பெண்களின் இயல்பான அழகும் ஒப்பனையில்லாத தோற்றமும்!
சுகன்யா
பெண்களாகிய நாம் சிறப்பாகவே உடை அணிகிறோம். நகை அணிவதையும் உயர் ரகச் சேலைகளை உடுத்துவதையும் விரும்புகிறோம். விழாக் காலங்களில் அழகான தோற்றத்திற்கெனச் சிறப்புக்கவனம் செலுத்தும் நாம் சாதாரண சமயங்களில் தோற்றம் குறித்துக் கவலைகொள்வதில்லை. விழாக்காலங்களாக இல்லாத வேளைகளிலும் சாதாரணமான பொழுதுகளிலும்கூட அழகான தோற்றம் பெறத் தேவையான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டிற்கு அருகே வசித்த ஒரு பெண்ணின் ரசிகையாக நான் இருந்தேன். வீட்டிலிருக்கும் சமயத்தில்கூட அழகாகத் தோற்றமளிப்பார். இப்போது நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு சாதாரண நாளிலும் அழகாகத் தோற்றமளிக்க உதவும் விஷயங்களில் அவர் மாஸ்டராக இருந்தார் எனப் புரிகிறது.
எனக்குத் தெரிந்தவரை அவர் விலையுயர்ந்த நகைகளையோ பகட்டான புடவைகளையோ ஒருபோதும் அணிந்திருந்ததில்லை. அவர் செய்ததெல்லாம் அவரது ஒல்லியான ஆரோக்கியமான தேகத்தை பளபளப்பான கேசத்தை மென்மையான சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டதுதான்.
எனக்கு உடையணியும் கலை பற்றிய புரிதலை அவர் ஏற்படுத்தினார்.
பெண்கள் தங்கள் தினசரி வாழ்வில் எப்போதும் அழகாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் மாதந்தோறும் பியூட்டி பார்லர் செல்வதாலோ நகைகள் வாங்குவதாலோ ஒப்பனைப் பொருள்களை வாங்குவதாலோ மட்டுமே அழகாகிவிட முடியாது.
தினசரி 15 நிமிடங்களாவது நடைப்பயிற்சி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு முறையான சருமப் பராமரிப்பு போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிப்பதால் தான் அழகை அடைய இயலும். எல்லாப் பெண்களும் வாழ்நாள் முழுவதும் சிறப்பாகத் தோற்றமளிக்க அழகும் ஆரோக்கியமு அவசியம்.
மேலும் வீட்டிலிருக்கும் போதும் தனிமையில் இருக்கும்போதும் நைட்டியுடன் அங்கும் இங்கும் அலைவதைவிட எளிமையான பருத்தியிலான புடவை உடுத்துவதும் உங்களது தோற்றத்தை அழகாகக் காட்டும். தங்களைக் குண்டாகவும் வயதானவராகவும் காட்டும் நைட்டிகளை அணிந்துகொண்டு அழகான பெண்கள் சுற்றுவது ஏனென்று எனக்குப் புரியவே இல்லை.
நன்றாகப் புடவை உடுத்தி பெரிய பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வரும் எனது பாட்டியை இப்போதும் என்னால் நினைவுகூர முடிகிறது. அது நைட்டியைவிட எவ்வளவோ சிறப்பானது.
ஒவ்வொரு பெண்ணும் இந்திரா காந்தி போல பண்பான அழகான தோற்றம் பெற இயலும். அவர் ஒருபோதும் நகைகளை அணிந்ததோ அதிகப்படியான ஒப்பனைகளோடோ இல்லை என நினைக்கிறேன். இங்கே நிறையப் பெண்களுக்கு அவர்மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் அவரது எளிமையான பாங்கான தோற்றத்தை வெகு சிலரே பின்பற்றுகின்றனர். நன்றாக உடையணிந்து இந்தச் சமூகத்தில் பண்பான தோற்றமளிக்கும் சோனியா காந்தியைப் பார்த்து ஒரு பெண் நம்பிக்கை கொள்ளலாம்.
எதை அணிந்துள்ளீர்கள் என்பதைவிட எப்படி அணிந்துள்ளீர்கள் என்பது முக்கியம். உங்களது விலையுயர்ந்த ஒப்பனையைவிட ஒப்பனையின்றி உங்கள் சருமம் எப்படித் தோற்றமளிக்கிறது என்பது முக்கியமானது. கடுகடுப்பான முகம் எவ்வளவு அழகானவரையும் அசிங்கமாகவே காட்டும். பொலிவான முகமும் பளிச்சென்ற புன்னகையும் எந்தப் பெண்ணையும் அழகாக்கும். ஆரோக்கியமான வாழ்வே உண்மையில் அழகைத் தரும்.