாதனை” என்ற செய்தியினை சில ஆண்டுகளுக்கு முன் படித்திருப்போம். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் மரபணு ஆய்வைப் பயன்படுத்தி வீரிய மற்றும் கூடுதல் மகசூல்களையும், புதிய ரகங்களையும் உண்டாக்க முடியும் என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் நிரூபிக்கின்றனர்.
மனிதரில் எத்தனை வகை? நிறத்தாலும், அங்க அடையாளங்களாலும் பிரிவுகள் தான் எத்தனை கோடி! ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியாகவே உதயமாகின்றான்! ஒரு ஆணும் பெண்ணும் கூடி அதில் பிறக்கும் குழந்தை அவ்விருவரின் முன்னோர் மரபில் ஏதோ ஒரு அடையாளத்தை தொற்றியே தோன்றுகிறது. “தாயைப் போல், தந்தையைப் போல், தாயை உரித்து, தந்தையை உரித்து” என்றெல்லாம் குழந்தையைக்கூறுவர். இவையனத்தும் மரபு வழி ஒப்பைத்தான் நிரூபிக்கின்றன.
கருப்பு மேனியுடையவனும், சிவப்பு மேனியுடையவளும் அல்லது கருப்பு மேனியுடையவளும் சிவந்த மேனியுடையவனும் உறவு கொண்டு பிறக்கும் குழந்தை ஒரு புதிய ரகமாக இருக்கிறது. இது போன்றே மாறுபட்ட ஜாடைகள், அங்க வேறுபாடுகள் கொண்ட தம்பதிகளுக்கு புதிய ரகக் குழந்தைகள் பிறக்கின்றன. இது மனித இனத்தில் மட்டுமல்ல; கால்நடை, காய்கறி, மரம் செடி, கொடி என அனைத்திலும் புதிய ரகங்களை தோற்றுவிக்க முடியும் என்பதே இவ்வாராய்ச்சியின் நிலை.
“ஒரு குழந்தை அதற்குக் காரணமானவன் இவன் தானா?” என்ற சர்ச்சை எழும்போது அதை நிரூபிப்பதற்கு மரபியல் – அணு பரிசோதனை (T.N.A கிப்கோர்ட்) இன்று பிரபலமானதொரு சோதனை முறை. பெற்றோரின் இரத்தம் மற்றும் உயிரணுக்களைக் கொண்டு பரிசோதிப்பதின் மூலம் ஒரு மனிதனின் மரபு வழி “நோய், குணம், உடற்கூறுகளைக் கண்டறிய முடியும் என்பது உண்மையாகிவிட்டது.
திருக்குர்ஆனில் மரபணு :
முக்கால கல்வி ஞானத்தையும் உள்ளடக்கி வைத்திருக்கும் இறைவனின் கருவூலமான திருக்குர்ஆன் இது பற்றி என்ன கூறுகிறது? அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றி ஆய்வு செய்த நிகழ்ச்சிகள் ஏதும் வரலாற்றில் உண்டா? என்பது போன்ற வினாக்கங்களுக்கு திருக்குர்ஆனும் அண்ணலாரின் அழகிய வாழ்விலும் பல முன்னுதாரணங்களைக் கற்றோர்கள் கண்டுள்ளனர்.
