Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அழகினை மறைத்தலும், மறைத்தலின் அழகும்!

Posted on December 21, 2011 by admin

அழகினை மறைத்தலும், மறைத்தலின் அழகும்!

[ இது அப்படி ஒன்றும் வாசகனைக் கதையோடு அல்லது அங்குள்ள சூழலோடு ஒன்ற வைப்பதற்காக எழுதிய ஒன்றல்ல. முதலில் இது கதையேயல்ல: இந்த வலி/ வழியினூடாக ஒரு ‘பெட்டிசத்தைத்’ தருவது இலகுவழியாயிருந்தது. அவ்வளவுதான்.]

சட்டத்தரணி நயீமின் மனைவியினுடைய வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. அவன் நீதிமன்றம் வந்தடையும் போது பாபு தனக்காக நீதிமன்ற வாசலில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். வெட்கமாக இருந்தது .மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பாபு அவனுடைய நண்பனாகினும் சட்டத்தரணித் தொழிலில் பாரிஸ்டர் பட்டமும் அனுபவமும் அதிகம் பெற்றவன். நயீம், பாபுவைக் கேட்டான்.

‘இன்றைக்கு, யார் நீதிபதி?”

‘உனக்குப் பரிச்சயமானவர். அதே ஆள்தான்’

‘அப்படியானால் இன்றைக்கும் ஒரு பெரிய சண்டை இருக்கப் போகிறதென்று சொல்’

‘அவருக்கு உன்னை நினைவில்லாதிருக்க வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்’

‘என்னால் நம்ப முடியவில்லை, அவர் அனறையதினத்தை இலேசில் மறந்திருப்பார் என்று’

உண்மைதான் இலேசில் நினைவைவிட்டு அகலாத தினம்தான் அது .

பாபுவுக்கு அந்த வழக்கே விநோதமான ஒன்று . ஐரோப்பிய சட்டத்தின்படி அந்த வழக்கில் .நயீம்தான் குற்றவாளி என்றுபட்டது. அந்த வழக்குப்பற்றி உங்களுக்கும் சொல்லியேயாகவேண்டும். நயீமின் பக்கத்துவீட்டுக்கார கலப்பில்லாத தூய வெள்ளைக்கார ஒற்றைத்தாயாரால் இவன்மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது.

அவளுக்கு ஐந்து மாதங்களேயான ஒரு குழந்தை இருந்தது. நயீமுக்கு ஒன்று, மூன்று, ஐந்து வயதுகளில் என்று மூன்று பிள்ளைகள் உண்டு. இதனால் அவன் வீடு எப்போதும் குழந்தையின் சிரிப்பும், அழுகையும், கும்மாளமுமாகவே இருக்கும்.குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதற்கு, புரிந்துகொண்டு அவர்களுடன் வாழ்வதற்கு வேறுபட்ட மனநிலையும் மேம்பட்ட அறிவுநிலையும் வேண்டும். அது நயீமிடம் வழிந்து கிடந்தது.

கேட்கவா வேண்டும்? அவன் வீடு பெரும்பாலும், முஸ்லிம்களை யாழை விட்டுத் துரத்தமுன்னரான, சோனகத் தெருவிலுள்ள கதீஜா மகாவித்தியாலயத்திற்கு முன்னாலிருந்த நானாவின் ரொட்டிக்கடையின் இரைச்சலைப் போலவே இருக்கும். அடுத்த வீட்டுக்கார வெள்ளைக்கார ஆத்துக்காரியும், அவன் மனைவியும் அத்தனை அன்னியத் தனமாகப் பழகியவர்களல்ல. பாபிகியு.சொக்கிலேட், வாங்கித்தின்று புரியாணி, வட்டிலாப்பம் கொடுத்துப் பழக்கமுள்ளவர்கள்தான்.

