ஹதீஸ் கலை – குழப்பமும் விளக்கமும்
குழப்பம்
ஓர் ஹதீதை ளயீஃபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன் அறிவிப்பாளர் தொடரில் ஓர் பலஹீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான், அது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதுதான் என்றே விளங்க வேண்டும் என சில மௌலவிமார்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.
விளக்கம்
இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும், எந்த ஓர் ஹதீஸ் கலை அறிஞரும் இவ்வாறு கூறவுமில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
“பாவம்செய்யக்கூடிய (ஓர் அடியான்) ஓர் செய்தியை உங்களிடத்தில் கொண்டு வந்தால் (அதை தீர்க்கமாக விசாரித்து) தெளிவோடு நடந்து கொள்ளுங்கள்”. (அல்குர்ஆன் -அல் குஜராத் 6)
மனிதர்களைப் பொறுத்தவரை அனைவரும் பாவம் செய்யும் தன்மை கொண்டவர்களே. எனவே ஒவ்வொருவரின் செய்தியையும் ஏற்பதற்கு முன் அவற்றை தீர்க்கமாக விசாரிக்க வேண்டும்.
மேலும் சாட்சியங்களை பொறுத்தவரை நேர்மை வாய்மை உள்ள சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளுமாறு அல்குர்ஆனும் அல்ஹதீதும் வழிகாட்டுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களிலிருந்து நேர்மை (வாய்மை)யுடைய இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் -அத் தலாக் 2)
இவ்வசனம் விவாகரத்து தொடர்பாக இறக்கப்பட்டாலும் இதில் சாட்சியாளரின் பண்பாக கூறப்பட்ட உண்மை நேர்மை எனும் பண்பு பொதுவாக சாட்சியத்திற்குரியவரின் பண்பாகும். எனவே சாட்சியாக வருபவர் உண்மை நேர்மை உள்ளவராக இருப்பது அவசியம்.
ஒருவருடைய சாட்சியத்தை ஏற்பதற்கு முன்னர் அவர் உண்மை நேர்மை போன்ற நல்ல பண்புகளை கொண்டவராக இருக்கிறாரா என்பதை அவதானிக்க வேண்டும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கின்றோம். அதன் பின்னர்தான் அவரின் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் வழிகாட்டலாகும்.
சாட்சி சொல்பவர் உண்மை நேர்மை அற்றவராக இருந்தால் அவருடைய சாட்சியத்தை பொதுவாக ஏற்கக்கூடாது. இதே அடிப்படைதான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை ஏற்கும் விடயத்திலும் இமாம்களால் கடைப்பிடிக்கப்பட்டது. என்றாலும் மேலதிகமாக மற்றுமொரு நிபந்தனை குறிப்பாகக் கவனிக்கப்பட்டது.
அதாவது ஒருவர் ஒரு செய்தியை இன்னொருவரிடம் இருந்து சரியாக செவியுற்று அந்த செய்தியை அதேவிதமாக பிறரிடத்தில் கூறும் ஆற்றலும், மனன சக்தியும் எந்த அளவிற்கு அவரிடம் இருக்கிறது என்பதையும் அவதானிக்கப்பட்டது. ஏனெனில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், அவர்கள் பார்த்ததையும் கேட்டதையும் சரியாக சொன்னாலும் அவர்களை அடுத்து வரும் அனைவரும் அச் செய்திகளை செவியுற்று பிறருக்கு சொல்பவர்களே. செவியுற்று சொல்பவர்களிடம் மனன ஆற்றலில் குறைவோ அல்லது மறதியோ இருந்தால், தவறுதலாக அவர்கள் கூட்டிக் குறைத்து சொல்லிவிடுவார்கள்.
பொய் சொல்லும் பழக்கம் இருந்தால், உண்மையுடன் பொய்யையும் சேர்த்து சொல்லிவிடுவார்கள். எனவே செய்திகளை சொன்னவர்களின் நம்பகத்தன்மைக்கு ஏற்பவே அவர்கள் கூறிய செய்திகளை ஏற்பதை தீர்மானிக்கவேண்டி ஏற்பட்டது.
