ருசியா? பசியா?
டாக்டர் ஆ. தாமரைச்செல்வன்
கடற்பாறையை முழுங்கிக்கொண்டு
கசாயத்தை சாப்பிட முயற்சிக்கிறோம்.
இது தேவைதானா?
உண்ணும் உணவு ருசியாக இருந்தால் மட்டுமே பெரும்பாலானோர் உண்கின்றனர். ருசித்து சாப்பிப்பிடுவதை விட பசித்து சாப்பிடுவதுதான் சிறந்த ஆரோக்கியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சரியான பசி இருந்தால் எந்த உணவும் ருசியாகவே இருக்கும் என்று மருத்துவம் கூறுகிறது.
பாகற்காய் கசக்கிறது எப்போது? அதன் மகத்துவம் தெரியாதபோது! ஆனால் ருசிக்கிறது எப்போது? அதன் மருத்துவ குணமும், பயனும் தெரியும் போது. கருவேப்பிலையை அனைவரும் உணவில் சேர்க்கிறோம். ஆனால், சாப்பிடும்போது அது ஒதுக்கப்படுகிறது. அதையே முடி வளர்ச்சிக்கு நல்லது, அதில் இரும்புசத்து உள்ளது என்று தெரிந்தபின் அதனை விரும்பி அதிகம் சேர்க்கிறோம்.
மனிதன் எதை வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் நோயை மட்டும் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது.
வாழ்க்கை என்பது இன்பம்- துன்பம், இரவு – பகல், உழைப்பு -ஓய்வு, இளமை-முதுமை, நோய்- ஆரோக்கியம் என்று பல்வேறு நிலைகளை கொண்டது. இவையெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மாறி மாறி சந்திக்க கூடியது. எதுவும் நிலையானது அல்ல. இவைகளில் எதை நாம் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட்டால் தரை, திரை, மூப்பு இவைகளை எளிதாக தள்ளிப் போடலாம். வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியோடு தினமும் ஒரு பண்டிகை தினமாக கொண்டாடலாம்.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” (குறள்)
நோய் வந்த பின் சிகிச்சைக்காக போவதை விட வராமல் வழிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மழை வருவதை தடுக்க நம்மால் முடியாது. ஆனால் குடை ஒன்று வைத்துக் கொள்வதில் குற்றமில்லை. தினமும் திருடன் வருவதில்லை என்பதற்காக நாம் கதவை திறந்தா வைக்கிறோம்? பூட்டித்தானே வைக்கிறோம்.
அதுபோல நோய் நம்மை தாக்காமலிருக்க சில யுக்திகளை பயன்படுத்தியே ஆக வேண்டும்.
மனிதன் உடலில் கழிவுகள் வெளியேற 9 விதமான துவாரங்கள் உண்டு. இதில் வாய் என்ற துவராம் மட்டுமே தேவையற்ற கழிவுகளை (பாஸ்ட் புட், பானிபூரி, பேல்பூரி, மசாலா உணவு வகைகள், பீடி சிகரெட், பான்பராக் போன்ற லாகிரி வஸ்துகள், ஊர்வன, நடப்பன, ஓடுவன, பறப்பன மாமிச வகைகள்) உடலின் உள்ளே கொண்டு சென்று பெரும்பாலான மருத்துவர்களை செல்வந்தர்களாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இது கண்கூடான உண்மை. யாரும் மறுக்க முடியாது. முகம் தெரியாத நபர்களுக்காக உணவு விடுதிகளில் வியாபாரத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படும் உணவு எவ்வளவு சுகாதாரத்தோடு இருக்க முடியும்? சமையல் செய்யும் இடத்திற்கே சென்று பார்த்தால் யாராவது சாப்பிட வருவார்களா?
ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே, கூடிய வரையில் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இயற்கை நிறைந்த இந்தியாவில் வீட்டை விட்டு வெளியே வந்து தாகம் என்று தண்ணீர் குடிக்க முடிகிறதா? ஒரு பாட்டில் தண்ணீர் 15 ரூபாய் என்று என்றாவது நினைத்திருப்போமா? பாலை விட அதிகவிலை என்ற அவல நிலைதான் உள்ளது. அதனால் தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். எங்கு சென்றாலும் காய்ச்சின நீரை எடுத்து செல்ல வேண்டும். வருங்காலத்தில், கடற்கரையில் காற்று வாங்கினால் ஒரு நபருக்கு 25 ரூபாய் கட்டணம் என்றாலும் மறுக்காமல் கொடுப்பவர்களாக இருப்போம். வீட்டில் உள்ள ஒவ்வொரு காற்றாடிக்கும் ரூயாய் 5 வரி என்றாலும் கட்ட தயாராக இருப்போம். சுற்றுப்புறச் சூழ்நிலை அப்படி மாசுப் பட்டாலும் நமக்கு கவலையில்லை என்ற கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு மரமாவது நட்டிருப்போமா? மாறாக எவ்வளவு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியிருப்போம். எவ்வளவு சோப்புகளை இராசாயன பொருட்களை போட்டு நிலத்தை பாழ்படுத்தியிருப்போம். உதாரணமாக: நாம் எழுதும் ரீபிள் பேனாக்கள் மட்டும் மாதம் 2 தன்னிலிருந்து 3 டன் வரைக்கும் பூமியில் புதைத்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கமே ‘குடி குடியை கெடுக்கும்’ என சொல்லுகிறது. அதை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் குடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோலவே புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என போடப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் படித்துக் கொண்டே குடித்தும் கொண்டே இருக்கின்றனர். எப்போது மக்கள் திருந்துவது! திருந்துவார்களா? உடலையும் கெடுத்துக் கொண்டு ஊர் நிலத்தையும் நாம் இவ்வாறு பாழ்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
கடற்பாறையை முழுங்கிக்கொண்டு
கசாயத்தை சாப்பிட முயற்சிக்கிறோம்.
