“தண்ணீர், உப்பு, நெருப்பு”
ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! பிறர் கேட்டு எதனை நாங்கள் மறுக்காமல் கொடுக்க வேண்டும்?”
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள்: “தண்ணீர், உப்பு, நெருப்பு”
“அல்லாஹ்வின் தூதரே! தண்ணீர் (சரி தான்) அது தாகத்தைத் தணிக்கும். நெருப்பு, உப்பு ஏன்?”
“ஹுமைராவே! (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பட்டப் பெயர்) ஒருவன் நெருப்பு கொடுப்பானேயானால் அந்த நெருப்பின் வாயிலாக எவ்வளவு உணவு தயாரிக்கப்படுமோ அவை அனைத்தையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்த நன்மையைப் பெறுவான். ஒருவன் உப்பை கொடுப்பானேயானால் அந்த உப்பின் வாயிலாக எவ்வளவு உணவு ருசியாக்கப்படுகிறதோ அவை அனைத்தையும் தர்மம் செய்த நன்மையை அவன் பெறுவான்.
தண்ணீர் தாராளமாக கிடைக்கும் பருவத்தில் ஒருவரின் தாகத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்தால் அறுபது அடிமைகளை உரிமை விட்ட நன்மையும், தண்ணீர் பஞ்சமான காலத்தில் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தால் ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய நன்மையும் வழங்கப்படுவான்” (நூல்: த்ஃப்ஸீர் கஷ்ஃப், வல் பயான்)
“மாஊன்” என்பதற்கு ‘தஃப்ஸீர் அல்-காஜின்”-ல் பின் வருமாறு விளக்கம் தரப்பட்டுள்ளது.
தண்ணீர், உப்பு, நெருப்பு, இவற்றுடன் அண்டை வீட்டாருக்கோ, மற்றவர்களுக்கோ தன் வீட்டிலுள்ள அடிபம்பு, கிணறு போன்றவற்றிலிருந்து அவர்கள் தண்ணீர் எடுப்பதையும் தடுக்கக்கூடாது. மாறாக, அவற்றை கொடுத்து உதவ வேண்டும்.
ஜலாலைன்” என்ற தஃப்ஸீரில் “மாஊன்” என்பதற்கு “ஊசி, கோடாரி, பாத்திரம். உணவுத்தட்டு” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆக, இவற்றையும், இவையல்லாத மற்ற பொருட்களையும் மக்கள் பயன் பெரும் பொருட்டு கொடுத்துதவ வேண்டும். மாறாக, இவற்றை சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்க மறுத்தால் மறுமை நாளை மறுத்த குற்றவாளியாகவும், அல்லாஹ்வின் சாபத்திற்குரியவராகவும் அவர் ஆக்கப்படுவார்.
நாட்டு வழக்கில் சில மூட நம்பிக்கைகள் உண்டு. அவற்றை முற்றிலுமாக களைய வேண்டியது ஈமான் கோன்டுள்ல ஒவ்வொருவரின் கட்டாயக்கடமையாகும்.
உதாரணத்திற்கு, “மஃக்ரிப்” நேரம் வந்துவிட்டால் (இரவின் ஆரம்ப நேரம்), இருட்ட ஆரம்பித்துவிட்டால் “கத்தி, பாத்திரம், வாளி, தராசு, தண்ணீர், உப்பு, நெருப்பு, தீப்பெட்டி, ஊசி மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை பிறருக்கு கொடுக்காமல் இருப்பது. கேட்டால் “அது தரித்திரம்” என்று சொல்வார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவ்வாறு சொல்லக் கூடியவர்களைத்தான் தரித்திரம் பிடித்திருக்கிறது. அதன் காரணமாகவே அவர்கள் இவைகளை தர்மம் செய்ய மறுக்கின்றனர். தர்மம் செய்வதற்கு நேரம் காலம் எதுவுமில்லை. என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.