இதனால்தான் நபிகளாரின் பொன்மொழிகளை தேடிய ஹதீஸ்கலை மேதாவிகள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரில் ஹதீஸ்களை சொன்ன ஒவ்வொரு நபரின் நம்பகத்தன்மையைப் பற்றிய ஆய்விலும் இறங்கி அவர்களின் நம்பகத்தன்மையைப் பொறுத்து அவர்களை தரம் பிரித்து, அவ்வறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் விபரங்கள் அடங்கிய தனித்தனி கிரந்தங்களையும் எழுதினார்கள். இன்னாருடைய ஹதீஸ்களை நம்பலாம். இன்னாருடைய ஹதீஸ்களை நம்பக்கூடாது என குறிப்பிட்டு எழுதித் தந்துவிட்டு சென்றுள்ளார்கள். இக்கலைக்கு (அல் ஜர்ஹு வத்தஃதீல்) என்று கூறப்படும்,
இவ்வாறு அறிவிப்பாளர்களை தரம்பிரித்து எழுதிய இமாம்களில் பின்வருவோர்களெல்லாம் அடங்குகிறார்கள். இமாம் புகாரி, இமாம் நஸாயீ, இமாம் அபூஹாதிம், இமாம் இப்னுஹிப்பான், இமாம் இப்னு அதிய் மற்றும் இவ்வாறு முன்வந்த இமாம்கள் அறிவிப்பாளர்களைத் தரம்பிரிப்பதன் மூலம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரால் வரக்கூடிய செய்திகளில் நம்பகமானது (ஸஹீஹ், ஹஸன்) எவை நம்பகமற்றது (ளயீஃபானது) என வகைப்படுத்துகின்ற பணியில் முடியுமானவரை அர்ப்பணிப்புடன் இறங்கினார்கள்.
அவர்கள் விட்டுச் சென்ற அந்த தரவுகளின் அடிப்படையில் இன்று வரை அப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவும் இஸ்லாம் மார்க்கத்தின் பரிசுத்தத் தன்மையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு ஹதீஸ் பலஹீனமானது என்றால் அதன் அறிவிப்பாளர் நம்பகமற்றவர். அவரின் செய்தி சந்தேகத்திற்கிடமானது என்பதே அதன் கருத்தாகும்.
சந்தேகமானதை விட்டுவிடுமாறும் சந்தேகமற்றதை எடுக்குமாறும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை இட்டுள்ளதால், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சந்தேகத்திற்குரிய ஊர்ஜிதப்படுத்தப் படாத செய்திகளை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகக் கூறுவதும் பாவமானதாகும்.
இங்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் ஹதீஸை கவனத்தில் கொள்ள வேண்டும். யார் பொய்யாக இருக்கலாம் என கருதப்படக்கூடிய ஓர் ஹதீஸை (பிறருக்கு) கூறுவாரோ அவரும் பொய்யர்களில் ஒருவர்தான். (நூல்: முஸ்லிம்)
எனவேதான் ஓர் ளயீபான ஹதீஸை கூறக்கூடிய ஒருவர் அதை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என கூறக்கூடாது என ஹதீஸ்கலை அறிஞர்கள் பலஹீனமான ஹதீஸ்களை அறிவிப்பதற்கான விதிகளில் குறிப்பிட்டார்கள்.
மேலும் அவைகளில் குறிப்பிடப்படும் அமல்களுக்கான நன்மைகள் கிடைக்கும் என ஆதரவு வைக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
வஹியைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை அல்லாஹ் எடுத்துக்கொண்டதால் உண்மையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் விடயத்தை கூறியிருந்தால் அதை நம்பிக்கையாளர்கள் வாயிலாகவே அல்லாஹ் வரவைப்பான். ஏனெனில் நம்பிக்கையாளர்களின் செய்திகளையே ஏற்க வேண்டும் என்பது அவனின் வழிகாட்டலாகும்.
இந்த வேதம் அதில் சந்தேகமே இல்லை என அல்லாஹ் அல்குர்ஆனின் இரண்டாம் சூரத்தின் ஆரம்பத்திலேயே கூறிவிட்டான்.
அல்குர்ஆனைப் போன்றுதான் ஆதாரமான ஹதீஸ்களையும் அல்லாஹ்வின் வஹியாக நம்பக்கூடிய முஸ்லிம் அதில் கலப்படம் வராமல் பாதுகாத்துக்கொள்வது அவசியம். இதனால் நம்பகமான உண்மையாளர்கள் வாயிலாக வருவதையே சந்தேகமின்றி நம்ப முடியும் என்பதால் அவைகளை தேடி எடுப்பதை கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே பலஹீனமான, ளயீஃபான ஹதீஸ்களை மார்க்கத்தின் ஆதாரமாக எடுப்பதை விட்டுவிட்டு ஆதாரமான ஹதீஸ்களை பற்றிப்பிடித்து நடந்த இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோரின் வழிகளை கடைப்பிடிப்பவர்களாக நம்மை நாம் மாற்றிக்கொள்வோமாக.
source: http://www.srilankamoors.com