இது தேவைதானா?
பெட்ரோல் வண்டியில் டீசலையும், டீசல் வண்டியில் பெட்ரோலையும் விட்டால் என்ஜின் கோளாறு வருமா? வராதா? சற்று சிந்திக்க வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு, வியாதிக்கேற்ற உணவு, வயதுக்கேற்ற உணவு இவைகளை தெரிந்து உண்ண வேண்டும். பெரும்பாலான வியாதிகள் உணவின் அடிப்படையில்தான் வருகிறது.
அதிகமான உணவு, உழைப்பில்லாமல் உணவு அருந்துவது, நேரம் தவறி உணவு அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மூலம், சீதபேதி, அஜீரணம், குடல்புண், அமீபீயாசிஸ், நெஞ்செரிச்சல், புளியேப்பம் உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் நாளமில்லா சுரப்பிகள் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருகிறது. அதனால்தான் குடல் மற்றும் ஜீரணக்கோளாறு சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அதிகம் காணப்படுகின்றனர் ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு உணவியல் நிபுணர் (டயட்டீசன்) இல்லாத மருத்துவமனையே தற்போது இல்லையென்ற அளவுக்கு அவலநிலை உள்ளது.
உணவு வகைகளை மூன்று விதமாக பிரிக்கலாம்.
1. சக்தி அளிப்பவை(Energy)
2. உடல் வளர்ச்சி
3. வியாதி வராமல் தடுக்க எதிர்க்க (Preventive & Protective)
சக்தி அளிப்பவை:
மாவுச்சத்து மற்றும் கொழுப்பு
உடல் வளர்ச்சி:
புரதச்சத்து
வியாதி வராமல் தடுக்க & எதிர்க்க:
வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் (Vitamins & Minerals)
மூன்றும் கலந்த கலப்பு உணவு அவரவர் வயது, நோய் மற்றும் உழைப்புக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும்.
“தினம் ஒரு முறைசாப்பிடுபவன் யோகி.
தினம் இரண்டு முறைசாப்பிடுபவன் போகி.
தினம் மூன்று முறைசாப்பிடுபவன் ரோகி.
தினம் நான்கு முறைசாப்பிடுவன் துரோகி”. என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற முன்னோர் வாக்கை மறக்கலாமா?
“மருந்து என வேண்டாவம் யாகைக்கு அருந்திது
அற்றது போற்றி உணின்”. என்கிறார்.
மனிதனுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார். உழைப்புக்கேற்ற உணவு, அதுவும் உண்ட உணவு ஜீரணித்த பின்தான் சாப்பிட வேண்டும் என்கிறார். மருத்துவ செலவே இல்லாமல் இருக்க உணவை எப்படி சாப்பிட வேண்டும் என அழகாக சித்தரிக்கிறார். இரண்டே வரிகளில். ஆனால் மனிதனோ தான் கஷ்டப்பட்ட உழைத்து சம்பாதித்த பணத்தில் 4ல் 3 பங்கை மருந்திற்கும், மருத்துவத்திற்குமே அளித்து வருகிறான். அதனால்தான் மருத்துவ மனைகள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எப்போது மனிதன் விழிப்புணர்வோடு உண்கிறானோ, எப்போது ‘உணவே மருந்து’ ‘மருந்தே உணவு’ என்பதை உணர்கிறானோ அப்போதுதான் நம் பாரத நாடு வல்லரசாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மருந்தும் விருந்தும் 3 நாள் என்று கிராமத்தில் சொல்வார்கள். ஆனால் நகரத்தில் வருடம் முழுவதும் மருந்தும் – விருந்தும் காணப்படுகிறது. அதனால் மருத்துவ உலகம் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியுள்ளது.
வாயில் ஏற்படும் வாய்ப்புண்ணிலிருந்து மலத்துவாரத்தில் ஏற்படும் மூலம் வரைக்கும் அனைத்து குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு ஹோமியோ பதியில் தடுப்பு மற்றும் சிகிச்சையும் உண்டு. பின் விளைவு இல்லாதது, அலர்ஜி இல்லாதது. ஹோமியோபதி மருத்துவம் என்பதால் அவரவர்களே சிகிச்சை செய்து கொள்வது ஆபத்தானது.
அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று வளமோடு வாழ்க! வாழ்த்துகிறோம்.