அவளால் நயீம்வீட்டு இரைச்சலைச் சகித்துக் கொள்ள முடியும்தான், ஆனால் குழந்தைதான் இந்த சத்தங்களினால், தடாலடியான சுவரின் மோதுகைகளினால் திடீரென்று விழித்துக் கொண்டு அழுகிறது. கை, கால்களை உதைத்துக்கொண்டு அடம்பிடித்துத் தூக்கிவைத்துக் கொள்ளச் சொல்கிறது. அவளுக்கு இதை அவர்களிடம் சொல்வதற்கு முதலில் தயக்கமாகவே இருந்தது . மேலும் தாங்க முடியாத நிலையில் இருமுறை கதவுதட்டி தன் நிலைமையை எடுத்துச் சொன்னாள். அவன், மனைவியிடம் இனிமேல் அதிகம் சப்தமெழுப்பாதபடி குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி, அவள் முன்னிலையிலேயே சொல்லிவைத்தான். அவன் பிள்ளைகளாவது, அடங்குவதாவது?.

ஒருநாள், நகரக் காரியாலய உத்தியோகத்தனும் போலிஸ் இருவருமாக மொத்தம் மூவர், கதவைத் தட்ட நிலைமை தீவிரமாகிவிட்டதை உணர்ந்தான். வாசலில் வைத்தே அவர்களிடம் “எதற்காக வந்திருக்கிறீர்கள் எனத்தெரிந்து கொள்ளலாமா?”எனக் கேட்டான்.

“உங்கள் பிள்ளைகள் கூக்குரலிட்டுக் (loud ) குழப்பம் செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. “விசாரிக்கவே வந்துள்ளோம்.

யார் முறையிட்டார் என அவன் கேட்கவில்லை. “அவர்கள் சின்னஞ்சிறுசுகள்; ஓரளவுதான் கட்டுப்படுத்தலாம்” என்றான் நயீம்.

“அப்படியல்ல, அடுத்த வீட்டாருக்கு இடைஞ்சல் தருவது இங்கு சட்டப்படி குற்றச் செயல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” நயீம் பேசாதிருந்தான்.

நகரக் காரியாலயப் பெண்மணி நேரம் ஒதுக்கி, எப்படிக் குழந்தைவளர்ப்பது எனப்பாடம் நிகழ்த்தத் துவங்கினாள். நயீம், தன் மனம் உள்ளாய்க் கோபம்கொள்ள ஆரம்பித்திருந்ததை உணர்ந்தான்.

“அவர்கள் குழந்தைகள்.தன் சுயபுத்தியிழந்து, கட்டளைக்கு ஒழுகுகிறவர்களாக என் பிள்ளைகளை நான் வளர்க்கமாட்டேன்”

இந்த வார்த்தை ஒன்றே வந்திருந்த பொலிசுதுரைக்குப் போதுமானதாயிருந்தது. பிறகென்ன? நயீம் கோட்டுப்படியேற வேண்டியதாயிற்று. இதே நீதிபதிதான் அன்றும் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைத்துக் கேட்டார்; “உங்கள் பக்கத்துவீட்டுக்கார மாக்கிரட் அம்மணியை, நிம்மதியாக இருக்கவிடாததை ஒப்புக்கொள்கிறீர்களா?”

“துரை அவர்களே, இது அபாண்டமான குற்ற்றச்சாட்டு அவரது நிம்மதிக்குப் பங்கமாக ஒருபோதும் நான் நடந்து கொள்ளவில்லை. “நீங்கள் என்றால், உமது பிள்ளைகள். நேரகாலமின்றி எப்போதும் சத்தமிட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளீர்கள் நீங்கள்”.

“ஐயா, நீங்கள்தான் சொன்னீர்களே, அவர்கள் குழந்தைகள் என்று. அவர்களுக்கு இந்த சட்ட திட்டங்களும், நேரகாலங்களும் தெரியாது. அவர்களின் சந்தோசங்களுக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தடையாக நானிருக்க வேண்டாமே என்று விட்டுவிட்டேன்”

“நீர் என்ன சொல்கிறீர்?”

“அவர்கள் மகிழ்வதும், சத்தமிடுவதும், தங்களிடையே சண்டையிடுவதும், சேர்வதும் அவர்களின் வளர்ச்சிக்குதவுபவை என்று நான் நம்புகிறேன். அதை ரசிக்கவும், நெறிப்படுத்தவும் தான் நாம் இருக்கிறோமே தவிர அதைக் கொன்றுபோட என்னால் முடியாதய்யா. அதைத் தடைசெய்வது மிகப்பெரிய பாவகரமானது என்று நினைக்கிறேன் அய்யா.”

