தண்ணீர் குடிப்பதில்கூட சுன்னத்தா…!
அதிகம் சூடானதையும், அதிகம் குளிர்ந்த உணவையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்!
சுடு தண்ணீர் குடிக்கலாமா?
“சுடு தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது” என்று சிலர் பிடிவாதமாக அதை குடித்து வருகிறார்கள். தொடர்ந்தார்ப்போல் சுடுதண்ணீர் குடித்து வந்தாலும் நோய் வரும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆச்சரியமாக இருக்கிறதா! மருத்துவ உலகம் என்ன சொல்கிறது பார்ப்போமா…
தண்ணீரைக் கொதிக்க வைப்பதால் அதிலிருக்கும் ஆக்ஸிஜன் அழிக்கப்படுகிறது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து உபயோகித்து வரும்போது உடலின் எதிர்ப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும். இதனால், எத்தகைய நோயும் உடலை எளிதாகப் பற்றிக்கொள்ளும். சுடுதண்ணீரால் குடல் பகுதியில் உள்ள குடல் உறிஞ்சிகள், இரைப்பையில் உள்ள சுரப்பிகள் ஆகியவை வலுவிழந்து விடுகின்றன.
குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாமா?
குளிர்ந்த நீரை தொடர்ந்து பயன்படுத்துவதும் கூடாது.. இக்கால தலைமுறையினர் வீட்டுக்கு வந்தவுடன் திறப்பதே ஃப்ரிஜ்ஜைத்தான்! எதற்கு என்று சொல்லத்தேவையில்லை. எல்லாம் ஜில்லென்று ஐஸ் தண்ணீரைக் குடிப்பதற்குத்தான்!
ஐஸ் தண்ணீரைக் குடிப்பதனால் குடல் பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கி உடலின் இரத்த ஓட்டம் பெரிய அளவில் பாதிப்படையும். இரத்த ஓட்டத்தின் பாதிப்பு உடலின் அனைத்துப் பகுதிகளையும் பாதிக்கவே செய்யும்.
சுடச்சுட வெந்நீர், காஃபி, டீ குடிப்பதாலும் சூடு பறக்கும் நிலையில் உணவை உண்பதாலும் குடல் புண் (அல்ஸர்) ஏற்படுகிறது. குடல் புண் இருந்தால் கண்டிப்பாக வாய்ப்புண்ணும் ஏற்படும். டீ கிளாஸ் சூடு தாங்காமல் அதை கைத்துண்டால் சுற்றிக்கொண்டு ஆவிபறக்கும் டீயை சிலர் குடிப்பதைப் பார்க்கிறோம். கையே சூட்டைத்தாங்க முடியாதபோது மென்மையான குடல்பகுதி ஏன் வெந்து புண்ணாகாது?
அரபு நாடுகளில் ஐஸ்பெட்டியில் வைத்த உணவுகள்தான் கிடைக்கும். அவற்றை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், குளிர்ந்த நிலை மாறி பழைய நிலைக்கு வரும். அதன்பிறகுதான் அதை சமைப்பார்கள். மேலும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் பழக்கமும் அங்கு உண்டு. இதன் காரணமாக பற்கள் முழுவதும் பழுதாகி அவற்றை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆக, குளிர்ந்த நீர் குடிப்பதால் உடல்நிலை கெட்டு பற்களையும் இழக்க வேண்டியது ஏற்படுகிறது.
“அதிகம் சூடானதையும், அதிகம் குளிர்ந்த உணவையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சாதாரண தண்ணீரையே குடித்து வந்தததையே பின்பற்றுவது நன்மை பயக்கும்.
குழப்பமான காலத்தில் ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவது 100 ஷஹீதுகளின் (மார்க்கப்போரில் உயிநீத்தவர்கள்) நன்மை கிடைக்கும் என்றும், ஒரு ஷஹீது வெட்டப்பட்டு அவருடைய ஒரு சொட்டு இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும், மீதியுள்ள ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் சொர்க்கத்தில் அவருடைய பதவிகள் உயர்ந்து கொண்டே போகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு சுன்னத்தை உயிப்பித்தாலே இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களை முற்றிலும் முழுமையாக பின்பற்றினால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதைப்படிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். தண்ணீர் குடிப்பதில் கூட சுன்னத்தை ஹயாத்தாக்க வழி இருக்கிறதா? என்று. ஆம்! தினசரி நாம் தண்ணிர் அருந்தவே செய்கிறோம். ஆனால் பெருமானார் இப்படித்தான் குடித்தார்கள்; ஆகவே நானும் இவ்வாறுதான் குடிப்பேன் என்று நிய்யத்த வைத்துக் கொண்டீர்களானால் அது ஒரு சுன்னத்தைப் பின்பற்றிய நன்மையைக் கொண்டுவந்து கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ‘நிய்யத்தைப் பொருத்தே அமல்கள்’ என்பதை நினைவில் கொள்வோம். அதுமட்டுமின்றி வெற்றிக்கு வழி தீனில் தான் உண்டு என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோம். நம் குடும்பத்தார்களுக்கும் எடுத்துச்சொல்வோம். அல்லாஹ் நல்லருல் புரிவானாக
-அபூ ஜமீல்