நல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும்?
M.R.M. முஹம்மது முஸ்தஃபா
அன்பிற்கும், மனத்திற்கும் நெருங்கியத் தொடர்புண்டு. ஒருவரை நாம் உண்மையாக நேசித்தால், அவரும் நம்மை உண்மையாக நேசிக்க ஆரம்பிப்பார். புகுந்த வீட்டில் உள்ளவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இல்லாவிட்டால் உங்கள் மீது அவர்களுக்கு உண்மையான அன்பு ஏற்படாது. அவர்கள் மீது உண்மையான அன்பிருக்குமானால் அவர்களுக்கும் அவசியமாக உங்கள் மீது அன்பு ஏற்பட்டு விடும். எனவே புகுந்த வீட்டிலுள்ளவர்களை நீங்கள் உண்மையாக நேசிக்க வேண்டும்.
முதலாவதாக உங்கள் அன்பைப் பெற உரிமைப் பெற்றவர்கள் உங்கள் மாமனாரும், மாமியாரும் ஆவார். உங்கள் கணவர் உங்கள் அன்பிற்கு உரியவர், உயிருக்கு இனியவர் இல்லையா? அந்தக் கணவரைப் பெற்றவர்கள் அவர்கள், பேணி வளர்த்தவர்கள் அவ்ர்கள்.. உங்களின் கண் நிறைந்த கணவராக, “கல்பு” நிறைந்த கணவராக உங்களுக்கு வழங்கியிருப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீது அன்பு கொள்வதற்கு இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?
உங்கள் மாமனார் உங்களுக்குத் தந்தை போன்றவர் ஆவார். உங்களின் மாமியார் உங்களுக்குத் தாய் போன்றவர் ஆவார். எனவே அவர்களை, அவ்விதமே கருதுங்கள்! அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் புதல்வி ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முஸ்லிம் ஆண், பெண் இரு பாலருக்கும் சில விஷயங்களிலும், பெண்களாகிய உங்களுக்குப் பல விஷயங்களிலும் அழகிய முன் மாதிரியாய் இருப்பவர்கள். அவர்கள் தம் மாமனாரிடமும், மாமியாரிடமும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை அறிய நீங்கள் ஆவலுறலாம். அவர்களின் மாமனார் அபூதாலிப் அவர்கள், அவர்களின் திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள். ஃபாதிமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது மாமியாருடன் அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதாரம், அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தச் சொற்கள்: “என் அன்னையாரும், என் மனைவியாரும் தாயும் மகளும் போல் வாழ்கின்றனர்.”
வீட்டு வேலைகளை மருமகள் பார்க்கட்டும் என்று சில மாமியார்கள் இருப்பார்கள். மாமியார் பார்க்கட்டும் என்று சில மருமகள்கள் இருப்பார்கள். மாமியாரன பிந்தெ அஸத் அவர்களும் அத்தகைய மாமியாராக இருக்கவில்லை. ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அத்தகைய மருமகளாக இருக்கவில்லை. வீட்டு வேலைகளை பிந்தெ அஸத் அவர்கள் விரும்பினாலும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் , அவர்களை விடுவதில்லை. தனது மாமியாரை இருக்க வைத்து, ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே இருக்கும் வேலைகள் அனைத்தையும் செய்வார்கள். நீங்களும் ஃபாத்திம ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்ற மருமகளாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் மாமியார் பிந்தெ அஸத் போன்று இல்லாவிட்டால் அதை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. இவ்விதம் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் இருவருக்கும் இடையில் அன்பு ஏற்படாமல் இருக்காது.
‘முதியோரை மதிக்காதவர்கள் என்னைச் சேராதவர்” என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் கூறியுள்ளார்கள். முதியோர்கள் அந்நியர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கை. உங்களின் மாமனாரும், மாமியாரும் உங்களுக்கு அந்நியர்கள் அல்லவே. அவர்கள் உங்களின் அன்புக் கணவரைப் பெற்ற தந்தையும், தாயும் அல்லவா? அந்நிய முதியோரையே மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லும்பொழுது உஙகள் நெருக்கமான உறவினர்களாகிவிட்ட மாமனார், மாமியாரை எந்த அளவுக்கு நீங்கள் மதிக்க வேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மரியாதையுடன் நடப்பதில் முக்கியமானது பணிவுடன் நடப்பது. நீங்கள் பணக்கார வீட்டுப் பெண்ணாயிருந்தாலும், ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் உங்களிடம் இந்தப் பணிவு என்னும் இனிய குணம் இருப்பது அவசியம். பெரும்பாலான ஏழை வீட்டுப் பெண்களிடம் பணிவு இருக்கும். பெரும்பாலான பணக்கார வீட்டுப் பெண்களிடம் பணிவு இருக்காது.
