‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’’!
‘தீது’ என்ற சொல்லுக்குரிய பொருள்; குற்றம், குறும்பு, கொடுமை, தீமை, சிதைவு, துன்பம், கேடு, இடையூறு, மரணம், பாவச் செயல் அணிவகுப்பு நீளும்.
‘நன்று’ என்பதன் தொடர்ச்சியாக நற்குணம், நல்ஆக்கம், நல்வினை, நன்மை, நல்லது, அறம், பெருமை இன்னும் தொடரும்.
முதலாளி தன் பணியாளரிடம் வரைமுறையின்றி வேலைவாங்கி உரிய ஊதியம் தராது கொடுமை செய்கின்றார். பணியாளர் முதலாளியிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்கிறார். உற்பத்தி, வியாபாரம் பாதிக்கிறது. இழப்பின் தொடர்ச்சியாக தொழில் நலிவுற்று முடங்குகிறது. முதலாளி புறச் சூழலை, பணியாளரைக் குறை கூறுகின்றார். தீது பிறரிடமிருந்து வரவில்லை. தன்னிடமிருந்து தான் தொடங்கியது. உணர மறுக்கிறார்.
தொலைக்காட்சியில் உரையாற்றுவோர் தமக்குக் கிடைத்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு சமூகத்தின் உயர்ந்த பொறுப்பிலிருக்கிறோம்.
நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எதிர்மறைச் சொற்களும் சார்ந்த சமூகத்தை பாதிக்கும் என்றுணராது தற்குறி போன்று சொற் சிலம்பாடுதலால் குற்றப்பதிவு ஏற்படுகிறது.
இருபுற உறவுகள் சிதைவுக்குள்ளாகின்றன.
வெளிப்படுத்திய சொற்களால் காயம் அடைந்தவர்கள் மௌனமாக வேறு வழிகளில் தங்களது எதிர்வினையைக் காட்டும் போது, கொடுமை செய்கின்றனர். துன்பமிழைக்கின்றனர்.
இடையூறு புரிகின்றனர். கூக்குரல்கள் எழுப்பப்படுகின்றன. செவிமடுக்க ஒருவரும் விரும்புவதில்லை.
சிலர் செய்த தவறுக்குரிய தண்டனை ‘பூமாரங்’காக திரும்பி ஒட்டு மொத்த சமூகத்தின் மேல் விழுகிறது. தீமைக்கான மூலவேர் புரியப்படணும்.
ஆண் மகன் நான் என்னும் அகம்பாவத்தில் மனைவியைக் கொடுமை செய்வது, குற்றப்படுத்துவது. இன்பத்தில் பங்கெடுக்கும் கணவன் அவளது துன்பத்தில் பங்கெடுப்பதில்லை. அவளது வேலைப் பளுவை பகிர்ந்து கொள்வதில்லை. தொடர்த்துன்பம் தருதலும், குறும்புப் போக்கும் மெல்லிய விரிசலாக மனைவி மனத்தில் சிதைவு ஏற்படுத்தி இறுதியில் பிரிவுக்கு அழைக்கிறது. தன்னுடைய போக்கில் தீது மிகைத்திருக்கிறது. அது கல்லாக மாறி குடும்பக் கண்ணாடியை உடைக்கிறது. சிந்தனைமாற்றமில்லா தன்மையால் எல்லாமும் பாழாகிறது. தன்னால்தான் ‘தீது’ என்ற எண்ணம் மனத்துள் எழாமல் மாற்றம் வாராது.
ஒவ்வொரு உயிரையும் அதற்குரிய நேரம் வரும்போது ஒரு மணித்துளியும் முன், பின் செல்லாது பிடித்துச் செல்பவன் இறைவன். தானாக வலியப்போய் மரணத்தைத் தேடிக் கொண்டு, செய்கைகள் மூலம் தெரிந்தெடுத்து அல்லாஹ்வின் மரணமென்பதும் தீது.
வணிகம் செய்வதில், கல்வி சமைப்பதில், உணவு, உடையில் எளிமை கடைப்பிடித்தலுக்கு எவரும் தடையாகவிருக்கப் போவதில்லை. தமக்குத் தாமே தடை ஏற்படுத்தி பிறரால் வந்த தீமையாகக் கருதிக் கொள்வது ஒரு போக்காக உருவெடுத்திருக்கிறது. நாள்தோறும், வாரந்தோறும், ஆண்டுதோறும் அசைவம், ஆடம்பரத்திற்குச் செலவிடும் தொகையை கல்விக்கு திருப்பி அறிவு, பொருளாதாரம், ஆதிக்கம் பெற முனையலாம். கரங்களில், கழுத்துகளில், லாக்கர்களில் உறங்கும் தங்கத்தை கூட்டுமுறை மூலதனமாகக் கொண்டு தொழிற்சாலைகள் துவங்கலாம்.
பன்னாட்டு தொழில் முனைவோரிடம் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். அரசு ஆதரிக்கும். மான்யம் கிடைக்கும். வேலை வாய்ப்பு தருவதன் மூலம் சமூக அந்தஸ்து கிடைக்கும். வாழும் நாட்களைச் சமூகத்திற்குப் பயனுள்ளதாகச் செலவழித்தல், சுற்றி வாழும் ஆன்மாக்களிடம் நல்லெண்ணத்தை திணிக்கும் வண்ணம் நன்னனடத்தை புரிதல் ‘நன்று’ சொல்லுக்குள் அடங்கும். தீமை – நன்மை பிறர் தந்து வருவதில்லை. ஒருவர் செய்கைக்குத் தக்கவே வினையாக உருவெடுக்கும். ‘‘உங்கள் கரங்களால் தேடிக் கொண்டீர்கள்’’ என்று அல்லாஹ் சொன்னதன் உள்வாங்கலாக கணியன் பூங்குன்றனார் கூறியிருக்கிறார் ‘‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’’
-ஜெ. ஜஹாங்கீர், நவம்பர் முஸ்லிம் முரசு 2011
source: http://jahangeer.in/