அல்லாஹ் கூறுகிறான் :
“இன்னும் அவன்தான் மனிதனை இந்திரியத்திலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், கலப்பட மரபினனாகவும் ஆக்கினான். மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.” (அல்குர்ஆன் 25 : 54)
கழுதை, குதிரை இவற்றின் புணர்வில் கோவேறு கழுதை உருவாகிறது. திருக்குர்ஆனில் இவ்வினத்தை உறுதிப்படுத்தி “பிகால்” எனும் சொல்லை இறைவன் பயன்படுத்தியுள்ளான். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோவேறு கழுதையில் பயணம் செய்துள்ளார்கள் ஆனால் குதிரை கழுதை இரு இனங்களும் அழிந்து விடுமோ எனும் அச்சத்தில் அவ்விரண்டையும் புணர வைப்பதை தடுத்துள்ளார்கள். (நூல்: இப்னு கதீர்)
“வருடக்கணக்கில் காய்ந்து கணீரென்று ஆகிப்போன பல மரபுகள் கொண்ட பலவகை மண்ணின் கலவையிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான். பிறகு அவன் இந்திரியத் தண்ணீரிலிருந்து இனப் பெருக்கலானான். இந்திரியமும் பல மரபுகள் கொண்ட பல்சுவை உணவுகளின் சக்திதான்” என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: “உலகத்திலுள்ள எல்லா வகை மண்ணிலிருந்தும் ஒரு பிடி மண்ணை சேர்த்து அதிலிருந்து இறைவன் மனிதனைப் படைத்தான். எனவே தான், வெள்ளை, கருப்பு, சிவப்பு, தீயவன், நல்லவன் என மனித மரபுகள் வேறுபட்டிருக்கின்றன” (நூல்: அபூதாவூது)
ஹளரத் இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆய்வு இவ்வாறு கூறுகிறது: “இந்திரியத்துளி கருவறையினுள் விழுந்தவுடன் அணுக்களாகி ரோமம் முதல், நகம் வரை எல்லா உறுப்புகளுக்குள்ளும் 40 நாட்களுக்குள் சர்குலராகிய பின் மீண்டும் கருவறைக்குள் இரத்தக் கட்டியாக கூடுகிறது” (நூல்: இப்னு கதீர் 209/3)
”மனிதன் எவ்வாறு படைக்கப்படுகிறான்?” என்ற யூதரின் வினாவிற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதரே! ஆண் பெண் இருவரின் இந்திரிய அணுக்களிலிருந்தும் மனிதன் படைக்கப்படுகிறான். குறிப்பாக, ஆணின் விந்திலிருந்து எலும்பு, நரம்பு போன்றவைகளையும், பெண்ணின் விந்திலிருந்து சதை இரத்தம் போன்றவற்றையும் படைக்கப்படுகிறது. (நூல்: இப்னு கதீர் 209/3)
தேவையான அணுக்கள் தேவையான அளவிற்கு ஆண் பெண் மரபு வழிகளில் குறைந்தோ, கூட்டியோ இருப்பின் “குன்ஸா, முஷ்கில்” எனும் ஒரு மரபு கூடியும் குறைந்தும் “அலிகள்” பிறக்கின்றனர்.
சிந்திக்க சில :
“இரு தலைகள், நான்கு கால்கள், இரு கரங்கள் கொண்டு ஒட்டிப்ப்பிறந்த அதிசயக் குழந்தை இரு முகங்களில் ஒன்று கருப்பு மற்றொன்று சிவப்பு, காலகளும் கரங்களும் அவ்வாறே நிறம் மாரி காணப்பட்டன. இச்செய்தி வியப்பாக இல்லையா? மரபியல் அணு பரிசோதனை செய்து ஆராய்ந்தபோது, “ஒரே இரவில் சிறிது நேரத்தில் அப்பெண் வெள்ளையனுடனும், கருப்பனுடனும் உடலுறவு கொண்டிருந்ததை அம்பலப்படுத்திவிட்டது.
ஒரு சிவப்பு உடல் தம்பதியருக்கு கன்னங்கரேலென்ற குழந்தை பிறந்தது. பார்வையிட்டவர்கள் ஒரு மாதிரி பார்க்கவே தம்பதிகளிடையே சந்தேகம் தோன்றிவிட்டது. பெரும் சர்ச்சைக்குள்ளான தம்பதியினரிடம் “வெற்றிலை பச்சை நிறம், சுண்ணாம்பு வெள்ளை நிறம், பாக்கு மண் நிறம், இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேர்ந்த பொழுது சிவப்பதில்லையா? என எத்தனை ஆறுதல் கூரினாலும் நம்புவார்களா? ஆனால், மரபியல் பரிசோதனை மூலம் இதற்கு விடை கிடைத்து விடும்.
“பெண்ணுடன் ஒருவன் விபச்சார உறவு கொண்டுவிட்டால் அப்பெண்ணின் தாயை அவன் மணமுடிக்க முடிக்கக் கூடாது” என ஃபிக்ஹு சட்ட வல்லுனர்கள் சட்டமியற்றி இருப்பதற்குக் காரணம் அவ்விருவரில் மரபணு பதிந்து விட்டது என்பதால் தான். அரபு மொழியில் இதற்கு “முஸாஹரா விலக்கல்” என்பர்.
