ரகசியமும் அமானிதமே!
மனிதன் வெளிப்படயாக திறந்த புத்தகமாக இருக்கலாம். கலகலப்பாக பேசி வார்த்தைகளை அள்ளிக்கொட்டி வண்ணத்துப்பூச்சியாக நடமாடலாம்.
நான் ஒளிவு மறைவு இல்லாதவனே, உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிடக்கூடியவன். எதையும் வெளிப்படுத்தி விடுபவன் என்றெல்லாம் இதயம் திறந்து எவர் கூறினாலும் அவருள்ளும் வெளிப்படுத்தமுடியாத சில ரகசியங்களும் புதைந்து கிடக்கும்.
மனித மனம் ஓர் ரகசிய சுரங்கம். அதில் எல்லாவற்றையும் அறிந்திட முடியாது. எல்லாமும் வெளிப்படாது.
எதுவாயினும் சொல்லவேண்டியதை மட்டும் சொல்லவேண்டும். எல்லாவற்றையுமே கூறிக்கொண்டிருந்தால் நல்லதல்ல. நாகரீகமல்ல.
சில வேலைகளில் அது பெரும் விபரீதத்தில் வந்து முடியும். ஆபத்தும் அவமானமும் வந்து சேரும். உன்னுடைய ரகசியம் உன்னிடம் சிறைப்பட்ட கைதி. நீ அதை விடுதலை செய்தால் அதனிடம் சிறைபட்டு விடுவாய் என எச்சரிக்கிறார் ஹளரத் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில ரசியங்கள் உறங்கிக் கிடக்கின்றன.
மறைக்கப்ப்ட வேண்டியவை, ரகசியம் இல்லாத மனம் என்று எதுவுமே இல்லை. வெளிபடுத்தாதிருக்கும் வரைதான் அது ரகசியம்.
ஒருவரிடம் கூறிவிட்டாலும் போதும், அது பரமரகசியமாகிவிடும். அந்த ஒருவர் உயிருக்கு உயிரானவராக பெற்றோராக, அருமை மனைவியாக, பாசப்பிள்ளையாக, உடன் பிறப்பாக, உற்ற நண்பராக இருந்தாலும் அந்த ரகசியம் பரிமாரப்படும், பரவிவிடும்.
வெளிப்படாத மறைபொருளும் இல்லை.வெளிவந்து பிரசித்தமாகாதபடி ரகசியமாக காக்கப்படுவதும் எதுவுமில்லை.
சிலவற்றை மறைப்பதால் நன்மை விளையும் என்றிருக்குமானால் அதை மறைப்பது குற்றமாகாது. சிலவற்றை வெளிப்படுத்தினால் பெரும் பாதகம் விளையும் என்று அஞ்சப்படுமானால் அவற்றை அவசியம் மறைக்க வேண்டும். ஆனால் சத்திய உண்மை சரியான நீதித்தீர்ப்பை ஒருபோதும் மறைக்கக்கூடாது. உண்மைகள் ஒளிவு மறைவு இன்றி உறுதியுடன் உழைக்க பாடுபடவேண்டும். துணிச்சலுடன் வெளிப்படுத்த வேண்டும்.
நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் நமது முக்கியமான சில ரகசியங்களை கூறாமலிருப்பதே உசிதம் ஆகும்.கூற வேண்டியதை கூறலாம். ஆனால் எல்லாவற்றையும் கூறிவிடக்கூடாது. தன்னுடைய வேலைக்காரனிடம் ரகசியத்தை வெளிப்படுத்திகிறவன் வேலை காரனை முதலாலி ஆக்கி தன்னை வேலைக்காரனாக்கி கொள்கிறான் என்கிறார் போர்டு.
இது சிந்திக்க தக்க சீரிய கருத்தாகும். உயிர் நண்பர்கள் என நாம் எண்ணிக் கொண்டிருப்போரிடமும் உள்ளதையெல்லாம் சொல்லிவிடவும் கூடாது. ஏனெனில் நண்பன் எப்போதும் நண்பனாக இருப்பது இல்லை. முதல் பொறாமை முகிழ்கும் இடம் அதுதான். சிலர் விதிவிலக்காக இருக்கலாம். நட்பின் கற்புத்தன்மையே ரகசியம் என்பது, என்கிறார் ஜெரிமிடைலர். ஆனால் இன்றைக்கு எத்தனை நண்பர்கள் கற்புத்தன்மையுடன் நண்பனின் ரகசியம் காக்கின்றனர் ? என்பது தெரியவில்லை.
ரகசியம் ஒரு மர்மமாகிவிடக்கூடாது. காக்கப்படும் ரகசியத்திலும் உண்மை ஒளிர வேண்டும். நண்மை மிளிர வேண்டும். இதற்கு எண்ணமில்லாது சதிச்செயல், திருட்டு, ஏமாற்று, பயங்கர வாதம், கீழுறுப்பு போன்றவற்றின் ரகசியங்கள் தீமையானவை, பாவமானவை. இவற்றுக்கு எந்த மதிப்புமில்லை. உண்மையில் ரகசிய யோசனைகள், மறைமுக சதிச்செயல்கள் சைத்தானை சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன என எச்சரிக்கிறது இறைமறை திருக்குர்ஆன். நாம் எண்ணுபவை, செய்பவை,பேசுபவை, வெளிப்படுத்துபவை, மறைப்பவை அனைத்திற்குமே நேர்மையும்,உண்மையும், நன்மையும் இருக்க வேண்டும்.
ரகசியம் ஓர் அமானிதம். அது அனைவராலும் காக்கப்பட வேண்டும். முதலில் காப்பவர் அதற்குரியவராக இருக்க வேண்டும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் கூறுதல் சரியாகாது. முறையாகாது. எத்தகு சூழ்நிலையிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும். உங்களிடம் மட்டுமே இதைச் சொல்கிறேன். எவரிடத்திலும் இதை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டு ஒருவர் நம்மிடம் ஒரு ரகசியத்தை கூறுவாரேயானால் உயிர் போலதை காத்து உள்ளத்தில் அதை புதைத்திட வேண்டும். எத்தகைய நெருக்கமானவர்களிடமும் அதை கூறிவிடக்கூடாது.
ஒன்று எவருக்கும் தெரியக்கூடாது என நினைத்தால் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது தான் நல்லது. ஆனால் எல்லாம் தெரிந்தவன் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மட்டும் மறந்திடக்கூடாது. அவன் உள்ளத்தை பார்ப்பவன், எண்ணங்களை அறிபவன். ஆதலால் ரகசியமும் நல்லதாக நன்மையானதாக இருக்கட்டும். அல்லாஹ் ரப்புல்ஆலமீன் எல்லோருக்கும் நற்கிருபை செய்யப்போதுமானவன்.