o ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?
o தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?
o ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?
o ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?
o தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா?
o ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?
ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.
ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.
விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 24 : 3)
ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.
ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.
விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.
அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.
இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.
“கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.” (அல்குர்ஆன் 24 : 26)
மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார்:
நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத் (1755)
ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.
அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர்.
இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும்.
எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது.
o தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?
கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.
1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பது தான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு பெண்மணி ” அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள் தான் அவனுக்கு குடிபானமாகும். என்னுடைய மடி தான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனைப் பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்.” என்று (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) கூறினார். நபியவர்கள் ” நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம் பாகம்: 2 பக்கம் 225)
குழந்தை தாயிடமே இருக்கும் என்ற சட்டம் விவாகரத்துச் செய்யபட்டவள் மறுமணம் செய்யாமலிருக்கும் வரை தான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்து விடும். இதனை
”நீ (மறு)திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்.
தாய் மறுமணம் முடித்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்து விடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்க விடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திக்க தாய்க்கு முழு உரிமையிருக்கிறது.
2. குழந்தை பாலருந்தும் பருவத்தைக் கடந்து விட்டால் குழந்தைக்கு, தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் குழந்தைக்கு வழங்குகிறது. இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ராபிஃவு பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை) இருந்தது. அப்பெண் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ”என்னுடைய மகள்” என்றாள். ராபிஃவு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”என்னுடைய மகள்” என்றார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை ”ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ”நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது. நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார். (அறிவிப்பவர்: ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி, நூல் : அபூதாவூத் 1916)
இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப் பருவத்தைக் கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள் (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 1277)
இந்த ஹதீஸில் வந்துள்ள ”சிறுவன்” என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் ”குலாம்” என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தை பருவம் முதல், பருவ வயதை அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம் கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொருத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம் தான் அது ஒப்படைக்கப்படும்.
குழந்தைக்கு விபரம் தெரிந்த பிறகு அதனுடைய விருப்பத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதே குழந்தைக்கு நன்மை பயக்கும். குழந்தை விரும்பாத நபர்களிடம் அது ஒப்படைக்கப்பட்டால் இங்கு குழந்தையின் உரிமை பறிக்கப்படுவதோடு அதற்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தான் விபரமறிந்த குழந்தைளுக்கு இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
மேலும் குழந்ததைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்து இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (அல் குர்ஆன் 2:233)
குழந்தை தாயிடம் இருக்கும் காலத்தில் தந்தை குழந்தையைச் சந்திப்பதற்கோ அதனுடன் பழகுவதற்கோ யாரும் தடை விதிக்க முடியாது. தன் குழந்தையை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ள தந்தைக்கு முழு உரிமை உள்ளது
o ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?
ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் :
நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6124)
“அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். இதை புரைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3995)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே இதைப் பருகுவது கூடாது. ஆனால் இந்த பானம் உடலில் பட்டாலோ ஆடையில் பட்டாலோ அல்லது இதை நுகர்வதாலோ போதை ஏற்படாது.
மேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசணைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.
எனவே ஆல்கஹால் கலந்த வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை மார்க்கம் தடை செய்யவில்லை.
o ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா?
ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா?
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பயன்படுத்திய வாசகம் என்ன கருத்தைக் கூறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.
ஏழைகள் விடப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படுவதை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடுத்தது ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்காது. ஏற்ற தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இதனுள் அடங்கியுள்ள கருத்தாகும்.
பணக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவு அளித்து ஏழைகளுக்கு தனியாக விருந்து வைத்தால் ஏழகளை ஏழைகள் என்ற காரணத்துக்காக இழிவு படுத்துகிறோம்; அவர்களும் செல்வந்தர்களும் சமமானவர்கள் அல்ல என்று கருதுகிறோம் என்பது தான் பொருள்.
எந்த விருந்துக்கு பணக்காரர்களை அழைக்கிறீர்களோ அந்த விருந்துக்குத் தான் ஏழைகளை அழைக்க வேண்டும். அந்த விருந்துக்கு அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று நிலை நாட்டும் வகையில் தனி விருந்து அளித்தால் ஏழைகளைக் கேவலப்படுத்தி சோறு போட்டதாகத் தான் ஆகும். செருப்பால் அடித்து விட்டு சோறு போடுவது போல் தான் இது அமைந்துள்ளது.
o தடை செய்யப்பட்டவைகளை விற்கலாமா?
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?
தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடுக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே அவற்றை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் போது, ‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘கூடாது! அது ஹராம்!’ எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2236)
ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு, ‘அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2223)
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது.
தடை என்று வந்து விட்டால் மாற்று மதத்தவர்களுக்கோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ விற்பதற்கும் அனுமதியில்லை.
ஆனாலும் இது பொதுவான சட்டம் அல்ல. இதில் விதிவிலக்குகளும் உள்ளன.
மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் இருக்கும். ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை ஒரு வகை. அனைவருக்கும் இல்லாமல் சிலருக்கு மட்டும் தடுக்கப்பட்டவை இன்னொரு வகை.
அனைவருக்கும் தடுக்கப்பட்டவற்றை அறவே விற்கக் கூடாது. ஆனால் அனைவருக்கும் தடுக்கப்படாமல் சிலருக்கு மட்டும் தடுக்கப்பட்டவற்றை நாம் விற்கலாம்.
உதாரணமாக பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது. பெண்களுக்கு இவை தடுக்கப்படவில்லை.
இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!’ என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்’ என்று கூறினார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 948, 886, 2612, 2619, 3054, 5841, 5981, 6081)
அது போல் சில பொருட்கள் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் தடுக்கப்பட்டு மற்றொரு வகை அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இப்படி ஒரு வகைப் பயன்பாடு தடுக்கப்பட்டு வேறு வகைப் பயன்பாடு அனுமதிக்கப்பட்டிருந்தால் அவற்றை நாம் விற்கலாம்.
உதாரணமாக, உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பிராணி தானாகச் செத்து விட்டால் அதை நாம் உண்ணக் கூடாது. ஆனால் அதன் தோல் உட்பட எதையும் நாம் உண்ணக் கூடாது. ஆனாலும் அதன் தோல்கள் உண்பதற்கு தடுக்கப்பட்டாலும் அதற்கு வேறு பயன்பாடுகள் உள்ளன. அதைப் பாடம் செய்து தோல் பாத்திரமாக செருப்பாக, கைப்பைகளாக இன்ன பிற பொருட்களாகப் பயன் படுத்த அனுமதி உள்ளது.
இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, ‘இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது செத்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, ‘அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘அது செத்தது’ என்று (தோழர்கள்) பதிலளித்தனர். ‘அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1492, 2221, 5531, 5532)
பொதுவாக எல்லா தோல்களும் பாடம் செய்யப்பட்டால் சுத்தமாகி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
எனவே உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல்கள், அனுமதிக்கப்பட்ட பிராணிகளில் தாமாக செத்துப்போனவைகளின் தோல்கள் ஆகியவற்றை நாம் வாங்கலாம் விற்கலாம். ஏனெனில் இவை உண்பது மட்டுமே தடை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் உள்ளது.
source: unlinepj.com