அரபுகளில் மரபியல் பரிசோதனை :
அரபுகளில் “முஜ்லஜ் கிளையார்கள்” என ஓர் சமூகம். இவர்களில் “முஜஜ்ஜிருல் முத்லஜி” என்பவர் மரபியல் ஆய்வில் அனுபவம் பெற்றவர். ஒரு குழந்தை – நபரை அவரது அங்க அடையாளங்களை கூர்ந்து கவனித்தாரானால் இந் நபர் இன்னார் வழி சத்தில் உள்ளவர் என கூறிவிடுவார். அரபுகள் இவரது ஆய்வுத்திறனை நம்புவார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட இவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கொரு சான்று கூறுவதானால் புகாரி ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
“உஸாமா” என்பவரும் அவரது தந்தை “ஜைது”வும் அரபுகளின் கண்களுக்கு வித்தியாசமாகப்பட்டனர். காரணம்: உஸாமா கருத்த நிறமுடையவர். ஜைது வெள்ளையாயிருந்தார். உஸாமாவின் தாய் “பரக்கத்” என்னும் “உம்மு ஐமன்”. இவரும் கருத்த நிறமுடையவர். இத் தம்பதிக்குத்தான் உஸாமா பிறந்திருப்பாரா? என சந்தேகித்தனர். உஸாமாவைப் பொறுத்தவரை மிக நல்லவர். பெற்றோரும் அவ்வாறே. அண்ணலாரின் அன்புக்குறியவர்கள். அரபுகளின் இந்த சந்தேகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கூட மன வருத்தம் தந்தது.
ஒரு நாள் தந்தையும் தனையனும் மஸ்ஜிதில் சேர்ந்து படுத்திருந்தனர். தலைகளை போர்த்தியிருந்தார்கள். கால்கள் மட்டும் வெளியில் தெரிந்தன. அவ்வழியாக வந்த முஜஜ்ஜிருல் முத்லஜி இக்கால்களைத்தாண்டிப் போகும் நிலை ஏற்பட்டபோது “இக் கால்கள் ஒரே வமிச மரபுடையதாக உள்ளன” என கூறிக்கொண்டே சென்றார். அங்கு அமர்ந்திருந்த அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட பலரும் இச்சொல்லைக் கேட்டு ஆசரியமடைந்தனர். அந்த அவதூறுக் கண் நீங்கியது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக தனது துனைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இச்சம்பவத்தைத் தெரிவித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரபியல் தீர்ப்புகள் :
ஒரு நாள் உவைமிருல் அஜலானி எனும் நபித்தோழர் ஒருவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, தன் மனைவி பற்றிய குற்றச்சாட்டொன்றை கொண்டு வந்தார். “என் மனைவி இன்னாருடன் விபச்சாரம் செய்து கர்ப்பமாகி விட்டாள்” என்பதே! அக்குற்றச்சாட்டு. உண்மையா? எனக்கேட்டபோது உண்மைக்குச் சாட்சியாக அவளை நான் முத்தலாக் விடுகிறேன் எனக் கூறி விவாக ரத்தும் செய்துவிட்டார்.
அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “தோழர்களே! கவனியுங்கள்! அவரது மனைவி சதைப்பிடிப்புள்ள கெண்டைக் கால்கள் கொழுத்த பித்தட்டுகள், மான் விழிக் கண்கள் ஆகிய அம்சங்கள் கொண்ட குழந்தையாக பெற்றெடுத்தால் உவைமிர் கூறுவது உண்மை. (காரணம்; அக்குழந்தைக்குக் காரணமானவர் என யாரைக் கூறினாரோ அவரது அங்க அடையாளங்கள் அவை). ஆனால், சிவப்புப் புழு போல சிவப்பாக பெற்றால் உவைமிரின் குற்றச்சாடு பொய் (காரணம் உவைமிரின் அடையாளமே அது)” என்று ஆய்வு செய்ய கட்டளையிட்டார்கள். முடிவில் உவைமிர் சொன்னதே நிரூபணமானது. அக்குழந்தை அப்பெண்ணின் வமிசா வழியாகிவிட்டது. (நூல்: மிஷ்காத் 285/2)
மற்றொரு சம்பவம் :
ஷுரைக் என்பவருடன் விபச்சாரம் செய்து விட்டதாக ஹிலாலியின் உமைய்யா என்பவர் தன் மனைவி மீது குற்றம் சுமத்தினார். பிரச்சணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தது. அப்பெண் வரவழைக்கப்பட்டாள். குற்றச்சாட்டை அவளிடம் கூறப்பட்டது. அப்பெண் மறுக்கவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை சத்தியம் செய்ய கட்டளையிட்டார்கள். நான்கு முறை சத்த்யம் செய்த அந்த பெண் ஐந்தாம் முறை தயங்கினாள் அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “கவனியுங்கள்! அப்பெண் புருவங்கள் கருத்த, பித்தட்டுகள் பெருத்த, கெண்டைக் கால்கள் கொழுத்த குழந்தையாக பெற்றால், இது ஷுரைக்கினால் உருவானதே! இறுதியில் ஹிலாலி கூறியதே உண்மையாக இருந்தது” (நூல்: மிஷ்காத் 286/2)
இன்னுமோர் சம்பவம் :
ஒரு கிராமவாசி (சிவந்த நிறமுடையவர்) “என் மனைவி கறுப்பாக குழந்தை பெற்றிருக்கிறாள். எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டபோது, “சிவப்பு நிறங்கொண்ட உனது ஒட்டகங்களுக்கு சாம்பல் நிறக் குட்டி ஏன் பிறக்கின்றன? என்று திருப்பிக் கேட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதற்கு அந்த கிராமவாசி “அது மரபுவழி கலப்பில் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியானால் இக்குழந்தையும் அவ்வாறு உன் பாட்டன், பூட்டன் மரபு கலப்பில் கறுப்பாக பிறந்திருக்கலாம் அல்லவா?” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: மிஷ்காத் 286/2)
மனிதன் மிருகத்துடன் புணர்ந்து விட்டால் அம்மனிதனைக் கண்டிப்பதுடன் அம்மிருகத்தைக் கொன்று விடும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். வேறுபட்ட மரபுடைய மனிதனும் மிருகமும் புணர்வதால் மனிதர்கள் வெறுக்கத்தக்க படைப்பொன்றை அம்மிருகம் ஈன்றிடுமோ என்ற அச்சத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். (நூல்: மிஷ்காத் 286/2)
கலீஃபாக்களின் மரபியல் தீர்ப்புகள் :
கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு வழக்கு வந்தது. இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டதன் விளைவாக அப்பெண் கருவுற்று ஒரு குழந்தை ஈன்றெடுத்தாள். இக்குழந்தை யாருக்கு சொந்தம்? என்பது தான் வழக்கு. உடனே மரபியல் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் ஆய்வின்படி அக்குழந்தை அவ்விருவரின் மரபணுவிலும் பிறந்துள்ளது என முடிவு சொன்னார்கள். கலீஃப்பா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியானால், அக்குழந்தைக்கு இருவரின் மரபு வழி சொந்தமும் உண்டு. அவ்விருவர் சொத்திலும் அக்குழந்தைக்குப் பங்குண்டு. அக்குழந்தை சொத்தில் அவ்விருவருக்கும் பங்குண்டு என தீர்ப்பளித்தார்கள். (நூல்: மிர்காத் 502/3)
கலீஃபா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏமன் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு வழக்கு வந்தது. மூன்று ஆண்கள் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டதால் அப்பெண் கருவுற்று ஒரு குழந்தை பெற்றிருந்தாள். குழந்தை யாருக்கு உரியது? என பிரச்சனை வந்தபோது அம்மூவரின் மரபுவழி அடையாளங்களும் அக்குழந்தையில் இருப்பது கண்டு, சீட்டு குலுக்கிப்போட்டு அம்மூவரில் ஒருவருக்கு என தீர்ப்பளித்தார்கள். (நூள்: மிர்காத் 502/3)