“நீங்கள்என்ன தொழில் செய்கிறீர்?”

“சடடத்தரணியாயிருக்கிறேன், அய்யா.”

“அதுதான் அதிகம் பேசுகிறீர் போலிருக்கிறது”

“அப்படி இல்லை அய்யா,எங்கள் பகுதியில் யாழினிது,குழலினிது என்பர் மழலை சொல்கேளாதோர் என்று சொல்லுவார்கள். நம்மால் ரசிக்கத்தான் முடியவில்லை, அதற்காக சட்டம் கொண்டு அதைத் தடுக்க முற்படுவது அந்தப் பருவத்தையே வாழவிடாத கொடுமையைச் செய்ததாகாதா?”

நீதிபதி தனது இடுங்கிய நீலக்கண்ணை மேலும் இடுக்கி, வினோத பிராணியொன்றைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். இதுவரை யாரும் அவரிடம் விளக்கவுரைகளுடன் நியாயம் பேசவந்ததில்லை.

“உங்கள் அருகேயுள்ள சிறுவர் பூங்கா,விளையாட்டு மைதானங்களுக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாமல்லவா? அடுத்த வீட்டானின் கோபத்தைச் சம்பவித்தவனாக மரணித்தவனுக்கு சுவர்க்கமேயில்லை என்பது நபிவாக்கு இல்லையா?”

இதைக் கேட்டதும் நயீமின் இதழ்க்கடையோரம் சிறு புன்முறுவலை பாபு கண்டான் .

“கனம் கோட்டார் அவர்களே, இது உண்மையான வார்த்தை ஐயா.என் அடுத்த .வீட்டு அம்மணியிடம், இந்தக் குழந்தைகளின் சிரிப்பு,அழுகைச் சத்தங்களை விட, அவர்பார்வையில் வேறேதும் தொல்லைகளை என்வீட்டாரால் சந்தித்ததுண்டா எனக்கேளுங்கள் ஐயா. கணவரின்றி எல்லாப்பொறுப்பையும் தனி ஒருத்தராகவே சுமந்துகொண்டு அவர்கஷ்டப்படுகிறார் என்றபார்வையும், அவர் மீதான அனுதாபத்தையுமே நானும் என் மனைவியும் கொண்டிருக்கிறோம். குறித்த நேரத்துக்குப் பூங்காவுக்கு, மைதானத்துக்குப் போய்த்தான் சிரிக்கவும், சத்தமிடவும், விளையாடவும் முடியும் என்பது வளர்ந்த நமக்குச் சரிப்பட்டு வரலாம்,அடக்கி வைத்துப் பின்னர் உரியகாலம் வரும்போது வெளியேற்றுவது பழையதை நினைத்து வாழ்கிற வயது வந்தோருக்குச் சரியாகலாம்.அதை நம்ம முதலாளிமார் வியாபரமாக்கவும் செய்யலாம். இந்தக் குழந்தைகளை அழுத்தி பொன்சாயத் தாவரம்போல வளர்த்தெடுக்க என்னால்முடியாதையா. நானறிய, இதுவரை எந்தக்குற்றமும் செய்தவனாக உணரவேயில்லை ஐயா.”

பாபுவுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த நீதிபதி யாரையும் இத்தனைதூரம் பேசவிட்டு கேட்டுக் கொண்டிருப்பவரல்ல. அவன் பேசி முடித்ததும் , திடீரென அமைதிச்சுத்தியலை எடுத்து மேசையில் தட்டினார் வழக்கை ஜூலை மாதம் ஆறாம் திகதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார்.. இத்துடன் மன்று கலைவதாகச் சொல்லிவிட்டு கதிரையை நகர்த்தி எழுந்து கொண்டார். அவர் முதலில் செல்ல,நயீம் பாபுவுடன் வெளியேவந்தான்.