பணிவு இல்லாததால்தான் சில பெண்கள் தங்கள் மாமனாருக்கும், மாமியாருக்கும் அடங்கி நடப்பதில்லை. இவ்விதப் பெண்களாலேயே குடும்பங்களில் பல சமயங்களில் குழப்பங்களும், சில சமயங்களில் குலைவும் ஏற்பட்டு விடுகின்றன. குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமலும், குடும்பம் குலைந்து போகாமலும் இருக்க உங்களால் உதவ முடியும். “எப்படி?” என்று கேட்கிறீர்கள? அதுதான் பணிந்து போய் விடுவது.
ஒரு சில மாமனார்களும், மிகப் பல மாமியார்களும் நீங்கள் என்னதான் பணிந்து நடந்தாலும் உங்கள் மீது ஒருவித வெறுப்புடனேயே இருப்பார்கள். அவ்விதமே உங்களை நடத்தவும் செய்வார்கள். உங்களின் சிறு பிழையையும் பெரிது படுத்திப் பேசுவார்கள், பெரிது படுத்திக் காட்டுவார்கள். அப்பொழுது நீங்கள் பொறுமையை மேற்கொண்டு உங்களின் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சில பெண்களின் கொள்கை வார்த்தைக்கு வார்த்தை பதில் கூறிவிட வேண்டும் இல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும். அந்தக் கொள்கை உங்களிடம் இருக்கக்கூடாது. ஒருவர் தணிந்து போய்விட்டால் பிரச்சனை தானாகவே தீர்ந்துவிடும். மாமனார் தான், மாமியார் தான் தணிந்து போக வேண்டும் என்று நீங்கள் விரும்பக் கூடாது. நீங்கள் தான் தணிந்து போய் விட வேண்டும். “நாம் தணிந்து போவதா?” என்று எண்ணக்கூடாது. தணிந்து போய் விடுவதால் நன்மையே ஏற்படும். தீமை ஏற்படாது.
மாமனார், மாமியாருக்கு பணிவிடைகளை நீங்கள் விருப்புடன் செய்ய வேண்டும். வெறுப்புடன் செய்யக் கூடாது. அநேகமாக எல்லா மாமியார்களும் உங்களின் பணிவிடையை விரும்புவார்கள். எதிர்பார்க்கவும் செய்வார்கள். அவ்வித மாமியாராய் உங்கள் மாமியாரும் இருந்தால் அவசியம் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். ஒரு சில மாமியார்கள் உங்கள் மீதிருக்கும் அன்பின் காரணமாக உங்களின் பணிவிடையை விரும்பவும் மாட்டார்கள், எதிர்பார்க்கவும் மாட்டார்கள். அவ்வித மாமியாராய் உங்கள் மாமியார் இருந்தாலும் அவர்களுக்கும் பணிவிடை செய்யாமல் இருந்து விடாதீர்கள்.
பல வீடுகளில் மாமனார், மாமியாருக்கு அடுத்தபடியாகவும், சில வீடுகளில் மாமியார், மாமனாருக்கு முதலாவதாகவும் உங்களுக்குப் பிரச்சனைகள் வருவது உங்களின் கணவரின் சகோதரிகளைக் கொண்டே தான். அவர்களைத்தான் நம் நாட்டில் நாத்தனார் என்பார்கள். அவர்கள் உங்களுக்கு மூத்தவர்களாகவும் இருக்கலாம். உங்களுக்கு இளையவர்களாகவும் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் இயல்பு தம் சகோதரனின் மனைவியை ஆரம்பத்தில் நேசிப்பது. பிறகு வெறுப்பது. உங்கள் நாத்தனார்கள் அப்படி இல்லாவிட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அப்படி இருந்துவிட்டால் அதற்காக வருத்தப்படாதீர்கள். அவர்களையும் நேசியுங்கள். அவர்கள் விரும்பும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவர்களில் பெரும்பாலோர் நீங்கள் எவ்வளவுதான் மரியாதையாக நடந்து கொண்டாலும் உங்களிடம் குறை காண்பதிலேயே குறியாக இருப்பார்கள்.. இப்பொழுது நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள். “ஒரு நிமிடப் பொறுமை ஒரு பத்து வருடச் சுகம்” என்னும் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். பொறுமையாளர்களுடன் தான் இறைவன் இருக்கின்றான் எனும் திருக்குர்ஆனின் வசனம் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.
நீங்கள் புகுந்த வீட்டிலுள்ள எவர் மீதாவது உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் அதை வெளியில் கூறாதீர்கள். குறிப்பக உங்கள் கணவரிடம் கூறாதீர்கள். அதிலும் குறிப்பாக கண்ணிருடன் உங்கள் கணவரிடம் புகுந்த வீட்டு குறைகளை சொல்லாதீர்கள். அவ்விதம் நீங்கள் செய்தால் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தம்மைப் பெற்ற தந்தையை வெறுப்பார், தாயை வெறுப்பார், சகோதரிகளை வெறுப்பார். இது இரத்த உறவை அறுக்கும் பாதகச் செயலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் “உங்கள் தந்தையின் அன்பைக் காத்துக் கொள்ளுங்கள்! அதை முறித்துக் கொள்ளாதீர்கள்! (அவ்வாறு முறித்துக் கொண்டால்) அல்லாஹ் உங்களின் ஒளியைப் போக்கி விடுவான்”
“அன்னையோடு கொண்டிருந்த உறவை முறித்து அவரோடு எவ்விதத்தொடர்பும் கொண்டிராத ஒருவனுடைய வாழ்க்கை இறைவனுடன் எவ்விதத் தொடர்போ, உறவோ இல்லாத வாழ்க்கையாகும்” என்று பிரிதொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
எனவே உங்கள் மாமனார், மாமியார் மீது கறைகளைச் சொல்லி, குற்றங்களைக் கூறி அவர்களை விட்டும் உங்கள் கணவரைப் பிரிக்கக் கனவிலும் கருதாதீர்கள்.
