உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!
நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கிறது. ஆனால் உண்மையில் மிகவும் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் அடுத்தவர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதோ, நமக்குரிய கௌரவம் தராமல் இருப்பதோ அல்ல. நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டு, நம்மை நாமே முழுமையாக கௌரவிக்கத் தவறி விடுவது தான்.
ஒவ்வொரு மனிதனும் தன் திறமைகளை முற்றிலும் உணராதவனாகவே இருக்கிறான். அதனால் அவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தாதவனாகவே வாழ்கிறான். ஐன்ஸ்டீன் போன்ற மாமேதைகளே தங்கள் மூளைத் திறனில் சுமார் 15 சதவீதம் வரை தான் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் மனிதன் தன்னால் என்னவெல்லாம் முடியும், முடிவதும் எந்த அளவு முடியும் என்பதை அறியாதவனாகவே வாழ்ந்து மரிக்கிறான். இதில் தாழ்வு மனப்பான்மை என்ற கொடுமை வேறு அவனை சில நேரங்களில் ஆட்டிப் படைக்கின்றது.
நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை. முன் கூட்டியே முடியாது என்று தீர்மானித்து விட்டாலோ முயற்சி செய்யும் சிரமத்தையும் நாம் எடுத்துக் கொள்வதில்லை. இறைவன் என்னவெல்லாம் தரவில்லை என்பதை என்னேரமும் மறக்காமல் குமுறும் நாம் அவன் தந்ததை எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம், பயன்படுத்தி எந்த அளவு முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறோம் என்பதை எல்லாம் சிந்தித்து உணர பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.
செவிடு, குருடு, ஊமை என்ற மூன்று குறைபாடுகளையும் சிறிய வயதிலேயே கொண்டிருந்த ஹெலன் கெல்லரை (1880-1968) நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இந்தக் குறைபாடுகள் அவரை முடங்கி இருக்கச் செய்து விடவில்லை. செவிட்டுத் தன்மையையும், குருட்டுத் தன்மையையும் மாற்ற முடியா விட்டாலும் ஊமைத் தன்மையை தன் கடும் முயற்சியால் வெற்றி கொண்டார் அவர். பிற்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்கினார். பல உலக நாடுகளுக்கு பயணித்து சொற்பொழிவாற்றினார். பன்னிரண்டு புத்தகங்கள் எழுதினார். பார்வையிழந்தோருக்கான தொண்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்காக வாழ்நாளெல்லாம் உழைத்தார். அவரைப் பற்றிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஊமைப்படத்தில் நடித்தும் இருக்கிறார். இத்தனையும் நிகழ முக்கிய காரணம் ஹெலன் கெல்லர் தன்னைக் குறைத்துக் கொள்ளாதது தான். செவிடு, ஊமை, குருடு என்ற மூன்று மிகப்பெரிய குறைகள் உள்ள தன்னால் என்ன முடியும் என்று சுய பச்சாதாபத்தில் தங்கி விடாதது தான்.
அதே போல் இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic). 1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னி ல் பிறந்த இவருக்குப் பிறந்த போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான் செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். அவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால் அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால் இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க வைக்கும் உண்மை.
அவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன்றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம். பள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரக வாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. 13 வயது வரை அவர் சதா தற்கொலைச் சிந்தனைகளிலேயே இருந்தார். ஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.
அவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தார். படிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது. அந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. தளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார். கம்ப்யூட்டர் இயக்குவது வரை, டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்ட தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் நிகழ்த்தி வரும் இவர் உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.
ஹெலன் கெல்லரும், நிக்கும் உறுப்புகளில் குறையுடன் பிறந்திருந்தாலும் அந்தக் குறைகளை தங்களின் விதியைத் தீர்மானித்து விட அனுமதிக்கவில்லை. தங்களை அந்தக் குறைகள் வரையறுத்து விடவும் அனுமதிக்கவில்லை. தங்களைக் குறைத்துக் கொள்ளாத அவர்கள் மாறாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்கள். எப்படி எங்களால் முடியும் என்று நியாயமான கேள்விகளைக் கூட எழுப்பி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கும் நிஜத்தை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து உயர முழு உற்சாகத்தோடு முயன்று இமயம் என உயர்ந்து நிற்கிறார்கள்.
சென்ற நூற்றாண்டு மனிதர்கள் நினைத்துப் பார்க்காத எத்தனையோ அற்புதங்கள் இன்று நமக்கு சர்வ சாதாரணமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் முடியாது என்று நினைத்த விஷயங்கள் இன்று நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் அளவு மலிந்து விட்டன. அதை சாதித்த மனிதர்கள் அனைவர்களும் தங்களைக் குறைத்துக் கொள்ளாமல் தங்கள் திறமைகளால் உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் உயரும் போது அவர்களுடன் மனித சமூகமே உயர்ந்தது என்பது தான் அவர்கள் கண்ட உண்மையான சிறப்பு.
உயர்த்திக் கொள்வது என்பது கர்வப்படுவது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதல்ல. அது தன்னைத் தானே உயர்வாகச் சொல்லிக் கொள்வதல்ல. நம் திறமைகளையும், சக்திகளையும் உயர்த்திக் கொள்வதே உண்மையான உயர்த்திக் கொள்ளல். நம் திறமைகளின் எல்லைகளை நீட்டிக் கொண்டே செல்வது தான் உயர்த்திக் கொள்ளல். எந்த சூழ்நிலையும் நம்மைக் குறைத்து விட அனுமதிக்காமல் நிமிர்ந்து நிற்பது தான் உயர்த்திக் கொள்ளல். அதெல்லாம் அபூர்வமான சிலருக்குத் தான் முடியும் என்று மட்டும் சொல்லி உங்களைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். ஹெலன் கெல்லரும், நிக் வூயிசிச்சும் கூடத் தங்களைக் குறைத்து எண்ணி விடாமல் இருக்கையில் அவர்களைக் காட்டிலும் நல்ல நிலையில் பிறந்த நாம் நம்மைக் குறைத்துக் கொண்டால் அது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகத் தான் இருக்கும்.
நன்றி: என்.கணேசன் – வல்லமை