புதுமைப் பித்தன் சும்மாவா சொல்லிவைத்தார், வாக்கும் எழுத்தும்தான் இந்த உலகினை ஆளும் மிகப்பெரிய இருதூண்களென்று. உலகத்தின் முழு ஜனத் தொகையில் இரண்டு வீதம் கூடத் தேறாத யூதர்களின், அமரிக்காவையே அடிமைப்படுத்தி ஆளும் வல்லமைக்கு அவர்களின் தகவல் தொழில் நுட்பவல்லமையின் பங்கு சின்னதல்லவே. பிரதேசப் பத்திரிகைகளுக்குத தினமும் மெல்ல ஏதாவது அவல் வேண்டிருக்கும். அவை தினமும் ஊதிப் பெருப்பிக்கிற விசயங்களினைப் பார்த்தோமானால் பெரும்பகுதி மானிடர் துன்பங்களையும், அறியாமைகளையும் வியாபாரமாக்கும் தகுதி தவிர வேறெதையும் கொண்டிருக்காமையை நாம் காணமுடியும். அவை பக்கம் பக்கமாக நயீமின் வழக்கை ஊதிப்பெருப்பித்தன. உலகின் மிக முக்கிய எல்லாப் பிரச்சினைகளுக்குத தீர்வும், உண்மைக் காரணங்களையும் விலாவாரியாக உளச்சுத்தத்துடன் எழுதுவதாகப் பீலா விடுகிற பத்திரிகைகள், நமது வாழ்க்கை முறை, நாகரீகத்தையே நயீம் கேள்விக்குட்படுத்துவதாகக் கொட்டம் கொட்டமாக எழுதி விழிப்பூட்டின .

வாசகர் ஒருத்தர் இன்றைய நாகரீக உலகில் இன்னமும் இந்த மனநிலையில் மனிதர் வாழ்வது கவலைப்படவேண்டிய ஒன்றே என ஆதங்கப்பட்டிருந்தார். நயீம் எதனாலும் அசைந்து கொடுக்கவில்லை. மாக்கிரெட்டுக்கு வழக்கு அடுத்தடுத்ததாக ஒத்தி வைக்கப்பட, சும்மா வேலியில போன ஓணானை, சட்டைக்குள் எடுத்துவிட்ட நிலமைவந்து சேர்ந்தது.

அதைவிடவும் மனதுக்குச் சங்கடமாக நயீமும், அவன் மனைவியும் , தங்களின் பிள்ளைகளினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துவதாகவும், அவளின் பிள்ளை, அவளின் தனிமைக்கு தாங்கள் எப்போதும் துணையாயிருப்போம் என வீடுவந்து சொன்னபோது தான் அவசரப்பட்டோமோ என யோசிக்கத் துவங்கினாள் மாதக்கணக்கில் வழக்கு இழுத்துக்கொண்டு போவதில் அவளுக்கு ஆயாசம் ஏற்பட்டிருந்தது.

தன்னருகே உள்ளவரையே சகித்துக்கொண்டு வாழ்வதில், தான் தோற்றுப்போனதாக அவளே தன்னை விசனிக்கத் துவங்கினாள். கடைசியில் அவளே தன் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளும் நிலைக்கு வரும்படியாக நிலைமை ஆயிற்று. ஆயினும் நயீம் நீதிபதியினால், இனிமேல் இப்படியாக நடந்து கொள்ளவேண்டாம் என்றஎச்சரிக்கையுடன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

ஒருவருடம் முடியுமுன்னரே, அடுத்த வீடு இல்லாமல், அவன் வாழும் நாடு கொண்டுவந்த புது சட்டத்தால் இப்போது அவனன்றி அவன் மனைவி குற்றவாளியாகினாள். எல்லைச் சுவரிலிருந்து மூட்டைப்பூச்சி கடித்ததென்றால், இது பலம்பொருந்திய வல்லமையுள்ள பருந்தின் தாக்குதலாக அவனுக்குப்பட்டது .

பாபு அவனின் யோசனையைக் கலைத்தான். அவன் நயீமைக் கேட்டான்:

“என்ன யோசிக்கிறாய்?”