உங்கள் கணவரின் உடைமையில் உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது.? அவரின் பெற்றோர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் மகன் பல்வீனனாய் இருந்தபோது நான் பலமுள்ளவனாய் இருந்தேன். அவன் ஆதரவற்றவனாக இருந்தபோது அவனுக்கு ஆதரவாக இருந்தேன். இப்பொழுது நான் பலவீனனாய் இருக்கிறேன். அவன் பலமுள்ளவனாய் இருக்கிறான். நான் ஆதரவற்றவன்னய் இருக்கிறேன், அவன் செல்வந்தனாய் இருக்கிறான்” என்று கூறித் தம் ஆற்றாமையையும், ஆதரவற்ற நிலைமையையும் அறிவித்தார்.
அதைக் கேட்டு அனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “உம் செய்தி கல்லையும் கரைக்கக்கூடியதாய் இருக்கிறது. உம் மகனின் உடைமையில் உமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும்! அதற்கு உம் மகனின் அனுமதியை நீர் பெற வேண்டியதில்லை” என்றார்கள்.
இது கொடாத பிள்ளை பற்றிய சம்பவம், கொடுக்க விரும்பிய பிள்ளை பற்றிய சம்பவம் ஒன்று உண்டு. ஒருவர் அண்ணலம் பெருமானார் (ஸல் ) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் சொத்து இருக்கிறது. அது என் தந்தைக்குத் தேவைப்படுகிறது” என்று கூறினார்.
உடனே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீரும் உம் சொத்தும் உம் தந்தைக்குச் சொந்தமானவை. உம் குழந்தைகள் நீர் அடைந்த மிகவும் அழகிய பொருள் ஆவர். உம் குழந்தைகள் தேடியதை நீர் உண்ணும்!” என்று கூறினார்கள்.
பிள்ளைகளின் உடைமையில் பெற்றோர்களுக்கு எவ்வளவு உரிமை இருந்தால் அவர்கள் இப்படிக் கூறியிருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
மருமகள்களே உங்களுக்கு நினைவு தெரிந்தபின் பதினெட்டு அல்லது இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகள் தாம் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். அதற்குப் பின் உங்கள் கணவருக்கு மனைவியாக ஆகின்றீர்கள். உங்கள் வாழ்வின் முற்பகுதியைவிட பிற்பகுதிதான் பிரதானமானதாகும். அதனை நீங்கள் செம்மையாகச் செய்வதைப் பொறுத்துத்தான் இருக்கிறது, உங்கள் வாழ்வின் சிறப்பு. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
மறுபடியும்; சில விஷயங்களை உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்வதற்காக…
o மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். 99 சதவீதம் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை!. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.
o உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவர். அவர் ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்து தனது வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்களிடம் தந்துள்ளார்கள். அதற்கு மதிப்பளியுங்கள். யாருக்கு அதிகம் உரிமை என்பதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவை என்று தலையிடம் கேட்டால் என்ன முடிவு கிடைக்கும்? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.
o உங்க மாமியாருடன் அதிக நேரம் செலவிடுங்கள். உங்கள் அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்களோ; அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்கள். வயதானவர்களுக்கு முக்கியமான தேவை, பேசுவதற்கும், கேட்பதற்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையாக நீங்கள் இருங்களேன் !
o உங்க வீட்டில் இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீர்களோ அப்படியே புகுந்த வீட்டிலும் இருக்க முயற்சி செய்யுங்கள். அது மிகவும் பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர நேரம் வேண்டும். அவசரப் படக் கூடாது. ஒட்டவில்லையே என்று வெட்டிவிட்டால் எல்லாமும் பாழாகிவிடும். ஆகவே பொறுமையைக் கையாளுங்கள். ”பொறுத்தவர் பூமியாள்வார்” என்பது பழமொழி. பூமிக்குள்தான் உங்கள் இல்லமும் பூமிக்குள் தானே இருக்கிறது! நீங்கள் வசிக்கும் இல்லத்தின் உள்ளங்களை வென்றால் அந்த இல்லத்தையும் ஆளலாம். ஆகவே பொறுமையை உங்கள் அணிகலனாக ஆக்கிக்கொளுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.