மறுப்பு சொல்வதிலும் பொறுப்பு தேவை !
அழகிய முறையில் மறுப்பு தெரிவிப்பது நற்பண்பைச் சார்ந்ததாகும்.
`ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்’ என்பார்கள். இதில் கொல்லும் வார்த்தை ரகத்தைச் சேர்ந்ததுதான் `மறுப்பு’ என்பது.
பல்வேறு சூழல்களில் நாம், சில விஷயங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். அது முகத்தில் அடித்தாற்போல் இருந்தால் கேட்பவரின் மனதை சங்கடப்படுத்தும். சில சமயம் எதிர்ப்புகளையும், உறவு முறிவுகளையும் ஏற்படுத்தலாம்.
எனவே மறுப்பு சொல்வதில் பொறுப்பு அவசியம். நாகரீகமான முறையில் மறுப்புத் தெரிவிக்க சில ஐடியாக்கள்…
* பெரும்பாலும் பிறர் உதவி கேட்கும் போதுதான் மறுப்பு சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவர் கேட்கும் பணமோ, பொருளோ நமக்கும் தேவை இருப்பதால்தான் இப்படிப்பட்ட சங்கடமான நிலை வரு கிறது. இது கடினமான சூழல்தான். அந்த நேரத்தில் முதலில் கடைபிடிக்க வேண்டியது பொறுமை.
* எடுத்த எடுப்பில் `முடியாது’ என்று சொல்லி விடாதீர்கள். `நான் யோசித்துச் சொல்கிறேன் சிறிது நேரம் அவகாசம் கொடேன்’ என்று கேளுங்கள்.
* அந்த இடைவெளிக்குள் பதட்டமான சூழல் மாறிவிடும். நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வாய்ப்பு கிடைக்கும். அப் போது அவர் கேட்ட உதவியை, அவரது தேவையை உங்களால் நிறைவேற்ற முடியுமா? என்று யோசியுங்கள்.
* நல்ல முடிவு கிடைத்துவிட்டால் அதைச் சொல்லலாம். கண்டிப்பாக மறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், உங்களால் முடியாமல் போனதற்கான காரணத்தையும், அதே பொருள் அல்லது பணம் உங்களுக்கும் தேவையிருப்பதை தெளிவாக விளக்குங் கள்.
* தன் தேவைக்குப்போக மீதி இருந்தால் கண்டிப்பாக உதவுவதாக கூறலாம். அல்லது அந்த சூழலில் அவரது தேவையை யாரால் நிறைவேற்ற முடியும் என்று கித்து அவரை அணுகும்படி வழிகாட்டலாம். நீங்களே முயற்சி செய்து அவருக்கு உதவி கிடைக்கும்படியும் செய்யலாம்.
* மேலதிகாரியாக இருந்து தனக்கு கீழே பணிபுரிபவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதிலும் அவசர முடிவு எடுக்கக்கூடாது.
* சில நேரங்களில் மறுக்க வேண்டியதை மறுக்காமல் இருந்தாலும், உங்களுக்கு இழப்பு ஏற்படலாம். நெருக்கமான நண்பன் கேட்கிறானே என்று மறுக்காமல் காரியத்தில் இறங்கினால் உங்களுக்கு நேரம், பொருள், பணம் ஏதேனும் இழப்பு ஏற்படலாம்.
* அதேபோல உங்களால் செய்ய முடிந்த செயலுக்கும் நீங்கள் `முடியாது’ என்று மறுத்தால் அது உறவு முறிவை ஏற்படுத்தலாம். எனவே உங்களால் இயன்றதைச் செய்வதற்கு எப்போதும் தயாராக இருங்கள்.
* பொதுவாக `ஸாரி’, `மறந்துவிட்டேன்’, `முடியாது’ போன்றவற்றை அநாவசியமான வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றை அடிக்கடி உபயோகப்படுத்துவது நீங்கள் தன்னம்பிக்கையும், உறுதியும், தெளிவும் அற்றவர் என்பதையே காட்டும். எனவே இவற்றை தவிர்க்கப் பழகுங்கள். தவிர்த்தவர்களே முன்னேறி இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்/