“ஒன்றுமில்லை, தொடர்ந்தும் இந்த நாட்டில் போராடியதாகவே காலம் கழிந்து விடுமோ எனப் பயமாயிருக்கிறது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்றும் சந்தேகமாக இருக்கிறது.”

“ஏன் நயீம், அவர்கள் சொல்லும் தண்டப் பணத்தைக் கட்டிவிட்டுப் போய்விட்டால் என்ன?”

“அது பெரிய விடயமல்ல பாபு. இந்த உலகமும், அதன் சந்தோசங்களும் நிலையானதல்ல, மறுமையில் அழியாத பேரின்பமான வாழ்வு வேண்டி ஒரு மதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு எதிரான வெறும் சதியல்ல இது. இந்த உலகம் மட்டுமே உனக்குரியது, எதையும் சிந்தியாதே, இருக்கும் வரை பணம் பண்ணு, அனுபவி, செத்துப்போ எனும் வியாபாரக் கூட்டத்துக்கு எங்களை எதிரியாக அவர்களே ஆக்கிக் கொடுத்திருக்கிற வஞ்சகதந்திரம் இது. பைபிள், சொல்வதன்படி பார்த்தால், எல்லாக் கிறிஸ்தவ ஆலயத்திலுள்ள பெண்களின் தலைக்கவசங்களையும் அல்லவா முதலில் களைந்து விட்டு தலையச் சிரைத்தல்லவா முன்னோடோயாக நடந்து காட்டியிருக்க வேண்டும்.

என்னால், அதை நினைத்தும் பார்க்க முடியாது. இதற்கு நான் என்வரையில் எதிர்ப்பானவன் என்பதைச் சொல்லியே ஆகவேண்டியுள்ளது பாபு” “சரி கோர்ட் துவங்கப் போகிறது நாம் உள்ளே போகலாம் வா” நீதி மன்று மௌனம் களைந்து தொன்மையைச் சூழ்ந்து அரவணைக்க ஆரம்பித்தது.அவர்கள் உள்ளாகினர்.

சாட்சிக் கூண்டில் நயீம் ஏறியபோதே நீதிபதி, ‘அவனா நீ’ எனும் பார்வையை அவன்புறம் வீசினார். அவர்களின் வழமையான இயல்புப்படி, கோபத்தின் போதும் அவரில் புன்னகை முகத்தையே அவன் கண்டான்.உண்மையாகவே மனம் மலரப் புன்னகைக்கிற சந்தர்ப்பங்களிலும் சந்தேகமே கொண்டான்.

இதனால், எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே இருக்கும்படியான நிலைமை அவனுக்கு ஆகிப்போயிற்று. நீதிபதி குற்றப்பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்தார்.

“இந்தப் பெண், பொது இடத்துக்கு வரும்போது முகத்திரை அணிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி நீங்கள் ஏதும் கூற உள்ளதா?”

“முதலிலேயே சொல்லி விடுவது நல்லது, நீதிபதி ஐயா அவர்களே. இந்த மிகப் பெரிய ஜனநாயகம் பேசுகிற நாட்டில் ஒருமதத்தை, அதுவும் உலக ஜனத்தொகையில் முப்பது வீதமானோர் பின்பற்றுகிற ஒன்றை இவர்கள் தாமாகவே தடை செய்துவிட்டு, குற்றவாளி என்று சொன்னால் எப்படித்தகும் கனவானே?”

“விளக்கமாகச் சொல்லுங்கள்”

“முஸ்லிமாயிருக்கிற ஒருத்தர், அல்லாஹ் குர்-ஆனில் சொன்னதன் படிதான் உடுக்க முடியும் ஐயா. நீங்கள் நிறைவேற்றியிருக்கிற சட்டம், அவர்களை முஸ்லிம்களாக இருக்க வேண்டாம் எனச்சொல்வது போன்றது, கனவானே. இலங்கைத் தீவின் வட-கிழக்கில் இருந்து ஆயுதம் கொண்டு முஸ்லிம்களை சுத்திகரிக்க முயன்றதற்கு ஒப்பவே, இவர்களும் சட்டம் செய்ய வல்லமை யுள்ளதால்,அதைக்கொண்டு முஸ்லிம்களைச்சுத்திகரிக்கும் கைங்கரியத் தையே செய்ய முயல்கிறார்கள் ஐயா.

இது இன்னொரு முறையில் பார்த்தால் இவர்களும்கூட பக்கச்சார்பானவர்கள் எனவும், அடக்குமுறையில் திணித்த வாழ்வுமுறையைப் பின்பற்றும்படி அடக்க முயல்கிறார்கள் ஐயா.”

“எதனால், அப்படிச் சொல்கிறீர்கள், நீங்கள்?”

“நமது ஐரோப்பிய அங்கத்துவ நாடான பெரிய பிரித்தானியாவில், 2001 இல், ஹீத்ரோ விமான நிலையத்தில் வேலை செய்யும் சீக்கியர்கள், தங்கள் மதத்தின் நிமித்தம் இடுப்பில் கத்திவைத்துக் கொள்ள அனுமதி கேட்டுப் போராடிய வழக்கில் வெற்றி பெற்றிருந்தார்கள் ஐயா. இப்போது இந்தப் பெண்கள், தங்கள் அழகை அந்நிய ஆடவருக்கு மறைக்க அணியும் துணி, எப்படிக் கத்தியைவிட வன்முறை சார்ந்தது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளோம் ஐயா”

“எனக்கு முன்பேதெரியும் நீங்கள் பேச்சில் பெரும் கில்லாடி என்று. இனிப்புக் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவது போல, நீங்கள் பெண்களை அழகானவர்கள் எனச் சொல்லி அடிமைப்படுத்துவதாகாதா இது?”

நயீம் இப்போது புன்னகையுடனிருந்தான். முகம் மாறாதபடியே சொன்னான்: ” எங்கள் பகுதியில், முன்னர் சாண்டில்யன் என்றொரு சரித்திராசிரியர் இருந்தார். ஒரு பெண்ணின் ஐந்து விரல்களையும் வர்ணித்தெழுதவே இருபது பக்கங்களை எடுத்துவிடுவார் கனவானே. இன்றைக்கும் நமது எல்லா இலக்கியங்கள், வியாபாரம், விளம்பரம், அரசியல், இன்றைய உலக வங்கித் தலைவருக்கு ஆப்பாக, போரின், தலைகளை உளவறிய, ஏன், அநேக வீதி விபத்துக்களுக்கும் பெண்ணின் அழகே காரணமாகி விடுகிறபோது, அவர்களாக ‘மறைத்து வைப்பதுவே அழகு’ என்று ஆண்டவன் தந்த உத்தரவில் வாழ்கிறபோது, இவர்கள் அல்லவா அத்துமீறி அங்கு உள் நுளைந்துள்ளார்கள்.”

“அப்படியல்ல, அவர்கள் சட்டத்தை நிறைவேற்றத் துணைபோகிறவர்கள். பயங்கரவாதிகள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ள இதைப் பயன்படுத்த சந்தர்ப்பம் உண்டல்லவா?”

“இது எங்களை அவமானப்படுத்துகிற வார்த்தை ஐயா. பயங்கரவாதி என்பவன் எங்களுக்கும்கூட கொடூரமான கொலைகாரன்தான் ஐயா. அண்மையில் போலிசுக்குரிய உடை அணிந்து நோர்வேயில் எழுபதுக்கு மேற்பட்ட மக்களைக் கொலை செய்தான் ஒரு பயங்கரவாதி. அதற்காக நாம், போலிசுக்குரிய உடையையே தடை செய்துவிட முடியுமா கனவானே?”

நீதிபதி, வழக்கை ஒத்திவைப்பதாகச் சொன்னார். பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தடை செய்துவிட்டதாக பத்திரிகைகள் எழுதின. நயீம் இன்னமும் வழக்கின் அடுத்த தேதிக்காகக் காத்திருக்கிறான்.

– எஸ் நஸீறுதீன்

source: www.sonakar.com

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

85 + = 95

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb